உரிமம் பெற்ற வங்கி அல்லது நிதி நிறுவனம் இல்லாத மூன்றாம் தரப்பு நிறுவனம் மூலம் நீங்கள் எப்போதாவது வெளிநாட்டிலிருந்து பணம் செலுத்தியிருந்தால், அதன் சட்டத்தின் பார்வையில் குற்றமாக அமைய பல வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து அவதானமாயிருங்கள்
வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவது குற்றமல்ல. ஆனால் சட்டரீதியாக அங்கீகாரம் பெற்ற அமைப்புகளைத் தவிர்த்து முறைசாரா உண்டியல் அல்லது ஹவாலா முறையைப் பயன்படுத்துவது என்பது குற்றமாகும். இந்த பரிவர்த்தனைகளில் சட்டவிரோத போதைப்பொருள், ஆயுதப் பரிமாற்றம்,மற்றும் பணமோசடி.ஆகியவை அடங்கும் என்பது நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது.
எனினும் அடிப்படையிலேயே சட்டவிரோதம் என அனைவராலும் அறியப்பட்டாலும், உண்டியல் (ஹவாலா என்று அழைப்பதிலும் பெருமளவு வித்தியாசம் இல்லை) அமைப்புகளைப் பயன்படுத்துவது இலங்கையில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இதனால் இந்த அமைப்பை முற்றிலுமாக ஒழிப்பதென்பது அதிகாரிகளுக்கு எட்டாக்கனியாக உள்ளது. இந்த முறையைப் பயன்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான வெளிநாட்டு நாணயங்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.
குறிப்பாக, இந்த ஆண்டில் உண்டியல் அமைப்பு தான் இழந்திருந்த பழைய புகழை மீண்டும் கண்டடைந்துள்ளது, அதற்கு எதிராக தற்போதைய அரசாங்கம் இதற்கு முதலும் முடிவுமாக ஒரு தீர்வை எட்டும் வேலைகளில் இறங்கியுள்ளது.
அரசின் மீது மக்களுக்கு உள்ள அவநம்பிக்கை
தனது 50களில் இருக்கும் ஒரு தொழிலதிபரான ரிஸ்வான்* Roar மீடியாவிடம், உண்டியல் மற்றும் ஹவாலா அமைப்புகளின் பயன்பாடு கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து அதிகரித்துள்ளதாக கூறினார். “அரசாங்கத்தையும் அது அவர்கள் மீது கொடுக்கும் தேவையற்ற அழுத்தங்களையும் மக்கள் நம்பவில்லை. அதனால்தான் அவர்கள் உநண்டியல்களை பயன்படுத்துகிறார்கள்,” என்றார்.
ரிஸ்வான் தனது தந்தையிடமிருந்து சட்டவிரோதமான அந்நியச் செலாவணி வர்த்தகத்தைப் பற்றி அறிந்து கொண்டார். அவரது தந்தை அதை தனது தாத்தாவிடமிருந்து கற்றுக்கொண்டார், அவரது தாத்தா அவரது பெரிய தாத்தாவிடம் இருந்து கற்றுக்கொண்டார், இது அவர்களிடையே பரம்பரைகளாக கடத்தப்படும் ஒன்றாக மாறியுள்ளது.
உண்டியல்/ஹவாலா முறை நெடுங்காலமாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும், 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, அமெரிக்க டாலருக்கு இணையாக இலங்கை ரூபாயின் படிப்படியான பெறுமதித் தேய்வை ஈடுகட்ட, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இந்த முறையை மீண்டும் அதிகம் பயன்படுத்தத் தொடங்கியதில் இருந்து படிப்படியாக இந்த சேவையில் ஒரு அதிகரிப்பு காணப்பட்டு வருகிறது. எளிமையான மற்றும் திறமையான உண்டியல்/ஹவாலா அமைப்புகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் அதிக கேள்விகளைக் கேட்காத அமைப்பு ஆகும், மேலும் இவை பெரும்பாலும் எவ்வித சிக்கல்களுமின்றி சேவையை வழங்குகின்றன.
“வங்கிகளைக் கையாள்வது என்பதை ஒரு தொந்தரவாகக் காணப்படுவதால், மக்கள் இதனைத் தெரிவு செய்ய விரும்புகிறார்கள்” என்று ரிஸ்வான் கூறினார். “சில டாலர்களை பரிமாற்றுவதற்கு கூட, நீங்கள் நிறைய ஆவணங்களை நிரப்ப வேண்டும். அவர்கள் [வங்கிகள்] வாடிக்கையாளர்களிடம் எப்படி பணம் சம்பாதித்தார்கள் என்பதற்கான சான்றுகள் முதல் பல ஆவணங்களைக் வேண்டுகிறார்கள்; அதனால் மக்கள் அந்தத் தொந்தரவுகளில் இருந்து தங்களிடம் இருந்து தவிர்த்துக் கொள்ள எண்ணுகிறார்கள்.”
உண்டியல் அல்லது ஹவாலா அமைப்பு சட்ட அமைப்புக்கு புறம்பாக இயங்குகிறது மற்றும் உரிமம் பெற்ற வங்கிகள் அல்லது இலங்கை மத்திய வங்கியில் (CBSL) பதிவுசெய்யப்பட்ட பிற நிதி நிறுவனங்களுடன் அவை இயைவதில்லை. பதிலாக, இது ஒரு மிகவும் எளியமையான அமைப்புகளாக செயல்படுகின்றன, உண்மையான பணத்தாள்கள் எதுவுமின்றி சத்தியக் குறிப்புகளைக் கொண்டு பண மாற்றம் அமற்றும் பரிமாற்றம் ஆகியவற்றை முன்னெடுக்கின்றன.
“அவர்கள் வங்கிகளை விட சிறந்த விலையை வழங்குகிறார்கள்” என்று ரிஸ்வான் கூறினார். “அமெரிக்க டாலரொன்றுக்கு ஒரு வங்கி உங்களுக்கு 100 ரூபாய் கொடுத்தால், ஹவாலா உங்களுக்கு 150 ரூபாய் கொடுக்கும்.”இந்த கவர்ச்சிகரமான கட்டணங்கள், வசதி, குறைந்த செலவு, செயன்முறை மற்றும் ஆவணங்களின் குறைவான தேவைப்பாடு போன்ற எல்லாவற்றிற்கும் மேலாக, முறைசாரா உண்டியல்/ஹவாலா முறையை மிகவும் பிரபலமாகுவதற்கு காரணம் அதன் பின்னணியில் இருக்கும் பெயர் தெரியாத தன்மையாகும்.
தடைகளைத் தாண்டிய ஒரு நடைமுறை
ஏப்ரல் 2022 இல், உண்டியல்/ஹவாலா முறைகள் மூலம் செய்யப்படும் அதிகாரப்பூர்வமற்ற பரிமாற்றங்களுக்கான கோரிக்கையை நிறுத்த அனைத்து திறந்த கணக்கு இறக்குமதிகளையும் தடை செய்வதாக CBSL அறிவித்தது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அந்த செய்திக்குறிப்பில், ‘இந்த பரிவர்த்தனைகள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புபடலாம்’ என்றும், தெரிந்தோ தெரியாமலோ இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு பலியாக வேண்டாம் என்றும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டது. வெளிநாட்டில் வசிக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் பணம் அனுப்புவது போன்ற பல முறையான பாவனையாளர்கள் இருந்த போதிலும் மத்திய வங்கி இத்தகைய முடிவுக்கு வந்தது.
செய்திக்குறிப்பில், CBSL ஆளுநர் நந்தலால் வீரசிங்க, நாட்டின் மாதாந்த அந்நியசெலாவனி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் 300 மில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்துள்ளது, இது அதிகாரப்பூர்வமற்ற அமைப்புகளின் மூலம் பணத்தின் கடத்தப்பட்டுள்ளதைக் குறிக்கிறது. இதைத் தவிர்க்க, உண்டியல் சேவைக்கான தேவையைக் குறைக்கும் வகையில் பெற்றோருக்கு சிறிய தொகைகளில் டொலர்களை வழங்குமாறு மத்திய வங்கியால் வங்கிகளிடம் கோரப்பட்டுள்ளதாக வீரசிங்க கூறினார்.
பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல அந்நியச் செலாவணி நிறுவனம் ஒன்றில் CBSL அதிகாரிகள் சோதனை நடத்தியதை அடுத்து அந்நிறுவனம் மீது தடை விதிக்கப்பட்டது. அந்நிறுவனம் அதிக பரிமாற்று விகிதங்களை வழங்குவதாகவும், உரிமம் பெற்ற வங்கி வழங்கும் விகிதத்தை விட அதிக விகிதத்தில் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து வெளிநாட்டு நாணயத்தை வாங்க முயற்சித்ததாகவும், அந்நியச் செலாவணிச் சட்டம் எண் 12 இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பணப் பரிமாற்றாளர்கள் எனும் நிலையை மீறுவதாகவும் CBSL புகார்களைப் பெற்றுள்ளது. 2017 (FEA). ஏப்ரல் மாதத்தில், அந்நிறுவனம் தனது செயல்பாடுகளைத் தொடர்வது இடைநிறுத்தப்பட்டது.
ஆனால் பௌதீக வணிகங்கள் மூடப்படும் அபாயம் உருவான போதிலும் சமூக ஊடகங்கள் வழியிலான இணையவழி வணிகங்கள் செழித்து வளர்கின்றன. சமூக ஊடகங்களில் பல தனிநபர்கள் மற்றும் குழுக்கள் சட்டத்தை மீறி வெளிநாட்டு நாணயங்களை அதிக விலைக்கு விற்கும் வாங்கும் செயல்களை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த வண்ணமே உள்ளனர். உண்டியல்/ஹவாலா தரகர்களை தொடர்பு கொள்ள சமூக ஊடகங்கள் மற்றும் பிற வழிகளைப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளுக்கு பணம் அனுப்ப அல்லது பணத்தைப் பெற பலர் முயல்கிறார்கள்
தவிர்க்கப்பட முடியாத நிழலுலக வங்கி
முறையான பாவனையாளர்களுக்கு உண்டியலை ஒரு கவர்ச்சிகரமான தெரிவாக மாற்றும் அதே அம்சங்கள் தாம் முறைகேடான பயனர்களுக்கும் அதை கவர்ச்சிகரமானதாக அல்லது மிகவும் பிரபலமானதாக ஆக்குகின்றன. உண்டியல்/ஹவாலா என்பது நிழலுலக வங்கிச் சேவையாகும், மேலும் பணமோசடி செய்பவர்கள் மற்றும் பயங்கரவாதிகள் இந்த முறையைப் பயன்படுத்தி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நிதியை இலகுவாக பரிமாற்றுவதற்குப் பயன்படுத்துகின்றனர்.
உதாரணமாக, 2015 ஆம் ஆண்டில், போதைப்பொருள் ஜாம்பவானான மொஹமட் சித்தீக், ஹெராயின் விற்பனை மூலம் சம்பாதித்த ஒரு பில்லியன் ரூபாவை (குறைந்தது) இலங்கையிலிருந்து துபாய்க்கு உண்டியல் முறை மூலம் மாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு வழங்கிய அறிக்கையில், சந்தேக நபர் 2013 இல் 70 மில்லியன் ரூபாவையும், 2014 இல் 100 மில்லியன் ரூபாவையும், 2015 இல் 255 மில்லியனையும் உண்டியல் அமைப்பு மூலம் அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பணமோசடி வழக்கில் ஹவாலா தரகர்கள் மற்றும் சித்தீக்கின் கையாள் கம்பளை விதானகே சமந்த குமார என்ற ‘வெலே சுதா’ உட்பட பல சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த அமைப்பு தொடர்ந்தும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது, ஏனெனில் அவர்களுக்கு வேறு சாத்தியமான மாற்று வழிகள் எதுவும் இல்லை. பலருக்கு, நிழலுலக வங்கி முறையைக் கொண்டு மட்டுமே பணத்தை அனுப்பவும் சேமிக்கவும் முடிகிறது.
“நான் 4 மில்லியனுக்கு மேல் செலவழித்து இங்கு வந்தேன், அதற்காக நான் அதிகம்கடன் பெற வேண்டியிருந்தது” என்று தற்போது ஜப்பானில் இருக்கும் மாணவர் ஜெஹான்* ரோர் மீடியாவிடம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் அதை திரும்ப செலுத்த வேண்டும். என் பெற்றோரால் அதைச் செய்ய முடியாது, அதனால் நான் இங்கு பகுதி நேர வேலை செய்கிறேன். ஆனால் பல கட்டுப்பாடுகள் இருப்பதால் என்னால் நேரடியாக இலங்கைக்கு பணம் அனுப்ப முடியாது. கல்வி விசாவில் உள்ள ஒருவர் வேலை செய்ய மற்றும் பணத்தை திருப்பி அனுப்ப அனுமதிக்கப்படுவதில்லை. அதனால்தான் நான் இந்த முறையைப் பயன்படுத்துகிறேன்.”
மத்திய கிழக்கில்பணிபுரியும் தொழிலாளியான காமினி* Roar இடம் கூறியதாவது, “பாலைவனத்தில் தொழிலாளர் வேலை செய்வதில் எங்களுக்கு பெரிய சம்பளம் கிடைப்பதில்லை. அந்தச் சம்பளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதனால் சிறிய தொகையாக இருந்தாலும், வங்கிவை விட கூடுதலாக ஏதாவது கிடைக்குமென்றால், அது எங்களுக்கு பெரிய விஷயம்.”
உண்டியல்/ஹவாலா அமைப்புகளைப் பயன்படுத்துவதன் எளிமை, அரசாங்கத்தின் பணிகளை கடினமாக்கியுள்ளது, மேலும் இந்த அமைப்பை இயக்குபவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்கள் மீது அழுத்தம் அதிகரித்தாலும், அதிகாரிகள் மிகவும் கடினமான பணியொன்றையே எதிர்கொள்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
* தனியார் அடையாளங்களைப் பாதுகாக்கும் பொருட்டு பெயர்கள் மாற்றப்பட்டன.
ஆங்கிலத்தில்: கிறிஸ் தோமஸ்
தமிழில் மொழிபெயர்ப்பு: நேசிகன் கணேஷன்