இலங்கையில், நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிக்கும் துறைகளுள், சுற்றுலாத் துறையானது பல்வேறு பொருளாதார நோக்கங்களுக்கு உதவிவருகிறது. நாட்டிற்கான மூன்றாவது மிகப்பெரிய அந்நிய செலாவணி வருவாய் என்பதோடு மட்டுமல்லாமல், ஏராளமான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளும் சுற்றுலாத்துறையினால் உருவாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் நாட்டிற்குள் அந்நிய நேரடி முதலீடுகள் வரவும் உதவுகின்றன. உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய காலத்தில், அதாவது 2009 ஆம் ஆண்டின் நடுப்படுதியிலிருந்து இலங்கையின் சுற்றுலாத் துறை நிலையான முன்னேற்றத்தின் தெளிவான அறிகுறிகளைக் காட்டியதுடன், 2018 ஆம் ஆண்டில் 4.38 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற உயர் சுற்றுலா வருவாயையும் முதன்முறையாக அது பதிவுசெய்தது. இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக ஏப்ரல் 2019ல் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் சுற்றுலா தொழில்துறைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதன் வருவாயை 2019 ஆம் ஆண்டில் 3.61 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மட்டுப்படுத்தியது. அதிலிருந்து மீளும் வலுவான திட்டத்தை அமைத்ததோடு சுற்றுலாத்துறை விரைவாக மீட்க ஒரு உறுதியான பாதையில் அது செயற்பட ஆரம்பித்தது.
ஆனால் அந்த சமயத்தில் தான் எதிர்பாராதவிதமா COVID-19 தொற்றுநோய் புதிய சவாலாக மாறி இலங்கைக்கு மட்டுமல்ல முழு உலக சுற்றுலாத் துறைக்கும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் இந்த சவாலில் இருந்து மீளும் திட்டத்தை இலங்கை விரைந்து கையிலெடுக்கவேண்டும் இலங்கையின் தேசிய பொருளாதாரத்திற்கு இந்தத் துறையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தேவையான அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் நடைமுறைகளும் சிறப்பாக இருப்பதை உறுதி செய்வதன் மூலம் சுற்றுலா நடவடிக்கைகளினை விரைவாக மீண்டும் தொடங்குவது மிக முக்கியமாகிறது.
இந் நிலையில் எதிர்வரும் மாதம் இலங்கைக்கு வரவிருக்கும் வெளிநாட்டு விருந்தினர்கள் தொடர்பில் பின்பற்றப்படவேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்த வழிகாட்டி ஒன்றை இலங்கை சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் இதோ:
- பயணத்திற்கான முன்பதிவுகள் ஆன்லைனில் அல்லது இலங்கை சுற்றுலத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) பதிவு செய்யப்பட்ட பயண நிறுவனம் வழியாக செய்யப்பட வேண்டும்.
- அனைத்து சுற்றுலாப் பயணிகளும் இலங்கையில் குறைந்தபட்சம் ஐந்து (05) இரவுகள் தங்கியிருப்பது கட்டாயமாகும்.
- SLTDA பதிவுசெய்யப்பட்ட மற்றும் ‘பாதுகாப்பானது’ என சான்றளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே தங்குமிடம் பதிவுசெய்யப்படவேண்டும். பயணம் வந்தடைந்த முதல் இரவன்று on arrival PCR முடிவுகள் வரும் வரை வருகை விமான நிலையத்திற்கு அருகிலேயே ஒரு விடுதியில் தங்குவதற்கு முன்பதிவு செய்யப்பட வேண்டும்.
- விடுதி சேவை வழங்குநர்கள், பயண முகவர்கள் மற்றும் / அல்லது பயண செயற்பாட்டாளர்கள், சுற்றுலா பயணிகளின் தங்குமிடம் மற்றும் சுற்றுப்பயண விவரங்கள் குறித்து Data Login மூலம் SLTDA உடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
மேலதிக விபரங்களை விரிவாகவும் தெளிவாகவும் இங்கே அறிந்திட முடியும்.
https://www.srilanka.travel/pdf/SL_Tourism_Operational_Guidelines.pdf
இலங்கையிலிருந்து பயணிப்போருக்கு காத்திருக்கும் சவால்கள்
இதேவேளை இலங்கை சுற்றுலாத்துறையானது, இலங்கையிலிருந்து திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும், வெளியூர்களுக்கு பயணிக்கும் உள்ளூர் பிரஜைகளுக்கும், வெளிநாடுகளில் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தாத பயண வசதிகளை உருவாக்கித்தரும் நோக்கில் வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து செயற்பட்டுவருகிறது.
“நாங்கள் இங்கிலாந்தில் உள்ள எங்கள் தூதரகத்துடனும் மற்றும் தொடர்புடைய அரசாங்கங்களுடன் பேசும் பிற தூதரகங்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம், மேலும் நாங்கள் இங்கிலாந்து தூதுவர் சாரா ஹல்டனுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசிவருகிறோம். கொழும்பு விமான நிலையம் திறக்கப்படும் திகதி இன்னமும் அறிவிக்கப்டாமையினால், இது பாதுகாப்பான பயணப் பட்டியல்களைப் பெறுவதற்கு ஒரு தடையாக இருக்கக்கூடும்” என்று இலங்கை சுற்றுலாத்துறையின் தலைவர் கிமர்லி பெர்னாண்டோ கூறினார்.
கோவிட் -19 பரவல் அற்ற பாதுகாப்பான சூழலில் இலங்கையில் சர்வதேச சுற்றுலாப்பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்த விரிவான நெறிமுறைகளை பின்பற்றுவது தொடர்பில் இலங்கை சுற்றுலாத்துறையானது, இலங்கை சுகாதார அமைச்சகத்துடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. “இது அனைத்தையும் உள்ளடக்கிய நெறிமுறையாக இருக்கும், இது தங்கும் விடுதிகளுடன் தொடர்புடைய பிரிவை அங்கீகரிக்கும் திட்டமாக இருக்காது” என்று கிமர்லி அவர்கள் கூறினார். இதுகுறித்த கலந்துரையாடலின் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டதாகவும் அவர் கூறினார். இந் நெறிமுறையானது நாட்டிற்குள் உள்வாங்கப்படும் சர்வதேச விருந்தினர்கள் தொடர்பிலான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருப்பதனால், இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னர் மற்ற நாடுகளின் அரசாங்கங்களுக்கு அவர்களது நாட்டின் பிரஜைகளின் பாதுகாப்பு குறித்து மேலும் ஆறுதலளிக்கும் என நம்பலாம்.
சர்வதேச விருந்தினர்களை உள்ளடக்கிய, COVID-19 தொடர்பான அபாயங்களுக்கு காப்பீட்டுக் கொள்கைகளை வழங்கவும் இலங்கை சுற்றுலாத் துறையானது விவாதித்து வருவதாகவும் அவர் கூறினார்.