கொரோனா வைரஸ் காரணமாக பல நாட்களாக முடங்கிக் கிடந்த இலங்கை உட்பட பல உலக நாடுகள் தற்போது படிப்படியாக தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரத் தொடங்கியுள்ளது. இந்த முடக்கு நிலை மேலும் தொடருமானால் கொரோனாவின் உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்பைவிட பொருளாதார மந்த நிலையால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என பல பொருளாதார நிபுணர்கள் தங்கள் கருத்து கூறிவருகின்றனர். கொரோனாவின் பாதிப்புகள் முழுமையாக நீங்காத நிலையிலும் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேஷியா, சீனா, தாய்வான் போன்ற நாடுகள்
தம் வர்த்தக நடவடிக்கைகளுக்கான அனுமதியை பல கட்டுப்பாடுகளுடன் வழங்க முன்வந்துள்ளது. இந்தத் தளர்வுகள் மக்களின் இயல்புவாழ்க்கைக்கு சற்று நிம்மதியளித்தாலும் , மனித நடவடிக்கைகள் மீண்டும் சகஜமாக அதிகரிக்கும் பட்சத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையை மேற்சொன்ன நாடுகள் சந்திக்கக் கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனாவின் இரண்டாம் அலை.
சில வாரங்களுக்கு முன்னர், சிங்கப்பூர் கொரொனா வைரஸின் தீவிரத்தை சிறப்பாக கட்டுப்படுத்தியதாக உலக சுகாதார அமைப்பு பாராட்டி இருந்தது. ஆனால் அடுத்த சில வாரங்களிலேயே அங்கு நிலைமை தலைகீழானது. காரணம் அங்குள்ள வெளிநாட்டு தங்குமிடங்கள் பெரிதும் கண்டுகொள்ளப்படாததன் விளைவாக சுமார் 24,000 இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தென்கிழக்கு ஆசியாவில் அதிக கொரோனா நோய்த்தொற்று கொண்ட நாடாக மாறியது சிங்கப்பூர்.
கொரோனா கட்டுப்படுத்தப்பட்டத்தை தொடர்ந்து தென்கொரியா தனது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது. இதன் விளைவாக அந்நாட்டு தலைநகரில் பல இடங்களுக்கு வந்து சென்ற நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் அந்நாட்டில் பாடசாலைகள் திறக்க இருந்த நிலையில் அவை மறுபரிசீலனை வரும்வரை மீண்டும் மூடப்பட்டன.
கொரோனாவின் பிறப்பிடம் எனப்படும் சீனாவின் வுஹான் நகரம் தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவரும் நிலையில், ஜிலீன் எனப்படும் சீனாவின் மற்றொரு நகரில் உள்ளூர் வாசிகளுக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டது. இப்படி ஊரடங்குகள் தளர்த்தப்பட்ட பின்னரும் நோய்த்தொற்று மீண்டும் வேகமாக பரவ ஆரம்பிக்கும் நிலையைதான் மருத்துவர்கள் கொரோனாவின் இரண்டாம் அலை என்கிறார்கள்.
1918 ஆம் ஆண்டுகளில் பல லட்சம் உயிர்களை கொன்று குவித்த ஸ்பானிஷ் ப்ளூ நோய்த்தொற்று, முதல் முறை பரவியதை விட இப்படி இரண்டாம் அலையாக பரவிய போதே அதிக உயிர்களை பலியெடுத்தது.
இலங்கையில் இரண்டாம் அலை தாக்கம் ஏற்படுமா?
இலங்கையில் பொதுமுடக்கு நிலை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் அன்றாட செயற்பாடுகள் அனைத்தும் மெல்ல மெல்ல மீளத்திரும்புகின்றன. ஆனால் COVID-19 பரவலை தடுப்பதற்கான முழுமையான தீர்வு காணப்படாததை கருத்தில் கொண்டும், பொதுமுடக்கு நிலை தளர்த்தப்பட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸின் தாக்கம் கடுமையாக இருந்ததாலும், இலங்கையில் கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் ஏற்படகூடிய வாய்ப்புகள் இருப்பதாக தொற்றுநோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக மக்கள் தொடர்ந்தும் சுகாதார பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் கூட்ட நெரிசலுக்கு இடம் கொடுக்கக் கூடாது எனவும் இலங்கை அரசாங்காத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள் பெரும்பாலான பொதுமக்களால் முறையாக பின்பற்றப்படுவதில்லை எனவும், இது கொரோனா தொற்றுக்கான அச்சுறுத்தலை மக்களிடையே ஏற்படுத்துவதாகவும் பலவேறு அரசு தனியார் ஊடகங்களின் வாயிலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
விளைவு
COVID-19 தொற்று முற்றிலும் அழிக்கப்படாமல் நோய்த்தொற்றின் அளவு குறைந்துள்ளநிலையில் மக்களது வழமையான அன்றாட நடவடிக்கைகள் அதிகரிக்கத் தொடங்கினால், திடீரென பலமடங்கு தீவிரத்தோடு இவ்வைரஸ் பரவத்தொடங்கும் அபாயம் உள்ளது. இது கொரோனா ஒழிப்பில் உலகம் சந்திக்க இருக்கும் அடுத்த சவால் எனவும் அப்படி பரவுமானால் இதன் தாக்கம் மிகத்தீவிரமாக இருக்கும் என்வும் WHO நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இரண்டாம் அலையை எதிர்கொள்ள நேருகையில் உலக நாடுகள் மீண்டும் பூரண ஊரடங்குநிலையை அறிவித்தால், உலகின் பொருளாதாரம் நினைக்க முடியாத அளவிற்று சரிவை சந்திக்கும். ஏழைநாடுகள் ஒட்டுமொத்த அரச நடவடிக்கைளை கைவிடக்கூடும், பல்லாயிரக்கணக்கானோர் தொழிலிழக்கக் கூடும். எனவே தான் கொரோனாவின் இரண்டாம் அலையை எளிதாக நினைக்க வேண்டாம் என பொருளாதார நிபுணர்களும் எச்சரித்துக் கொண்டேயுள்ளனர்.
இரண்டாவது அலையை தடுக்க முடியுமா?
“உலகளாவிய தொற்றுகள் என்பது நெருப்பை போன்றது. எரிபொருள் அதிகமாக இருக்கும் போது நெருப்பு கொழுந்து விட்டு எரியும். எரிபொருள் குறையும் பொழுது அந்த நெருப்பின் தீவிரமும் குறையும்” என, அமெரிக்காவின் ஜோன் ஹாப்கின்ஸ் மருத்துவமனையின் நோய்த்தொற்று பேராசிரியரான ஜஸ்டின் லிஸ்ட்லேர் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். இதில் அதிக எரிபொருள் என அவர் கூறுவது கொரோனாத்தொற்று பரவும் இச்சமயத்தில் கூட்டமாக அலைமோதும் மக்களைத் தான். கூட்டமான சன நெரிசலை கொரோனாவின் இரண்டாம் அலைக்கான எரிபொருள் என்கிறார் பேராசிரியர்.
இரண்டாம் அலையை தடுக்க உதவும் தனிமனித பங்களிப்பு என்ன?
தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும்வரை சில சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமே இதனை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்கிறது உலக சுகாதார மையம். இந்தத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க குறைந்தது ஓராண்டிற்கும் அதிக காலம் தேவைப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இக்காலப்பகுதிக்குள் நம் ஒவ்வொருவரின் அன்றாட செயற்பாடும் முற்றிலும் மாறக்கூடும். முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிய பழகிக்கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை கழுவவேண்டும். வெளி செல்லும் பட்சத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், பிறரை கடைபிடிக்கச் சொல்வதும் நம் கடமையாக மாறும். அவசியமற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டிய நிலை உருவாகலாம். இவ்வாறான சுகாதார நடவடிக்கைகளை ஒவ்வொரு தனிமனிதனும் பின்பற்றி நடக்கவேண்டியது தற்சமயத்தில் கட்டாயக் கடமையாகும்.
தற்போது இலங்கையில்…
2020 ஜூன் 12 ஆம் திகதி COVID-19 தொற்று பரவலின் புதிய அறிக்கையின்படி, தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,877 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,196 ஆகவும், தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 670 ஆகவும், கண்காணிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 57 ஆகவும் மற்றும் தொற்றினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 11 ஆகவும் உள்ளது.
நாட்டுமக்களின் அன்றாட வாழ்வியல் மற்றும் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு சுகாதார விதிகளுக்கமைய முடக்குநிலை தளர்த்தப்பட்டு அன்றாட செயற்பாடுகள் அனைத்தும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சுகாதார அமைச்சின் விதிகளின் படி வருகின்ற ஜூன் 29 ஆம் திகதி பாடசாலைகள் அனைத்தும் ஆரம்பிக்கப்பட்டு, வகுப்புகள் வாரியாக வெவ்வேறு தினங்களில் கற்கை செயற்பாடுகள் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மற்றும் கடந்து ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் COVID-19 அபாயம் காரணமாக பிற்போடப்பட்டது. அதன்படி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுமென தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.