‘தென்னகம் வட இந்தியாவை போல செழிப்பான நகர நாகரிகம் ஒன்றைக்கொண்டிருக்கவில்லை. மாறாக சிறுசிறு இனக்குழுக்களாக கூடிவாழ்ந்த மக்கட்குழுக்களை மட்டும் கொண்டிருந்த நிலப்பரப்பு’
– வட இந்திய வரலாற்று ஆய்வாளர்கள்
ஆதிச்சநல்லூர் உட்பட தமிழகத்தில் நடாத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் பெரும்பாலும் முதுமக்கள் தாழிகளும், ஒரு சில பானையோடுகளும், வெளிநாட்டு நாணயங்களும் மட்டுமே கிடைத்து வந்தது. எனவே வட இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் ‘தென்னகம் வட இந்தியாவை போல செழிப்பான நகர நாகரிகம் ஒன்றைக்கொண்டிருக்கவில்லை. மாறாக சிறுசிறு இனக்குழுக்களாக கூடிவாழ்ந்த மக்கட்குழுக்களை மட்டும் கொண்டிருந்த நிலப்பரப்பு’ என பல ஆவணங்களில் குறிப்பிட்டு வந்தனர். இந்நிலையில் கீழடியின் ஆய்வு முடிவுகள் தென்னிந்தியா குறித்தான வரலாற்று அணுகுமுறையை மாற்றியுள்ளது.முறைமைப்படுத்திய தமிழர் வரலாற்றின் முதல் பகுதி சங்ககாலம். இதுவரையும் வெறும் இலக்கிய வடிவமாக மட்டுமே காணப்பட்டுவந்த சங்கப்பாடல்கள் நகர் சார்ந்த பல்வேறு வாழ்க்கை முறையை பற்றி எண்ணற்ற பாடல்களை கொண்டுள்ளது. வளர்ச்சியடையாத சமூகத்தில் இருந்துகொண்டு நகரங்கள் குறித்து சங்கப்பாடல்கள் பாடியது அவை கற்பனை காவியங்களே என்பதற்கு அடையாளம் என சிலர் கருத்துரைத்து வந்த சந்தர்ப்பத்தில், கீழடியின் ஆய்வு முடிவுகள் சங்கப்பாடல்கள் மீதான அனைத்து தரப்பினரதும் கண்ணோட்டத்தை மாற்றியுள்ளது. சங்கப்பாடல்கள் அக்காலத்தின் வாழ்க்கை முறைமையை தலைமுறை தலைமுறையாக மக்களுக்கு கடத்திக்கொண்டிருக்கும் ஒரு வரலாற்று சான்றாதாரம் என இப்போது கருதப்பட்டுவருகிறது. சங்கப்படால்களை ஆய்வாளர்கள் இனிமேல் ஆவணப்படுத்திய வரலாற்று ஆவணமாக அணுக வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
கீழடி ஆய்வுகளில் நவீன உபகரணங்கள்
கீழடி ஆய்வுகளில் இதுவரையில் ஆயிரக்கணக்கான தொல்லியல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழக தொல்லியல் துறை நடாத்திய ஆய்வில் இருந்து மாத்திரம் சுமார் 5700 இற்கும் அதிகமான தொல்லியல் சான்றுகள் பெறப்பட்டுள்ளன. பானை ஓடுகள், டெரகோட்டாவினால் செய்யப்பட்ட குழாய் அமைப்புகள், சுருங்கை எனப்படும் நீர் செல்லும் வழித்தடங்கள், உறை கிணறுகள் (ring well) அரைக்கும் கற்கள், தங்கம் மற்றும் யானைத்தந்தம் ஆகியவற்றால் செய்யப்பட்ட ஆபரணங்கள், சங்கினால் செய்யப்பட்ட வளையல்கள், பல்வேறு வகையான மணிகள், ரோமநாட்டை சேர்ந்த பவளக்கற்கள், நெசவுக்கு பயன்படுத்தக்கூடிய ஊசிகள், நுணுக்கமான வேலைப்பாடுகள் பொருந்திய வடமேற்கு இந்திய கர்னீலியம் பீட கற்கள், விலங்கெழும்பால் ஆன ஆயுதங்கள், யானைத்தந்தம் மற்றும் களிமண்ணால் செய்யப்பட்ட பகடைக்காய்கள், சுடுமண் பொம்மைகள் மற்றும் அதன் பாகங்கள் என கீழடி ஒரு அபிவிருத்தி அடைந்த மனித வாழ்விடப்பகுதியாகவோ அல்லது மக்களின் அன்றாட தேவைகளுக்கான பொருட்களை உருவாக்கக்கூடிய தொழில் மையமாகவோ இருந்திருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கீழடியில் கிடைக்கப்பட்டுள்ள கட்டட அமைப்புகள் யாவும் மிக நேர்த்தியாக சதுர அமைப்பில் திட்டமிடப்பட்டு, கழிவுநீர் வெளியேற்றும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது ஆய்வில் வெளியாகியுள்ளது. கட்டடத்தின் தரைப்பகுதி களிமண்ணால் பூசப்பட்டுள்ளதுடன், சுவர்கள் களிமண்ணால் செய்யப்பட்ட நான்கு அங்குல உயரமும், அரையடி நீளமும் கொண்ட செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பால் உறுதியாக அமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் கூரைக்கு களிமண்ணால் செய்யப்பட்ட ஓடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் கூரையை தாங்குவதற்கு கட்டடத்தில் மரத்தால் செய்யப்பட்ட தூண்களும் நிறுவப்பட்டுள்ளது. எனினும் இன்றளவும் கீழடியில் மனித எலும்புகள் எதுவும் கிடைக்காமல் இருப்பது கீழடியில் மனிதவாழ்வு இருந்ததா என்ற கேள்விக்கு இடம் கொடுத்துள்ளது. எனினும் மனிதவாழ்விடத்திலேயே இறந்தவர்களை புதைக்கும் பழக்கம் என்றுமே வழக்கத்தில் இருந்திராமையால் கீழடிக்கு மிக அருகில் ஒரு இடுகாடு இருக்கும் என நம்பப்படுகிறது.
கீழடியில் இதுவரை பெருவழிபாட்டு முறையை சார்ந்த எந்தவொரு தொல்பொருளும் கிடைக்காமல் இருப்பது இந்தியாவில் இந்து மதத்தின் தாக்கம் காலத்தால் சற்று பிற்பட்டதோ என்ற கேள்வி ஆய்வாளர்களிடம் தோன்றுகிறது. இதன் விளைவே மத்தியில் இருக்கும் காவி அரசியட்குழு கீழடி குறித்து எதிர்மறையான முடிவுகளை எடுக்க தூண்டுகிறது என்று பல்வேறு ஊடகங்களின் செய்திகளில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இன்று கீழடியில் இந்தியப்பெருந்தெய்வங்கள் குறித்தான எச்சங்கள் ஒன்றும் கிடைக்காத போதிலும் சங்க இலக்கியங்கள் பெருமளவில் சிவனியம் மற்றும் மாலியம் குறித்தும், இந்திரவிழா குறித்தும் பாடல்களை பாடுவதால், கீழடி ஆய்வின் அடுத்தடுத்த கட்டங்களில் சமயம் சார்ந்த ஆதாரங்கள் ஏதேனும் கிடைக்க வாய்ப்புள்ளது என கடல்சார் வரலாற்று ஆராய்ச்சியாளரான ஒரிஸ்ஸா பாலு அவர்கள் தெரிவித்து வருகிறார்.
தமிழக தொல்லியல் துறை கீழடி ஆய்வுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து தன்னால் இயன்றவரை நவீன உபகரணங்களை பயன்படுத்தி ஆய்வை தொடர்ந்து வருகிறது. Magento meter, Ground Penetrating Radar (GPR) என புதிய நவீன கருவிகள் மூலம் ஆய்வுக்களத்தில் நடத்தப்படும் முற்சோதனைகள் மூலம் நிலத்துக்கு அடியில் இருக்கும் கட்டட அமைப்புக்கள் மற்றும் பெரியளவிலான தொல்லியல் எச்சங்களை முன்கூட்டியே இனம்காணக்கூடிய நிலை உருவாகி இருப்பதால் ஆய்வுகள் முன்னரை விட வேகமாக நடைபெற்று வருகிறது. கீழடியில் கிடைக்கப்பட்ட களிமண் பொருட்களின் சேர்மானங்களை அறிவதற்காக உரிய மாதிரிகள் வேலூரில் உள்ள Earth science Department of Vellore, Institute of Technology க்கு அனுப்பி வைக்கப்பட்டது. சாதாரண களிமண்ணுடன் சுண்ணாம்பும் சேர்த்து வழுவூட்டப்பட்டு பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற முடிவு சோதனையின் பின்னர் பெறப்பட்டுள்ளது. கீழடியில் கிடைக்கப்பெற்ற எலும்பு மாதிரிகளில் சில மகாராஷ்டிராவில் உள்ள புனே நகரின் டெக்கான் பல்கலைக்கழக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது கீழடியில் திமில் உள்ள காளை, பன்றி, மயில் மற்றும் ஆடு முதலிய விலங்குகள் கீழடியில் கால்நடை தேவைகளுக்காக அல்லது உணவுத்தேவைகளுக்காக வளர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று அறியப்பட்டுள்ளது. கள ஆய்வில் பெறப்பட்ட பானை ஓட்டு மாதிரிகள் இத்தாலியின் பைசா பல்கலைக்கழகத்துக்கும், காபன் திகதியிடலுக்கான மாதிரிகள் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தின் பீட்டா அனாலிட்டிக் ஆய்வு மையத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அதன் பிரகாரம் 280 cm ஆழத்தில் கிடைத்த மாதிரியொன்று கி.மு 2-3 ம் நூற்றாண்டை சேர்ந்தது எனவும், 354 cm ஆழத்தில் கிடைத்த மாதிரி கி.மு 6ம் நூற்றாண்டை சேர்ந்தது எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிதுள்ளன.
கதிரியக்க கார்பன் காலக்கணிப்பில் நிர்ணயம் செய்யப்பட்ட முழு உலக வரலாறும் மீண்டும் ஆய்வுக்குட்பட வேண்டியிருக்குமா?
தொல்லியல் துறையில் பெறப்படும் சான்றுகளின் காலத்தை திட்டவட்டமாக நிர்ணயிக்க பயன்படுத்தப்படும் சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற முறைகளில் ஒன்று கதிரியக்க கார்பன் காலக்கணிப்பு (Radio Carbon Dating).1949 இல் வில்லியம் லிபி என்ற இரசாயனத்துறை நிபுணரால் இந்த காலக்கணிப்பீடு முறை முன்வைக்கப்பட்டது. எனினும் அப்போதைய காலத்தின் விஞ்ஞானிகள் இம்முறையை ஏற்கவில்லை. ஆனால் சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது1960 இல் நடைபெற்ற நோபல் பரிசு விழாவில் வில்லியம் லிபியின் கண்டுபிடிப்புக்காக வேதியியல் பிரிவின் கீழ் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த முறையின் கீழ் மாதிரி ஒன்றில் காணப்படும் C14 இன் அளவைக்கொண்டு அம்மாதிரியின் வயது தீர்மானிக்கப்படும்.சூரியனில் இருந்து வரும் கதிரியக்க அலைவரிசகளால் நைதரசன் அணுக்கள் கார்பன் அணுக்களாக மாற்றமடையும் (N14 ➡C 14). இவ்வாறு மாற்றமடையும் கார்பன் அணுக்கள் சாதாரண கார்பன் அணுக்களை விட (C12) நிலைப்புத்தன்மை குறைந்தது. தாவர ஒளிச்சேர்க்கை மூலமாக தாவரங்களுக்குள்ளும், பின்னர் உணவுச்சங்கிலி மூலம் விலங்குகளுக்குள்ளும் சேரும் இந்த C14 அணுக்கள் நிரந்தரமாக ஒரே அளவில் காணப்படாது. ஒரு உயிரினம் இறந்த பின்பு புதிய அணுக்கள் கிடைக்காதவிடத்தில் இவை சுமார் 5560 ஆண்டுகளில் இயல்பான அளவில் இருந்து பாதியாக குறைவடைந்துவிடும், மீண்டும் 5560 ஆண்டுகளில் காற்பகுதியாக குறைந்துவிடும். இவ்வாறு அவைகள் காலப்போக்கில் குறைந்து ஒரு கட்டத்தில் முழுமையாக மறைந்துவிடும். எனவே ஒரு மாதிரியில் எந்த அளவுக்கு C14 அணுக்கள் குறைவாக உள்ளதோ அந்த அளவுக்கு அம்மாதிரிகள் காலத்தால் முந்தியது எனக்கூறலாம்.
எனினும் கீழடி விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் கார்பன் காலக்கணிப்பை ஏற்க மறுக்கின்றனர். கார்பன் காலக்கணிப்பில் அரிதாக ஏற்படக்கூடிய சில குறைபாடுகளை முன்வைத்து கீழடியின் கால நிர்ணயம் திருப்திகரமாக இல்லை என்று கூறிவருகின்றனர். “இன்று உலகின் 90% வரலாற்று ஆராய்ச்சிகளில் காலநிர்ணயம் செய்ய பயன்படுத்தியுள்ள பிரதான முறை கார்பன் டேட்டிங், எனவே கீழடியின் காலநிர்ணயம் பிழைத்துப்போகும் பட்சத்தில் இதுவரை கார்பன் காலக்கணிப்பில் நிர்ணயம் செய்யப்பட்ட முழு உலக வரலாறும் மீண்டும் ஆய்வுக்கூடப்பட வேண்டியிருக்கும்” என கீழடியின் ஆய்வாளர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கார்பன் காலக்கணிப்பு மூலம் பெறப்பட்ட முடிவுகள் இம்முறை சங்க இலக்கிய காலத்தை மேலும் 300 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தியுள்ளது. மேலும் இது வரைக்காலமும் மர்மமாகவே இருந்து வரும் சிந்துவெளி நாகரிகத்தின் சித்திர எழுத்துக்கள் குறித்தான மர்மங்கள் கீழடியில் கிடைத்துள்ள கீறல்கள் வகை எழுத்தினால் தீர்த்துவைக்கப்படும் என்ற பேச்சு ஆராய்ச்சியாளர்களிடம் நிலவுகிறது. இதுவரை கிடைத்துள்ள 56 தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள பானையோடுகளை ஆய்வுசெய்ததில் இருந்து குவிரன், ஆதன், சாத்தன், மடைச்சி, வேந்தன் என்ற வெவ்வேறு தமிழ் பெயர்கள் கிடைத்துள்ளமை கீழடியில் நிலவியிருந்த எளியமக்களின் கல்வித்திறனை விளக்குகிறது. சிந்துவெளியில் கி.மு 1300 அளவில் மறைந்துபோன கலாசாரமும், தென்னாட்டில் தமிழ் நிலத்தில் அதையொத்த ஒரு கலாசாரம் கி.மு 600களில் நிலவுவதும் எதேர்ச்சையாக இருந்துவிட இயலாது. கீழடியின் ஆய்வு முடிவுகள் இந்திய வரலாற்றில் இருளடைந்து கிடக்கும் பல பக்கங்களை ஒளியூட்டும் என்று நம்பப்படுகிறது. இன்றைய நாட்களில் சராசரியாக நாளொன்றுக்கு சுமார் 3000 பொதுமக்கள் பார்வையிட வந்துசெல்லும் நிலையில் கீழடியில் சர்வதேச தரம் வாய்ந்த அருங்காட்சியாகம் அமைக்க தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் மாத்திரமே வழங்கியிருப்பது வேடிக்கையும், வேதனையும் மிகுந்த விடயம். கீழடி என்பது மொத்த தமிழக வரலாற்றில் ஒரு மிகச்சிறு புள்ளி மாத்திரமே. அதுகூட இன்று நூற்றில் ஒரு வீதம் மட்டுமே ஆராயப்பட்டுள்ளது. வைகைக்கரையில் மட்டுமே இன்னும் 296 இடங்கள் ஆய்வுக்குட்பட வேண்டும். அது தவிர தாமிரபரணி, காவிரி, பெண்ணையாறு, பாலாறு என தமிழகம் முழுவதிலும் பல ஆய்வுக்களங்கள் மண்ணுக்குள் உறங்கிக்கொண்டிருக்கின்றன. அவை முழுவதும் வரலாற்றின் வெளிச்சத்துக்கு வந்தால் மாத்திரமே தமிழினம் குறித்தான திருத்தமான பார்வை நமக்கும் உலகுக்கும் கிட்டும்.