இலங்கையில் டெங்குத் தொற்றை எதிர்த்துப் போராட மூன்று புதிய வழிமுறைகள்

“2016 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பானது இலங்கை மலேரியாவை முற்றிலுமாக இல்லாதொழித்து விட்டதாக அறிவித்த போதிலும், 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் 103,924 தொற்றுக்கு உள்ளானவர்கள் என சந்தேகத்திற்கிடமான நோயாளர்கள் பற்றிய தகவல்கள் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவில் பதிவாகியுள்ளன” 

2016 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பானது இலங்கை மலேரியாவை முற்றிலுமாக இல்லாதொழித்து விட்டதாக அறிவித்த போதிலும், இன்னும் நுளம்புகளால் பரவும் மற்றொரு வைரஸ் நோயான டெங்குவை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயத்திலேயே உள்ளது.

டெங்கு நோயை கட்டுப்படுத்தவும் இல்லாதொழிக்கவும் பல ஆண்டுகளாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும், 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் 103,924 தொற்றுக்கு உள்ளானவர்கள் என சந்தேகத்திற்கிடமான நோயாளர்கள் பற்றிய தகவல்கள் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவில் பதிவாகியுள்ளன – இதில் அதிக எண்ணிக்கையானவை கொழும்பு மாவட்டத்திலேயே  பதிவாகியுள்ளன.

2019 ஆம் ஆண்டு இலங்கையில் டெங்கு நோயாளிகளின் அதிகரிப்பு விகிதத்தை  காட்டும் வரைபடம்.
வரைபட உதவி : இலங்கை சுகாதார சேவை

ஏடிசு வகையைச் சேர்ந்த ஏடிசு எகிப்தி என்ற நுளம்பின் பெண் நுளம்புகள் மூலம் இவ் வைரஸ் பரவுகின்றது. பொதுவாக, டெங்கு நோய்த் தொற்றின் அறிகுறிகள், நோய்த் தொற்றுக்குள்ளாகிய பின் நான்கு முதல் ஆறு நாட்களுக்குள் வெளிக்காட்டத் தொடங்கும்; அதிக காய்ச்சல், தலைவலி, குமட்டல், தசை மற்றும் மூட்டு வலிகள், லேசான இரத்தப்போக்கு மற்றும் தோல் சினைப்பு (சிவப்பு நிறப்புள்ளிகள்) ஆகியவை இவற்றில் அடங்கும். பெரும்பாலானோர் இரண்டு முதல் ஏழு நாட்களுக்குள் குணமடைகையில், சிலருக்கு இந் நோய்த்தொற்று தீவிரமடைந்த நிலையில் உயிருக்கு தீங்கு விளைவிக்கவும் கூடும். டெங்கு குருதிப்போக்கு காய்ச்சல் அல்லது டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி போன்ற தீவிர நோய்நிலைகள் உண்டாகும், இதில் ஆபத்தான உயர் குருதிப்போக்கு மற்றும் தாழ் இரத்த அழுத்தம் ஆகியனவும் அடங்கும்.

டெங்கு நோய்க்கான தடுப்பூசிகள் காணப்பட்டாலும், அவை இதற்கு முன்னர் டெங்குவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இந் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் தடுப்பு முறைகள் பொதுவாக இந் நோயைப் பரப்பும் ஏடிசு எகிப்தி நுளம்புகளை அழிப்பதிலேயே அதிகளவு கவனம் செலுத்துகின்றன.

சிக்குன்குனியா, ஜிகா காய்ச்சல், மாயாரோ, மஞ்சள் காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற நோய்களைப் பரப்பும் முக்கிய நோய்க்காவியான ஏடிசு எகிப்தி நுளம்பு.
பட உதவி: விக்கிமீடியா கொம்மன்ஸ்

இலங்கையில், டெங்கு நோயின் பரவலைக் கட்டுப்படுத்த, பல ஆண்டு காலமாக அறிவூட்டல் மற்றும் விழிப்புணர்வு திட்டங்களை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது, ஆனால் இவ்வாறான செயற்திட்டங்களை மேற்கொள்வதென்பது இலகுவான விடயமல்ல.

தற்போது டெங்கு நோயைக் கட்டுப்படுத்தக் கூடிய புதிய வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இப் புதிய மூன்று வழிமுறைகளும் இந் நோய்க்கு எதிரான போராட்டத்தில் பாரியதொரு புரட்சியை ஏற்படுத்தக்கூடியவை என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன் நாம் உயிரியல் பூச்சிக்கொல்லிகளைப் (bioinsecticides) பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.

உயிரியல் பூச்சிக்கொல்லிகள்

பொதுவாக நுளம்புகளை அழிக்கவும், அதனால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தி எதிர்த்துப் போராடவும் இரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது வழமையாகும். ஆயினும், இவை பெரும்பாலும் குறுகிய கால தீர்வுகளேயாகும். மேலும் இவற்றை பயன்படுத்தும் போது பிற உயிரினங்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் கவனமாக பயன்படுத்த வேண்டும்.

உயிரியல் பூச்சிக்கொல்லிகள் என்பது உயிரியல் கட்டுப்பாடுகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் கலவையாகும். உயிரியல் பூச்சிக்கொல்லிகளுக்கு உதாரணமாக பேசிலஸ் துரிங்ஜென்சிஸ் இஸ்ரேலென்சிஸ் (Bacillus thuringiensis israelensis – BTI) ஐ குறிப்பிட முடியும். இது இயற்கையாகவே மண்ணில் தோன்றும் ஒருவகையான பாக்டீரியாவாகும். இது தண்ணீரில் இருக்கும் நுளம்புகளின் குடம்பிகளை திறம்பட அழிக்கும் ஆற்றல் மிக்கது.

பேசிலஸ் துரிங்ஜென்சிஸில் (Bacillus thuringiensis) பல இனப்பிரிவுகள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் தனித்துவமான நச்சித்தன்மை கொண்டவையாகும். மேலும் பி.டி.ஐ குறிப்பாக நுளம்புகளை அழிக்கவும் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இவை சிறிய, மெதுவாக கரையக்கூடிய கட்டிகளாக கிடைக்கின்றன. அவை மொஸ்கிட்டோ டங்க்ஸ்’ (Mosquito Dunks) என அழைக்கப்படுகின்றன. இவை நீரின் மேற்பரப்பில் மிதக்கக்கூடியவை மேலும் ஆழமான நீர்நிலைகளை சுத்திகரிக்க பயன்படுத்தப்படுகின்றன. பைரிபிராக்ஸிஃபென் (pyriproxyfen) மற்றும் மெத்தோபிரீன் (methoprene) போன்ற பிற பூச்சிக்கொல்லிகள் இளம் ஹார்மோன் இனச்சினைகளாக செயல்படுகின்றன, அவை நுளம்புக் குடம்பிகள் நுளம்புகளாக முதிர்ச்சியடைவதை தடுக்கின்றன.

அண்மையில், ஆராய்ச்சியாளர்கள் இவ் உயிரியல் பூச்சிக்கொல்லிகளை குடம்பிகளின் வாழ்விடங்களுக்கு பரம்பலடையச் செய்ய நுளம்புகளையே பயன்படுத்தினர். பெண் ஏடிசு எகிப்தி நுளம்புகள் ஒரு நபரைக் கடித்து குருதியை குடித்தபின், அவை ஈரலிப்பான மற்றும் இருண்ட பகுதிகளில் தங்குவதை அவர்கள் அவதானித்தனர். அவற்றின் இந் நடத்தையைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் இருண்ட, ஈரமான பகுதிகளில் குடம்பிகளை அழிக்கக்கூடிய உயிரியல் பூச்சிக்கொல்லிகளை தூவினார்கள். அதன்பின் இப் பகுதிகளில் நுளம்புகள் வந்து தங்கும்போது, அவற்றின் கால்களில் இவ் உயிரியல் பூச்சிக்கொல்லிகள் ஒட்டிக் கொள்கின்றன, பின்னர் அந் நுளம்புகள் முட்டையிடும் நீர் நிலைகளில் இவை பரம்பலடைகின்றன. இவ் வழிமுறையினால் நுளம்புகளின் குடம்பிகளை அழிக்கவும் முதிர்ந்த நுளம்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் இவை பயன்படுகின்றன.

இலங்கையில் டெங்குத் தொற்றை கட்டுப்படுத்த கியூப நிபுணர்களின் பரிந்துரையைத் தொடர்ந்து இலங்கை 2010 ஆம் ஆண்டு முதன்முதலில் பி.டி.ஐயைப் பயன்படுத்தியது. கியூபாவின் Labiofam Pharmaceutical Biological Laboratories Enterprise என்ற நிறுவனம், கண்டி நகரைச் சுற்றிலும் பயன்படுத்த 30,000 லிட்டர் உயிரியல் பூச்சிக்கொல்லிகளை இலங்கைக்கு விற்பனை செய்தது. 

பி.டி.ஐ இன்னும் இலங்கையில் பயன்படுத்தப்பட்டாலும், மிகவும் குறைந்த அளவிலேயே அது பயன்படுத்தப்படுகிறது. 2018-ஆம் ஆண்டு கொழும்புக்குற்பட்ட பிரதேசமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் படி, உயிரியல் பூச்சிக்கொல்லிகள் அப் பிரதேசத்தின் நுளம்புகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துள்ளதை அவதானிக்க முடிந்தது.  

இருப்பினும், 8 வாரங்களுக்குப் பிறகு, மீண்டும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது அந்த நுளம்புகளின் தொகை இயல்பு நிலைக்கு திரும்பியிருந்ததை அவதானிக்க முடிந்தது; ஏனைய பூச்சிக்கொல்லிகளைப் போலவே, பி.டி.ஐ-இன் பின்விளைவுகளும் அதன் தாக்கங்களும் குறைவாகவே காணப்பட்டன. பி.டி.ஐ “பிற கட்டுப்பாட்டு முறைகளுடன் இணைந்த துணைக் கட்டுப்பாட்டு காரணியாகவே செயற்பட முடியும்”  என்பதே இவ் ஆய்வுமுடிவாகும்.

டி.டி.ரி (DDT) போன்ற வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி புகையூட்டுதல் இலங்கையில் பரவலாக மேற்கொள்ளப்படுமொரு நடைமுறையாகும், இருப்பினும், இது மனிதர்களுக்கும் பிற விலங்குகளுக்கும் தீங்குவிளைவிக்கக் கூடியது, மேலும் இது நுளம்புகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான குறுகிய கால தீர்வேயாகும்.
பட உதவி: CNN

 ட்ரோன் மற்றும் இயந்திர தொழில்நுட்பம்

ட்ரோன் மற்றும் இயந்திரங்களின் தொழில்நுட்பத்துடன் பி.டி.ஐ (BTI) போன்ற உயிரியல் பூச்சிக்கொல்லிகளை இணைத்து பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் திட்டமொன்றில் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அடையாளம் காண ட்ரோன் கருவிகள் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டன. ட்ரோன் கருவிகளை பயன்படுத்துவது செலவு குறைந்ததாகும் மற்றும் கூரை குழிகள், மேல்நிலை நீர் தொட்டிகள் மற்றும் இலகுவில் அணுக முடியாத உயர் கூரைகள் போன்றவற்றை அடைய இவை உபயோகமாக உள்ளன.

நீர் தேங்கிநிற்கக் கூடிய இடங்களை, தேங்கி நிற்கும் நீரில் செழித்து வளரும் லைச்சன்கள் போன்றவற்றின் கடும் நிறங்களால் இலகுவாக அடையாளங்கண்டு தொடர்ந்தும் அவற்றை கண்காணிக்கலாம். 

இதுபோன்ற நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் அடையாளங் காணப்படுவது பொது சுகாதார ஆய்வாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இவ்வாறு சரியாக அடையாளங் காணப்படும் இடங்களில் நுளம்புகளுக்கும் அவற்றின் குடம்பிகளுக்கும் எதிரான அவற்றை அழிக்கக் கூடிய நச்சுகளை சுரக்கும் வித்திகளுடனான பி.டி.ஐ  நுண்ணுயிரிகளை பரவலடையச் செய்வது அவர்களுக்கு இலகுவாக இருக்கும். 

நுளம்புகளின் முட்டைகள் மற்றும் குடம்பிகள் தேங்கி நிற்கும் நீரில் செழித்து வளர்கின்றன. அத்தகைய இடங்களைக் கண்டுபிடிக்க ட்ரோன்களைப் பயன்படுத்துவதின் மூலம் அவ்விடங்களில் பி.டி.ஐ  போன்ற உயிரியல் பூச்சிக்கொல்லிகளை மிகவும் திறம்பட பயன்படுத்த இடமளிக்கும். பட உதவி: Forbes Advocate

வோல்பாசியா நுண்ணுயிரி

இலங்கையில் உள்ள உலக நுளம்புகள் திட்டம் (The World Mosquito Program), இலங்கையில் டெங்கு பரவுவதைத் தடுக்க வோல்பாசியா பாக்டீரியா என்ற மற்றொரு நுண்ணுயிரியை பயன்படுத்த முதற்கட்ட திட்டங்களைத் ஆரம்பித்துள்ளது.

இந்த முறையானது முதன்முதலாக ஆஸ்திரேலியாவில் செயல்படுத்தப்பட்டது. அவ்வாறு செயற்படுத்தப்பட்ட பின்னர் எட்டு ஆண்டுகளில் அங்கு நுளம்புகளால் பரப்பப்படும் எந்தவித நோய்த்தொற்றும் பதிவு செய்யப்படவில்லை. பின்னர் இந்தியா உட்பட 12 நாடுகளில் இத் திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டது.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் இம் முயற்சிக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் ஆதரவு வழங்குகின்றது. இத் திட்டம் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், எதிர்காலத்தில் நுளம்புகளால் பரவும் நோய்களைத் தடுப்பதற்கான செயற்திட்டங்களை குறைந்த விலையில் மற்றும் தன்னிறைவு முறையில் பாரியளவில் செயற்படுத்த இதுவொரு முன்மாதிரியாக கொள்ளப்படும்.

ஏடிசு எகிப்தி நுளம்புகளுக்கு வோல்பாசியா பாக்டீரியாவை தொற்றடையச் செய்வதன் மூலம் இம்முறைமை செயற்படுத்தப்படும். ஏடிசு எகிப்தி நுளம்புகளுக்குள் நுழைந்துள்ள  வோல்பாச்சியா நுண்ணுயிரியானது அந் நுளம்புகள் தம்முள் காவும் ஏனைய வைரஸ்களான டெங்கு, ஜிகா, சிக்குன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சல் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. இது நுளம்புகளுக்குள் காணப்படும் ஏனைய வைரஸ்கள் இனப்பெருக்கம் செய்வதை கடினமாக்குகிறது, ஆகையால் நுளம்புகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வைரஸ்களை பரவுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவடைகின்றது. 

வோல்பாசியா நுண்ணுயிரியால் பாதிக்கப்பட்ட நுளம்புகள் வெளியே திறந்து விடப்படுகின்றன, அவை ஏனைய நுளம்புகளிடையே வோல்பாசியா நுண்ணுயிரியைப் பரப்பி, டெங்கு தொற்று வைரஸ் இடமிருந்து அவற்றை பாதுகாக்கின்றன. மேலும் வோல்பாசியா நுண்ணுயிரி ஏனைய மனித, விலங்கு உயிரினங்களுக்கும் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது என இடர் மதிப்பீடுகள் கண்டறிந்துள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் “தி நியூஸ் மினிட்டில் (The News Minute) உரையாற்றிய சுகாதார அமைச்சின் துணை இயக்குநர் ஜெனரல் பபா பலிஹவதன, கொழும்பில் உள்ள 25 உள்ளூர் நகரங்களில் வோல்பாசியாவால் தொற்றடையச் செய்யப்பட்ட நுளம்புகள் 2020 பிப்ரவரி முதல் வெளியே திறந்து விடப்படும் என்று அறிவித்தார். அனைத்து வீடுகளுக்கு நுளம்பு முட்டைகள் மற்றும் உணவு காப்ஸ்யூல் ஒன்று வழங்கப்படும், அவை இரண்டு வாரங்களுக்கு தண்ணீரில் இடப்பட்டு மூடிவைக்கப்பட வேண்டும், அதன் பிறகு முதிர்ச்சியடைந்த கொசுக்கள் பாக்டீரியாவை பரப்ப சுற்றுச்சூழலுக்கு விடுவிக்கப்படும்.

நுளம்புகளுக்குள் நோய்த் தொற்றலைக் கட்டுப்படுத்த வோல்பாசியா நுண்ணுயிரி எவ்வாறு பயன்படுத்தப்படும். படஉதவி: உலக நுளம்புகள் செயற்திட்டம்

மரபணு மாற்றம்

நுளம்புகள் நோய்களை பரப்புவதற்கான வாய்ப்புகளைக் குறைப்பது குறித்தும் அவற்றின்  இனப்பெருக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்கான மரபணு மாற்றங்களுக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் மேலதிக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியலாளர் ஒமர் அக்பரி மற்றும் அவருடன் பணிபுரியும் சக ஊழியர்களும் இணைந்து நுளம்புகளின் மரபணுவில் இலகுவாக செலுத்திட எதுவாக மனித-டெங்கு நோயெதிர்ப்பு பிறபொருளெதிரியின் (Antibody) மரபணுக் கட்டமைப்பை எளிமைப்படுத்தி மீண்டும் அதனை வடிவமைத்தனர். 

பின்னர் அவர்கள் அவ்வாறு எளிமைப்படுத்தப்பட்ட பிறபொருளெதிரி மரபணுவை டெங்கு நோயைப் பரப்பும் ஏடிசு எகிப்தி என்ற நுளம்புகளின் கரு முட்டைகளுக்குள் செலுத்தினர். இதன் விளைவாக இந் நுளம்புகள் புதிய மரபணுவின் இரு பிரதிகளைக் கொண்ட புதிய சந்ததிகளை உருவாக்குகின்றன. இது குருதியானது அவற்றின் சமிபாட்டுத் தொகுதியில் நுழையும் போது மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு வடிவமைக்கப்பட்ட நுளம்புகள் டெங்குத் வைரஸ் இனத்தில் காணப்படும் நான்குவகையான குருதிப்பாய வகைகளில்  ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டவரின்  குருதியைக் குடித்தபோது, அவற்றின் உமிழ்நீரில் டெங்கு வைரஸ் தொற்றுக்கான எதுவும் காணப்படவில்லை.

ஆய்வகத்தில், மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட இந் நுளம்புகளால் இணைகூடி ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்க முடிந்தது. அவை சாதாரண நுளம்புகளை விட சற்று மெதுவாகவே வளர்ச்சியடைகின்றன. மேலும் பெண் நுளம்புகளுக்கு சற்று குறுகிய ஆயுட்காலமே உள்ளது. இருப்பினும், இந் நுளம்புகளை ஏனைய மரபணுமாற்றப்படாத நுளம்புகளுடன் ஒப்பிடுவது எவ்வளவு பொருத்தமானது என்பதை இவ் ஆரம்பக்கட்ட சோதனைகளில் இருந்து அறிந்து கொள்வது இலகுவான விடயமல்ல.

நுளம்புகளின் எண்ணிக்கையை மெதுவாகக் குறைக்கும் நோக்கத்துடன், அவற்றை மலட்டுத்தன்மை மிக்கவையாக மாற்றுவதற்கு அவற்றினை மரபணு ரீதியாக  மாற்றியமைக்க மேலதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நுளம்புகளுக்கு மலட்டுத்தன்மையை உருவாக்க அல்லது அதனை பின்னர் உருவாகும் சந்ததியினருக்கு அம மலட்டு தன்மையை கட்டத்தை பெண் நுளம்புகளுக்கு மரபணுக்கள் செலுத்தப்பட்டு அவை மாற்றியமைக்கப்படுகின்றன.

இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட நுளம்புகள் இனத்தின் மாதிரிகள் சில இலங்கைக்கு ‘சோதனை அடிப்படையில்’ கொண்டு வரப்பட்டு, தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இம்முறைமை இன்னும் வளர்ச்சிநிலை கட்டத்தில் இருப்பதனால், இன்னும் பல தடைகளை இது எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

Related Articles

Exit mobile version