Covid-19 தொற்றினை உருவாக்கும் கொரோனா வைரஸிலிருந்து தப்பிப்பதற்காகவும் அதற்கான முழுமையான தீர்வை கண்டறியவும் இன்று உலக நாடுகள் அனைத்தும் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வைரஸினை முதலில் கண்டறிந்த பெண் மருத்துவரை பல தசாப்தத்திற்கு பிறகு உலகம் இன்று நினைத்துப்பார்க்க ஆரம்பித்துள்ளது.
ஸ்கொட்லாந்து நாட்டைசேர்த்த Harry Leonard Hart என்ற பேருந்து ஓட்டுனரின் மகளான ஜூன் அல்மெய்டா (June Almeida) என்ற பெண்மணியே கொரோனா எனும் வைரஸை முதன் முதலில் கண்டுபிடித்துள்ளார். வைரஸ்களை எலக்ட்ரான் நுண்நோக்கியின் (Electron microscope) உதவியுடன் அதை படமாக்கும் virus imaging துறையில் முன்னோடியாக பணியாற்றியவர் தான் இந்த ஜூன் அல்மெய்டா.
Covid-19 வைரஸ் தொற்றை உண்டாக்கும் புதிய SARS-CoV 2 எனும் வைரஸ், இவர் 1964 ஆம் ஆண்டு லண்டனிலுள்ள புனித தோமஸ் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிய போது கண்டறிந்த வைரஸ் குடும்பத்தினை சார்ந்த வைரஸாகும்.
ஜூன் அல்மெய்டா – சுருக்கமான வாழ்க்கை வரலாறு
1930 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி ஸ்கொட்லாந்து நாட்டில் க்ளாஸ்கோ (Glasgow) எனும் ஊரில் பிறந்த ஜூன் அல்மெய்டா, ஆரம்ப காலங்களில் ஜூன் டால்ஷியல் ஹார்ட் (June Dalziel Hart ) என்றே அழைக்கப்பட்டு வந்தார். தனது பள்ளி படிப்பினை மிகவும் குறைந்த காலம் மட்டுமே கற்ற ஜூன் , க்ளாஸ்கோ ரோயல் மருத்துவமனையில் திசுத்துயரியல் (HISTOPATHOLOGY) துறையில் ஆய்வகராக பணியில் இணைந்தார். பின்னாட்களில் ஸ்கொட்லாந்திலிருந்து லண்டனுக்கு குடியேறிய இவர், 1954 ஆம் ஆண்டு என்றிக் அல்மெய்டா என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் இத்தம்பதியினர் லண்டனிலிருந்து கனடாவிற்கு குடியேறினர்.
கனடா ஒன்டாரியோவிலுள்ள பிரபல புற்றுநோய் மருத்துவமனையில் Electron microscope துறையில் தன்னை மேம்படுத்திக்கொண்டார் ஜூன். பிறபொருளெதிரி எனப்படும் Antibody க்களைப் பயன்படுத்தி வைரஸ்களை தூண்டுவதன் மூலமாக அவற்றை பெரிய உருவில் புகைப்படமாகக் காண்பிக்க கூடிய தொழிநுட்பத்தில் முன்னோடியாக விளங்கிய மருத்துவப்பெண்மணியானார்.
பின்னர் 1964 ஆண்டு மீண்டும் லண்டன் வந்த இவர், அங்குள்ள புனித தோமஸ் மருத்துவமையில் பணிசெய்ய ஆரம்பித்தார். டேவிட் டயரல் எனும் மருத்துவருடன் இணைந்து வைரஸ் சம்மந்தமான பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்.
அச்சமயத்தில் இருமல் ஜலதோஷதிற்கான தனி ஆய்வொன்றை மேற்கொண்டு வந்துள்ளார் மருத்துவர் டேவிட். ஜலதோஷதிற்கு தொடர்புடைய சில வைரஸ்களை மீண்டும் உருவாக்க முடிந்ததையும், சில வைரஸ்களை மீண்டும் உருவாக்க முடியவில்லை எனவும் ஆய்வுகளின் முடிவில் மருத்துவர் டேவிடும் அவரின் குழுவினரும் தெரிந்து கொண்டனர்.
கொரோனா வைரஸ் பிறந்தது
1965 ஆம் ஆண்டு சுகவீனமுற்ற பள்ளி மாணவனில் இருந்து பெறப்பட்ட வைரஸின் மாதிரி ஒன்றை ஆராய ஆரம்பித்தார் மருத்துவர் டேவிட். B814 எனப்பெயரிடப்பட்ட இந்த மாதிரியில் உள்ள வைரஸினை மீண்டும் உருவாக்க முடியவில்லை என ஆய்வில் தெரியவந்தது. இருப்பினும் உடல் உறுப்புகளால் இவற்றை வளர்க்க முடியும் என இன்னொரு ஆய்வில் தெரிந்தவந்த போது, இவ்வைரஸ்களை எலக்ட்ரான் நுண்நோக்கியின் (Electron microscope) மூலம் பார்க்க நினைத்தார் டேவிட். பின்னர் இந்த மாதிரிகள் மருத்துவர் ஜூனிடம் அனுப்பப்பட்டது.
மாதிரிகளை பரிசோதித்த ஜூன், இவை Influenza வைரஸ்களை போல் இருந்தாலும் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது எனக் கண்டறிந்தார். அப்போதுதான் மனிதர்களை தாக்கும் கொடிய வைரஸான கொரோனா வைரஸினைக் கண்டுபிடித்தார் மருத்துவப் பெண்மணி ஜூன் அல்மெய்டா.
இவரின் இந்த ஆய்வை நிராகரித்த அறிவியல் சஞ்சிகையொன்று, அந்நாட்களில் இவர் வெளியிட்ட வைரஸின் புகைப்படங்களை சிறுமைபடுத்தி விமர்சித்தது. 1965 ஆம் ஆண்டு வெளியான பிரித்தானிய மருத்துவ சஞ்சிகையில் B814 எனும் மாதிரியின் கண்டுபிடிப்புகள் பற்றிய தகவல்கள் எழுதப்பட்டது. பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து ஜுனின் இப்புகைப்படங்கள் governor of general virology எனும் மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.
ஜூன் அல்மெய்டா, மருத்துவர் டேவிட் மற்றும் புனித தோமஸ் மருத்துவமனையின் பேராசிரியர் ஆகியோர் இணைந்தே இந்த வைரஸிற்கு கொரோனா எனப்பெயரிட்டுள்ளதாக சில மருத்துவ எழுத்தாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த வைரஸின் உருவம் கிரீடம் போலவும் ஒளிவட்டம் போலவும் காணப்படுவதனாலேயே இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இலத்தீன் மொழியில் கொரோனா என்றால் கிரீடம் எனப் பொருளுண்டு.
தொடர்ந்து லண்டனில் உள்ள முதுகலை மருத்துவப் பள்ளியில் பணியாற்றிய மருத்துவர் ஜூன் அல்மெய்டாவிற்கு முனைவர் பட்டம் வழங்கி கெளரவித்தனர். பின்னர் wellcome institute of london இல் பணியாற்றி தனது சேவையை நிறைவு செய்தார் ஜூன். அங்கு வைரஸ்களை படமாகும் துறையில் பல பணிகளுக்கான காப்புரிமைகளில் இவரின் பெயரும் முதன்மியயானது. 1980 களில் நச்சியியல் (Virology) என்ற துறையில் பணியாற்றி HIV வைரஸினை படமாக்க பெருமுதவி செய்துள்ளார் மருத்துவர் ஜூன் அல்மெய்டா. பின்னர் 2007 ஆண்டு டிசம்பர் மாதம் தனது 77 ஆம் வயதில் இயற்கை எய்தினார் இம்மருத்துவப் பெண்மணி.