புதைக்கப்படும் தமிழர் வரலாறு – திருப்புறம்பியம்

ராஜா நாளைக்கி காலைல திருச்சி வந்துரு அங்க இருந்து நாம கும்பகோணம் போறோம் . பிரபு அண்ணா, அலைபேசியை வைத்ததும் கையில் இருந்த மொத்த பணம் 13 ரூபாய்யை  பார்த்தேன். (டேய்! இது உனக்கு பணமா? என்று கேட்காதீர்கள் வேலைக்கு போகாமல் இயக்குனர் ஆகப் போகிறேன் என்று வாய்ப்பு தேடி  திரியும் ஒருவனுக்கு இது மிக பெரிய தொகையே. அம்மா உணவகத்தில் இரண்டு வேளை சாப்பாடு பாஸ்!) இதுவரை அண்ணனுடன் சென்ற  பயணம் எல்லாம், வேற லெவல்! என்பதால் இந்த பயணத்தின் மீதும் ஆர்வம் அதிகமாகி  வானம் படம் சிம்பு மாதிரி, கைபேசியில் இருந்த எல்லா பெயர்களையும் பார்த்து எந்த நண்பன் கேட்டால் உடனே கடன் தருவான் என்று அவனிடம் செலவுக்கு பணத்தை வாங்கிட்டு அதே பழைய ஜீன் மற்றும் கருப்பு குர்த்தாவுடன் திருச்சியை அடைந்தேன் .

சுவாமிமலை. படம் – tripadvisor.com

திருச்சியில் , அண்ணன் காரில் நண்பர்களுடன் வருவதை பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. அய்யா! காருல செமையா எங்கயோ லாங் ட்ராவல் போக  போறோம்னு நெனச்சு காருக்குள்ள ஏறுனா! இது என் நண்பர்கள் இவுங்களுக்கு சுவாமிமலை  கோவில் போணுமாம் சரி நீ சும்மா தானே இருக்க அதா உன்னையும் கூட்டி போலாமேன்னு நெனச்சேனு சொன்னதும், இந்த அவமானம் உனக்கு தேவையா என்று என்னை நானே திட்டிக்கொண்டே வந்தேன். யார்மீதும் அதிக நம்பிக்கை வைத்து எங்கே போகிறோம் என்று கேட்காமல் பயணிப்பது எத்தனை பெரிய தவறு! ஆனால் அண்ணன்-க்கு கடவுள் நம்பிக்கை இல்லையே அவர் பெரியார் கட்சி ஆள் ஆச்சே எப்படியோ அவருக்கும் இந்த பயணம் கடுப்பாகத்தான் இருக்கும் என்று புலம்பியபடியே சுவாமிமலை  வந்தோம்.

முருகனின் ஆறு படைவீட்டில் எனக்கு மிகவும் பிடித்தது சுவாமி மலைதான். காரணம் கற்கும் ஆர்வம் உங்களை குழந்தையிடமும் மண்டியிட செய்யும் என்ற உண்மையையும் அதைப்போல் கற்றுகொடுக்க எதலாம் தகுதி என்று ஒரு கட்டுப்பாடு (சாதிய அடிப்படையில்) இருந்ததோ அதையெல்லாம் உடைக்கும்படியானது சுவாமிமலையில் முருகன் தன் தந்தைக்கே குருவானது. (முருகன் அப்பவே கலப்பு திருமணம் பண்ணவர் மக்களே)

சாட்சிநாதர் கோவில். படம் : wikimedia.org

அது மட்டும் அல்லாமல் சுவாமிமலை கோவில் ஒரு தேரின் தோற்றத்தில் கட்டி இருக்கிறார்கள்  என்று அங்கு இருந்த வரைபடத்தை பார்த்துதான் தெரிந்து கொண்டேன். அண்ணனை வெறுப்பேத்தலாம் என்று, கோயில்கள் இல்லை என்றால் நமது கட்டிடக்கலை என்னவென்று இந்த உலகத்துக்கு தெரியாமலேயே போயிருக்கும் இல்லையா? என்றேன். கோயில்களாக இல்லையென்ற காரணத்தால் அழிகின்ற நமது வரலாறு நிறைய உண்டு தம்பி என்றார். கீழடி பத்தி சொல்றிங்களா?. அதான் எல்லாருக்குமே தெரியுமே நான் திருப்புறம்பியம் பற்றி சொல்கிறேன். அது எங்க இருக்கு அண்ணா?, அங்கு போறதுக்குதான் உன்ன கூட்டி வந்தேன் தம்பி.

திருப்புறம்பியம், சுவாமிமலையில் இருந்து 3கி.மீ தொலைவில் உள்ளது.  அங்கு மிகவும் பிரசித்திபெற்ற சாட்சிநாதர் சிவ ஆலயம் சென்றோம். இந்த கோவிலின் தோற்றமும் வரலாறும் தனித்தன்மை வாய்ந்ததாகவே இருந்தது. பக்தையின் குறை தீர்க்க இந்த இடத்தில் சாட்சி சொல்ல வந்ததால் இந்த ஆலயம் இப்பெயர் பெற காரணம் ஆகியது. (ஆனால் தேடிவந்த வரலாற்றுக்கு இன்னும் கொஞ்ச தூரம் செல்லவேண்டி  இருந்தது) அந்த ஊர் பெரியவர்களிடம் போர் நடந்த இடம் பற்றி விசாரித்தோம். வழி சொன்னார்கள், வாகனம் செல்ல இயலாத வயல் மற்றும் சின்ன கட்டு பாதைகளின் வழியாக சில கி.மீ நடந்து சென்றோம், சின்ன மூங்கில் காட்டை கடந்ததும் மிகவும் அமைதியான ஆல மரங்கள் சூழ சின்ன கோவில் இருந்தது அதன் அருகில் சில கற்களும் இருந்தன. தம்பி இதுதான் உற்சாகத்தில் அண்ணன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது.

படம் – artstation.com

இந்த இடத்தில்தான் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இறுதி பலப்பரீட்சை நடந்தது. பல்லவர்களுடன் ஆதித்த சோழனும் பண்டியர்கர்களை வென்றே ஆக வேண்டும் இல்லையேல் சோழ சாம்ராஜ்யம் தலையெடுக்க முடியாது என்ற நோக்கில் போரில் இணைந்தான். (பாண்டிய சாம்ராஜ்யம் மிகவும் பெரியது அப்பொழுது) போர் மிகவும் கடுமையாக நடந்தது. இந்த யுத்தத்தில் பல்லாயிரம் வீர்கள், யானைப் படை குதிரைப்படை என்று கலந்துகொண்டன. இப்போரை வாட்டர்லூச் சண்டை, பானிபெத் சண்டை, பிளாசிச் சண்டை போல வரலாற்று முக்கியம் பெற்ற சண்டைகளுக்கு இணையான சண்டை என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்  என்றார்.

யார் செயிச்சது அண்ணே போர்ல? இரு இனிமே தானே முக்கியமான நிகழ்வு இருக்கு. மூன்று நாள் உச்சக்கட்ட யுத்தம் சோழ, பல்லவ படைகள் தோல்வியை நெருங்கிக் கொண்ட்டிருந்தன. இனி பின் வாங்குதல் மட்டுமே முடிவு என்ற நிலையில், போர்களத்தின் நிலைமை அறிந்து, போரில் அடிபட்ட காயத்தால் நடக்க முடியாத மற்றும் முதுமையும் சேர்ந்து வாட்டிய நிலையிலும் சோழ மன்னன் விஜயால சோழன்  போர்களம் வந்தான் (இவர்தான் ராஜா ராஜா சோழனோட பாட்டனார்) யானைகள், குதிரைகள் என்று எதுவுமே இல்லை ஒரு புறம் போர் நடந்துகொண்டிருகிறது. 200 படை வீரர்கள் மட்டுமே இப்போது இவரோடு நிற்கிறார்கள்.

தன்னை இருவர் தோள்களில் தூக்கி கொள்ள சொல்கிறார் அவர்கள் கீழே விழும் பட்சத்தில் அட்டுத்த இருவர். இரண்டு கைகளிலும் இரண்டு வாள் ஏந்தி போர்முனைக்குள் சென்று எதிரிகளை கொன்று குவிக்கிறார். இவரின் செயல் கண்டு மொத்த படைக்கும் உணர்ச்சி பெருக்கெடுக்க பாண்டியர்களை வீழ்த்த, விஜயால சோழன் வீர மரணம் அடைந்தார். அண்ணே இது 300 பருத்தி வீரர்கள் படம் மாதில இருக்கு என்றேன் சிரித்துக்கொண்டே. தம்பி அது கதை, இது வரலாற்று உண்மை! நீ பொன்னியின் செல்வன் படுச்சு இருக்கியா? அதுலயும் இந்த சம்பவம் வரும் என்றார். ஆமா பொன்னியின் செல்வன் ‘’ரணகள ஆரண்யம்‘’. (படிக்காதவர்கள் படித்து விடுங்கள் கண்டிப்பாய் அந்த அனுபவம் தனி)

இந்த போரில் விஜயால சோழன்  மற்றும் போர் தளபதிக்கு இங்கே நடுவண்கல் வைக்கப்பட்டது. என்று அந்த நடுவண்கற்களை காட்டியதும் அந்த நிமிடம் போர்க்களத்தில் அந்த மாவீரன் கர்ஜிப்பது போன்ற பிரம்மை ஏற்பட்டது. அதன் அருகில் இருந்த சின்ன கோவிலில் கடைசியாய் வந்த ஒரு ஆய்வாளர் இந்த இடத்தில் நடந்த போர் பற்றியும் இடத்தின் வரலாறு பற்றியும் கோவில் சுவற்றில் எழுதி உள்ளார். அதுவும் பாதி அழிந்த நிலையிலேதான் இருந்தன. இந்த இடத்தின் மீது  அரசு ஏன் எதுவுமே அக்கறை காட்டல?. இருக்க தமிழர் வரலாற்றை மண்ணை அள்ளி கொட்டவே அவர்களுக்கு நேரம் பத்தல (நகை முரண் என்னெவென்றால் கீழடியில் அதான் நடக்கிறது) இதுல இதுக்கலாம் நேரம் எங்கே இருக்க போகிறது.

திருப்புறம்பியம் போர். படம் – tripadvisor.com

 

சரி அண்ணே! இத பாதுகாப்பதானால் நமக்கு என்ன கிடைக்கபோது? அதவிட நமக்கு எவ்ளோ முக்கியமான விஷயம்லா இருக்கு என்றேன். தம்பி ஒன்ன சரி புருஞ்சுக்கோ இத்தனை ஆயிரம் பழைய வரலாறு என்பது எத்தனை இன மக்களுக்கு இருக்கு, இவ்ளோ பெரிய யுத்தம் நடந்த இடம், இங்கு அதிக ஆராய்ச்சிகள் பண்ணா நாம் வியக்கும் பல தகவல் கிடைக்கலாம் இல்லையா. அது மட்டும் இல்லாமல்  வெளி நாட்டுல வெறும் சில நூறு வருட பழைய பாரம்பரியம், போர் நடந்த இடம்னு அதை அருங்காட்சியகமா மாத்தி, சுற்றுலாவாசிகளை ஈர்க்கின்றன. ஆனால் நாம் வரலாற்று நினைவிடத்தில் காதலியின் பெயர்களை கிறுக்கிக்கொண்டு இருக்கிறோம். மத்திய அரசிற்கோ தமிழ் என்றால் எட்டிக்காயாய் உள்ளது. தமிழக அரசோ ஆட்சியில் இருந்தால் போதும் என்று உள்ளது என்றார்.

ஆம், அண்ணன் கூறியது அத்தனையும் உண்மைதான். அங்கே இருந்த ஒரு சிறிய கோவிலின் கூரையும் இடிந்தே உள்ளது, எந்த ஒரு அரசு அறிவிப்பும் இல்லை, அந்த இடத்தின் வரலாறும் இல்லை. எப்படியும் இன்னும் சில பல ஆண்டுகளில் அங்கு அப்படி ஒரு இடம் இருந்ததற்கான அடையாளம் கூட இல்லாமல் ஆகிவிடும். மீண்டும் வாகனத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம் மரணத்தின் இறுதிவரை போராடி பார்த்த ஒரு இனக்குழுவின் மிச்சங்களாக!…

Related Articles

Exit mobile version