ஜனநாயகத்தின் மாபெரும் சக்தி குறித்தான அக்கறையின்மையை நீக்குதல்

1931ம் ஆண்டிலேயே இலங்கையில்  21 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு ஜனநாயக ஆட்சியின் அதியுயர் தீர்மான சக்தியான வாக்குரிமை வழங்கப்பட்ட போதிலும் ( 1959 இல் இருந்து வயதெல்லை 18 ஆக மாற்றம் செய்யப்பட்டது) இன்றளவும் தேர்தல் நாட்களில் வாக்களிப்பதை விட வீட்டிலே ஒடுங்கிக்கொள்ளுவதையே பலரும் தெரிவு செய்கின்றனர். 

கடந்த 37 வருட ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை பல்வேறு அளவில் மாற்றங்களை கண்டுவிட்டது. 1988 இல் (நாட்டில் நிலவிய ஜே.வி.பி இன் கிளர்ச்சிகள் காரணமாக)  வெறும் 55.32% வாக்காளர்கள் மாத்திரமே தேர்தலில் வாக்களித்த போதிலும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் (2015 இல்) மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதியாக தெரிவுசெய்த போது 81.52% வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி இருந்தனர். 

வாக்களிக்க தகைமை பெற்ற அனைத்து வாக்காளர்களும் தங்களுடைய வாக்குரிமையை பயன்படுத்துவார்கள் என்ற அடிப்படையில் தேர்தல்களை நடாத்த தேசிய அரசு பெருந்தொகை பணத்தை செலவிடுகிறது. ( இவ்வாண்டின் ஜனாதிபதி தேர்தலில் மாத்திரம் 35 வேட்பாளர்கள்  களமிறங்குவதால் சுமார் 7 மில்லியன் ரூபாய்களை அரசு தேர்தல் நோக்கங்களுக்காக செலவிடுகிறது) 

ஏன் வாக்களிக்கக்கூடாது? 

இருப்பினும் வாக்காளர் தொகையில் ஒரு நியாயமான சதவீதமானோர் தம்முடைய விருப்பத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் வடிமைக்கப்பட்ட அரசியல் செயற்பாடொன்றில் பங்கேற்க மறுப்பதற்கு என்ன காரணம்? 

அரசியல் விஞ்ஞானியும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியருமான ஜெயதேவ உயங்கோட அவர்கள் றோர் மீடியாவுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியதாவது “அரசியல் மீதான ஏமாற்றம் என்பது தற்போது உலகளாவிய ரீதியான போக்காக உள்ளது. இதை நம்முடைய அண்டைய தெற்காசிய நாடுகளிலும், மேற்கத்தைய சமூகங்களிலும் பரவலாக காணமுடிகிறது. இருப்பினும் ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் அரசியல் பங்களிப்பு உயர்வாகவே உள்ளது. ஊழல், பொய்யான வாக்குறுதிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என பல்வேறு சம்பவங்களால் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை நலிவடைந்து இருக்கும்போதிலும் மக்கள் இன்னும் ஆர்வமுடன் அரசியல் நிகழ்வுகளில் பங்குகொண்டு வருகின்றனர்.” மேலும் அவர் கூறுகையில் ” அரசியல் ஈடுபாடு என்பது தனியே வாக்களிப்பதை மாத்திரம் குறிப்பது இல்லை, மாறாக அரசியல் கட்சிகளில் சேர்வது, அரசியல் குறித்தான விவாதங்களில் ஈடுபடுவது மற்றும் சமூகவலைத்தளங்களில் அரசியல் குறித்தான தனிப்பட்ட பார்வைகளை பகிர்ந்துகொள்வது என அனைத்தும் அரசியல் நிகழ்வுகளில் ஈடுபடுவதையே குறிக்கும்” என்றார். பேராசிரியர் இன்னடத்தைக்கு மூன்று விடயங்களை காரணம் காட்டினார். உலகளாவிய ரீதியில் வாக்குரிமை வரலாறு, நாட்டில் வேரூன்றிவிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் நம் நாட்டின் சிறிய பரப்பளவு. எவ்வாறாயினும் அரசியல் பங்கேற்பு என்ற விடயம் வெவ்வேறு புள்ளிவிவரங்கள் பிரகாரம் வேறுபட்ட வண்ணமே இருக்கிறது. 

இலங்கையில், ‘சமிதி’ அல்லது அடிமட்ட அளவிலான அலகுகள் பெரும்பாலும் குறிப்பிட்ட தேவைகளுக்காக ஏற்பாடு செய்யப்படுகின்றன.
புகைப்பட உதவி  : dailynews.lk

அரசியல் பொருளாதார வல்லுனரான அகிலன் கதிர்காமரின் கூற்றுப்படி பலவீனமான சமூக நிறுவனங்கள் வாக்காளர் அக்கறையின்மைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன. “கிராமங்களில் வாழும் மக்கள் தங்களை பல்வேறு சமூக நிறுவனங்களுடன் இணைத்துக்கொண்டு வாழ்கின்றனர். இலங்கையின் கிராமங்களில் ஏராளமான சங்கங்களும் கழகங்களும் தொழிற்பட்டு வருவதனால் தேர்தல் காலங்களில் சமூகமொன்றை நேர்மறையான பாதையில் அணித்திரட்டி கொண்டுசெல்ல முடிகிறது” என்கிறார் கதிர்காமர். மற்றொரு புறம் வாழும் நகரத்து மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் வேறுபட்டது. ” ஜனநாயகத்தின் அடிநாதம் மக்களின் பங்கேற்பு ஒன்று மாத்திரமே, ஆனால் நகர்புறங்களில் வாழும் தனி நபர்களோ, சமுதாயங்களோ ஒரு சமூக நிறுவனத்துடன் இணைந்து ஒன்றாக செயற்படும் நிலைமை மிக அரிதாகவே உள்ளது. இது வலுவிழந்த சமூகக்கட்டமைப்புக்கு வழிவகுப்பதுடன், சமூகப்பொறிமுறை மீதான ஆர்வத்தை குன்றச்செய்கிறது” என்பதுடன் சேர்த்து ‘சமூகநிறுவனங்கள் பாதிக்கப்படுவது இறுதியில் வாக்காளர்களின் அக்கறையின்மையை அதிகரிக்கச் செய்யும்’’ என்பதையும் மீள வலியுறுத்துகிறார் அகிலன் கதிர்காமன். நகர்ப்புறங்களில் வாழும் அடித்தட்டு மக்கள் அடிப்படை ஜீவனோபாயத்துக்காக சமூக நிறுவனங்களுடன் தங்களை பிணைத்துக்கொண்டாலும் கீழ்-மத்திய தரத்தினரும், மத்திய தரத்தினரும் அவற்றில் பெருமளவு ஆர்வம்காட்டுவது இல்லை. 

வாக்களிக்காமையின் பின்விளைவுகள் 

பலர் தங்களுடைய தனிப்பட்ட வாக்குகள் என்ன பெரிதாக மாற்றிவிடப்போகிறது என்ற அனுமானத்துடன் குடிமக்களுக்கான அடிப்படை உரிமையை கைவிட்டாலுமே கூட, வாக்களிப்பதற்கு ஒரு தீர்க்கமான முயற்சியை மேற்கொள்வது என்பது நம்வாழ்வில் மிகவும் நிலையான ஒரு மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும். 

கல்வி, சுகாதாரம், சமமான வள ஒதுக்கீடு, சமூக அரசியல் சூழ்நிலை முதல் அடிப்படை சிவில் உரிமை வரை அனைத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி வாக்களிப்புக்கு உண்டு. வாக்களிப்பதை புறக்கணித்தல் என்பது உங்களையும், உங்கள் சமூகத்தையும், இந்த நாட்டையும் யார் ஆளவேண்டும் என்பதை தீர்மானிக்க உங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை வீணாக்குவதே அன்றி வேறொன்றும் இல்லை. 

கட்டாய வாக்களிப்பு முறையானது அதிகளவு மக்களை வாக்கெடுப்பில் பங்குபெறச்செய்யும் என்பதும், அதனால் அரசியல் நியாயத்தன்மை உறுதிப்படும் என்பதும் உண்மையான கருத்துக்களே. எந்தளவுக்கு அதிக வாக்களர்கள் தேர்தலில் பங்குகொள்கிறார்களோ அந்தளவு தேர்தலில் நியாயத்தன்மை நிலவும் என்பது உறுதியானது. 

தற்போது உலகில் கட்டாய வாக்களிப்பு முறையை நீண்டகாலமாக பின்பற்றிவரும் நாடான பெல்ஜியத்தில் வாக்களிக்க தவறியவர்கள் மீது அரசாங்கத்தால் வழக்கும் மிதமான அளவு அபராதப்பணமும் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் 10 ஆண்டுகளுக்கு இவ்வாறான நடத்தை தொடரும் என்றால் அவர்களின் வாக்குரிமை முழுவதுமாக பறிக்கப்படும். ஆஸ்திரேலியா அரசும் வாக்களிக்க தவறும் ஒவ்வொரு வாக்களருக்கும் 20 ஆஸ்திரேலிய டாலர்களை அபராதமாக விதிக்கிறது. 

அரசியல் செயல்முறைகளுடன் மக்களின் ஈடுபாட்டை அதிகரிப்பது வாக்களிக்கும் அக்கறையை ஏற்படுத்துகிறது.
புகைப்பட உதவி  :  Brett davies

இலங்கையில் வாக்குரிமை என்பது கட்டாய கடமையாக இல்லாது இருப்பதால், முன்னாள் பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முகம்மது அவர்களால் 2017ம் ஆண்டில் வாக்களிக்க தவறுபவர்கள் மீது அபராதம் விதிக்கும் முறைமை முன்மொழியப்பட்டது. எனினும் அது நடைமுறைக்கு இன்னும் வரவில்லை. மேலும் வாக்காளர் பங்களிப்பை அதிகரிக்க அபராதம் விதிப்பது மாத்திரம் போதியதாக இருக்காது. 

வாக்காளர் அக்கறையின்மையை இழிவாக்குதல்

வாக்காளர் பங்கேற்பை ஒரே நாளில் அதிகரிக்கச்செய்வதற்கு எந்த மந்திர உத்தியும் இல்லை. எனவே பல்வேறு தந்திரோபயங்களை முன்னெடுப்பதன் மூலமாகவே இந்த இலக்கை அடையமுடியும். 

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகளின் பிரகாரம் வாக்காளர் பதிவுமுறையை எளிதாக்குவது வாக்காளர் பங்கேற்பை 2% ஆல் அதிகரிக்கும் என்று தெரிவிக்கிறது. அதே வேளை தேர்தல் நாளன்று வாக்குச்சாவடியில் தங்களை பதிவு செய்துகொள்ள அனுமதிப்பதன் மூலம் 5% தொடக்கம் 7% வரையில் வாக்குப்பதிவு அதிகரிக்க காரணமாகும். வாக்களிப்பு முறைகளை மேலும் இலகுபடுத்துவதன் மூலமாக வாக்காளர் பங்கேற்பை அதிகர்த்துக்கொள்ள முடியும். பெரும்பாலான வாக்காளர்களின் விமர்சனமாக இருப்பது வாக்களிக்க நீண்ட நேரமாக வரிசைகளில் காத்திருப்பதே ஆகும். அதனை சரிசெய்யும் முகமாக அதிக வாக்குச்சாவடிகளை உருவாக்குவதோ அல்லது வாக்களிப்பு முறையை துரிதப்படுத்துவதோ கணிசமான மாற்றங்களை உண்டாக்கலாம். 

இருப்பினும் அரசியல் அறிஞர்கள் இந்த பொதுப்படையான நடைமுறைகளில் உயர்ந்தபட்ச மேம்பாடுகள் எதுவும் ஏற்படாது எனக்கூறுகின்றனர். இந்த பொதுவான நடைமுறை மாற்றங்களுக்கு மேலதிகமாக வாக்காளர் பிரதிநிதித்துவம் மற்றும் கொள்கை சிக்கல்களை புரிந்துகொள்ள உதவுதல் மூலமாக வாக்காளர் பங்கேற்பு உயர்த்தப்படவேண்டும் என இவர்கள் வலியுறுத்துகின்றனர். ஜனநாயக ரீதியாக தங்களுக்கு உள்ள கடமையை ஒவ்வொரு தனிமனிதனும் உணரும்போதே அவர்கள் தனிப்பட்ட காரணங்களை மனதில் கொண்டு அதிக ஆர்வத்துடன் வாக்களிக்க முன்வருவார்கள். 

கதிர்காமர் உள்ளிட்ட அரசியல் ஆர்வலர்கள் தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் அவர்களுக்கான சமூகநிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றும் போது வாக்காளர் அக்கறையின்மை குறைவடையும் என கருதுகின்றனர். 

“விழிப்புணர்ச்சி பேரணிகளையும், கட்சிக்கூட்டங்களையும் மாத்திரம் முன்னெடுக்காது, செயலாக்கமான முயற்சிகளில் ஈடுபட்டால் மாத்திரமே மக்களின் அரசியல் ஈடுபாடானது உயர்வடையும்” என குறிப்பிடும் கதிர்காமர் ” சமூக அமைப்புக்களை உருவாக்கி அரசியல் ஈடுபாட்டை அதிகரித்தலும் வாக்காளர் பங்கேற்ப்பை உயர்த்தும். சமூக பிணைப்பை மீளக்கட்டியெழுப்புதலும் நியமங்களை உண்டுபண்ணுதலும் இவற்றுடன் சேர்ந்தே நடைபெற வேண்டியவையாகும்” என்றும் தெரிவித்தார்.  

Related Articles

Exit mobile version