இலங்கையராகிய உங்கள் கவித்திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில், இதோ roar தமிழ் வழங்கும் அழகியதொரு வாய்ப்பு! எதிர்வரும் காதலர் தினத்தில் நீங்கள் எழுத விரும்பும் காதல் கவிதைகளை. “காண்பதெல்லாம் காதலடி” எனும் பொருளடக்கத்துடன் எமக்கு எழுதி அனுப்புங்கள்; வரம்புகள் அற்ற கற்பனையில் காதலை இயல்பாக கொண்டாடுங்கள். உங்கள் எண்ணத்தில் உருவாகும் கவிதை; மரபுக் கவிதையாகவோ அல்லது புதுக்கவிதையாகவோ எந்த வடிவத்திலும் இருக்கலாம்.
உங்கள் படைப்புகளை நீங்கள் எழுதி அனுப்பிட, நாம் அதை எமது புதிய roar showtime எனும் பகுதியினூடாக வெளியிடவுள்ளோம். கவிதைகளில் சிறந்ததை தேர்ந்தெடுத்து வெளியிடும் நெறியாள்பவர் பணியை எமது அழைப்பின் பெயரில் அதிதியாக கலந்துகொள்ளும் பன்முகக்கலைஞர் தவ சஜிதரன் அவர்கள் மேற்கொள்ளவுள்ளார்.
தவ சஜிதரன் அவர்கள் கவிதையை தனது முதன்மை அடையாளமாக வரித்துக்கொண்டவர். சிறுவயது முதல் எழுதி வருகிறார். தமிழ்க்கவிதையின் யாப்பு வடிவங்களில் மிகுந்த பரிச்சியமும் ஈடுபாடும் கொண்டவர். “பிசிறல் இல்லாமல் யாப்பைக் கையாளும் திறன் இவரிடம் இருக்கின்றது… இன்றைய இளம் கவிஞர் அநேகரிடமிருந்து இவரை வேறுபடுத்திக்காட்டும் ஒர் அம்சம் இது” என்கிறார் தவ சஜிதரனின் முதலாவது கவிதைத் தொகுப்பான “ஒளியின் மழலைகள்” எனும் நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் பேராசிரியர் எம்.ஏ.நுஹ்மான. “ஒளியின் மழலைகள்” 2006 ஆம் ஆண்டு வெளியானது.
மொழிபெயர்ப்பு, திரைப்பட ஆக்கம் ஆகியவை இவர் ஆர்வம் கொண்டுள்ள ஏனைய துறைகள். தவ சஜிதரன் எழுதி இயக்கிய “அகோரா – லண்டன் கதைகள்” ஒளியாவணத் தொடர், ஐபிசி தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பானது. 2005ம் ஆண்டு கொழும்பு சண்டே ஒப்சேவரில் ஊடகராக இணைந்த சஜிதரன், வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் முதலான சர்வதேச ஊடகங்களுக்கும் பங்களித்திருக்கிறார். ஊடகராக சஜிதரன் நேர்கண்டுள்ளவர்களில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி, பேராசிரியர் நோம் சோம்ஸ்கி முதலானவர்கள் அடக்கம்.
இலங்கை, மாத்தளையை சேர்ந்த தவ சஜிதரன், 2010ம் ஆண்டு தொடக்கம் லண்டனில் வாழ்ந்து வருகிறார்.
கவிதைகளை அனுப்பும் உங்கள் கவனத்திற்கு:
- உங்கள் கவிதைகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: showtime@roar.global
- இலங்கையருக்கு மாத்திரமே இந்த வாய்ப்பு
- பெப்ரவரி 14ஆம் திகதிக்குள் அனுப்பவேண்டும்.
- கவிதைகள் மரபுக் கவிதையாகவோ, புதுக்கவிதையாகவோ எவ் வடிவத்திலும் இருக்கலாம்.
- ஒருவர் ஆகக்கூடியது இரண்டு படைப்புகள் அனுப்பமுடியும்.
- படைப்புகள் உங்கள் சொந்தப் படைப்பாக மட்டுமே இருக்க வேண்டும்.
- எமது சிறப்பு அதிதியாக வருகை தரும் நெறியாளர் மூலம் தேர்ந்தெடுக்கபடுபவை மாத்திரமே பிரசுரமாகும்.
- பிரசுரிக்கப்ப்படும் அனைத்து கவிதைகளும் குறித்த எழுத்தாளருக்கே உரித்தாகும். விரும்பினால் உங்கள் பிரத்தியேக வலைதள சுட்டிகளை (social media handles) அனுப்பி வைக்கலாம்.
- பிரசுர உரிமை Roar global நிறுவனத்திற்குரியது. எவ்வாறாயினும் கவிதைகளுக்கான முழு அந்தஸ்த்தும் அதை படைப்பவருக்கே வழங்கப்படும்.
குறிப்பு: இந்த அழகிய வாய்ப்பை உங்கள் கவிதைத் திறமைக்கான அங்கீகாரமாக மட்டுமே பயன்படுத்திக்கொள்ளவும், யாரையும் நோக்கி நீங்கள் விடும் காதல் அம்பாக இருக்காமல் பார்த்துக்கொள்ளவும். அவை உங்கள் பிரத்தியேகமான தொடர்பாடலாக இருப்பதுவே நலம்.
காண்பதெல்லாம் காதல் மயமாகட்டும்! வாழ்த்துகள்!