பெருவுடையார் கோயில் குடமுழுக்கு : வரலாறும் தொடரும் மர்மங்களும் | ஒரு பார்வை

ராஜராஜேஸ்வரம், பிரகதீஸ்வரம், பெருவுடையார் கோயில் என்றெல்லாம் அறியப்படும் தஞ்சாவூர் பெரிய கோயில் தமிழர் கட்டிடக்கலையின் உச்சமாக வியக்கப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 1010 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த திருக்கோயில் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் மட்டுமன்றி மர்மங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் கூட பிரசித்தி பெற்றதாகவே அறியப்படுகிறது. மாமன்னர் இராஜராஜன் குறித்தான சர்ச்சை மிகுந்த பேச்சுகளால் உண்டான சர்ச்சைகள் எல்லாம் அடங்கிப்போன சில காலத்துக்குள்ளாகவே அவர் கட்டிய பெரிய கோயில் மீதான புதுசர்ச்சை தோற்றம் பெற்றுள்ளது. 

பூரணமாகாத படைப்பு.

தென்னகத்து கட்டிடக்கலையின் மணிமாகுடமாக விளங்கும் பெரிய கோயில் மாமன்னர் ராஜகேசரி முதலாம் இராஜராஜ பெருவேந்தரால் கட்டப்பட்டது. கி.பி 985 முதல் கி.பி 1014 வரை ஆட்சி புரிந்த இவரது ஆட்சிக்காலத்தில் 7 ஆண்டுகள் செலவிடப்பட்டு உண்டாக்கப்பட்டது இந்த கலைப்படைப்பு. ஈழத்தில் ராஜராஜன் கண்ட பிரமாண்ட விகாரைகளும், காஞ்சியில் பல்லவர் கலைக்கோயிலாக விளங்கிய கைலாயநாதர் திருக்கோயிலுமே பெருவுடையார் கோயிலுக்கான தூண்டுதலாக அமைந்தது என்பது பரவலான கருத்து. பெரிய கோயில் கட்டுமானம் என்பது அக்காலத்துக்கு பெரும் பிரம்ம பிரயத்தனமாகவே இருந்தது.

தஞ்சைப் பெருவுடையார் கோயில்
படஉதவி : pasumaikudil.com

அக்காலத்தில் தமிழகம் கண்ட எந்த திருக்கோயிலை விடவும் 40 மடங்கு பெரியதாக பெரியகோவில் கட்டுமானம் அமைந்தது. ஏறக்குறைய 1000 வரைபடங்கள் உருவாக்கப்பட்டு கோயில் கட்டுமான வேலைகள் தொடங்கப்பட்டது. கோயில் கட்டுமானத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வளாகத்தின் 50 கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் எந்த இடத்திலும் கருங்கல் மலைகள் இல்லாத போதும் கூட, திருச்சிக்கு 50 கிலோமீட்டர் தெற்கே இருந்த நார்த்தாமலையில் இருந்து சுமார் 130,000 டன் எடையுள்ள கிரானைட் பாறைகள் வெட்டியெடுக்கப்பட்டு காவிரியின் தென்கரை வரை கொண்டுவரப்பட்டது. சுமார் 216 அடி உயரம் கொண்ட மூலவர் விமானத்தை அமைக்க 1600 தச்சர்களும், சிற்பிகளும் பணியமர்த்தப்பட்டனர். மேலும் இராஷ்டிரக்கூடம், பாண்டிநாடு, இலங்கை, வேங்கிநாடு ஆகிய இடங்களில் இருந்து சிறைப்படுத்தப்பட்ட 100,000 கைதிகளும், தன்னார்வமாக முன்வந்த மக்களுமாக பாரியளவு மனித மூலதனம் கட்டுமானத்துக்காக பயன்படுத்தப்பட்டது. 

தஞ்சைப் பெருவுடையார் கோயில்
படஉதவி : blogspot.com

கோயில் திருப்பணிக்காக நியமனம் செய்யப்பட்ட தலைமை தச்சரான குஞ்சராமல்லன் முதல் சிற்பிகளுக்கு சிகையலங்காரம் செய்த நாவிதன் வரை அனைவருக்கும் நன்றியும், மரியாதையும் செலுத்தும் வண்ணம் அனைவர் பெயரையும் கல்வெட்டில் ‘ராஜராஜ’ என்ற பட்டத்தோடு பொறிக்கச்செய்தார் மாமன்னர். 4 பண்டாரிகள், 170 மாலிகள், 6 கணக்காளர்கள், 12 கீழ்கணக்காளர்கள், 118 ஊர்களில் இருந்து பணிக்கமர்த்தப்பட்ட காவலதிகாரிகள் என பெரும் நிர்வாக குழுக்களின் கீழ் நேர்த்தியான முறையில் வேலைகள் நடந்தபோதும் கூட இன்றளவும் பெரிய கோயில் பூரணமாக கட்டிமுடிக்கப்படவில்லை என்பதே உண்மை. கோயில் உட்பிரகாரத்தில் 108 நாட்டிய கரணங்கள் வடிக்கப்படும் திட்டம் இருந்த போதும் வெறும் 98 கரணங்கள் மட்டுமே செதுக்கி முடிக்கப்பட்டது. 7 ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான மக்களின் உழைப்பில் உண்டான பெருங்கோயிலில் இத்தனை குறிப்பிடத்தக்க வழு நிகழ்ந்திருப்பது கவனக்குறைவாக இருந்திருக்க வாய்ப்பில்லை. இதன் பின்புலத்தில் சுவாரஸ்யமான சில கதைகள் உள்ளன. 

கருவூரார் சாபம்.

தஞ்சாவூர் கோயிலின் உட்பிரகாரம் 19ம் நூற்றாண்டு வரை வெளியுலக பார்வைக்கு கிட்டவில்லை. கருவறைக்கு அருகாமையில் இருந்த சிறு துவாரம் வழியே வெளிவந்த பறவையை கண்டு துணுக்குற்ற பக்தர்களே கோயிலின் உட்பிரகாரம் பல ஆண்டுகளாக மூடிவைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதனை திறந்தனர். சோழர் கால சித்திரக்கலையின் கருவூலமாக இந்த உட்பிரகாரம் விளங்குகிறது. இந்த இடத்தில்தான் முதல் முதலில் ராஜராஜரின் உருவம் என நம்பப்படும் முதலாவது ஓவிய ஆதாரம் கிடைக்கப்பட்டது. அவ்வோவியத்தில் பெருவேந்தனார் கைகளை கட்டிக்கொண்டு தன்னுடைய குருவின் முன்னால் நிற்கும் வகையில் காணப்பட்டது. அவரே வரலாற்றில் ராஜராஜ சோழரின் குருவாக விளங்கிய கருவூர்தேவர் என இனங்காணப்படுகிறார். 

தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் கோபுரம்
படஉதவி : tamilvbc.com

திருமுறைகளை தில்லையில் இருந்து வெளிக்கொண்டு வந்தது, அவற்றை தொகுப்பித்தது, செங்கற்கோயில்களை கருங்கற்களாக்கியது மற்றும் பெரிய கோயிலை கட்ட உறுதுணையாக நின்றது என பலவாறு ராஜராஜனுக்கு வழிகாட்டியது கருவூர்தேவரே. கருவூரார் வழிகாட்டல் படி உண்டான பெருவுடையார் கோயிலில் முழுக்க முழுக்க தமிழாகமங்கள் படியும், திருமுறைகள் கொண்டும் வழிபாடு நடத்தப்பட வேண்டும் என்று கருவூரார் நெறிப்படுத்தியதாகவும், உயற்பதவிகளில் இருந்த பிராமணர்கள் அதனை புறக்கணிக்குமாறு அரசருக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. நிலைமையை கட்டுப்படுத்த வேண்டி மாமன்னர் முதலாவது குடமுழுக்கு விழாவை சமஸ்கிருத மொழியில் நடாத்தியதோடு, அர்ச்சனைகளில் சமஸ்கிருதமும், தமிழும் கலந்து வழிபாடுகள் மேற்கொள்ள அனுமதி வழங்கினார். இதனால் மனம் நொந்து கருவூர்தேவர் பெரியகோயிலை சபித்ததாகவும், அதன் விளைவாகவே இன்றளவும் பெரியகோவில் அதன் பூரண அமைப்பையும், சிறப்பையும் பெறாது இருக்கிறது எனவும் கருவூரார் வழிவந்த சித்தரான முத்து ராச மூர்த்தி தெரிவிக்கிறார். இது மட்டுமில்லாது பிரதான வாயில் வழியாக உள்நுழையும் தலைவர்கள் தங்கள் பதவியை இழப்பதும், திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளில் விபத்துகள் ஏற்படுவதும், இங்கு செல்வோருக்கு துரதிஷ்டம் ஏற்படுவதும் கருவூரார் சாபத்தின் தொடர்ச்சியே என்ற பல தவறான நம்பிக்கைகள் இங்கு உலவுகிறது. 

வடக்கத்திய வேந்தர்கள்.

பெருவுடையார் கோயில் வரலாற்றில் இறைவனை வழிபடும் மொழி என்பதில் இதுவரை சர்ச்சைகள் உண்டானதில்லை. ராஜராஜ சோழனின் காலத்தில் இருந்தே பிராமணர்கள் சமஸ்கிருத மொழியிலும், பிராமணர் அல்லாதோர் தமிழ் மொழியும் வழிபடும் வசதி அங்கு இருந்து வந்தது. இதற்கு ஆதாரமாக 48 பிடாரர்கள் (திருமுறை ஓதுவார்கள்) மற்றும் 2 வாத்திய கலைஞர்கள் பற்றி பெரிய கோவில் கல்வெட்டில் குறிப்புகள் உள்ளது. இதன் மூலம் பெரிய கோயிலில் தமிழ் மூலம் இறைவனை வழிபட்ட சான்றுகள் கிடைக்கிறது. இங்குமட்டுமில்லாது தமிழகம் முழுவதும் பரவலாக அனைத்து ஆலயங்களும் தமிழ் மொழி மூலமாகவே வழிபாடுகளை நடாத்தி வந்தன. MGR தமிழகத்தின் முதல்வராக இருந்த காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாராஜன் குழு நடாத்திய ஆய்வின் படி கி.பி 1135 வரை தமிழக ஆலயங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் மட்டுமே செயல்பட்டன என்ற அறிக்கை வெளியானது குறிப்பிடத்தக்கது. 

தஞ்சைப் பெருவுடையார் கோயில் 
படஉதவி :  pasumaikudil.com

சோழராட்சியும், பாண்டிய ஆட்சியும் தமிழகத்தில் வீழ்ச்சிகண்ட பிறகு தெலுங்கு நாயக்கர்கள் விஜயநகர பேரரசின் மூலமாக தென்னாட்டை ஆண்டுவந்தனர். இக்காலத்தில் இஸ்லாமிய படையெடுப்பால் பாதிக்கப்பட்ட பல தமிழக கோயில்களுக்கு திருப்பணி நடத்தப்பட்டு மீண்டும் பழைய நிலைக்கு மாற்றப்பட்டது. இந்நேரத்தில் ஆலய வழிபாட்டு தேவைகளை பூர்த்திசெய்ய ஆந்திரா மற்றும் கர்நாடக பகுதிகளில் இருந்து பல சமஸ்கிருத பிராமணர்கள் தமிழகத்தில் குடியமர்த்தப்பட்டனர். அதனை தொடர்ந்து தமிழகத்தில் வலுப்பெற்ற வடநாட்டு மராட்டிய ஆட்சியின் போதும் தீவிர இந்துத்துவ கட்டுப்பாடுகள் நிலவிய படியால் ஆலயங்கள் தொடர்ந்தும் தனி சமஸ்கிருத வழிபாடுகளே தொடர்ந்து வந்தது. பெரிய கோவிலும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்று பெரிய கோயிலில் கம்பீரமாக காட்சிதரும் பெரிய நந்தி சிலையும், நந்தி மண்டபமும் கூட நாயக்கர் காலத்து படைப்பு தான். இஸ்லாமிய படையெடுப்பால் சிதிலமடைந்த பல சிற்பங்கள் நாயக்க மன்னர்களாலும், மராட்டிய ஆட்சியாளர்களாலுமே புணரமைக்கப்பட்டது. தற்போது பிரதான விமானம் மேல் இருக்கும் கலசமும் மராட்டிய ஆட்சியில் (1729) நிறுவப்பட்டதே ஆகும்.  இதன் தொடர்ச்சியாக பெரிய கோவிலின் பரம்பரை அறங்காவலர் என்ற பதவி இன்றும் மராட்டியரான பான்ஸ்லே என்பவரின் கைகளிலேயே உள்ளது. 

பெருவுடையார் கோயிலின் பிரம்மாண்ட நந்தியின் சிலை
படஉதவி :  findmessages.com

நாயக்க, மராட்டிய ஆட்சியால் கோயில்கள் புத்துயிர் கொண்டாலும், அதற்கென சில விலை செலுத்த வேண்டிய கட்டாயம் உண்டானது. ராஜராஜ சோழன் விருப்புடன் வழிபட்ட ஐம்பொன் சிவன் சிலை உட்பட பல கலைப்பொக்கிஷங்கள் மராட்டிய திருமணங்களில் சீர்வரிசையாக வடநாட்டுக்கு சென்று விட்டன. மேலும் ராஜராஜர் பெரிய கோவிலுக்கென வகுத்துக்கொடுத்த பூசை முறைகளும், ஓதுவார்களும், ஆடல் மகளிர் முறைகளும் வழக்கொழிந்து போயின. தென்னாடுடைய சிவன் வடநாட்டு தேவ பாஷையின் அர்ச்சனைகளில் மூழ்கிப்போனார். 

தேவ பாஷை – பக்தி மொழி

ஏற்கனவே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் பெருவுடையார் கோயில் குறித்து  மேலுமொரு புதிய பிரச்சினை எழுந்தது. வரும் தை மாதம் 22ம் நாள் (05/02/2020) நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழா தமிழ்மொழியில் நடக்குமா? சமஸ்கிருத மொழியில் நடக்குமா? என்ற கேள்விதான் அது. “தமிழகத்தில் தமிழில் தான் இறைவனை வழிபட வேண்டும்” என ஒரு தரப்பு வாதமிட, இன்னொரு தரப்போ “இத்தனை காலம் கடந்த பிறகு ஏன் திடீரென தமிழ் மொழிக்கு மாறவேண்டும்? வழமை மாறாது அனைத்தும் சமஸ்கிருத மொழியிலேயே நடக்கட்டும்” என பிரதிவாதம் செய்கின்றனர்.

தஞ்சைப் பெரிய கோவிலின் கோபுரம், மூலலிங்கம் மற்றும் நந்தி சிற்பம்

சம்பிரதாய முறைமைக்கு அமைவாக 2010ம் ஆண்டு பெருவுடையார் கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. 1997ம் ஆண்டு ஜூன் மாதம் 7ம் நாள் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கும்பாபிஷேக இரவன்று வெடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெடிப்பொருட்களிலும் தீ பரவியதால் நிலைமை மோசமாகியது. 48 பேர் பலியாகிய இந்த தீ விபத்தை தொடர்ந்து பெரிய கோயில் மீதான எதிர்மறையான எண்ணங்கள் வலுப்பெற்று வந்தன. அதனை தொடர்ந்து பெரிய கோயில் கும்பாபிஷேகம் என்பது நடைபெறாமல் காலம் தாழ்த்தப்பட்டே வந்தது. தமிழகத்தின் ஆட்சி மாறும் தோறும் பெருவுடையார் கும்பாபிஷேகம் எப்போது என்ற கேள்வியும் தொடர்ந்தே வந்தது. அரசியல் தலைமைகளோ அதை அலட்சியம் செய்துகொண்டே வந்தது. ‘பெரிய கோயிலின் பிரதான வாசலான கேரளாந்தகன் வாயில் வழியே உள்நுழையும் அரசியல் தலைகள் பதவியிழக்கும்’ என்றெல்லாம் வதந்திகள் உலவத்தொடங்கின. ஆனால் அனைத்தையும் மீறி 23 ஆண்டுகள் கழித்து இவ்வாண்டு குடமுழுக்கு நடாத்த தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. 

தஞ்சை பெருவுடையார் கோயிலின் மூலலிங்கம்
படஉதவி : tripsavvy.com

இந்நிலையில் பக்தி மொழியான தமிழிருக்கும் போது வேற்று மொழியான சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம் நடைபெற கூடாது என்ற பேச்சுகள் சூடு பிடித்தன. பேச்சுக்கள் வலுப்பெற்றதும் வாய் தகராறு வழக்குகளாக நீதிமன்றம் சென்றன. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திருமுருகன் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்நாதன் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத்தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த பிரச்சினை குறித்து தமிழக அரசை தெளிவான முடிவுக்கு வருமாறு பணித்தது. அதன்படி தமிழக அரசு “ஆகம முறைப்படி தமிழில் பெருவுடையார் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும்” என பதிலறிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்து அறநிலையத்துறை சார்பாக வாதிட்ட வழக்கறிஞர்கள் பெப்ரவரி 1 முதல் 5 வரை நடைபெறும் யாக சாலை பூசைகளில் திருமுறை ஓதுதல் மற்றும் முற்றோதுதல் நடைபெறும் என கூறியுள்ளார். இருப்பினும் கும்பாபிஷேக தினத்தன்று நடைபெறும் சடங்குகள் எந்த மொழியில் நடைபெறும் என்பதை தெளிவுபடுத்துமாறு இந்துமத அறநிலையத்துறை செயலாளர், ஆணையர், மத்திய தொல்லியல்துறை ஆணையர் மற்றும் பெரிய கோயில் தேவஸ்தான நிர்வாகி என்போரை நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் இம்மாதம் 22ம் திகதி தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் உரிமை மீட்புக்குழு என்ற அமைப்பின் மூலம் பெரும் கோரிக்கை மாநாடும் நடைபெற்றது முக்கிய நிகழ்வாகும். 

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் உரிமை மீட்புக்குழு
படஉதவி : tamizhvalai.com

சமீப காலமாகவே கீழடி, ஜல்லிக்கட்டு என தொடர்ந்து அதிகரித்து வரும் தமிழ் கலாசார ரீதியான மனப்போக்கு காரணமாக பெருவுடையார் கோயில் விவகாரம் இன்று அரசியல் களமாக மாறியுள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் இந்நேரத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நிச்சயம் எதிர்வரும் மாநிலத்தேர்தலில் எதிரொலிக்கும் என்ற நிலையில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் பங்குக்கு இவ்விவகாரத்தை அரசியல் மயப்படுத்தி வருகிறது. இந்தி திணிப்பு போராட்டம் முதன்முதலில் தமிழகத்தில் நடைபெற்றதில் இருந்தே வடக்கத்திய கலாச்சாரங்களை புறக்கணிப்பதும், தமிழ் பண்பாடுகளை மீண்டும் நடைமுறைப்படுத்துவதும் குறித்தான மனப்போக்கு தமிழகத்தில் வலுப்பெற தொடங்கிவிட்டது. 

தேவ பாஷையான சமஸ்கிருதமா? பக்தி மொழியான தமிழா? இந்தியாவின் மூத்த மொழி என்ற வாதங்கள் எப்போதும் இணையத்தில் சூடுகண்டு கொண்டே இருக்கிறது. இவ்விரு மொழிகளும் பொதுவில் சந்திக்கும் சமய நம்பிக்கைகளே இந்த வாதங்களுக்கு அமைவான களங்களாக இருக்கிறது. தமிழக ஆலயங்களில் தமிழ் மொழி மூலம் அர்ச்சனைகள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலநாட்களாக தொடர்ந்து கோரப்பட்டு வரும் சமயத்தில், பெருவுடையார் கோயில் குடமுழுக்கு குறித்து வெளியாக இருக்கும் தீர்ப்பானது ஒரு முக்கியப்புள்ளியாக கருதப்படுகிறது. 

Related Articles

Exit mobile version