
இலங்கையின் தற்போதைய பாராளுமன்றமானது, ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே பகுதியில் 1982 ஆம் ஆண்டு தொடக்கம் உத்தியோகபூர்வமாக செயற்பட்டுவருகிறது. இந்த கட்டிடத் தொகுதியினை மிகவும் நேர்த்தியான முறையிலும் பல்வேறு சிறப்பம்சங்களுடனும் வடிவமைத்துள்ளார்கள். இதன் வெளித்தோற்றம் மட்டுமின்றி உள்தோற்றமும் சிறந்ததொரு வடிவமைப்பினைக் கொண்டு காணப்படுகின்றது. அதிலும் நாடாளுமன்ற அமர்வுகளுக்கென அமைக்கப்பட்டுள்ள கட்டிடத் தொகுதியானது தனித்துவமான அம்சங்கள் பலவற்றைக் கொண்டு காணப்படுகின்றது. இலங்கை நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் சபை மண்டபத்தின் கட்டமைப்பு மற்றும் அவை பற்றிய சில தகவல்களை புகைப்படங்களுடன் இந்த தொகுப்பில் அறிந்துகொள்ளுங்கள்.

செவ்வக வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள சபை மண்டபமானது இரண்டு மாடிகளின் உயரத்தைக் கொண்டது. அதில் கீழ்ப் பகுதியில் நாடாளுமன்ற அமர்வுகளுக்கும் மேலுள்ள பகுதியில் பார்வையாளர்கள் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளை பார்வையிட விரும்புவோர் முன் அனுமதி பெற்று பார்வையிட முடியும்.

இம் மண்டபத்தைச் சுற்றிலும் உள்ள 18 கம்பங்களில் வெண்கலத்தினாலான கொடிகள், விருதுகள்,பதாதைகள் போன்றவைகளும் இலங்கையின் தேசிய சின்னமும் பொறிக்கப்பட்டு காட்சி படுத்தப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட வசதிகள் நிறைந்த இந்தச் சபை மண்டபத்தில் 232 ஆசனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது 116 ஆசனங்கள் வீதம் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிக்கென பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாசனங்கள் சபாநாயகரின் ஆசனத்திற்கு இருபுறமும் 116 ஆசனங்கள் வீதம் வைக்கப்பட்டுள்ளன.


மண்டபத்தினுள் உறுப்பினர்களின் இருக்கைகளானது படிப்படியாக உயர்ந்து செல்லக் கூடியவாறு மேசைகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. 232 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இருக்கைகளைக் கொண்டுள்ள இம்மணடபத்தினுள் மேலும் 16 இருக்கைகள் அமைப்புத் திருத்தம் எதுவும் செய்யப்படாமல் உள்ளடக்கக் கூடிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இவ்விருக்கைகளுக்கு மத்தியில் சற்று உயமான மேடையமைத்து சபாநாயகருக்கான மேசையுடன் கூடிய இருக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு சற்று கீழாக பாராளுமன்றச் செயலாளர் நாயகம், பிரதிச் செயலாளர் நாயகம், உதவிச் செயலாளர் நாயகம் ஆகியோருக்கான இருக்கைகளும் காணப்படுகின்றது. மேலும் சபாநாயகரின் ஆசனம் தென்படக் கூடிய வகையில் மேடையின் ஓரங்களில் படைக்கலச்சேவிதர் மற்றும் பிரதிப் படைக்கலச் சேவிதர்களுக்கான ஆசனங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மண்டபத்தின் கீழ்ப்பகுதியில் சில விசேட நோக்கங்களுக்கான கூடங்களும், ஹன்சாட் அலுவலர்களுக்கான கூடமும், பாராளுமன்ற நிர்வாக அலுவலர்களுக்கான கூடமும், முறையே உள்ளன.
சபை மண்டபத்தின் இருபுறமும் அகலமான முகப்புக் கூடங்கள் அமைந்துள்ளதோடு அதனூடாகவே உறுப்பினர்கள் மண்டபத்தினுள் பிரவேசிப்பர். இக்கூடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து உரையாடக்கூடியவாறு நவீன சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கேற்ற மொழிகளில் அமர்வுகளை செவிமடுக்க உடனடி மொழிபெயர்ப்பும் செய்யப்படுகின்றது.
சபை மண்டபக்கதவு


இலங்கை நாடாளுமன்றத்தின் சபை மண்டப பிரதான நுழைவாயிலின் கதவு, சிறப்பானதொரு தோற்றத்தில் அமையப்பெற்றுள்ளது. செப்பு மற்றும் வெள்ளி ஆகிய உலோகங்கள் பூசப்பட்டு 12 x 12 என்ற உயர அகல அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புராதன கல்வெட்டுகளில் எழுத்துக்கள் செதுக்கப்படுவதுபோல இலங்கை அரசியலமைப்பின் பாயிரமானது சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் செதுக்கப்பட்டு முப்பரிமாண தோற்றத்தில் காட்சியளிக்கின்றது. மற்றும் இதன் ஓரங்களில் இலங்கையின் புராதன கலைகளை சித்தரிக்கும்படியான தாமரை மலர் வடிவ அலங்கார வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
சபையின் தடை எல்லை



நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் செங்கம்பளம் விரிக்கப்பட்டு தரைக்குக் குறுக்காக வைக்கப்பட்டுள்ளது தான் இந்த தடை எல்லை. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அல்லது அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர்ந்த வேறு எந்தவொரு நபரும் இத்தடை எல்லைக்கு அப்பால் செல்ல முடியாது. நாடாளுமன்ற அமர்வொன்றுக்கு சபாநாயகர் இம்மண்டபத்தினுள் வருகின்றபோது செங்கோலைத் தாங்கிச் செல்லும் படைக்கலச் சேவிதரும், பிரதிப்படைக்கலச் சேவிதர்கள் மட்டும் தடை எல்லைக்கு அப்பால் அமர்ந்திருப்பார்கள். நீண்ட செவ்வக வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இதன் முகப்பில் வீரம், நிலைபேறு, சுபிட்சம் என்பவற்றை பிரதிபலிக்கும் பாரம்பரிய அடையாள சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இலங்கை நாடாளுமன்ற அமர்வொன்றினை பார்வையிட விரும்புபவர்கள் முன் அனுமதி பெற்ற பின்பு அனுமதிக்கப்படுகின்றனர்.