நிச்சயமற்ற சம்பளக்கொடுப்பனவு: இலங்கையில் COVID -19 தொற்றினால் வீழ்ச்சிகண்டுள்ள தொழிற்சாலைகளும் தொழிலாளர்களின் நிலைமையும்

பாதுகாவளர் அறையின் ஒரு புறத்தில் புதிய தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டு, அவற்றுக்கருகில் சவர்க்காரக்கட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. செவிலியர் ஒருவர் உங்களது உடல் வெப்பநிலையை கண்காணிக்கிறார். நீங்கள் வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு, தரையில் போடப்பட்டுள்ள கம்பளத்தினால் உங்கள் கால்களைத் துடைக்கிறீர்கள். நுழைவாயிலுக்கு அருகில் வேறு ஒரு தனியறை அமைக்கப்பட்டுள்ளது; அதனுள் நுழைந்தவுடன் உங்கள் தலை முதல் கால் வரை கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறீர்கள். பின்பு உடனடியாக, கைரேகை இயந்திரத்தில் உங்கள் கைரேகையை பதிவிடுகிறீர்கள்- பணிக்காக சமூகமளிக்கும் ஏனைய அனைவரையும் போல உங்கள் கைகளை மீண்டும் சுத்தப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

இதுவே, கட்டுநாயக்க ஏற்றுமதி உற்பத்தி வலயத்தில் (EPZ) அமைந்துள்ள கையுறை தொழிற்சாலையின் உற்பத்தி துறையில் பணிபுரியும் சரத்* (38) இனால் பின்பற்றப்படவேண்டிய செயல்முறை;  இவ் வலயமானது நாடுபூராகவும் அறிவிக்கப்பட்ட முடக்கத்துக்கு மத்தியில் மீண்டும் திறக்கப்பட்டது.

ஆரம்பத்தில், COVID-19 ஊரடங்கு உத்தரவு முதன்முதலாக விதிக்கப்பட்டபோது, கட்டுநாயக்க ஏற்றுமதி உற்பத்தி வலயத்தில் பணிபுரிபவர்கள் தங்களது விடுதிகளிலேயே தங்கியிருக்க நேர்ந்தது. ஒரு வாரம் கழித்து, இலங்கை முதலீட்டுச் சபையினால் (BOI), அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் படி அனைத்து வலயங்களையும் தற்காலிகமாக மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அங்கு தொழில் புரியும் ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உறுதியளித்தது.

ஆயினும், சரத்* போன்ற பல ஊழியர்கள் ஊர் திரும்பாமல் விடுதிகளிலேயே தங்கியிருக்க முடிவு செய்தனர்.

விடுதி வாசம்

இலங்கை முதலீட்டுச் சபையால் நிறுவப்பட்ட ஏற்றுமதி உற்பத்தி வலயங்கள் (சுதந்திர வர்த்தக வலயங்கள் என்றும் அழைக்கப்படும்), நாடு முழுவதும் ஏற்றுமதி மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக தாபிக்கப்பட்டு நியமிக்கப்பட்ட பகுதிகளாகும். இவ் வலயங்களில் தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள் மற்றும் குடியிருப்புகள் என்பவை உள்ளடக்கியிருக்கும். இவை நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் 42 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினை வகித்து பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் தொழிலாளர்களின் இரண்டாவது வாசஸ்தலங்களாகும்.

பெரும்பாலான தொழிற்சாலை தொழிலாளர்கள் வசிக்கும் விடுதியொன்றின் தாழ்வாரப்  பகுதி. ஒளிப்படஉதவி: Stand Up Movement Lanka

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முதல் வாரம் கட்டுநாயக்க ஏற்றுமதி உற்பத்தி வலயத்தில் வாழும் பெரும்பாலான தொழிலாளர்கள் பல இன்னல்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

சரத் ​​தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உறைவிட விடுதியொன்றில் வசித்து வருகிறார். மார்ச் 24ம் திகதி அன்று, ஊரடங்கு உத்தரவானது சில மணிநேரங்கள் தளர்த்தப்பட்டபோது, ​​அவர் தனது கையிலிருந்த சிறிதளவு பணத்துடன் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய கடை வரிசையில் நிற்கத் தீர்மானித்தார். இதனால் அவரால் வங்கிக்கு செல்ல முடியவில்லை. ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர் தேவையான உணவுப் பொருட்களை அவரால் கொள்வனவு செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் அன்று அவருக்குள் ஏற்பட்டவண்ணமே இருந்தது.

“சக ஊழியர்கள் இரவில் தொலைபேசியில் என்னுடன் பேசுகையில் கண்ணீருடன் தான் பேசுகின்றனர்” என சரத் Roar Media விடம் கூறினார். “ஒருவர் தொலைபேசியில் அவர் வசிக்கும் குறுகிய நெரிசலான வாடகை அறையில் ஓர் கைதியைப் போல் வாழ்வதாக உணர்வதைக் கூறி அழுதார். மற்றுமொரு பெண் ஊழியர் தனது குடும்பத்தாரை எண்ணி ஏங்குவதாகவும், மேலும் அவரிடம் இருக்கும் அரிசி, பருப்பு, சோயா மற்றும் கௌப்பி போன்ற உணவுப் பொருட்களை அளவுடனே பாவிப்பதாகவும் கூறினார்.” என்றார் சரத்.

இந்த வலயங்களில் அமைந்துள்ள உறைவிடங்களில் சுமார் 50-60 பேருக்கான வாடகை அறைகளும் மற்றும் விடுதிகளும் அடங்கும். இக் கட்டிடங்கள் பலபேரினால் பகிரப்படுவதற்கான அடையாளங்களை தாங்கி நிற்கின்றன; ஆடைகளை உலர்த்துவதற்குப் பயன்படும் பொதுப்பயன்பாடிற்குரிய நீண்டதொரு கொடியே அத் தற்காலிக இல்லங்களின் எல்லைக்கோடுகளாக செயற்படுகின்றன.

அங்குள்ள பொது கழிவறைகள் வரிசையான ஷவர் குழாய்களையும் மலசலக்கூடங்களையும் கொண்டவையாகும். “சில குளியலறைப் பகுதிகளில் ஆண் பெண் பயன்சார்ந்து பிரிக்கப்பட்டோ அல்லது ஒவ்வொரு ஷவர் குழாய்களுக்கும் இடையே சுவர்களோ இருக்காது” என்று முன்னாள் தொழிற்சாலை ஊழியரும் தற்போது ஸ்டாண்ட் அப் மூவ்மெண்ட் ஸ்ரீ லங்கா அமைப்பின்  நிறுவனருமான அஷிலா தண்தெனிய தெரிவித்தார்.

ஒரு சில விடுதிகளுக்குள் பொது கிணறுகள் காணப்படுகின்றன. சில கிணறுகளுக்கு அதிகமானோர் வருகை தருவதை அவதானிக்கலாம், அவர்கள் அவற்றை குளிக்கவும் துணி துவைக்கவும் பயன்படுத்துகிறார்கள். ஒளிப்பட உதவி: Stand Up Movement Lanka

ஊர் திரும்புதல் 

மார்ச் 27ம் திகதி அன்று, தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப விரும்பிய ஊழியர்கள் அதிகாலை 5.00 மணியளவில் ஏற்றுமதி உற்பத்தி வலயத்தின் வாயிலில் பெருந்திரளாக கூடியிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு இத் திட்டம் குறித்து முந்தைய நாள் தான் அறிவிக்கப்பட்டிருந்தது.

“அனைவரையும் காலை 7.00 மணிக்கு வாயிலுக்கு வருமாறு அறிவித்தோம். பலர் ஏன் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே சமூகமளித்தார்கள் என எனக்குத் தெரியவில்லை”என கட்டுநாயக்க இலங்கை முதலீட்டுச் சபையின் இயக்குனர் சிசில் பெர்னாண்டோ தெரிவித்தார். “மருத்துவ நிபுணர் குழுக்களை நியமித்தல், பேருந்துகளை ஏற்பாடு செய்தல் மற்றும் இராணுவ அதிகாரிகள் வருகைக்கு ஏற்பாடு செய்தல் போன்ற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் அமைந்துள்ள 12 ஏற்றுமதி உற்பத்தி வலயங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், இலங்கை முதலீட்டு சபையே பொறுப்பு ஆகும். திரு. பெர்னாண்டோவின் கூற்றுப்படி, கட்டுநாயக்க வலயத்தில் சராசரியாக ஒரு நாளுக்கு சுமார் 36,500 ஊழியர்கள் கடமையாற்றுகின்றனர். பலதரப்பட்டோர் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் இவ் வலயங்களுக்கு வாழவும் வேலை செய்யவும் வருகை தருகின்றார்கள்.

ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் பெருந்திரளாக கூடியிருந்தனர். ஒளிப்பட உதவி: Newswire 

தனது இளம் குழந்தைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது என உணர்ந்ததால் சரத்* ஊர் திரும்புவதை பிற்போட முடிவுசெய்தார். இதனிடையே, தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் மாலா* (27) என்பவருக்கு, தனது சொந்த ஊரான ஹட்டனுக்கு திரும்ப முடியாதுபோனது.  அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் தொழில் புரிவதனால் அவர் தனியே வீட்டில் இருக முடியாத நிலை ஏற்பட்டது. 

மாலா அவரது கணவருடன் வசித்து வருகிறார், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட ஆரம்ப வாரங்களில், அவர்களின் அறையில் எவ்வித உணவுப் பொருட்களும் இருக்கவில்லை. “குறைந்தபட்சம் எங்களுக்கு குடிக்க தண்ணீரேனும் இருந்தது,” என்று அவர் கூறினார். “ஆயினும் எம் நிலைமயை உணர்ந்து, உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று எங்களுக்கு வழங்கிய உணவுப் பொருட்களுக்காக நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.” என்றார்.

நிர்கதிக்குள்ளானோர்

அஷிலா தண்தெனியவின் கூற்றுப்படி, தொழிற்சாலைகளில் வழங்கப்பட்ட சம்பள கொடுப்பனவுகளிலும் குறைபாடுகள் உள்ளன. “சிலருக்கு இன்னும் மார்ச் மாத சம்பளம் கூட வழங்கப்படவில்லை. மார்ச் மாத சம்பளத்தை பெற்றவர்கள், ஏப்ரல் மாத சம்பளத்தில் பாதியை மட்டுமே பெற்றுள்ளனர், மேலும் மே மாதமும் அரைமாத சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ”என்று அவர் கூறினார்.

சில தொழிற்சாலைகளால் ஊழியர்களுக்கு இரு மாத ஊதியத்தை வழங்க முடிந்தது என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். “இவ்வாறு வழங்கப்பட்டது அடிப்படை மாத சம்பளமேயாகும். தொழிலாளர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் கூடுதல் நேர ஊதியம், வருகைப்பதிவு போனஸ் அல்லது ஏனைய சலுகைகள் எதுவும் இதில் உள்ளடக்கப்படவில்லை.” என்றார்.

சரத் மற்றும் மாலா ஆகிய இருவரும் இரு மாத சம்பளங்களை பெற்றனர். “ஏப்ரல் மாதத்திற்கான எனது போனஸில் பாதி கிடைத்தது,” என்று மாலா கூறினார். முன்னதாக, அருகிலிருந்த கடையில் கடனுக்கு உணவுப் பொருட்களை வாங்கியவருக்கு அக் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் போனதினால் மேலும் அங்கு அவரால் உணவுப் பொருட்களை வாங்க முடியாமல் போய்விட்டது. அவர் வாடகைப் பணம் செலுத்த வேண்டும். மேலும் வீட்டிலிருக்கும் தாயாருக்கும் பணம் அனுப்ப வேண்டும். “என்னிடம்  உண்மையாக எவ்வித சேமிப்பும் இல்லை, நாங்கள் பெறும் ஒவ்வொரு சம்பளத்துடனும் எங்களது செலவுகளை மேற்கொள்கிறோம்” என அவர் தெரிவித்தார்.

தனது சிறிய விடுதி அறையினுள் அமர்ந்திருக்கும் ஊழியர் ஒருவர். ஒளிப்பட உதவி: Stand Up Movement Lanka

சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் தினசரி ஊதியம் பெறுபவர்களாவர். இவர்களுக்கு இவ் வலயங்களில் அமைந்துள்ள பகுதிகளில் சேவையாற்றும் ஒரு சில அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக குழுக்கள் மூலம் விநியோகிக்கப்பட்டவற்றை தவிர, வேறு  எவ்விதமான நிவாரணப் பொருட்களும் கிடைக்கப்பெறவில்லை. பலர் அரசினால் வழங்கப்பட்ட நலன்புரி கட்டணம் அல்லது ரூ. 5000 பெறுமதியான நிவாரணப் பொதியை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்த போதும் அவர்கள் அப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக இல்லாமையினால் கிராம சேவகர்களால் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால் அரசினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொதியினைக் கூட அவர்களால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. 

தினசரி ஊதியம் பெறுபவர்களாக சமூர்த்தி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள அவர்களுக்கு உரிமை இருப்பினும், பலர் சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரிவதால், அவர்களது சொந்த ஊர்களில் உள்ள சமூர்த்தி ஒதுக்கீடு பட்டியல்களில் இருந்து அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் ஊர் திருப்பிய அநேகமானவர்களாலும் அரசினால் வழங்கப்பட்ட நலன்புரி கட்டணம் அல்லது ரூ. 5000 பெறுமதியான நிவாரணப் பொதியை பெற்றுக்கொள்ள முடியவில்லை. 

ஆடை தொழிற்துறை

COVID-19 நெருக்கடியால் இலங்கையின் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தொழில்களில் ஒன்றாக ஆடைத் துறை கணிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முக்கிய ஆடை கொள்வனவாளர்களான அமெரிக்கா மற்றும் ஐரோப்பா என்பன பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டுள்ளன. இவை அதிகமாய் பாதிப்படைந்துள்ள இரு சந்தைகளாகும்.

சர்வதேச பொருளாதாரம் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், பல கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. மேலும் பல உள்ளூர் ஓர்டர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன அல்லது இரத்துச் செய்யப்பட்டுள்ளன. நாடுதழுவிய முடக்கமானது பெரியதொரு விகிதத்தில் வருவாய் ஈட்டும் பல தொழில்களை முடக்கியுள்ளது.

பொது ஒன்லைன் கலந்துரையாடலொன்றின் போது, பிராண்டிக்ஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, அஷ்ரோஃப் ஓமர் அவர்கள், COVID-19 தொற்றுக்கான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படாவிட்டால், ஏற்றுமதி செய்யும் நாடுகளிடையே இடம்பெறக் கூடிய விலைச் சமர் மற்றும் கணிக்க முடியாத நுகர்வோர் நடத்தை காரணமாக 2020 ஆம் ஆண்டின் கேள்விக்கான எதிர்பார்ப்பில் ஏற்படவுள்ள பற்றாக்குறை பற்றி எடுத்துரைத்தார். இதனால் அதிகளவிலான தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கும் மற்றும் பாரிய அளவிலான வேலையின்மையை உருவாக்குவதற்கும் சாத்தியங்கள் உள்ளன.

இருப்பினும், இதனால் தொழிற்சாலை ஊழியர்கள் மட்டுமல்லாது, இத் துறையில் ஏற்பட்டுள்ள பணி பாதுகாப்பின்மை காரணமாக ஏனைய மட்டங்களில் உள்ள ஊழியர்களும் பாதிப்படைந்துள்ளனர்.

புதிய இயல்பு வாழ்வு 

“தற்போது நாங்கள் கதவுகளைத் திறக்கவும், நீர்க் குழாய்களை இயக்கவும் எங்களது  கால்களையே பயன்படுத்துகின்றோம்” என சரத் அறிவித்தார். தொழிற்சாலையின் உணவு விடுதியின் தளவமைப்பு கூட மாற்றப்பட்டுள்ளது மேலும் ஒரு மீட்டர் இடைவெளியை பேணுவதற்காக நீர்க் குழாய்களும் இடையிடையே அகற்றப்பட்டுள்ளன என அவர் மேலும் விளக்கினார்.

“நாங்கள் எங்கள் தேநீர் கோப்பைகளை வெந்நீர் கொள்கலன்களிலிருந்து எடுக்கிறோம், மேலும் எங்கள் உணவை தனியாகவே உட்கொள்கிறோம். மேலும் சமூக இடைவெளியையும் பேணுகின்றோம்,” எனவும் அவர் கூறினார். “தொழிற்சாலையில்  தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது, நாங்கள் ஒருவருக்கொருவர் இடைவே விட்டு விலகியே அமர்ந்திருக்கிறோம். நான் பணிபுரியும் பகுதியில், தற்போது வழமையாக பணிபுரிபவர்களில் நான்கில் ஒருபகுதியினர்  மட்டுமே பணிபுரிகின்றனர். ”

தொழிற்சாலையொன்றில் புதிதாக நிறுவப்பட்ட தானியங்கி கிருமிநாசினி அறைகள். ஒளிப்பட உதவி: Star Garments Group

மார்ச் மாதத்தின் இறுதியில் சுமார் 130 ஊழியர்களைக் கொண்ட ஒரு சில தொழிற்சாலைகள் முடக்கத்தின் போதும் இயங்குவதைக் அவதானித்ததாக இலங்கை முதலீட்டு சபையின் இயக்குனர் சிசில் பெர்னாண்டோ தெரிவித்தார். அண்மையில் Roar Media விடம் கருத்து தெரிவித்த அவர், சுமார் 62 தொழிற்சாலைகள் 4,945 ஊழியர்களுடன் மீண்டும் செயற்படுகின்றன எனத் தெரிவித்தார். இந் நிறுவனங்களில் பல, மேற்கொள்ளக்கூடிய அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் மேற்கொண்ட பின்னரே தமது பணிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளன.

“இவ் வலயத்தில், சுகாதார அமைச்சக அலுவலகம் ஒன்று செயற்படுகின்றது. மேலும் பொது சுகாதார ஆய்வாளர் ஒருவரும் பணியாற்றுகிறார், அவர்கள் ஊழியர்கள் பணிபுரியும் இந் நிறுவனங்களுக்கு அடிக்கடி வருகை தருகின்றனர்,” என சிசில் பெர்னாண்டோ தெரிவித்தார். மேலும் அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் இதன் மூலம் உறுதிப்படுத்தினார்.

இருப்பினும், நோய்த்தொற்றின் அச்சுறுத்தல் மற்றும் அச்சம் என்பன தற்போதும் உள்ளது. மே மாதம் 1-ஆம் திகதி, ஹொரணையில் அமைந்துள்ள இலங்கை முதலீட்டு சபையின் வர்த்தக வலயமொன்றில் அமைந்துள்ள 21 தொழிற்சாலைகள் மூடப்பட்டன, அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு COVID-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பின்னர், அவர் COVID-19 தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவரின் உறவினர் என  உறுதிப்படுத்தப்பட்டது. அங்கு பணிபுரிந்த 350 ஊழியர்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

வாழ்வாதாரங்கள் மற்றும் பொருளாதாரம் என்பவற்றை சீரமைக்கவும் பற்றாக்குறைவான மற்றும் மிகவும் அத்தியாவசியமான பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதற்காகவும் இவ் வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், ஏனையவற்றை போல இத் தொழிற்துறையும், பணிகளைத் தொடர வேண்டிய கட்டாயத்தை எதிர்கொள்கின்றது. “அனைத்து தொழிற்சாலைகளும் ஒரே விதமான சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுவதில்லை” எனவும் அஷிலா தண்தெனிய மேலும் சுட்டிக்காட்டினார்.

சரத் ​​வேலைக்குச் செல்வதைப் பொருட்படுத்தவில்லை. ஏனெனில் இதன் மூலம் சம்பளம் கிடைப்பது உறுதியாகின்றது. நாடு முடக்கப்பட்டதிலிருந்து, அவசர ஓடர்களை செயலாக்குவதிலும், அண்மையில் சுகாதார பணியாளர்களுக்கான மருத்துவ முகமூடிகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPEs) உற்பத்தியிலும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாலா [இன்னமும் வேலைக்கு அழைக்கப்படவில்லை] மற்றும் அவரைப் போன்ற பலர் – தங்களது சொந்த ஊர்களில் அல்லது தங்களது உறைவிட அறைகளிலேயே அடைந்து கிடக்கின்றனர். மேலும் அடுத்த சில மாதங்களில் அவர்களின் வருமானத்தைப் பற்றிய கேள்வி அவர்களின் முன்னே பூதாகரமாக கிளம்பும் என கவலைகொண்டுள்ளனர்.

“உயிர்வாழத் தேவையான உணவினை எப்படி பெற்றுக்கொள்வது என நான் கவலைப்படுகிறேன். மேலும் இந் நிலைமை விரைவில் தீர்க்கப்பட்டு முன்புபோல் மீண்டும் நான் வேலைக்கு செல்லக் கூடிய நிலைமை உருவாகும் என நம்புகிறேன்”என  மாலா தெரிவித்தார். “அனைத்து விடயங்களும் முன்பு போலவே வழமைக்கு திரும்பிட நான் வேண்டுகிறேன்.” என்றார்.

* – அடையாளத்தைப் பாதுகாக்க பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

Related Articles

Exit mobile version