அருந்தும் பாலிலும் அரசியல்

இன்று நமக்கான பால்மா  வகைகளுக்கு பெருத்த தட்டுப்பாடு நிலவும் நிலையில் பலரும் சமூக வலைத்தளங்களில்” பரவாயில்லை இனி நாம் பசுப்பாலுக்கு மாறுவோம் நல்லதுதானே ” என கருத்திடுவதை பரவலாக    அவதானிக்கக்கூடியதாக உள்ளது .  ஆனால்  இது எந்த அளவு சாத்தியம் ?

இலங்கையின் பால் உற்பத்தி விகிதமானது மொத்த தேவையில் வெறும் 30% மட்டுமே! இன்று நம் நகரங்களில் கிடைக்கும் ஒரு லீட்டர் பாலின் விலை நூற்றிஎழுபது ரூபா. சேகரிப்பு மையங்களில் வெறும் எழுபது ரூபாய்க்கு வாங்கப்படும் பால், நுகர்வோரிடத்தே 170/- ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்று நம் நாட்டு நிலவரப்படி ஒரு பசு  மாட்டின் விலை சுமார் இரண்டரை லட்சம் முதல் நான்கரை லட்சம் வரையில் எகிறிக்கொண்டிருக்கும் நிலையில்,சாதாரண ஒரு விவசாயியோ, அல்லது தொழிலாளியோ அதனை வாங்கி பால் வணிகம் செய்யும் அளவிற்கு சாத்தியப்படுமா? உண்மையில் இலங்கையில் மாடு வளர்ப்புக்கான தேவை குறைக்கப்பததன் பின்னர் அந்த கலாசாரமே அழிக்கப்பட்டுவிட்டது எனலாம்.

இலங்கையில் பயன்படுத்தப்படும் பால் மா வகைகள்: புகைப்படவிபரம் -www.uktamilnews.com

ஒருகாலகட்டம்வரையில் பால் உற்பத்தி நம் நாட்டில் தேவையான அளவில் இருந்ததாகவும் பின்னாளில் மக்கள் பால்மா பவுடர்களை நுகர்வத்தில் அதிக ஆர்வம்  காட்டவே, உள்நாட்டில் இந்த மாடுவளர்க்கும் பாரம்பரியமும் தொழிலும் மெல்லமெல்ல அருகிவிட்டிருக்கின்றதெனலாம். ஸ்ரீமா பண்டாரநாயக்காவின் ஆட்சியின்பின் வந்த ஜெயவர்த்தனாவின் ஆட்சியில் திறந்த பொருளாதாரம் என்கிற பெயரில் தாராளமாக இறக்கப்பட்ட பொருட்களில் பால்மா  பவுடர்களும்  உள்ளடங்கின. மலிவான விலையில் இலகுவாக நினைத்த நேரத்தில் கிடைக்கக்கூடியதாக இருந்த பால்பவுடர் இலங்கை மக்களின் தேநீர் தேவையினையும் பால் தேவையினையும் (எந்தவித எதிர்கால பின்விளைவுகளையும் சிந்திக்காமல்) தீர்த்துவைத்தது எனலாம். எவ்வித தடையுமின்றி இறக்குமதி செய்யப்பட்ட பாலும்,  பாற்பொருட்களும்,  விளம்பரங்கள் மிக அதிகமாக செய்யப்பட்டு மக்கள் மனதில் ஊடுருவிக்கொண்டன. 

பால் உற்பத்திதுறை என்பது அதிக வருமானம்  ஈட்டக்கூடியவொன்று என்கிறபோதிலும் இலங்கையைப் பொறுத்தவரையில் உள்நாட்டு உற்பத்தி ஏனோ ஊக்குவிக்கப்படவில்லை என்றே கூறவேண்டும். அரசாங்கங்கள் எடுத்த தவறான முடிவுகளும், சில தனிமனிதர்களின் மற்றும் அரசியல்வாதிகளின்  கமிஷன்களும் உள்ளூர் உற்பத்தியை முடக்கி வெளிநாட்டு இறக்குமதியை ஊக்குவித்தன என்று சொன்னாலும் தகும்.   கடந்த அரசாங்கத்தில் உள்ளூர் பால் உற்பத்தி தொடர்பான பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு அதற்கான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு, பின் பால் தொடர்பான எந்த உற்பத்தியை உள்நாட்டில் யார் தொடங்கினாலும் மிகக்குறைந்த வட்டியில் கடன் கொடுப்பது, மானியம் கொடுப்பது, ஆலோசனைகளை வழங்குவது போன்ற திட்டங்கள் உருவாக்கப்பட்டன. 

ஆனால் அந்த திட்டங்கள் அடிமட்ட மக்களுக்கு கொண்டுசேர்க்கப்பட்டதா என்றால் இல்லை என்றே   கூறவேண்டும். இப்படியொரு திட்டம் இருப்பதே அநேகருக்கு தெரிந்திருக்கவில்லை. உண்மையில் இன்றைய நிலவரப்படிப்பார்த்தால் இறக்குமதியை முற்றுமுழுதாக ஒழித்துவிட்டு உள்ளூர் உற்பத்தியில் தங்கியிருப்போம் என முட்டாள்தனமாக Facebookல் வேண்டுமானால் ஸ்டேட்டஸ் போடலாம். ஆனால் உண்மை நிலைமை எங்களுடைய சந்தையின் தேவைக்கு  ஏற்ற வழங்கள் உள்ளூர் உற்பத்தியில் இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதே. எனவேதான் இலங்கை போன்ற நாட்டில் பால்மாக்களை திடீரென தடைசெய்தாலோ பதுக்கி வைத்து விலையை அதிகரித்து விற்றாலோ அது பொதுமக்களை பெரிய அளவில் பாதிப்படையச் செய்வதுடன் பேசுபொருளாகவும் மாறிவிடுகிறது.  

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்: புகைப்படவிபரம் – Ada derana.lk

நாம் நம் வாழ்வியலில் பல ஆண்டுகள் சற்று பின்னோக்கிப்போவோமாயின், ஊர்கள்தோறும் கிராமங்கள்தோறும் அநேகமாக அனேகரது வீட்டிலும் கால்நடை வளர்ப்பு என்பது சாதாரணமாக இருந்தவொன்று.  ஒரு குடும்பத்தின் பால் தேவையினை அவர்களது வீட்டில் இருக்கும் பசுவே தீர்த்துவிடும் . அப்படியே பசுக்கள் இல்லாதவர்கள் அக்கம்பக்கத்தில் மாடு வளர்ப்போரிடம் பாலை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கெல்லாம் பவுடர் பாலின் அவசியம் அத்தியாவசியமாகவில்லை அப்போதெல்லாம். ஆனால் நிலைமை தற்போது தலைகீழ்.

நகரமயமாக்களில் விளைநிலங்கள் சுருங்கி கிராமப்புற பொருளாதாரம் என்பது தற்போது அதலபாதாளத்தில் சென்றுகொண்டிருக்கின்றது. வேளாண்மைத் தொழிலை நம்பி வீடுகளில் வளர்க்கப்பட்ட கால்நடைகளுக்கான உணவு தண்ணீர் பராமரிப்புச் செலவு என அனைத்துமே மெல்லமெல்ல கால்நடைவளர்ப்போர்க்கு சவாலாக மாறத்தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலை. இலங்கைபோன்ற பசுமை நிறைந்த நாட்டில் நாட்டு மாடு வளர்ப்பில் தாராளமாக ஈடுபடலாம் என நாம் நினைக்கக்கூடும் ஆனால் இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் யாரையும் அந்த தொழிலை நடத்தவிடாது என்பதே யதார்த்தம். 

இந்தியாவில்கூட சுமார் நூறுவகையான நாட்டு மாடுகளின் வகைகள் இருந்ததாகவும் பின்னாளில் அவை கொஞ்சம்கொஞ்சமாக அழிந்து தற்போது ஜெஸ்ஸி இன கலப்பு வகைகளே காணப்படுகிறது. வெண்மைப்புரட்சியின் பயனாக சுமார் நாற்பது ஆண்டுகளாக பால் உற்பத்தி மற்றும் இறைச்சி உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்குடன் வெளிநாட்டு மாடுகளின் இறக்குமதி அல்லது அவற்றின் கலப்பினங்கள் அங்கே ஏராளமாக  உருவாக்கப்பட்டன.

அன்றாடம் நாம் குடிக்கும் பாலில் உள்ள வர்த்தக சதிகள் சொல்லில் அடங்காதவை. செயற்கை கருவூட்டலால் காளைகளுக்கான அவசியம் குறைந்தது. போதாக்குறைக்கு மாடறுப்புக்கு தடை தொடர்பான போராட்டங்கள்  வேறு ! இதனால் காளை   வளர்ப்பு என்பது அருகியது. மேய்ச்சல் நிலங்கள் அழிக்கப்பட்டு  அவையெல்லாம் கட்டிடங்களாக மாறின, மாட்டுத்தீவனங்கள் இறக்குமதியாயின,  இன்று இந்தியாவைப்போன்றே இலங்கையிலும் நாட்டு மாடுகளின் வகையறாக்கள் குறைந்து, Friesian, Jersey போன்ற வெளிநாட்டு மாடுகளின் ஆதிக்கமே அதிகஅளவில் தாக்கத்தினை செலுத்துகின்றன. 

Friesian, Jersey போன்ற வெளிநாட்டு பசுக்கள்/  புகைப்படவிபரம் -NZMP.com

அழிந்தது நாட்டு மாடுகளின் இனமும்,  நமது ஆரோக்கியமும் மட்டுமல்ல இதையொட்டியிருந்த சுயசார்பு பொருளாதாரமும்தான்! எளிய உணவாக இருந்த பால் மற்றும் பால்சார்ந்த உணவுப் பொருட்களும் சேர்ந்தே  அழிக்கப்பட்டன.  சிற்றூர்களில் முன்பெல்லாம் பெண்கள் பாலை தயிராக்கி கடைந்து வெண்ணை, நெய் எடுத்து விற்கும் வழக்கம் இருந்தது. வெண்ணை எடுத்தபின் கிடைக்கும் துணைப்பொருளான மோரையும்  விற்று வருமானம் ஈட்டமுடிந்தது.

சிறந்த வெயில்கால  பாணமாக விளங்கிய லாக்டிக் அமிலம் நிறைந்த நீர்மோர் மக்களுக்கு மலிவான விலையில் கிடைத்தது. இதில் மிகச்சிறப்பானதென்னவென்றால் இப்பொருளாதாரம் பெண்களின் கையில் இருந்ததுதான். எளிய பெண்களிடமிருந்த இந்த  சிறு வணிக பொருளாதாரம்  இன்றோ தட்டிப்பறிக்கப்பட்டு பெரும் வணிக நிறுவனங்களின் வசம் சென்றிருப்பதன் பின்னணியிலும் ஏராளமான அரசியல் உண்டென்றே கூறவேண்டும்!

Related Articles

Exit mobile version