“எனக்கு எந்தவொரு நிறுவனமும் அனுசரணை வழங்கவோ ஆதரவு வழங்கவோ இல்லை”
-கரோலின் லூஸி ஆன் ஜூரி
திருமதி உலக அழகி – 1984 ஆம் ஆண்டில் திருமணமான பெண்களுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கும் ரீதியில் தொடங்கப்பட்ட போட்டியாகும். 80 நாடுகளில் இயக்குநர்களைக் கொண்டுள்ள ஒருங்கிணைந்த அமைப்புக்களின் மூலம் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வெற்றிகரமான கலைப்பாணியாக தன்னை உயர்த்தியுள்ள திருமதி அழகி போட்டியின், 2020 இற்கான திருமதி உலக அழகி போட்டி அமெரிக்காவிலுள்ள லாஸ் வெகாஸில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெற்றது.
இப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டவர் திருமதி.கரோலின் லூஸி ஆன் ஜூரி. யார் இவர்?
கந்தானையில் இருந்து துபாய் நோக்கி..
1992ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் திகதி கந்தானையில் அவரது குடும்பத்தில் உள்ள நான்கு பிள்ளைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர்தான் கரோலின் லூசி ஆன் ஜூரி. இவர் தனது கல்வியை கந்தானை சென் செபஸ்டியன் பெண்கள் பாடசாலையில் கற்றுள்ளார். 2008ஆம் ஆண்டு தனது சாதாரண தர பரீட்சையை செய்த இவர் இலங்கையில் மூன்று நிறுவனங்களில் விற்பனை நிறைவேற்று அதிகாரியாகவும் துணை உதவியாளராகவும் பணிபுரிந்துள்ளார். பின்னர் விற்பனை பிரதிநிதியாக கத்தாரிலும் பணிபுரிந்துள்ளார். தற்போது துபாயில் உள்ள Virgin Mega நிறுவனத்தில் விற்பனை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.
முன்னாள் திருமதி உலக அழகி அலிஸ் ஊக்கிவித்தார்..
எந்தவொரு நிறுவனமும் அனுசரணையோ ஆதரவோ வழங்காத சந்தர்ப்பத்தில் அவரது குடும்பத்தினரின் ஆதரவும், திருமதி இலங்கை போட்டியின் போது நடுவராக இருந்த முன்னாள் திருமதி உலக அழகியான ஹொங்கொங்கை சேர்ந்த அலிகா லீ கியனெட்டாவின் உதவியும் பெரிதும் உதவி உள்ளன.
ஆரம்பம் முதலே அலிஸ் இவருக்கு ஆதரவும் ஆலோசனைகளையும் வழங்கி வந்துள்ளார். கரோலினின் விசா ஆவணங்கள் அமெரிக்க தூதரகத்தினால் நிராகரிக்கப்பட்ட போது அதனையடுத்து அலிக்காதான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நிலைமையை விளக்கி விசா கிடைப்பதற்கு வழி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இல்லையேல் கரோலின் போட்டியிலேயே பங்குபற்றியிருக்க முடியாது.
திருமதி உலக அழகி மகுடம் சூடிய கரோலின்
51 நாடுகளில் இருந்து திருமணமான 51 பெண்கள் இம்முறை போட்டியில் கலந்து கொண்டிருந்தனர். இவரிடம் நடுவர்கள் நீங்கள் உலக அழகி பட்டம் வென்றால் என்ன செய்வீர்கள் என வினவியபோது, “நான் சிறுவயதில் மனச்சோர்வினாலும், மன அழுத்தங்களாலும் பாதிக்கப்பட்டவளாய் இருந்திருக்கிறேன். தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் கூட எனக்கு இருந்திருக்கிறது. இந்த போட்டியின் மூலம் நான் வெற்றி பெற்று எனது சுய ஆற்றலைக்கொண்டு மன அழுத்தத்தினால் பாதிப்புக்குள்ளாகும் இளையவர்களுக்கு சேவை செய்யவேண்டும் என ஆசைப்படுகிறேன்.” என்றார்.
போட்டியின் முடிவில் அயர்லாந்தின் திருமதி அழகி இரண்டாவது இடத்தையும் வேர்ஜின் தீவுகளின் திருமதி அழகி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். இலங்கையின் கரோலின் ஜூரி முதலிடம் பெற்றதாக அறிவித்ததை தொடர்ந்து, உணர்ச்சி மிகுதியில் கண்ணீர் மல்க அனைவரையும் நோக்கி வணங்கியபடியே இருந்தார் கரோலின்.
ஒரு குழந்தைக்குத் தாயான 27 வயதுடைய கரோலின் லூஸி ஆன் ஜூரி….
“திருமணமானவுடன் பெண்களின் வாழ்க்கை முடிந்து போவதில்லை. வாழ்க்கையைப் பற்றி சாதகமான நிலைப்பாட்டை எடுத்து உங்கள் மேல் நம்பிக்கை வைப்பதன் மூலமே உங்கள் கனவுகளை நனவாக்க முடியும். வெற்றிக்காக முயற்சி செய்ய வேண்டும் என்பதே இந்த அழகிப் போட்டியில் வென்றதன் மூலம் பெண்களுக்கு நான் சொல்ல வேண்டிய கருத்தாகும்” என்கிறார்.
1984 ஆம் ஆண்டு ரோஸி சேனாநாயக்க அவர்களின் மகுடத்தைத் தொடர்ந்து 35 வருடங்கள் கழித்து கரோலின் ஜூரி இம்மகுடத்தை சூடியிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இலங்கையின் ஜனாதிபதி தொடக்கம் அனைத்து தரப்பினரதும் பாராட்டை பெற்றுவருகிறார் கரோலின்.