கண்ணகி கோவில்

“பூம்புகார்” படத்தின் இறுதி காட்சி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது, கண்ணகியின் கோபத்தில் கொழுந்து விட்டு எரிகிறது மதுரை!

இராமர் சீதையை பெண் அடிமை மாதிரித்தானே நடத்திருக்காரு! திரும்பி வந்த சீதையை ” தீ ” குளிக்கவும் சொன்னாரு, ஆனால் கண்ணகி “அநீதி இழைத்த ஒரு மன்னனையும் ஒரு நகரத்தையுமே எரிக்கிறாள்” என்றால், அந்த வீரத்தமிழச்சிக்குத்தானே கோவில் கட்டியிருக்கணும்?. “வடநாட்டில் ” பிறந்தால் தான் சாமியா கூட ஏத்துப்பாங்க போல!. இது நான்

கண்ணகி சிலை (drscdn.org)

நம்ம ஊரில் தான் ரோட்டு ஓரத்தில் வச்ச சிலையும் தூக்குனாங்களே!. இது என் நண்பன்

ஏன்டா! கேரளா குமுளியில் கண்ணகிக்கு கோவில் இருக்குனு கேள்விப் பட்டுருக்கேன். ஆனா உண்மையானு தெரியல!. இது எங்க உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த என்னோட அப்பா.

தமிழச்சிக்கு கேரளாவில் கோவில்! உடனே போக மனது துடித்தாலும், உறுதிப்படுத்த எங்க ஆசிரியர் பிரபு தமிழன் (எழுத்தாளரும் கூட) அவர்களை தொடர்பு கொண்டேன்.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளியில் இருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கிறது. தமிழ்நாட்டின் பளியங்குடி எனும் இடத்தில் இருந்தும் நாம் போகலாம் ஆனால், வாகனம் செல்லும் பாதை குமுளி வழியாக மட்டுமே உள்ளது. அதுவும் வருடத்திற்கு “ஒருநாள் ” மட்டுமே அனுமதி.

ஒருநாள் மட்டுமா ? ஆம், சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமே அனைவருக்கும் அனுமதி உண்டு. சில மாத காத்திருப்புக்குப் பின்னால் அந்த நாளும் வந்தது!

முதல் நாள் இரவு தேனியில் தங்கி, குமுளி போவதற்கான திட்டமிடல் முடிவாகி அதிகாலை குமுளி அடைந்தோம். கோவில் போவதற்கு பஸ், கார், வேன் எதுவும் அனுமதி கிடையாது என்றும் வெறும் ஜீப் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று சொன்னார்கள்!, அதுவும் அனுமதி பெற்ற ஜீப் மட்டும் என்று சொல்லி எங்கு போய் சீட்டு வாங்க முடியும் என்று ஒரு இடத்தை காட்டினார்கள்.

சரி என்று போய் பார்த்தால்! 1கி.மீ தூரத்திற்கு வரிசையில் நிற்கிறது கூட்டம். நிற்பவர்ளில் பெருவாரியானவர்கள் கேரள மக்கள், அவர்களின் துர்க்கை அம்மன் கோவில் அங்கு உள்ளதாம். இங்கயுமா போட்டி என்று நொந்து கொண்டே நின்றோம்.

 

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளியில் இருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கிறது. தமிழ்நாட்டின் பளியங்குடி எனும் இடத்தில் இருந்தும் நாம் போகலாம் (bp.blogspot.com)

 

கடைசியாக ஒரு நண்பர் (“மலையாளி” தமிழன் என்றால் தனியாக போயிருப்பாரே!) ஒரு ஜீப் ஏற்பாடு செய்தார், நாங்களும் பணம் செலுத்தி அவருடன் கிளம்பினோம். காட்டுப்பாதையை அடைந்ததும் கேரளா மற்றும் தமிழ்நாடு காவல்துறை நம்மை சோதித்து அனுப்ப, அடுத்தக் கட்டமாக வனத்துறை நம்மிடம் இருக்கும் அனைத்து நெகிழிப் பைகளையும் அப்புறப்படுத்தியே உள்ளே அனுமதிக்கிறார்கள்.

ஜீப்பை தவிர எந்த வாகனமும் பயணிக்க முடியாத பாதை என்று புரிய ஆரம்பிக்கிறது. அமைச்சர்களுக்கு தனிப் பாதை அமைக்க இது தமிழ் நாடு இல்லையே என்று பகடி செய்து கொண்டே பயணம் செய்தோம்.

உடம்பில் இருக்கும் அத்தனை எலும்புகளையும் குலுக்கி எடுத்த பின், கோவிலின் குறிப்பிட்ட தூரத்திற்க்கு முன் நின்றது வாகனம். அங்கிருந்து பார்த்த பின்தான் தெரிந்தது, தமிழ்நாட்டின் பளியங்குடி காட்டு வழிப் பாதை வழியாக சுத்தி இருக்கும் தமிழக கிராம மக்கள் நடந்து வந்து கொண்டிந்தார்கள்.

 

வாகனம் செல்லும் பாதை குமுளி வழியாக மட்டுமே உள்ளது. அதுவும் வருடத்திற்கு “ஒருநாள் ” மட்டுமே அனுமதி. (bp.blogspot.com)

ஏன் தமிழ்நாட்டில் இருந்து ஒரு பாதை போடவில்லை? என்று அங்கிருந்த ஒரு தமிழக காவலரிடம் கேட்டேன். “ரொம்ப வருஷம் முன்னாடி தமிழ்நாடு அரசும் ரோடுபோட திட்டம் போட்டு பணம் ஒதுக்கிருக்காங்க, ஆனா ஆட்சி மாறியதும் திட்டம் கிடப்பில் விழுந்துருச்சு!”

“ஓ! இந்த புது தலைமைச் செயலகம் மருத்துவமனையா ஆனதே அப்டி.” என்று நான் சொல்ல அவரும் சேர்ந்து சிரிச்சாரு.

“அது பரவால தம்பி! இப்ப கேரளாவில் இருந்து மட்டும்தான் பாதை இருக்கு அதுனால கோவில் கேரளா அரசுக்கு சொந்தம்னு சொல்றாங்க!”

“கோவில் கேரளாவில் தானே இருக்கு சார்! அப்ப அவுங்களுக்கு தானே சொந்தம்?”

“இல்லப்பா! வெள்ளைக்காரன் எடுத்த சர்வே கோவில் நமக்கு சொந்தம்னு சொல்லுது, சுதந்திரத்திற்கு பின் எடுத்த சர்வேவும் கோவில் நமக்கு தான் சொந்தம்னு சொல்லுது. ஆன நம்ம அரசு இத கண்டுக்கவே மாட்டேனுது.” (சின்னம்மா பிரச்சினையே இங்க பெருசா இருக்கு)

ஒரு இனத்தோட அடையாளமாய் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு கோவிலை இப்படி சேதமடைய விட்டுடாங்களே (bp.blogspot.com)

இவ்வளவு சொன்னவரிடம்  கோவில் வரலாறு கேட்க்காமல் விடுவமா! அதையும் சொன்னாரு.

மதுரையை எரித்த கண்ணகி, கோபம் தணியாமல் 14 நாட்கள் நடந்து இந்த மலையை அடைந்து இங்கிருந்து கோவலன் ஆன்மாவோடு கலந்ததை பார்த்து உள்ளனர் இந்த மலைக் கிராம மக்கள். இந்த இடத்தை புனிதமாக கருத ஆரம்பித்துள்ளனர். ஒரு நாள் அந்தப் பக்கம் வந்த சேரன் செங்குட்டுவன் இதைக் கேட்டு வியந்து இமயத்தில் இருந்து கல் எடுத்துவந்து கோவில் கட்டியிருக்கிறான்.

“ஆமாம் சார்! மதுரை கல்லந்திரி கிராமம் பக்கத்தில் கண்ணகியும், கோவலனும் தங்கி இருந்தாங்க!, சிலம்பம் எடுத்துட்டு போன கோவலனோட கெதி இப்புடி ஆகுமுனு அந்த பொண்ணு நெனச்சு தான் பார்த்துருக்குமா?”, என்று பொலம்பிக்கிட்டே ஒரு  வீடு போன்ற மண் மேட்டை காட்டுனாங்க அந்த ஊர் மக்கள்.

“தம்பி, இது உண்மையா?, பொய்யானு யோசிக்க வேண்டாம். ஆனால் ஒரு இனத்தோட அடையாளமாய் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு கோவிலை இப்படி சேதமடைய விட்டுடாங்களே” என்று வருத்தப்பட்டார் அந்த காவலர். அவருக்கு நன்றி சொல்லி விட்டு, மிக ஆபத்தான சறுக்கும் பாதைகளை கடந்து கோவிலை அடைந்தோம்.

சேரன் செய்த கண்ணகியின் சிலை உக்கிரமான வடிவத்தில் இருந்ததாம். அதை திருடி விட்டார்களாம், இப்பொழுது இருப்பது சமகாலத்தில் வைத்தது அதுவும் சாந்தமான சிலை வடிவம் (bp.blogspot.com)

கோவிலின் புதை படிமங்கள் என்று மட்டுமே சொல்லும் நிலையில் இருந்தது கண்ணகி கோயில். 95% சேதம் ஆகிவிட்டது, அங்கு இருக்கும் மீத அமைப்பை வைத்து மலையின் உச்சியில் இதன் பிரமாண்டத்தை உணர முடிகிறது.

இதில் மிக்க கொடுமை என்னவென்றால், சேரன் செய்த  கண்ணகியின் சிலை உக்கிரமான வடிவத்தில் இருந்ததாம். அதை திருடி விட்டார்களாம், இப்பொழுது இருப்பது சமகாலத்தில் வைத்தது அதுவும் சாந்தமான சிலை வடிவம்.

அனைவருக்கும் உணவு கொடுத்தனர், இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் உணவளித்த அந்த கிராம மக்களுக்கு எப்படி நன்றி சொன்னாலும் பத்தாது.

கடல் மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது கோவில், அங்கிருந்து வன விலங்குகளை பார்த்தது புது உணர்வை கொடுத்தது.

“நம்ம தொல்பொருளியல் துறை நீ சொன்ன மதுரையில் இருக்கும் கண்ணகி இருந்த வீட்டை ஏன் ஆராய்ச்சி பண்ணவில்லை?” என்று நண்பர் கேட்டார்.

ஏற்கனவே மதுரையின் “கீழடி” கிராமத்தில் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையான தொன்மைவாய்ந்த பொருட்கள் கிடைத்தன. ஆனால் ஆராய்ச்சி தொடராமல் அதை மண்போட்டு மூடியும் விட்டனர். (ஆனால் வட இந்தியாவில் இராமர் கால பொருள் உள்ளதா என்று ஆராய பெரும் தொகை ஒதுக்கி உள்ளனர்). அதைக் கேட்கவே இங்கு நாதி இல்லை. இந்த நிலையில் கண்ணகி, தமிழ் வரலாறு என்று வாய் திறந்தால் பைத்தியம் என்று பட்டம் தான் கொடுப்பார்கள்.

“தமிழ்நாட்டில் வழிபடும் எல்லா பெண் தெய்வங்களும் கண்ணகி” என்று எண்ணி மனசை தேத்திக்க வேண்டியதுதான்! என்று நண்பர் பெருமூச்சு விட்டார்.

இருட்ட ஆரம்பித்ததால் அனைவரையும் வெளியேற்றினார்கள், இன்னும் எத்தனை வருடத்திற்கு தமிழர்கள் தன்னுடைய கோவில் என்று வழிபட முடியும்? ஒருவேளை இந்த “ஒரு நாள் ” வழிபாடும் நிறுத்தப்பட்டால்? மதுரை எரித்த கண்ணகி இந்த வஞ்சம் எரிக்க வர வேண்டும்!. என்ற வேண்டுதலோடு  “மீண்டும் அடுத்த சித்ரா பௌர்ணமிக்கான நாட்களை எண்ணிக் கொண்டே ஊர் திரும்பினோம் “.

Related Articles

Exit mobile version