இலங்கையில் 26 வருடங்களாக நிலவிய உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பத்தாவது வருட நிறைவினை இம்மாதம் கொண்டாடவிருந்த நிலையில், மீண்டும் ஒரு சோகம் இலங்கையை புரட்டிப் போட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறன்று இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், காயங்களுக்கும் இலக்காகினர்.
இதுவரை காலமும் இலங்கைக்கு அறிமுகமாகியிருந்த தாக்குதல்களுடன் ஒப்பிடுகையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் வித்தியாசமானவை. இத்தாக்குதலோடு தொடர்புடைய; பயங்கரவாத அமைப்பின் வடிவம், வெளிநாட்டில் சதித்திட்டம் தீட்டப்பட்டமை, பயங்கரவாதிகள் சிலரின் வளமான பின்னணி குறித்த தகவல்களால் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்புகளின் செயற்பாடுகள் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளன. தற்போது அவர்கள் இவ்வாறான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கண்காணிக்க, அடையாளம் காண, கட்டுப்படுத்த மற்றும் அழிப்பதற்கு பரந்துபட்ட புதிய வலை ஒன்றைப் பின்ன வேண்டியுள்ளது.
தாக்குதல்கள் நிகழ்ந்த சில நாட்களின் பின்னர், அமெரிக்க கடற்படை அட்மிரல் ஜேம்ஸ் ஸ்ராவ்ரிடிஸ், புளும்பேர்க்கிற்காக ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய யுத்தத்தில் இந்த தாக்குதலானது ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது எனவும், இலங்கையின் எல்லைகளைத் தாண்டிய தாக்கங்களை இது ஏற்படுத்தும் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். நேட்டோவின் ஒய்வுபெற்ற முன்னாள் படைத்தலைவரான ஸ்ராவ்ரிடிஸ் மேலும் விபரிக்கையில்:
“பயங்கரவாதம் 3.0 விற்கு வரவேற்கின்றோம்… பயங்கரவாதம் 3.0 இல், உலகம் முழுவதும் பரவியுள்ள, மிகவும் ஆபத்தான, நிதி வசதியுள்ள, புதிய தொழில்நுட்பங்களைக் கொண்ட ஒரு நிறுவனமாக நாங்கள் இஸ்லாமிய தேசத்தை (IS) காண்கின்றோம். அதன் ஆக்கிரமிப்பு எல்லைகளை மேற்குலகம் கட்டுப்படுத்தினாலும், ஈராக் மற்றும் சிரியாவில் இருந்து அவர்களை வெளியேற்றினாலும் தற்போது இணையத்தை தளமாகக் கொண்டு செயற்படும் ஒரு நிறுவனமாக மாறி, அதி நவீன தாக்குதல்களை முன்னெடுப்பதுடன், உலகளாவிய ரீதியில் தனது தளங்களையும் அமைத்து வருகின்றது.” என்றார்.
ஸ்ராவ்ரிடிஸ் மாத்திரம் இந்த கருத்தினைக் கொண்டிருக்கவில்லை. உலகளாவிய ரீதியில் பயங்கரவாதத்தின் முகம் மாறிக்கொண்டிருப்பதை பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். பயங்கரவாதத்தின் புதுமுகம் மற்றும் பயங்கரவாதத்திற்கு முகங்கொடுப்பதற்கு இலங்கை கவனத்தில் கொள்ள வேண்டியவை குறித்து மேலதிக புரிதலை ஏற்படுத்திக்கொள்ள நாங்கள் சில சர்வதேச நிபுணர்களைத் தொடர்பு கொண்டோம்.
நாங்கள் யாரைத் தொடர்பு கொண்டோம்:
- கலாநிதி ஸ்டீவ் ஹெவிட், பெர்மிங்ஹாம் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சிரேஷ்ட பேராசிரியர், பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் புலனாய்வு தொடர்பிலான ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றவர்.
- பேராசிரியர் போவாஸ் கேனர், இஸ்ரேலில் அமைந்துள்ள பயங்கரவாத எதிர்ப்புக்கான சர்வதேச நிறுவனத்தின் (ICT) ஸ்தாபகர் மற்றும் நிறைவேற்று பணிப்பாளர், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இஸ்ரேல் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியவர்.
- ஃபியோனா டி லொன்ட்ரஸ், பெர்மிங்ஹாம் பல்கலைக்கழத்தின் உலகளாவிய சட்ட கற்கைகளுக்கான பேராசிரியர், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் மனித உரிமைகள் மற்றும் சட்ட உருவாக்கலில் அவரது பணிகளுக்காக அங்கீகாரம் பெற்றுள்ளார்.
- ரிச்சர்ட் பரெட் (CMG OBE), பிரித்தானியாவின் முன்னாள் இராஜதந்திரியும், புலனாய்வு அதிகாரியுமான அவர் பிரித்தானிய பாதுகாப்பு அமைப்பு (MI5), பிரித்தானிய இரகசிய புலனாய்வு அமைப்பு (MI6), வெளியுறவு அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பயங்கரவாத எதிர்ப்பு நிபுணராக கடமையாற்றியுள்ளார்.
கேள்வி: நாங்கள் இதுவரை காலமும் அறிந்து வைத்திருக்கும் பயங்கரவாதத்தையும், நவீன, உலகளாவிய பயங்கரவாதத்தையும் வித்தியாசப்படுத்தும் முக்கியமான காரணி என்ன?
ஹெவிட்: “சில காரணிகளை என்னால் குறிப்பிட முடியும். அதில் ஒன்று வேகம். சதித்திட்டமானது விரைவாக திட்டமிடப்படுவதுடன், இந்த வன்முறைகளில் தனிநபர்கள் விரைவாக உள் இழுக்கப்படுகின்றார்கள். இணையப் பாவனைக்கு முன்னர் பன்னாட்டு சதித்திட்டங்களின் போது, அதாவது 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், சதிகாரர்கள் டெலிகிராப் பயன்படுத்தியே தகவல்களை பரிமாறிக்கொண்டார்கள். அத்துடன் அச்சினைப் பயன்படுத்தி தங்களது பிரச்சாரங்களை முன்னெடுத்தார்கள். தற்போது வித்தியாசம் என்னவென்றால் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் தகவல்களை பரப்புவது மிக வேகமாக நடைபெறுகின்றது. இரண்டாவது வித்தியாசம் என்னவென்றால் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்களினால் பயன்படுத்தப்படும் தந்திரோபாயங்கள். தற்போது இந்தக் குழுக்கள் பல்வேறு விதமான தந்திரோபாயங்களைப் பயன்படுத்துகின்றன. சில சமயங்களில் ஒரே தாக்குதலில் கூட பல வித்தியாசமான தந்திரோபாயங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக பாரிஸில் இடம்பெற்ற தாக்குதலில், 2008 ஆம் ஆண்டு மும்பையில் பயன்படுத்தப்பட்ட தந்திரோபாயங்களை IS பயன்படுத்தியது. ஆனால் மும்பையில் வெடிபொருட்கள் டைமர் பயன்படுத்தி வெடிக்கவைக்கப்பட்டதுடன், தற்கொலைதாரிகள் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் பாரிஸ் தாக்குதலில் தற்கொலைதாரிகள் பயன்படுத்தப்பட்டார்கள். இஸ்லாமிய தேசம் (IS) போன்ற குழுக்கள் இலங்கையில் இடம்பெற்றதைப் போன்று அதிநவீன தாக்குதல்களை முன்னெடுக்கலாம். மற்றொரு இடத்தில் அடுத்து முன்னெடுக்கும் தாக்குதலை தனிநபர் ஒருவர் கத்தி அல்லது வாகனங்களை பயன்படுத்தி முன்னெடுக்கலாம்.
கேனர்: “தற்போதைய பயங்கரவாதம் அதிகளவு புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய வழிகளில் தங்கியுள்ளது –தங்களது நடவடிக்கைகளுக்கு புளொக்செயின்ஸ் (Blockchains) போன்ற தளங்களைப் பயன்படுத்தி நிதி திரட்டுவது, ட்ரோன்களை (Drone) ஆயுதமாக பயன்படுத்துவது மற்றும் தங்களது பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு, பயிற்சியளிப்பதற்கு, நிதி திரட்டுவதற்கு, தமது கட்டளைகளை வழங்குவதற்கு என சமூக வலைத்தளங்;களை பயன்படுத்துவது மற்றும் தமது தாக்குதல்களை நேரடியாக சமூக வலைத்தளங்களில் காணொளி செய்வதன் ஊடாக தங்களது கருத்துக்களை பரப்புவது மற்றும் தாக்குதல்கள் மூலம் மக்களிடையே பயத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தவதற்கும் பயங்கரவாதிகள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர்.
டி லொன்ட்ரஸ்: “அடிப்படையில், அளவில் தான் பாரிய வித்தியாசம் காணப்படுகின்றது. முன்னெப்போதும் இல்லாத வகையில் உலகமயமாக்கல் மற்றும் அதன் தயாரிப்புக்களினால் (இணையம், நாடுகளுக்கு இடையிலான பயணத்தின் இலகுத்தன்மை உட்பட) பயங்கரவாதமானது மேலும் சிக்கலடைந்துள்ளதுடன்;, பல நாடுகளைக் குறிவைத்து முன்னெடுக்கப்படுகின்றது. பயங்கரவாத குழுக்களுக்கு ஆட்களை இணைத்துக்கொள்வது, பயிற்சி அளிப்பது, நிதி திரட்டுவது, வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, ஊக்குவிப்பது மற்றும் முக்கிய நடவடிக்கையான தாக்குதல்களை மேற்கொள்வது என்பன பரந்துபட்ட அளவில் இருப்பதனால் அதனை கண்டறிவது சிரமமாக உள்ளது.
பரெட்: “பழமையான அல்லது சமூகவலைத்தளங்களின் பாவனைக்கு முன்னரான பயங்கரவாதத்திற்கும், தற்போதைய நிலைமைக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், உள்ளூரில் இடம்பெறும் சம்பவங்களின் மூலம் மக்களை வன்முறைகளில் ஈடுபடுவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றது. இணைய வசதியினால் பயங்கரவாதம் மற்றும் அதன் தாக்கங்கள் பரவுவது அதிகமாகியுள்ளது. தோல்வியடைந்த ஒரு தாக்குதல் கூட உலகளாவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அடையாளப்படுத்தப்படுவதுடன், ஊடகங்கள் அல்லது பிற வடிவிலான செய்திகள் மூலமாக அச்சத்தினை பரப்பவும், தனிநபர் வன்முறைகளை ஊக்குவிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.
கேள்வி: இவ்வாறான அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்காக பயங்கரவாத எதிர்ப்பு மூலோபாயத்தை உருவாக்கும் போது அரசாங்கங்கள் எதை நினைவில் வைத்திருக்க வேண்டும்?
ஹெவிட்: வளைந்துகொடுக்க வேண்டிய தேவை காணப்படுவதுடன், எதிர்பாராதவொன்றுக்கு முகம் கொடுக்கவும் வேண்டும். தற்போதைய பயங்கரவாதத்திற்கு ஒரு வடிவம் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 100 சதவீத பாதுகாப்பை அளிக்க முடியாது என்பதனை அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது. உண்மையில் தாக்குதல்களின் எண்ணிக்கையை குறைப்பது மற்றும் அதனால் ஏற்படும் அதிகப்படியான உயிரிழப்புக்களை குறைப்பதற்கே – இலங்கையில் இடம்பெற்றதைப் போன்று, முயற்சிக்க வேண்டும். விரைவில் மீண்டு வருவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. எமது சமூகத்தை பிரிக்கும் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறான நிலைமையில் நாம் அதிக உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடாது. ஏனென்றால் அதை தான் பயங்கரவாதிகள் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கின்றார்கள்.
கேனர்: “பயங்கரவாதத்தின் உலகளாவிய பரிணாமத்தை அரசாங்கங்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். பயங்கரவாதம் எல்லையற்றது என்பதனால், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளும் அவ்வாறே இருக்க வேண்டும் என அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பல வருடங்களாக எமது நிறுவனத்தின் சுலோகம் என்னவென்றால், “ஒரு வலையமைப்பினை தாக்க வேண்டும் என்றால் அது மற்றொரு வலையமைப்பினால் தான் முடியும்.” இது தற்போதைய நிலைமைக்கு முற்றாக பொருந்தும். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக அரசாங்கங்கள் ஒன்றிணைய வேண்டும், பயங்கரவாத திட்டங்கள், தாக்குதல்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் எச்சரிக்கைகள் மற்றும் புலனாய்வுத் தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். (அத்துடன் உண்மையில் நட்பு நாடுகளிடம் இருந்து இவ்வாறான புலனாய்வு எச்சரிக்கைகள் கிடைக்கும் பட்சத்தில் அவற்றை கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது). கூட்டாக பயிற்சியில் ஈடுபடுவது, அனுபவம் மற்றும் தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்வது மற்றும் பயங்கரவாதத்தை எப்பொழுதும் நியாயப்படுத்த முடியாது என்பதை நாட்டு பிரஜைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
டி லொன்ட்ரஸ்: “எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்பு மூலோபாயமும் மூன்று முக்கிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும். முதலாவது மனித உரிமைகள்: பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளின் போது மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்கப்பட வேண்டும், ஏனென்றால் அது சட்டத்தினால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் உரிமை மீறல்கள் நீண்ட கால பாதுகாப்பின்மைக்கு வித்திடுவதுடன், அது எதிர்வினையை ஏற்படுத்தக்கூடியவை. இரண்டாவது செயற்றிறன் மற்றும் பொறுப்புக்கூறல்: பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அரசாங்கத்தின் அணுகுமுறை மற்றும் நிறைவேற்றுதலில் போதுமான அளவு வெளிப்படைத்தன்மை காணப்படுகின்றதா என்பதனை உறுதிசெய்வதற்கு செயல்முறைகள் காணப்பட வேண்டும். (சட்டம் மற்றும் அரசியல்) உரிமை மீறல்கள் மற்றும் பாதுகாப்பு தோல்விகளின் போது பொறுப்புக்கூறுதல், பயங்கரவாத எதிர்ப்பு அணுகுமுறைகள் உண்மையில் பயங்கரவாத அச்சுறுத்தல்களை கையாள திறமை வாய்ந்ததாக உள்ளனவா என்பதனை மதிப்பீடு செய்தல். மூன்றாவதாக, ஆபத்து: பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதத்தினால் ஏற்படும் வன்முறைகளை முற்றாக நீக்குவது என்பது இயலாத காரியம். ஆனால் இந்த ஆபத்தினை கட்டுப்படுத்துவது மற்றும் குறைப்பதை நோக்கி நாம் கவனம் செலுத்த வேண்டும்.
பரெட்: “பயங்கரவாத செயல்களைப் புரிந்தவர்கள் தனிநபர்கள் அல்லது சிறு குழுக்கள் என்பதை அரசாங்கங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மாறாக அவர்களை ஒரு சமூகத்தின் பிரதிநிதிகளாக கருதக்கூடாது. மேலும், அரசாங்கங்கள் அச்சுறுத்தலை மிகைப்படுத்தக்கூடாது, பல சமயங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு மிகச்சிறியதாக இருக்கும் வகையிலேயே இந்த அச்சுறுத்தல்கள் காணப்படும். அரசாங்கத்தின் எதிர்நடவடிக்கையும் அதற்கு தகுந்ததாகவே இருக்க வேண்டும். இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்கள், கொடூரமாக இருந்தபோதும், அவை ஒரு சிறிய குழுவினாலேயே முன்னெடுக்கப்பட்டன. இது போன்ற பல தாக்குதல்கள் எதிர்வரும் காலங்களிலும் நடக்கலாம் என்பது அவசியமில்லை.
கேள்வி: வன்முறையில் இருந்து எழும் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் சமூகங்கள் என்ன பங்கு வகிக்க வேண்டும்?
ஹெவிட்: அனைத்து சமூகங்களுக்கும் பங்கு உள்ளது. கோபம், அந்நியப்படுத்தப்படுதல், வருத்தம் மற்றும் பழிவாங்குதல் என்பன பயங்கரவாதத்திற்கான காரணிகளாக இருக்கின்றன. பரந்துபட்ட சமூக நலன்களை கண்டறிய நாம் பங்கு வகிக்க வேண்டும். ஒரு சமூகத்தின் குறிப்பிட்ட சில நபர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்காக முற்று முழுதாக அந்த சமூகத்தை இழிவுபடுத்துவதை நாம் தவிர்க்க வேண்டும். முற்று முழுதாக ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்வது மேலும் அதிக கோபம், அந்நியப்படுத்தலுக்கு உள்ளாக்குவதுடன், இறுதியில் மேலும் பல வன்முறைச்சம்பவங்களுக்கு காரணமாகிவிடும்.
கேனர்: “தீவிரவாதத்தை எப்பொழுதும் நியாயப்படுத்த முடியாது என்ற தகவலை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முக்கியமான பங்கு இந்த சமூகங்களுக்கு உள்ளது. (அதை அவர்கள் தெளிவாக கொண்டுசெல்ல வேண்டும்) அதாவது பயங்கரவாதத்திற்கான காரணங்கள் அல்லது நோக்கங்களை கண்டறிவதை விடுத்து அல்லது பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களின் அடையாளங்களை கண்டறிவதை விடுத்து உலகின் எந்தப் பகுதியில் பயங்கரவாதம் காணப்பட்டாலும் அவர்கள் அதை எதிர்க்க வேண்டும். பொதுமக்களை குறிவைத்து இடம்பெறும் தாக்குதல்களுக்கு கருத்தியல், அரசியல் மற்றும் மத சலுகைகளை காரணம் காட்டி எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது என்பதனை அவர்கள் வலியுறுத்த வேண்டும். உலகளாவிய ரீதியில் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் இனம், மதம் மற்றும் பாலின பாகுபாடின்றி ஆதரிக்க வேண்டும். இதன் மூலம் பயங்கரவாதிகள் தங்களுடைய சமூகங்களிடம் எதிர்பார்க்கும் சட்டபூர்வதன்மை முற்றாக இழக்கப்படும்.
டி லொன்ட்ரஸ்: “தீவிரவாதத்தை எதிர்ப்பது சிக்கலானது. தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கு என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றோ அல்லது அதனால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்றோ உண்மையில் எங்களுக்குத் தெரியாது. ஆனால் சமூகம் எவ்வளவு முக்கியமானது என்று தெரியும். அரசாங்கங்கள் சமூகங்களை வெறுமனே தகவல்கள் மற்றும் புலனாய்வு மூலங்களாவே காண்கின்றன. ஆனால் அவர்களை நம்பிக்கை உரியவர்களாக பார்ப்பது அவசியம். நம்பிக்கை, சொந்தம், திறந்த மனப்பான்மை எங்கு உள்ளதோ அங்கு மாற்றம், வாக்குரிமை பறிப்பு, அரசியல், போராட்டம் மற்றும் கருத்து வேறுபாடுகள் தொடர்பான விவாதங்கள் இடம்பெற முடியும்.
பரெட்: “பயங்கரவாதிகள் எந்த சமூகத்தில் இருந்து வருகின்றார்களோ அந்த சமூகத்தை சந்தேகத்துடன் நடத்தாமல், வேறு வகைகளில் அவர்களை இழிவுபடுத்தாமல் அவர்களுடன் இணைந்து அரசாங்கம் பணியாற்ற வேண்டியது மிக அவசியம். இலங்கையிலுள்ள பெரும்பான்மையான முஸ்லிம் சமூகம் இந்த தாக்குதல்களை வெறுக்கின்றனர். இவ்வாறான குடும்பங்கள் மற்றும் உள்ளுர் நிறுவனங்களின் உதவியுடன் மாத்திரமே எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் தாக்குதல்களை கண்டுபிடிக்கவோ அல்லது தடுக்கவோ முடியும்.”