சுங்கத் திணைக்களத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வர்த்தக ஏற்றுமதியிலிருந்து கிடைத்துள்ள வருவாய் 906.02 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இது, இலங்கையில் COVID-19 முடக்க நடவடிக்கைகளைத் தளர்த்தியதைத் தொடர்ந்து ஏற்றுமதித் துறை படிப்படியாக தமது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளமையினாலும் மற்றும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய வழங்கல் மற்றும் தேவைச் சங்கிலிகளை ஓரளவிற்கு மீட்டெடுத்துள்ளமையினாலும் நிகழ்ந்துள்ள மாற்றமாகும்.
ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் (EDB) தலைவர் பிரபாஷ் சுபசிங்க குறிப்பிடுகையில், “ஏற்றுமதி நிச்சயமாக வளர்ச்சிநிலைக்கு திரும்பியுள்ளதையடுத்து, இது இப்போது இலங்கைக்கு சாதகமான வர்த்தக இருப்புக்கான பிரதான வருவாய் துறையாக மாறியுள்ளது. முன்னெப்போதையும் விடவும், ஏற்றுமதி வியாபாரம் தேசிய முன்னுரிமையாக மாறியுள்ளது. இப்போது ஏற்றுமதி துறையில் வலுவான V வடிவ மீட்சியைக் காண்பது நிச்சயமாக வரவேற்கப்படக்கூடிய ஒன்றுதான். ஏப்ரல் 2020 இல் மிகக் குறைந்த புள்ளியுடன் ஒப்பிடுகையில், தற்போது ஏற்றுமதி 327% அதிகரித்துள்ளது. நாம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் தேசிய பொருளாதார தேவைகளுக்கு சேவை செய்ததற்காக முழு ஏற்றுமதி சமூகத்திற்கும் நான் நன்றி கூறுகிறேன். மேலும் எமது ஏற்றுமதி சமூகத்திற்கு சேவை செய்ய EDB இல் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
மே 2020 இல் பதிவு செய்யப்பட்ட மதிப்புடன் ஒப்பிடும்போது 2020 ஜூன் மாதத்தில் வணிகத்திலிருந்து கிடைத்த ஏற்றுமதி வருவாய் 50.4% அதிகரித்துள்ளது. இருப்பினும், ஜூன் 2019 உடன் ஒப்பிடுகையில், வர்த்தக ஏற்றுமதியின் வருவாய் 16.42% குறைந்துள்ளமை பதிவாகின்றது.
2020 மே மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 218.83 மில்லியன் அமெரிக்க டாலர்களோடு ஒப்பிடும்போது, 2020 ஜூன் மாதத்தில் ஆடை மற்றும் ஜவுளி நிறுவனங்களின் ஏற்றுமதி வருவாய் 83.72% அதிகரித்து 402.04 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இருப்பினும், 2019 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2020 ஜூன் மாதத்தில் 20.22% சரிவு பதிவாகியுள்ளது.
மே 2020 உடன் ஒப்பிடும்போது ஜூன் 2020 இல் மதிப்புகள் (6.14%) மற்றும் தொகுதிகள் (4.52%) இரண்டுமே அதிகரித்ததால் தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது. கூடுதலாக, தேயிலை ஏற்றுமதி வருவாய் ஜூன் 2019 உடன் ஒப்பிடும்போது ஜூன் 2020 இல் 1.55% அதிகரித்துள்ளது.
தேங்காய் எண்ணெய், கொக்கோபீட் மற்றும் செயல்படுத்தப்பட்ட கார்பன் ஏற்றுமதியில் மேம்பட்ட செயல்திறன் காரணமாக தேங்காய் சார்ந்த அனைத்து பிரதான வகைகளிலிருந்தும் வருவாய் ஜூன் 2019 உடன் ஒப்பிடும்போது ஜூன் 2020 இல் அதிகரித்துள்ளது.
கூடுதலாக, ரப்பர் மற்றும் ரப்பர் மூலமான பொருட்களின் ஏற்றுமதி வருவாய் 2020 மே மாதத்துடன் ஒப்பிடும்போது 2020 ஜூன் மாதத்தில் 34.58% அதிகரித்து 68.89 மில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. டயர் துறையில் மோசமான செயல்திறன் பதிவாகியுள்ள நிலையில், ரப்பர் மற்றும் ரப்பர் மூலமான பொருட்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 2020 ஜூன் மாதத்தில் 14.74% குறைந்துள்ளது.
இலவங்கப்பட்டை (81.7%), மிளகு (84.78%), சாதிக்காய் மற்றும் அதன் விதை தோல் (106.67%) மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் (22.75%) ஆகியவற்றின் வளர்ச்சியுடன் 2020 மே மாதத்துடன் ஒப்பிடும்போது மசாலா மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களின் ஏற்றுமதி வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது. மசாலா மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களின் இணையான ஏற்றுமதி வருவாய் ஜூன் 2019 உடன் ஒப்பிடும்போது 2020 ஜூன் மாதத்தில் 29.96% அதிகரித்துள்ளது.
உறைந்த மீன்களின் ஏற்றுமதியின் சிறந்த செயல்திறன் காரணமாக ஜூன் 2019 இல் 21.39 மில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவுசெய்யப்பட்ட கடல் உணவின் வருவாய், ஜூன் 2020 இல் 13.7% அதிகரித்து 24.32 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. மேலும் உறைந்த மீன்களின் ஏற்றுமதியின் சிறந்த செயல்திறன் காரணமாக 2019 மே மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூன் 2020 இல் 110.93% அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், ஜூன் 2019 உடன் ஒப்பிடும்போது 2020 ஜூன் மாதத்தில் உணவு மற்றும் பானங்கள் (-8.36%) மற்றும் மின் மற்றும் மின்னணு பொருட்கள் (-6.28%) ஆகியவற்றின் ஏற்றுமதி வருவாய் குறைந்துள்ளது.
மேலும், முகமூடிகள், பாதுகாப்பு அங்கிகள், அறுவை சிகிச்சை கையுறைகள் போன்ற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கான (PPE) அதிக தேவை காரணமாக, ஆடை மற்றும் ஜவுளி மற்றும் ரப்பர் மற்றும் ரப்பர் சார்ந்த தயாரிப்புகளின் ஏற்றுமதியிலிருந்து வருவாய் 2020 ஜூன் மாதத்தில் கணிசமாக அதிகரித்தது. PPE தொடர்பான ஏற்றுமதிகள் ஜூன் 2020 இல் 106.46 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பதிவு செய்தன.
ஒட்டுமொத்த ஏற்றுமதி அளவைக் கருத்தில் கொள்ளும்போது, ரப்பர் கையுறைகள் (தொழில்துறை மற்றும் அறுவை சிகிச்சை), திரவ தேங்காய் பால், கொக்கோபீட், தயாரிக்கப்பட்ட ஜவுளி வகைகள், பாக்கு விதைகள், தேங்காய் பால் கிரீம், இலவங்கப்பட்டை, மிளகு, அத்தியாவசிய எண்ணெய்கள், உறைந்த மீன், பருப்பு மற்றும் பிளாஸ்டிக் கையுறைகளின் ஏற்றுமதி வளர்ச்சி விகிதங்கள் சாதகமாக பதிவாகியுள்ளது. மற்ற துறைகளான ரப்பர் தயாரிப்புகள் (-14.74%), உணவு மற்றும் பானங்கள் (-8.36%), மின்னணுவியல் மற்றும் மின்னணு கூறுகள் (-6.28%) மற்றும் பெட்ரோலிய பொருட்கள் (-7.98%) ஆகியவை 2019 ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூன் 2020 எதிர்மறை வளர்ச்சி விகிதங்களை பதிவு செய்துள்ளன. .
ஜனவரி – ஜூன் 2020
2020 ஜனவரி முதல் ஜூன் வரையிலான மொத்த ஏற்றுமதி வருமானம் 4,362.34 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட 5,929.74 மில்லியன் அமெரிக்க டாலர்களோடு ஒப்பிடும்போது – 26.43% சரிவினை காட்டுகிறது. இது 2020 ஆம் ஆண்டில் 7,521 மில்லியன் அமெரிக்க டாலர் எனும் திருத்தப்பட்ட வணிக ஏற்றுமதி இலக்கின் வெற்றிகரமான 58% நிறைவு ஆகும்.
ஆடை மற்றும் ஜவுளி (1,936.66 மில்லியன் அமெரிக்க டாலர்), தேயிலை (571.66 மில்லியன் அமெரிக்க டாலர்) மற்றும் தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த தயாரிப்புகள் (அமெரிக்க $ 281.59 மில்லியன்) மற்றும் ரப்பர் மற்றும் ரப்பர் சார்ந்த தயாரிப்புகள் (அமெரிக்க $ 349.17 மில்லியன்) போன்ற முக்கிய ஏற்றுமதிகள் முந்தைய ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 2020 ஜனவரி-ஜூன் மாதங்களில் முறையே 29.64% ,16.54%, 10.33% மற்றும் 23.62% குறைந்துள்ளன. பெட்ரோலியம் மற்றும் பிற ஏற்றுமதி பயிர்கள் இந்த காலகட்டத்தில் சாதகமான வளர்ச்சி விகிதங்களை பதிவு செய்துள்ளன.
ஒட்டுமொத்த அளவில் சாதகமான வளர்ச்சியைக் காட்டும் ஏற்றுமதித் துறைகளில், இயற்கை ரப்பர், தொழில்துறை மற்றும் அறுவை சிகிச்சை கையுறைகள், தேங்காய்ப் பால் கிரீம், தேங்காய் பால், தேங்காய் வினிகர், தேங்காய் மூடி கரி, அன்னாசிப்பழம், பாக்கு, புளி, இஞ்சி, அத்தியாவசிய எண்ணெய்கள், எலுமிச்சை, சீனிக்கிழங்கு மற்றும் பயறு போன்றவைகளின் ஏற்றுமதியும் அடங்கும்.
ஜனவரி-ஜூன் 2020 காலகட்டத்தில் அதிக ஏற்றுமதியை பதிவுசெய்த இடங்களாக அமெரிக்கா (1,147.5 மில்லியன் அமெரிக்க டாலர்), யுனைடெட் கிங்டம் (361.6 மில்லியன் அமெரிக்க டாலர்) இந்தியா (277.5 மில்லியன் அமெரிக்க டாலர்), ஜெர்மனி (250.3 மில்லியன் அமெரிக்க டாலர்) மற்றும் இத்தாலி ( 183 மில்லியன்அமெரிக்க டாலர்) ஆகியவை இடம்பிடித்துள்ளன.
மிகப்பெரிய ஏற்றுமதி இலக்கு கொண்ட ஒற்றை நாடு என்பதால், அமெரிக்கா 2020 ஜூன் மாதத்தில் 242.36 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஏற்றுமதியை பதிவுசெய்துள்ளது. இது 2020 மே மாதத்தில் உள்வாங்கப்பட்ட 145.51 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும்போது 66.56% அதிகரித்துள்ளது. இருப்பினும், ஜூன் 2019 உடன் ஒப்பிடும்போது 2020 ஜூன் மாதத்தில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 9.37% குறைந்துள்ளது.
கூடுதலாக, ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்தில் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக ஐக்கிய இராச்சியத்திற்கான ஏற்றுமதி 2020 மே மாதத்துடன் ஒப்பிடும்போது 2020 ஜூன் மாதத்தில் 53.64% அதிகரித்து 65.39 மில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், 2019 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2020 ஜூன் மாதத்தில் இங்கிலாந்துக்கான ஏற்றுமதி 30.46% குறைந்துள்ளது.
இருப்பினும், இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யாவுக்கான ஏற்றுமதிகள் ஜூன் 2019 – ஜூன் 2020 மற்றும் மே – ஜூன் 2020 ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் சிறந்த செயல்திறனைக் காட்டி நிற்கின்றன.
இந்தியா, சீனா, ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி 2020 மே மாதத்துடன் ஒப்பிடும்போது 2020 ஜூன் மாதத்தில் முறையே 60%, 40%, 42.9%, 80% மற்றும் 34% அதிகரித்துள்ளது. ஜூன் 2019 உடன் ஒப்பிடும்போது 2020 ஜூன் மாதத்தில் ஏற்றுமதி முறையே 15.3%, 20.29%, 12.72% 15.6%, மற்றும் 10.8% குறைந்துள்ளது.
ICT / BPM, கட்டுமானம், நிதி சேவைகள், போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்புகள் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா உள்ளிட்ட சேவை ஏற்றுமதியை EDB ஆனது, 2020 ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் 1,780.5 மில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் 2,026.58 மில்லியன் டாலர்களாக பதிவு செய்யப்பட்ட்டுள்ளமையினை காட்டுகிறது. இருப்பினும், 2020 ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் மதிப்பிடப்பட்ட சேவை ஏற்றுமதி முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 12.14% சரிவையே பதிவுசெய்துள்ளது.
வணிக ஏற்றுமதியின் ஒட்டுமொத்த செயல்திறனுடன் ஒப்பிடுகையில், 2020 ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் சேவைகளின் ஏற்றுமதி சிறப்பாக செயல்பட்டுள்ளது தெளிவாகின்றது.
இனிவரும் காலங்கள் இன்னும் சிறப்பாக இருக்குமா, மாற்றங்கள் எவ்வாறு நிகழும் என்பதை கவனித்த அறியவேண்டிய நிலையில் ஏற்றுமதி துறை உள்ளதை நாம் மறுக்கமுடியாது.
தகவல் மூலம் : https://www.srilankabusiness.com/