Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

மீண்டும் வழமைக்கு திரும்பும்- கொழும்பு

COVID-19 ஊரடங்கு நிலமைகள் கலைக்கப்பட்டதை தொடர்ந்து வெறிச்சோடிய நிலையில் இருந்து மெல்ல மெல்ல வெளிவரத்துவங்கிய கொழும்பில் இப்போது வழமையான காட்சிகளை தடையில்லாமல் காணக்கூடியதாய் இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் திறந்திருந்த கடைகளுக்கு நடுவே பிரதான வீதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதைக் கண்டு இப்போது ஏராளமான விற்பனை நிலையங்கள், கடைகள், உணவகங்கள் தமது ஜீவனோபாயத்தை ஆரம்பித்திருப்பதை காண முடிந்தது. போட்டியிட்டு பறக்கும் பேருந்துகளின் ஹோர்ன் சத்தங்களையும், இடைவெளிகளுக்குள் புகுந்து சீறிப்பாயும் கொழும்பின் “TukTuk” ராஜாக்களையும் இப்போது தரிசிக்க முடிகிறது. மக்கள் பின்பற்றும் சுகாதார நடைமுறைகள் மீதுள்ள கவனம் குறித்த கேள்விகள் இருந்தாலும், நோய்ப்பரவல் மீண்டும் வந்துவிடக்கூடாது என்கிற அச்சம் இருப்பது தெரிகிறது. 

புத்துயிர் பெற்றிருக்கும் கொழும்பின் இந்தக் காட்சிகளை கெமராக் கண்கள் வழியே ஒளிப்படமாக மாற்றி நம் வாசகர்களுடன் இணைந்து கதை பேசிட விரும்பினோம்.  காலையில் இருந்து மாலை வரை கொழும்பின் பெருந்தெருவில் மக்களோடு மக்களாக கலந்து அவர்களுடே இருக்கும் கதைகளை தேடிப்போனோம்.

roar இன் ஒளிப்படக் கலைஞரும் இலங்கையில் பலரும் அறிந்த twitter பதிவருமான நஸ்லி அகமட் அவர்கள் இந்த எண்ணத்திற்கு வண்ணம் சேர்த்தார்.

கொழும்பின் பிரதான வீதிகளுள் ஒன்றாகிய புறக்கோட்டை வீதியின் ஒரு ஓரத்தில் நின்று கொண்டு அந்துருண்டை விற்கும்  வயதானவரிடம் பேசியதில்,  அவரது தொழில் இதுவல்ல என்பதும்,  மூக்குக் கண்ணாடிகள், sun glasses விற்கும் சிறு வியாபாரம் செய்து வந்தவர் என்பதும் தெரிந்தது. அவர் பெயரில் உள்ள கடன்களை அடைக்கவும் வாழ்க்கைச் செலவுகளை சரிசெய்யவுமே அவர் இத்தொழிலில் தற்காலிகாமாய் ஈடுபட்டிருக்கிறார். மீண்டும் சீக்கிரம் அவரது முழுநேரத் தொழிலுக்கு செல்வார் என நாமும் வாழ்த்திவிட்டு வந்தோம்.

சாலையின் ஓரமாக ஒரு மரப்பெட்டியை புரட்டிப்போட்டு அவருக்கான ஆசனமாக்கி அமர்ந்திருந்தார் ஒருவர். சாரம் விற்கும் அவரது வியாபாரத்தை காலையில் சீக்கிரமாகவே வந்து இடம்பிடித்து ஆரம்பித்திருந்தார் அவர்.  வெகுசிலரே வாங்கிச்செல்வதாகவும், முந்தைய நாட்களில் விற்றுப்போனதைப் போல இந்நாட்ளில் வியாபாரம் நடப்பதில்லை எனவும் எம்மிடம் தெரிவித்தார்.  எம்மிடம் பேசும்போதும் அவர் கண்கள் வீதியோரம் வந்துபோகும் சகமனிதர்களையே எதிர்பார்த்தபடி விரிந்து கிடந்ததைக் கவனித்தோம். 

கொழும்பின் வியாபார நாட்களில் விறுவிறுப்பாக இயங்கும் ஒரு சாலையோரம், அங்கு நடமாடும் பொதுமக்கள் தமது கைகளை கழுவி சுத்தம் செய்ய உதவியாய் நிறுவப்பட்டிருந்த குழாய் ஒன்று கண்ணில் பட்டது. – சுய சுத்திகரிப்பு மற்றும் சுகாதார அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்றவேண்டும் என்கிற நினைவுபடுத்தல் தான் அது.

சாலைமுனையில் வேகமாக புகையை கக்கிச் செல்லும் பழைய வாகனம் ஒன்றும், அதை உதாசீனம் செய்தபடி அன்றாடத் தேவைகளை கவனம் செழுத்தி விரைந்தும் நகர்ந்தும் போகும் மக்கள் கூட்டமும் கொழும்பில் புதிதன்று. ஆனால், விதம் விதமான வண்ணங்களில் முகக் கவசங்கள் அவர்களில் புதிதாய் இருந்தது.

  

கொழும்பு கோட்டை பெருந்தெருக்களில் இந்தக் காட்சி கண்ணில்பட்டது. குதிரை மீது அமர்ந்தபடி வாகன நெரிசலை கட்டுக்குள் வைக்கும் விசேட போக்குவரத்து அதிகாரிகள் சிலர், சாலையை கடக்க முற்பட்டபடி பவனி வந்த காட்சி தான் அது.

நீண்ட ஊரடங்கு கட்டுப்பாட்டினால் வீட்டின் மறைவில் நிறுத்தியிருந்து ஓய்வுக்கு பழகிப்போன வாகனங்கள் மீண்டும் சிவப்ப-மஞ்சள்-பச்சை சமிக்ஞைகளுக்குm, வட்டப்பாதைகளுக்கும், பாதக் கடவைகளுக்கும் தம்மை பழக்கப்படுத்திக்கொள்வதையும் காணமுடிந்தது. 

இன்னும் சற்று நடந்து கொஞ்சம் தூரம் சென்றோம், காலிமுகத்திடலின் நடைபாதைகளை அலங்கரிக்க நடைபயிற்சி செய்யும் பலர் அஸ்த்தமனத்திற்கு முன்னதாகவே வந்து அப்பாதைகளில் வலம் வந்துகொண்டிருப்பதை காணக்கிடைத்தது.

பட்டம் விற்கும் அன்ணன்மார்களும், பெட்டிகடையில் ரொட்டிதரும் அக்காமார்களும், பொம்மைகளும் சிறுவர் விளையாட்டு சாமான்கள் விற்கும் மாமாமார்களும் காலிமுகத்திடலுக்கு விரைந்து வந்து தமது விட்டுப்போன தொழிலில் மீண்டும் முத்திரைபதிக்க தயாராகியவண்ணம் இருந்தனர். கடற்கரை காற்றில் மனம் விட்டு பேசும் காதலர்கள் கூட்டமும், கைக்குழந்தைகளுடனும் , சிறுவர்களுடனும் வந்து குதூகளிக்கும் பெற்றோரும், கடல் அலையில் கால்நனைக்க வரும் குடும்பங்களும் வழமைபோல கூடியிருந்ததைக் காணக்கிடைத்தது.

இதையெல்லாம் பார்த்தபடி சுற்றிவந்தாலும் தமது அன்றாட கடமையை தவறவிட நினைக்காத சூரியனும் அஸ்தமனப் போர்வைக்குள் தம்மை அடக்கிக்கொள்ள விரைந்தான். மக்களும் தம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சாலைகளில் வழமைப்போல வலம்வந்த காலப்பொழுதை மீண்டும் காணும் ஆவலுடன் விரைந்து வீடு செல்ல கிளம்பிச் சென்றனர்.

புறக்கோட்டைப்பகுதியில், தமது இறுதிநேர விற்பனைக்கு கடைகளை திறந்து வைத்திருந்த சாலையோர வியாபாரிகள் கொஞ்சம் கொஞ்சமாய் தமது நாளை பூர்த்திசெய்யும் நிலைக்கு வருவதைக் கண்டோம்

மக்கள் நடமாட்டம் விரைவில் குறைந்துவருவதை காணமுடிந்தது. தமது அன்றாடக் கடமைகளை மக்கள் வேகம் வேகமாக முடித்த வண்ணம் வீடுதிரும்பிக்கொண்டிருந்தனர். வெளியில் நடமாடும் சுதந்திரம் இருந்தபோதும், சமூக இடைவெளியை மக்கள் கூடுமானவரை கடைபிடிக்க வலியுறுத்திய நிலையில், சுகாதார வரைமுறைகளை மக்கள் கடைபிடித்த வண்ணம் இந்த நாட்களை மக்கள் சற்று உன்னிப்பாக கவனித்த படி இருப்பதை உணரமுடிந்தது.

COVID-19 இன்னமும் முழுவதுமாக இலங்கையை விட்டுச் செல்லவில்லை. அதன் வெளிப்பாடு இன்று மக்கள் மத்தியில் புதிய சிந்தனைகளை கட்டியெழுப்பியுள்ளது. பொறுப்புணர்வும், தற்பாதுகாப்பும் மக்கள் கடைபிடிக்கவேண்டிய பிரதான செயற்பாடுகளுள் இடம்பிடித்துள்ளமை தெளிவாகத் தெரிகின்றது.

Related Articles