விஷமாகிய காய்ச்சல் மருந்து! 66 குழந்தைகளின் மரணங்களுக்கு இந்தியா பொறுப்பேற்குமா?

அண்மையில் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான காம்பியாவில் 66 குழந்தைகள் இறந்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன், நான்கு வகையான இருமல்  (சிரப்) மருந்துகளே இம் மரணங்களுக்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து உலகளாவிய எச்சரிக்கையினை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டது. குறித்த வகை மருந்துகளை இந்திய நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது, எனினும் அம்மருந்துகள் குறித்தும் அதன் பாதுகாப்புத் தன்மை குறித்தும் உத்தரவாதங்களை அளிப்பதற்கு அந்த நிறுவனம் தவறிவிட்டதையடுத்து, இந்நிறுவனத்திற்கெதிரான விமர்சனங்கள் உலகம் முழுவதும் தற்போது வலுத்து வருகின்றன.

உலகின் முக்கியமான, மிகப்பெரிய மருந்து உற்பத்தி நாடாக இந்தியா காணப்படும் அதேவேளை, தற்போதைய மோடி தலைமையிலான அரசாங்கமானது இந்தியாவை “உலகின் மருந்தகம்” என அறிமுகப்படுத்தியதோடு, மருந்து உற்பத்தித் துறையை மேம்படுத்த சில முயற்சிகளை மேற்கொள்ளவும் செய்தது. என்றபோதிலும் காம்பியா சம்பவமானது இந்தியாவின் மருத்துவத் துறையினையும், அதன் நம்பகத் தன்மையையும் அசைத்துப் பார்த்துவிட்டது என்றே கூற முடியும்.

காம்பியாவில் கடந்த ஜூலை மாதமளவில், ஐந்து வயதுக்குற்பட்ட குழந்தைகளிடையே கடுமையான சிறுநீரக பாதிப்புகள் ஏற்பட்டது என்பதை அந்நாட்டு மருத்துவத்துறை கண்டறிந்தது.  அதனைத் தொடர்ந்து காம்பியாவில் நிலைமை தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் நேரடியாக தலையிடத் தொடங்கியது. அதேசமயம் காம்பிய அரசானது நாட்டில் பெரசிட்டமோல் பாவனையினை முற்றாக நிறுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. அதற்கு பதிலீடாக பரசிட்டமோல் மாத்திரைகளை பயன்படுத்துமாறு அறிவுரைகளை வழங்கியது. இந்த மருந்துத் தடைக்கு பின்னர் காம்பியாவில் இறப்பு எண்ணிக்கை குறைவடைந்தது. எனினும் கடந்த இரு வாரங்களில் மேலும் இரு குழந்தைகள் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த இந்திய தயாரிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் சர்வதேச ரீதியில் எச்சரிக்கை விடுத்திருந்தது – dailythepatriot.com 

காம்பியாவைப் பொறுத்தவரையிலும் மருந்துகளின் பாதுகாப்புத் தன்மை குறித்து பகுப்பாய்வு மூலம் சோதனை செய்யும் ஆய்வக வசதிகள் இல்லை என அந் நாட்டின் சுகாதார சேவைகள் இயக்குநர் முஸ்தபா பைட் தெரிவித்துள்ளார். இந்த நிலையின் காரணமாக விசாரணைகளுக்கும், ஆய்வுகளுக்கும் அவர்களுக்கு வெளித் தரப்பினரின் உதவிகள் அவசியமானது. அதேபோன்று குழந்தைகளின் மரணம் என்ற மோசமான சம்பவத்தின் பின்னர் தரக்கட்டுப்பாடு மற்றும் ஆய்வகங்களுக்கு நிதி உதவி பெற்றுக் கொள்வது தொடர்பில், உலக வங்கியுடன் அந்நாடு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளத் தொடங்கியது என்பது சிறப்பான ஒன்றாக நோக்கப்படுகின்றது. காம்பியா சம்பவத்தை தொடர்ந்து குறித்த இந்திய தயாரிப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் சர்வதேச ரீதியில் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

அசுத்த கூறுகள் அடங்கிய மருந்துகள்

கடந்த செப்டம்பரில் காம்பியாவில் பதிவான நான்கு மருந்து தயாரிப்புகளை (சிரப்) உலக சுகாதார நிறுவனம் அடையாளப்படுத்தியதோடு, அவைகளின் தர நிலை, விபரக் குறிப்புகள் போன்றன முழுமைப்பெற்றதாக காணப்படவில்லை எனவும் அடையாளம் காணப்பட்டதால், குறித்த மருந்துகள் குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup மற்றும் Magrip N Cold Syrup என்ற மருந்துகளே அவை எனவும் சுகாதார நிறுவனம் கூறியதோடு, அவற்றில் ஏற்றுக் கொள்ள முடியாத அளவில் மாசுத்தன்மை டைஎதிலீன் கிளைகோல் (diethylene glycol) மற்றும் எத்திலீன் கிளைகோல் (Ethylene glycol) ஆகியன காணப்படுவதையும் பகுப்பாய்வில் கண்டறிந்து உறுதிசெய்யப்பட்டது.

மேற்குறிப்பிட்ட நான்கு வகையான மருந்துகளையும் (சிரப்களையும்) “தர விவரக்குறிப்புகளை பூர்த்தி செய்யாத தயாரிப்பு. (Off-spec) என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டு அடையாளப்படுத்திய போதிலும், இம் மருந்து உற்பத்தியில் சம்பந்தப்பட்ட இந்திய நிறுவனமான மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் (Maiden Pharmaceuticals) அதன் தயாரிப்புகளின் பாதுகாப்பு, தரம் போன்றன குறித்து உத்தரவாதம் அளிக்கவில்லை. முக்கியமாக காம்பியா மரணங்களுடன் தொடர்புடையதாக இதுவரையில் சந்தேகத்திற்கிடமான இந்த இந்திய  மருந்துகள் முறைசாரா சந்தை உட்பட வேறு காரணிகள் ஊடாகவும் ஏனைய நாடுகளுக்கும், பிராந்தியங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இதன் காரணமாக உலகளாவிய அளவில் எச்சரிக்கை அவசியம் என்பதை இது மிகச் சாதாரணமாகவே வலுப்படுத்துகின்றது.

எத்திலீன் கிளைகோல் பற்றிய குறிப்புகள்: பட உதவி/www.firstpost.com 

டைஎதிலீன் கிளைகோல் (Diethylene Glycol) மற்றும் எத்திலீன் கிளைகோல் (Ethylene glycol) ஆகியவை நச்சுத்தன்மை மிக்கவை. ஏன் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் காணப்படுகின்றது. அப்படியானவை விஷமாக மாற்றமடையும் போது வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிப்பதில் சிரமம், தலைவலி மற்றும் மன நிலையில் மாற்றங்கள் போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதோடு கடுமையான சிறுநீரக பிரச்சினைகளும் கூட ஏற்படலாம். தேர்ச்சிமிக்க பொறுப்புள்ள துறைசார் அதிகாரிகளினால் முறையாக பகுப்பாய்வு செய்யப்படும் வரையிலும், மேற்குறித்த அனைத்து மருந்துகளும் பயன்பாட்டுக்கு பாதுகாப்பற்றவை என்று சந்தேகிக்கப்பட வேண்டியது என்பது மிக அவசியம், என்பதை மிக வலுவாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டுகின்றது. குறிப்பாக  டைஎதிலீன் கிளைகோல், எத்திலீன் கிளைகோல் ஆகியன குழந்தைகளுக்கு கடுமையான தாக்கத்தை அன்றேல் மரணத்தையும் ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

இந்த மருந்துகள் முறைசார சந்தை மூலமாக காம்பியாவில் புழக்கத்தில் விடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். எனவே அது சந்தைக்கு அல்லது பயன்பாட்டுக்கு வரும் வழிகளை கண்டறிந்து அவற்றை அகற்றவும், நிறுத்தவும் வழிமுறைகளை மேற்கொள்ளல்  வேண்டும் என்பது அவசியம். அதே சமயம் இவை ஏனைய நாடுகளுக்கு சென்றடையும் விநியோக முறைகளையும், சந்தைச் சங்கிலியையும் கண்டறிந்து தேடுமாறும் உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாறான இக்கட்டாக பாதுகாப்பற்ற சூழலில் முறைசாரா அல்லது கட்டுப்பாடற்ற சந்தை நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருவது முக்கியமாகும்.

இந்தியாவின் பதில்

உலக சுகாதார நிறுவனத்தின் தலையீட்டு விளக்கத்தின் பின்னர், இந்தியாவில் மருந்துகளை ஒழுங்கமைக்கும் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் ஹரியானா சுகாதார அமைச்சர் அனில் விஜ் கூறுகையில், “சம்பந்தப்பட்ட மருந்துகளின் மாதிரிகள் கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள, அப் பரிசீலனை முடிவுகளின் பெறுபேறுகளுக்கு அமைவாக இது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். 

Firstpost.com இணையத்தில் வெளியிடப்பட்டிருந் சந்தேகத்திற்குரிய அந்த 4 வகையான சிரப் (Syrup)  மருந்துகள்:பட உதவி www.firstpost.com 

இந்த சந்தேகத்திற்குரிய, பிரச்சினைகளை ஏற்படுத்திய மருந்துகளை (சிரப்களை) ஏற்றுமதி செய்ய மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் (Maiden Pharmaceuticals) அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அவற்றை இந்தியாவில் விளம்பரப்படுத்துவதும், விற்கப்படுவதும் இல்லை. எனவே இம் மருந்துகளால் ஏற்படும் அபாயங்களுக்கு இந்தியா பாதிப்படையாது. காம்பியா விவகாரத்தில் குழந்தைகள் இறப்பிற்கான காரணத்தை உலக சுகாதார நிறுவனம் வழங்கத் தவறிவிட்டதாகவும், காம்பியாவில் விநியோகிக்கப்படும் சிரப்களின் தயாரிப்பு மற்றும் விபரக் குறிப்புகளை இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்புக்கு வழங்கவில்லை எனவும் இந்திய சார்பில் பதில் கூறப்பட்டுள்ளது. என்றாலும் விசாரணைகள் மேற்கொள்ள உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூசாவின் கதை

கடந்த செப்டம்பரில் மரணமடைந்த இருபதே மாதமான மூசாவிற்கு சந்தேகத்திற்குரிய மருந்து (சிரப்) வழங்கப்பட்டது. அவர்களின் குடும்பத்தில் உள்ள அனைவரும் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அவனது உடைமைகள் ஏன் மொம்மைகளைக் கூட அவர்கள் தொடவும் நினைப்பதில்லை காரணம் அவை இதயத்தை இன்னும் இன்னும் ரணமாக்குகின்றது. இன்னுமே முப்பதுகளை கடக்காத மூசாவின் தாய், மருத்துவரின் பரிந்துரைக்கு அமையவே அந்த மருந்தினை மூசாவிற்கு கொடுத்துள்ளார்.

குழந்தைகளின் இறப்புக்கு நீதி கோரும் காம்பியன் பெற்றோர்கள்: புகைப்பட உதவி /BBC.com

“முசாவிற்கு மருந்தை கொடுத்த பின்னர் அவனுக்கு காய்ச்சல் நின்றுவிட்டது, ஆனால் அது வேறு பிரச்சினையை உண்டாக்கியது அவன் சிறுநீர் கழிக்கவில்லை“ என அத்தாய் கூறுகின்றார்.

பிரச்சினை தோன்றியதன் பின்னர் மூசா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றார். குழந்தைக்கு மலேரியா போன்ற பாரதூரமான பிரச்சினை ஏதுமில்லை எனக் கூறப்பட்டு சிகிச்சை முறைகள் தொடரப்பட்டன.

சிகிச்சைகள் பலனளிக்காத சந்தர்ப்பத்தில், இறுதியில் அறுவை சிகிச்சையையும் மருத்துவர்கள் செய்த போதிலும் அவர்களால் மூசாவை காப்பாற்ற முடியவில்லை. குழந்தை மரித்துவிட்டது” என அவர் மேலும் தெரிவித்தார்.

நீதிக்காக போராடும் பெற்றோர்கள்

“அறுபத்தாறு என்பது சாதாரணமானது அல்ல, குழந்தைகள் மரணங்கள் எங்களுக்கு நீதி வேண்டும் காரணம் இதனால் பாதிக்கப்பட்டது ஒன்றுமறியாத பச்சிளம் அப்பாவிக் குழந்தைகள்“ என கண்ணீர் விடுகின்றார் மூசாவின் தாய்.

அவர் மட்டுமல்லாது குழந்தைகளை இழந்த அனைத்து பெற்றோரும், அவர்களுக்கு ஆதரவாய் நிற்போரும் நீதியைக் கோருகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் சிரப் வழங்கப்பட்ட பின்னர் பிரச்சினைகளை சந்தித்து மருத்துவமனைக்கு ஓடியவர்கள். என்ற போதிலும் அப்பாவி குழந்தைகளின் மரணங்களை தடுக்க முடியவில்லை. இதனால் தமக்கான நீதியைக் கோருகின்றனர் பாதிக்கப்பட்ட அப்பாவிகள்.

குழந்தைகளின் இறப்புக்கு நீதி கோரும் காம்பியன் பெற்றோர்கள்: புகைப்பட உதவி /BBC.com

“உலகின் மருந்தகம்“ என பெருமை பறைசாற்றிக் கொள்ளும் இந்தியா இன்று சர்வதேச ஊடகங்களில், உலகமெங்கும் பேசுபொருளாய் மாறி நிற்கின்றது. ஆனால் இந்த விடயத்தில் நேர்மையான வழி உருவாக்கப்பட்டுள்ளதா? காம்பியாவில் குழந்தைகளின் மரணங்களுக்கு இந்தியா பொறுப்பேற்க வேண்டுமா? எவ்வாறாயிலும் தொலைதூர நாட்டில் ஆதரவற்றும், இருதயத்தில் ரணமான வலியுடனும் சில பெற்றோர்கள் காத்திருக்கின்றன.

சிங்கள மொழியில்: மிலான் பெரேரா
தமிழில்: சந்திரன் புவனேஷ்

கட்டுரைக்கான ஆதாரம்:

www.economictimes.com
www.bbc.com
www.who.int
www.firstpost.com
www.adaderana.lk 

 

Related Articles

Exit mobile version