நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கையைச்சேர்ந்த பல பணியாளர்கள் வீடு திரும்புவோம் என்ற நம்பிக்கையில் அந்த பரந்த குடாநாட்டில் காத்திருக்கின்றனர். உலக சுகாதார மையம் (WHO) COVID-19 ன் சர்வதேச பரவலை உறுதிசெய்து மூன்று மாதங்களுக்கு மேல் கடந்து விட்ட நிலையிலும் கூட சவூதி அரேபியாவில் சிக்கித்தவிக்கும் பணியாளர்கள் இன்னமும் தத்தமது நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை.
மாலினி*(45) பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த இருபது ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இப்போது சவூதியில் வசதிவாய்ந்த பெரியொதொரு குடும்பத்தில் சமையல், சுத்தம் செய்தல், மற்றும் பொதுப்பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை செய்யும் வீட்டு பணிப்பெண்ணாக வேலைக்கமர்த்தப்பட்டுள்ளார்.
அண்மையில் அவரது கர்ப்பப்பையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது, இது கூடிய விரைவில் கட்டாயமாக சத்திரசிகிச்சை செய்து அகற்றப்படவேண்டிய ஒன்று. “அவ்வப்போது இரத்தக்கசிவு நிகழும்போது கடினமாக இருக்கும், சில நாட்களில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும்” என அவர் Roar Media விற்கு கூறினார்.
கடந்த 13 ஆண்டுகளாக விதவை கோலம் பூண்டு வாழும் இவரை, இந்த அசாதாரண காலநிலையில் இவரது மூன்று பிள்ளைகளும் எதிர்பாத்து காத்திருக்கின்றனர். இவரும் வீடு திரும்ப ஆவலாக இருப்பதுடன் தனது சத்திரசிகிச்சையை இலங்கையில் தன் குடும்பத்துடன் இருக்கும்போது மேற்கொள்ள விரும்புகிறார்.
ஆனால் அவரால் இப்போது வீடு திரும்பமுடியாத நிலை. “எனது எஜமானர் சவூதியில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள உதவினார். நான் எனது நிலையை அவர்களுக்கு எடுத்துக்கூறினேன். ஆனால் அங்குள்ள பிரதிநிதியிடம் பேசிய போது இத்தனை மாத காலமாக வலியை பொறுத்துக்கொண்ட உம்மால் என் இன்னும் சில காலம் பொறுத்துக்கொள்ள முடியாதா? என்று நான் வினவப்பட்டேன்” என அவர் கூறினார்.
வெளிநாட்டில் சிக்கித்தவிப்போர்
இலங்கை மார்ச் மாதம் முதலாக தனது குடிமக்களை நாடுதிருப்பும் வேலையை ஆரம்பித்தது, முக்கியமாக இந்தியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி அங்கு சிக்கியிருந்த மாணவர்களை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தியது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்ஹ கூரியதற்கமைவாக ஏப்ரல் மாதமளவில் உலகளாவிய ரீதியில் 27000ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடுதிரும்ப விரும்பினர். இவர்களில் 17000 பேர் வெளிநாடுகளில் பணிபுரிவோர். ஆனால் ‘மருத்துவ கண்ணோட்டத்தில் அவர்கள் எதிர்கொண்ட குறிப்பிட்ட இடர்களை கருத்தில் கொண்டு’ எமது கவனம் மாணவர்கள் மற்றும் வெளிநாடுகளில் அரசாங்கத்தால் பயிற்சிக்கு அனுப்பப்பட்டோரை மீட்டெடுப்பதில் இருந்தது.
எது எவ்வாறிருப்பினும் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றியவர்களின் அதிகரித்த வேண்டுகோளுக்கிணங்க கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்தவர்களை நாடு திருப்பும் பணிகள் ஆரம்பமாகின. ஜூன் 18 அன்று துபாய்க்கு ஒரு சிறப்பு விமானம் அனுப்பப்பட்டு 120 கர்ப்பிணி தாய்மார் உள்ளடங்கலாக 290 பேர் நாடுதிருப்பப்பட்டனர்.
ஆனால் ஒவ்வொரு முறை விமானம் மக்களை நாடுதிருப்பும் போதும் நோய்த்தொற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. மே மாதம் வந்த விமானங்கள் பெரும் தொகுதிகளில் நோயாளர்களையே கொணர்ந்தன. இதன் விளைவாக அதிகாரிகள், மருத்துவ பராமரிப்பு வளங்கள் மீது ஏற்படும் அதீத சுமை குறித்து அஞ்சினர். ஆகையால் பல பணியாளர்கள் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் போது கூட சில மீட்டெடுக்கும் விமானங்களை தாமதப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஷெஹான்*(29) சவூதி அரேபியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பொறியியலாளராக பணியாற்றுகிறார். ஒரு புதிய அமைப்பில் வேலைக்கு சேர்வதற்காக மார்ச் மாதத்தில் வேலையை விட்டு நீங்குவதாக தான் பணியாற்றிய இடத்தில் தெரிவித்திருந்தார். தனது இராஜினாமாவை கையளித்து சில நாட்களிலேயே நோய்த்தொற்று பரவலால் நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு பிரயாணத்துக்கான வாய்ப்புகளும் கானல் நீரானது.
கடந்த டிசம்பர் மாதம் இவரது மனைவி அவரது கர்ப்பகாலத்தின் ஆரம்ப மாதங்களை குடும்பத்துடன் கழிப்பதற்காக இலங்கை வந்திருந்தார். மார்ச்சில் அவருடன் வந்து இணைந்துகொள்வதாக அவரின் மனைவிக்கு கூறியிருந்தார். அதன் பின் தனக்கான புதிய வேலையுடன் இருவரும் துபாய்க்கு செல்வதாக இருந்தனர். ஆனால் அவரால் இப்போது செய்யக்கூடியது ஒன்றுமில்லை.
“மாதக்கணக்காக எந்தவித வருமானமுமின்றி சவூதியில் இவ்வாறு சிக்கித்தவிப்பேன் என நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு இது வாழ்வின் முக்கியமான தருணம், அவரது கர்ப்பத்தில் சில சிக்கல்களும் உள்ளன. நான் என் மனைவியுடன் இருக்க விரும்புகிறேன்” என ஷெஹான் Roar Mediaவிற்கு தெரிவித்தார்.
ஷெஹான் சவூதியிலுள்ள இலங்கை தூதரகத்தை தொடர்பு கொண்ட போது, அவர் இறுதியாக பணி புரிந்த அமைப்பிடம் தொடர்பு கொண்டு தனக்கான இறுதியாக வெளியேறும் விசாவை இப்போதைக்கு செயற்படுத்த வேண்டாமென கேட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டார். இல்லையேல் வெளியேறும் விசா செயற்படுத்தப்பட்டு 60 நாட்களுக்குள் அவர் வெளியேறவில்லை எனில் அவர் தண்டப்பணம் செலுத்தவேண்டியது அவசியமாகிவிடும்.
“இது எதிர்காலத்தில் நான் இந்நாட்டுக்கு வருகை தருவதை பாதித்திருக்கும். எனது நிலையை பொறுத்தவரை, தூதரகம் என்னை முன்கூட்டியே எச்சரித்ததுடன் எனது நிறுவனமும் அதற்கு சம்மதம் தெரிவித்தது. ஆனால் இந்த வாய்ப்பு இங்கு பலருக்கு வாய்க்கவில்லை. இங்கு சிக்கியுள்ள பெரும்பாலானோர் அவர்களது விசா காலம் முடிந்த நிலையில் உள்ளனர்.
வெளிநாட்டி மண்ணில்
“ஏறத்தாழ 135,000 இலங்கையர்கள் இப்போது சவூதியில் உள்ளனர். அவர்களில் 128,000பேர் பணிநிமித்தம் உள்ளவர்கள்” என சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான மதுக விக்கிரமாராச்சி Roar Mediaவிற்கு தெரிவித்தார்.
விக்கிரமாராச்சி அவர்கள் மேலும் கூறுகையில் “60 வயதுக்கு மேற்பட்ட ஆறு இலங்கையர்கள் COVID-19இனால் பலியாகினர், அத்துடன் அவர்களுக்கு வேறு சில சுகாதார குறைபாடுகளும் காணப்பட்டன” என்றார். அவரது தரவுகளின் படி,30 இலங்கையர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர், அவர்களில் 20பேர் குணமடைந்த போதிலும் மேலும் 10பேர் இன்னமும் வைத்திய சாலையில் உள்ளனர்.
ஜூன் மாதமளவில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் வெளியிட்ட அறிக்கையின்படி மார்ச் மத்தியில் இருந்து இதுவரை COVID-19 காரணமாக 23 இலங்கையர்கள் சவூதி உள்ளடங்கலாக மத்திய கிழக்கு நாடுகளில் உயிரிழந்துள்ளனர்.
1970களில் இருந்து இலங்கை பணியாளர்கள் பணி நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்து ஒரு நீண்ட கால உறவை அந்நாடுகளுடன் பேணி வந்துள்ளனர். அப்போதிலிருந்து அரசாங்கமும் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளது, குறிப்பாக வீட்டு பணியாளர்கள் புலம்பெயர்வதற்கு, குறித்த காலத்தில் வேலைவாய்ப்பின்மையை போக்கவும் வறுமையை ஒழிக்கவும் இது சிறந்த உபாயமாக அமைந்தது. அவர்கள் அனுப்பும் பணமானது இன்று இலங்கையின் அந்நிய செலாவணியில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
2019 ஆம் ஆண்டில், வெளிநாட்டு தொழிலாளர் வருவாய் 6.7 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொண்டு வந்தது. மேலும் Verité Research ஆராய்ச்சியின் படி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் மத்திய கிழக்கில் உள்ளனர்.
“சவுதியில், தொழிலாளர்களில் பெரும்பாலோர் வீட்டுத் தொழிலாளர்கள், இதில் வீட்டுப் பணிப்பெண்கள், ஓட்டுநர்கள், தோட்டக்காரர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளனர்” என்று விக்ரமாராச்சி கூறினார்.
சவூதி அரேபியாவில் மார்ச் 2ல் முதலாவது நோய்த்தாக்கம் பதிவானது. அத்துடன் மார்ச் 23 அளவில் அடுத்தடுத்த ஊரடங்குகள் அமுலில் வந்தன. இரு மாதங்களுக்கு பின்னர் மே இறுதியில் நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. எவ்வாறிருப்பினும் இப்போது COVID-19ன் இரண்டாவது அலையுடன் போராடி வருகின்றனர். கொரோனா வைரஸினால் தினமும் 3000-4000 நோய்த்தொற்றுக்கள் பதிவாகின்றன. அரபு நாடுகளின் மத்தியில் மிகப்பெரும் பாதிப்பாக இது கவனிக்கப்படுகிறது. இக்கட்டுரையை எழுதும் இவ்வேளையில் சவூதியானது இதுவரை 180,000 நோய்த்தொற்றாளர்களையும் 1,551 மரணங்களையும் சந்தித்துவிட்டது.
நாட்டின் பரந்த நிலப்பரப்பு இலங்கையர்களின் தங்குமிடங்களை தேடி கண்டுபிடிப்பதில் பெருத்த சிரமத்தை ஏற்படுத்தியது என விக்கிரமாரச்சி விளக்கினார். அத்துடன் தூதரகமானது நிறைய இலங்கையர்களுடன் தொடர்பு கொள்ள கடுமையாக உழைத்ததுடன், அவர்களுக்கான அவசர அழைப்பு சேவையையும் வழங்கி, தொலைதூர இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டு அவர்களுக்கான நிவாரணங்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் டோக்கன்களை பெற்றுக்கொள்ள ஆவன செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை கொள்வனவு செய்யும் பொருட்டு மத்தியகிழக்கு மற்றும் பிற இடங்களில் உள்ள இலங்கையர்களுக்கு 42.6 மில்லியன் ரூபாவை அனுப்பியதாக இலங்கை அரசாங்கமானது அறிவித்தது. இதேவேளையில் சவூதியிலுள்ள தூதரகம் 1.075 மில்லியன் ரூபாவை அரசாங்கம் மூலம் பெற்றுக்கொண்டதாக உறுதிப்படுத்தட்டது.
தூதரகம் எதிர்கொள்ளும் மற்றுமொரு பாரிய பிரச்சினை யாதெனில் பணியாளர்கள் வெளியேற முன்பதாக அவர்களுக்கு Polymerase Chain Reaction (PCR) பரிசோதனைகளை மேற்கொள்வதாகும், இது மிகவும் செலவு மிக்கது. விக்கிரமாராச்சி கூறுகையில் சவூதி அரேபிய இராச்சியம் நாட்டவர்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இலவச பரிசோதனை செய்ய வழிசமைத்துள்ளது. ஆனால் இதன் மூலம் அறிகுறி உள்ளவர்களுக்கே முன்னுரிமை அளிப்பதுடன் பலரை உதவி இன்றி விட்டுவிடுகின்றனர். அத்துடன் இலங்கை அதிகாரிகள் சவூதி அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு குறைந்தது 1000 பணியாளர்களுக்கேனும் பரிசோதனை செய்ய அனுமதி பெற்றுள்ளது.
வீடு திரும்புவோம்
“கடந்த சில மாதங்களாக எமக்கான உறுதியான ஒரு செய்தி கிடைக்காதபோதும், ஏனைய நாடுகளில் இருந்து விமானங்கள் அவர்களை நாட்டுக்கு திரும்ப அழைத்து செல்லும் செய்தியை கேட்டவண்ணமே இருக்கின்றோம்” என ஷெஹான் கூறினார்.
வெளிநாட்டில் சிக்கியுள்ள சில இலங்கையர்கள் விரக்தியின் பலனாக தாங்கள் ஏற்கனவே விசா முடிந்த நிலையில் இருப்பதாகவும் தங்களது விமான டிக்கட்டுக்களுக்கு தாமே பணம் தருவதாகவும், தனிமைப்படுத்தல் நிலையத்தின் செலவை தாம் சமாளிப்பதாகவும், அவர்களது தகவல்களுடன் சவூதி அரேபியாவில் உள்ள தூதுவருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். ஆனால் அவர்களுக்கான பதில் இன்னமும் கிடைத்தபாடில்லை.
ஷெஹான் மற்றும் மாலினியை பொறுத்தவரை மாதக்கணக்காக எந்த ஒரு பதிலும் இன்றி காத்திருப்பதே கொடிதாகும். ஷெஹான் தனது அடுக்குமாடி இல்லத்தில் தனியாகவும், மாலினி தனது எஜமானர் வீட்டிலும் உள்ளனர்.
“என் வாழ்வில் மிகக்கொடிய காலம் இதுவாகும், பணத்தைவிட மனரீதியாகவே நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன், மன அழுத்தத்தை நன்றாகவே உணர்கிறேன். ஆனால் இதை விட மோசமாக வெளியில் மூன்று வேளை உணவுக்கு வழியின்றி பலர் உள்ளனர் என்பதையும் நான் அறிவேன்” என ஷெஹான் கூறினார்.
ஜூன் 6 அன்று பேஸ்புக்கில் ஒரு காணொளி வெளியாகிறது, அதில் சவூதி அரேபியாவில் சிக்கித்தவிக்கும் ஐந்து இலங்கையர்கள் உள்ள ஒரு 10 x 10 அறையில் உள்ளதாக காட்டப்படுகிறது. அத்துடன் அவர்களிடம் முகமூடி, கையுறை என எதுவுமில்லை, வேலையுமில்லை, உணவுக்கு மிகவும் கஷ்டப்படுவதுடன் நாடு திரும்ப வேண்டுமென கெஞ்சிக்கேட்கின்றனர்.
இந்த காணொளியில் அந்த பணியாளர்கள் தாம் எதிர்கொள்ளும் அசாதாரண நிலை பற்றி எடுத்துரைக்கின்றனர், ஒரே வாளியையே அனைவரும் குளிக்கவும் ஏனையவற்றுக்கும் பாவிப்பதாக கூறுகின்றனர். அவர்களுக்கு தூதரகம் மூலம் எந்த ஒரு உதவியும் கிடைக்கப்பெறவில்லை எனவும் கூறுகின்றனர். “நாம் அழைத்தாலே அவர்கள் அழைப்பை உடனே துண்டிக்கின்றனர்” என அவர்களில் ஒருவர் கூறினார்.
மத்திய கிழக்கில் பணி புரிவோர் கஃபாலா முறை எனப்படும் அனுசரணை அடிப்படையிலான வேலை வாய்ப்பை பெறுகின்றனர், இது சுரண்டல் மிக்க முறை ஒன்றாக கருதப்படுகிறது. சவூதி அரசாங்கம் மற்றும் அங்குள்ள எஜமானர்களால் நிகழும் பாகுபடுத்தல், துஷ்பிரயோகம், இறப்புகளும் கூட ஆவணப்படுத்தப்பட்ட மிக நீண்ட வரலாற்றை உடையன.
ஐக்கிய அரபு இராச்சியமே இலங்கையிலிருந்து வந்த அதிகப்படியான பணியாளர்களை கொண்டுள்ளது, அதற்கு அடுத்து கத்தார், மற்றும் குவைத் இவற்றுக்கு அடுத்ததாகவே சவூதி உள்ளது. “குடிமக்களை நாடுதிருப்புவதில் முடிவெடுப்பது இலங்கை அரசிடமே தங்கியுள்ளது” என விக்கிரமாராச்சி தெளிவுபடுத்தினார்.
ஜூலை மாதத்தில் நாடுதிருப்புவதற்காக 290பேரை கொள்ளக்கூடிய விமானம் ஒன்றை அனுப்புவதற்கான திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. ஆனால் இதனை பற்றிய எந்தவொரு உத்தியோகப்பூர்வ தகவலும் தற்போது இல்லை, தூதரகம் வீடு திரும்ப விரும்புவோரின் தகவல்களை திரட்டி வருகிறது.
ஷெஹானிற்கு விமானத்திற்கான செலவு குறித்து தனிப்பட்ட அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் மாலினிக்கு அவ்வாறு எந்த ஒரு அழைப்பும் கிடைக்கப்பெறவில்லை.
“நான் இங்கு இருப்பது எனது விருப்பத்தினால் அல்ல. இங்கு வருவதற்கு நாம் மிகவும் கஷ்டப்பட்டுள்ளோம் அத்துடன் எனது சம்பளத்தை நம்பி ஒன்பது பேர் உள்ளனர். நான் இன்னமும் ஒரு வெளிநாட்டில் உள்ளேன், தூதரகம் ஏன் எமக்காக பரிந்துரைக்க கூடாது? ஏன் யாருமே எதுவுமே செய்யவில்லை?” என மாலினி தன் உள்ளக்கிடக்கைகளை வெளியிட்டார்.