“அபடீன்” நீர்வீழ்ச்சி – இயற்கையின் காதலர்க்கு…

“இலங்கைத் தீவின் மலையடிவாரங்களில் சுவர்க்கத்தைக் கண்டேன்” என்று 14ஆம் நூற்றாண்டின் நாடோடி ‘ஜோன் டீ மொரிஞொலி’ கூறியதாக சிறிய வகுப்பு சமூகக் கல்விப் பாடப் புத்தகங்களில் படித்ததாக ஞாபகம். அது சரி லண்டன் பிரிட்ஜ்-இலும், ஈபில் டவரிலும், பெர்ஜ் கலீபாவிலும் நின்றுகொண்டு பந்தாவாக செல்பி (தாமி) எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவிட்டு, சமயம் கிடைக்கும் பொழுதுகளில் “சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரப் போல வருமா” என்று இளையராஜாவை இழுத்தெடுக்கும் நமக்கு, “சொர்க்கமே நம்ம ஊர்லதான் இருக்கு” என்ற உண்மை புரிவதில்லை பாவம்.

ஒரு கிழமைக் குப்பை போட இடமில்லாமல் நகர் முழுதும் நாறிப்போய் கிடக்கிறதே! இதிலென்ன சுவர்க்கம் என்று கேட்கிறீர்களா? அட! அது நாம் நகரம் என்ற பெயரில் நரகமாக்கிய சுவர்க்கம் நண்பர்களே! நான் சொல்வது, நமது “பொல்யூஷன்” (மாசு) பார்வை மொய்க்காத புண்ணிய பூமிகள் பற்றியது. புண்ணிய பூமிக்கு புது வரைவிலக்கணம் கொடுத்தாயிற்று, இனி சுவர்க்கம் நோக்கிய யாத்திரைக்குச் செல்வோம்.

கோடை, மழை, வெள்ளம், மண்சரிவு இப்படி நாம் எந்தப் பருவகாலத்தில் இருக்கிறோம் என்றே தெரியாத அளவு குழப்பத்தில் நாடு இருக்கையில், சுற்றுலாவுக்கு இடத் தேர்வு செய்வதொன்றும் அவ்வளவு எளிதல்ல. ஒருமுறை தென்னிலங்கை கடற்கரைகள் கண்டாயிற்று, போனமுறை வனவிலங்குகள் சரணாலயம், வரலாற்றுத் தலங்கள் என வடமத்தியின் வரண்ட காலநிலை கடந்தாயிற்று. வேறு வழி? மலைநாடுதான். இப்படி ஆரம்பித்தது பயணம். அதிக திட்டமிடல் இல்லாத கால்போன போக்கில், மன்னிக்கவும் ‘கார்’ போன போக்கில் நாவலப்பிட்டி நகரைத் தாண்டி சென்றுகொண்டிருந்தவேளை…

மலைநாட்டு சுற்றுலாக்களில் எழுதப்படாத சட்டங்களான அணைக்கட்டுகள், மின்னுற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை புறந்தள்ளிவிட முடியுமா என்ன? பிறகு “ஹட்டனுக்கு போனீங்களே, லக்ஷபான நீர்வீழ்ச்சி பாக்கல்லையா?” என்ற கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது? நாங்களும் லக்ஷபான நோக்கிய பயணத்தையே தொடர்ந்தோம்.

கினிகத்தேனையை அண்மித்ததும் எம்முடன் இருந்த ஒரு ‘என்சைக்ளோபீடியா’ கினிகத்தேனை சந்திப்பிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் நீர்வீழ்ச்சி ஒன்று இருப்பதாக அறிவித்தது. “ப்ளான மாத்துவம் மச்சான், வாகனத்த இடதுபுறம் பள்ளத்தில் விடு” என்று ஒருவர் அறிவிக்க, ஏகமனதாக அத்திட்டம் ஆமோதிக்கப்பட்டது. “அபடீன் நீர்வீழ்ச்சி” (Aberdeen Falls) -இலங்கைத் தேயிலையில் காதல்கொண்டு வந்துசேர்ந்த ஸ்கொட்லாந்து நாட்டவர்களினால் இலங்கையின் முக்கிய இடங்களுக்கு வைக்கப்பட்ட பெயர்களில் இதுவும் ஒன்று.

மழைநின்ற தூறலுடன் மலைச்சரிவில் வளைந்துசெல்லும் ஒடுங்கிய பாதைவழியே சுமார் இருபது நிமிட வாகன ஓட்டம். பாதை மருங்கில் அடர்ந்து வளர்ந்த பன்னத் தாவரங்கள், நீண்டு வளர்ந்த சாதிக்காய், பலா, ஜம்பு என பசுமை உலகுக்குள் நாம் நுழைவதான ஓர் பிரமை. பாதித் தூரம் கடக்கையில் எதிர்த்திசைப் பள்ளத்தாக்கை நோக்கி பிரவாகமெடுத்து வீழும் நீர்ஜெரி, கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரிந்த காட்சி ஏற்படுத்திய சிலிர்ப்பு, நீர்வீழ்ச்சி நோக்கிய எங்கள் பயணத்துக்கு மிகை எரிபொருள் போலானது.

ஆனால் நினைக்குமளவு அவ்வளவு தூரம் பள்ளத்தாக்குகளில் சென்று நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தை அடைவது சுலபமல்ல. போகப்போக பாதையின் சீரற்ற தன்மை அதிகரிக்க ஆரம்பித்தது. சுமார் ஏழு கிலோமீட்டர்கள் சென்ற வாகனம் அதற்கு மேல் நகர மறுக்க, அங்கே வீதியோரம் வேலைசெய்துகொண்டிருந்த தொழிலாளர்களிடம் தொடர்ந்து செல்வது பற்றி வினவினோம். கொஞ்ச தூரம்தான், நடந்தால் போய் விடலாம் என்று அருள்வாக்களித்தார்கள். எங்கே அடிவாரத்தை அடைவது கனவாகிவிடுமோ என்ற வருத்தத்தில் இருந்த எங்களுக்கு சுவாசம் நுரையீரலின் தரைதொட்டது.

நடக்க ஆரம்பித்தோம், இரண்டொரு நீர்ப் போத்தல்கள், செல்பி ஸ்டிக் போன்றவற்றை காவிக்கொண்டு பாதை வளைந்த வாக்கிலே நாங்களும் பள்ளம் நோக்கி படையெடுத்தோம். உள்ளே செல்லச் செல்ல நாங்கள் கண்ட காட்சிகளும் அனுபவங்களும் புதுவிதமாக இருந்தன…

பாதையின் இடையிடையே குறுக்கறுக்கும் சிறு நீரோடைகளும், அவற்றின் காதுக்கினிய ஓசையும், காட்டுப் பாதையில் ஓடும் குளிர்ந்த, தெளிந்த நீரும் உள்ளத்தை கொள்ளைகொள்ள வல்லவை. இத்தனைக்கும் சிகரமாய் ஆங்காங்கே இருந்த எளிமையான ஒற்றைத் தனி வீடுகளும், சில வீடுகளின் முற்றத்தில் இயற்கையாய் அமைந்திருந்த குறு நீர்வீழ்ச்சிகளும் “வாழ்றானுங்கடா” என்று எங்களை பெருமூச்சிறைக்கவைத்தன. என்னதான் சொல்லுங்கள், இப்படி ஓர் சூழ்நிலையில் இதமான காலநிலையில் வாழ்ந்து மரணிக்கும் எவருக்கும் கடவுள் கொடுக்கப்போவது இரண்டாம் சொர்க்கம்தான்.

பாசியும், கூழங்கற்களும் மண்டிக்கிடந்த பாதையில் பாடுபட்டு நடக்கும்போது “மக்கள் மனம்தானே எந்தன் வழுக்காத பாதை” என்ற கவிப்பேரரசுவின் வரிகள் மூளைக்குள் வந்துவந்து போயின. பாதை வர வர பயம் காட்டியது, எதிர்ப்படும் யாராவது ஒருவரைக் கேட்டால், “கொஞ்சம் தூரம்தான், இதோ வந்துவிடும்” என்று சொல்கிறார்களே தவிர அடிவாரம் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதாகத் தெரியவில்லை. கால்கள் நகர மறுத்தன, நிலைதடுமாறி விழுந்துவிடுமளவு கற்கள் நிறைந்த பாதை எம்மை வாட்டியது. போகும்  வழி இன்னும் எத்தனை பயங்கரமான சவால்களை வைத்துக் காத்திருக்கிறதோ என்பதுபற்றிக்கூட சட்டை செய்யாமல் எதோ ஒரு வேகத்தில் நடந்தோம்.

வீட்டில் அம்மாவும் அப்பாவும் அப்பாடுபட்டு வளர்த்த பூமரங்கள் இங்கே பார்ப்பாரற்று செழித்து வளர்ந்திருப்பதைப் பார்த்து இறைவனின் திருவிளையாடல்களில் இதுவுமொன்று என்று நினைத்து மனதுக்குள் சிரித்தவாறு திறன்பேசி தேடியெடுத்து சிலபல பூக்களின் சிரிப்பை சுட்டேன்! ஓர்கிட், அந்தூரியம், கடுகுப்பூ, குரோட்டன்கள், சேம்பு, ஆற்றுவாளை, கோடசாரை, கோப்பி, மலைவாழை இப்படி நீண்டுசெல்லும் தாவரப் பல்வகைமை.

சில இடங்களில் போடப்பட்டிருந்த சீரான படி வரிசைகள் நாங்கள் போகும் பாதை சரிதான் என கட்டியம் கூறின. ஆளில்லாத அடர்ந்த காட்டுக்குள்ளும் ஆங்காங்கே தெரிந்த மதுப் போத்தல்களும், நெகிழிப் பைகளும் மனிதன் செவ்வாய்க் கிரகத்திலும் கொத்துரொட்டி போடுவான் என்று அலுத்துக்கொள்ளவைத்தது. எதோ எஞ்சியிருக்கும் எச்ச சொச்ச இயற்கையையும் மனிதன், மன்னிக்கவும் “நாங்கள்” வேட்டு வைத்து அழிப்போமடா! என்று ஆழ்மனது பொதுநலம் பாராட்டியவேளை, “என்னை விட்டுவிட்டீர்களே! நானும் இருக்கிறேன் இவ்வுலகில்” என்று மண்டைக்குள் சென்ற கணத்தாக்கம் கால்வழியே கசிந்த உதிரத்தை கண்டுகொண்டது. இருக்கின்ற கஷ்டத்தில் நீயுமா என்று என்னோடு ஒட்டிப் பிறந்ததுபோல் கட்டிக்கொண்டிருந்த அட்டையை அகற்றி நடந்தேன். இனி முன்னும் பின்னுமிருந்து பல அட்டை அட்டாக்குகளுக்கான அபயக் குரல்கள் நண்பர்களிடமிருந்தும் வந்தன.

இந்த நாள் முழுதும் இங்கேயே போய்விடுமோ என்னவோ, போவதற்கே இவ்வளவு பாடு, இதில் இதே பாதையினூடு திரும்பியும் வரவேண்டும் கடவுளே என்று குற்றுயிரும் குலையுயிருமாக நடந்த எங்களுக்கு, மிக அருகில் நீர்வீழ்ச்சி இருப்பதாய் நீர்வீழ்ச்சியின் இரைச்சல் ஆருடம் கூறியது. இதனையும் “இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே” என்று சொல்லலாம் வாசகர்களே, தப்பில்லை! ஆர்வம் மேலிட வேகமாக முன்னேறிச் சென்ற எங்களை, கண்ணெதிரே நாங்கள் கண்ட காட்சி மெய்மறக்கச் செய்தது.

பிள்ளை பெறும் வேதனை அத்தனையும் குழந்தையின் முதல் அழுகை கேட்டவுடன் காணாமல் போகும் தாய்மார்  போன்று அத்தனை பெரிய நீரின் வீழ்ச்சியும், எங்கள் முகத்தில் வந்து விசிறிய கோடி கோடி நீர்த் தூறல்களும் அவ்வளவு நேரமும் நாங்கள் அனுபவித்த நோவினைகளை இருந்த இடம் தெரியாமல் பறந்துபோகச் செய்தது! “worth the struggle” என்று நண்பனொருவன் தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தான். ! களனி கங்கையின் முக்கிய கூறான “கெஹல்கமு” வாவியில் தோன்றும் இந்நீர் வீழ்ச்சி இலங்கையின் பதினெட்டாவது உயரமான நீர்வீழ்ச்சியாகும்.

அட்டைகள் அனுப்பிய “ஹிருடின்” செயலிழக்கும் வரை வழிந்துகொண்டிருந்த இரத்தத்தையும் பொருட்படுத்தாது, கரடு முரடான குன்றுகள் வழியே ஆர்வ மிகுதியால் அவசர அவசரமாக கீழிறங்கினோம்! 322 அடி உயரத்திலிருந்து கொட்டிய நீர்ஜெரியும், அதன் ஆர்ப்பரிக்கும் ஓசையும், புகைமூட்டமாக சூழ்ந்துகொண்ட நீர்த் தூறல்களும் ஏற்படுத்திய அனுபவம், கண்டம் கடத்து பறந்துசென்று நயாகராவின் புகழ்பாடிய கவிப் பேரரசே! இதோ உங்கள் அண்டைவீட்டில் இருக்கும் சுவர்க்கத்தைக் கண்டு பாட உங்களுக்குக் கொடுப்பினை இல்லையே என்று சொல்லச் சொன்னது.

அது ஒரு சுகானுபவம், இயற்கையும் போதைதான், அதை முழுவதும் அனுபவிபவர்க்கு… சந்தோஷ மிகுதியால் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் கூவினோம், சிரித்தோம், சில பல செல்பிகளில் குளித்தோம் (நீரில் குளிப்பதற்கு ஆயத்தமாகச் செல்லவில்லை) போதும் போதும் என்னும் அளவு மலையன்னை கொடுத்த தாய்ப்பாலைப் பருகிக் களித்தோம் (கற்பனை : கவிப்பேரரசு வைரமுத்து)

இனி திரும்பவேண்டிய நேரம், இத்தனை தூரத்தை மறுபடியும் கடக்க வேண்டுமே என நொந்துகொண்டு, கையிலிருந்த நீர்ப் போத்தல்கள் காலியானவர்களாக, தொண்டைத் தண்ணீர் வற்ற புவியீர்ப்புக்கு எதிராக எங்கள் முழுப் பலனையும் கொண்டு மேலேறினோம். பாடசாலை முடிந்த நேரம் அக்காட்டுப் பகுதியில் ஆங்காங்கே சிறு வீடுகளில் வசிக்கும் பிள்ளைகள் பாடசாலை முடிந்து வீடுதிரும்பிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் இரு முறை இப் பிஞ்சுக் கால்கள் இத்தூரத்தை நடந்து கடக்கின்றனவே! ஒரு நாள் கடப்பதற்கே வளர்ந்த எமக்கு நாக்குத் தள்ளுகிறதே என்று நினைத்ததும், தொழில்நுட்பமும், வசதி வாய்ப்புக்களும் மனிதனுக்கான இயற்கை விதிகளிலிருந்தும் எம்மை எத்துனை சோம்பேறிகளாகவும், ஆரோக்கியமற்றவர்களாகவும் மாற்றி வைத்திருக்கிறது என்ற உண்மை நடுமண்டையில் உறைத்தது.

கிட்டத்தட்ட பிரதான பாதையை அண்மித்ததும் நண்பனொருவன் “அபடீன்” என்று செய்த கூகுளில் “தடாகத்தின் மையப்பகுதி குளிப்பதற்கு உகந்ததல்ல, அதிக மரணங்கள் சம்பவித்த இடம், அவதானம்” என்ற வாசகம் கண்டதும், “இவ்வளவு தூரம் வந்தும் நீரிலிறங்கி குளிக்கவில்லையே” என்று புலம்பிக்கொண்டு வந்த நண்பனை நோக்கி காட்டமாக திரும்பியது அனைவரின் பார்வையும்!

படங்கள் : கட்டுரையாசிரியர்

Related Articles

Exit mobile version