COVID-19 தொற்றும் உலகமும் | கட்டுரைத் தொடர் 02 | ஜப்பான் – சிங்கப்பூர்

“இக்கட்டுரைத் தொடரின் முதல் பதிவில் சீனா, தென்கொரியா மற்றும் மலேசியா ஆகிய நாடுளில் COVID-19 தொற்றினால் ஏற்பட்டுள்ள சூழ்நிலைமைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் பற்றிய விபரங்களை உங்களுக்கு தந்திருந்தோம்.”

ஒவ்வொரு கண்டத்திலும் அல்லது உப கண்டங்களிலும் அதிகளவில் புதிய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் தற்போதைய முக்கிய நிலவரங்கள் மற்றும் மாற்றங்கள், அந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் விசேட நடவடிக்கைகள், இவ் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அந் நாட்டு பொதுமக்கள் அரசுக்கு வழங்கும் ஒத்துழைப்புகள், பாரியளவில் பாதிப்படைந்துள்ள நாடுகளை அண்மித்த நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்பனவற்றை இக்கட்டுரை தொடர் மூலம் சுருக்கமாகக் காண்போம். 

ஜப்பான்

சீனாவுக்கு மிகவும் அருகாமையில் அமைந்திருந்தபோதிலும், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா போன்று இங்கு COVID-19 தொற்று தீவிரமாக பரவலடையவில்லை. 

ஐரோப்பாவில் தற்போது ஏற்பட்டுள்ள COVID-19 தொற்றுக்கும் ஜப்பானின் நிலைமைக்கும் பாரிய வேறுபாடு இல்லை. இதுவரை ஜப்பானில் 10 பிரதேசங்கள் COVID-19 தீவிரமாக பரவலடையும் பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ளன. மேலும் ஜப்பானில் கடந்த இரு மாதங்களில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஏறத்தாழ 1,300 மற்றும் COVID-19 தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆகும். மேலும் புதிதாக COVID-19 தொற்றுக்குள்ளானவர் சிலர் தினமும் இனங்காணப்படுகின்றனர். தற்போது இவ் எண்ணிக்கைகள் கணிசமான அளவு அதிகரித்திருக்க வேண்டும். COVID-19 தொற்றுக்கு ஜப்பான் இரையாகியிருக்கவேண்டும் ஏனெனில் ஜப்பான் மிகவும் அடர்த்தியான மக்கள்தொகையினைக் கொண்டதொரு நாடாகும். அவர்களது சனத்தொகையில் முதியவர்கள் அதிகம். அருகேயுள்ள சீனாவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிவரும் நாடாகும், சீனாவில் COVID-19 தொற்று தீவிரமாக பரவலடைந்த ஜனவரி மாதம், சுமார் 925,000 சீன மக்கள் ஜப்பானுக்கு பயணம் செய்தனர். மேலும் 89,000 பேர் பிப்ரவரியில் பயணம் மேற்கொண்டனர்.

ஆயினும் COVID-19 தொற்றானது சீனாவிலிருந்து ஜனவரி 16, 2020 அன்று ஜப்பானுக்கு பரவியது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, COVID-19 தொற்றைக் கட்டுப்படுத்த யப்பான் அரசுடன் இனைந்து பொதுமக்களும் துரிதமாக செயற்பட்டனர். 

COVID-19 தொற்றுக்கு எதிரான நடவடிக்கையாக ஜப்பானிய அரசாங்கம் மார்ச் மாத இறுதியில் வசந்த விடுமுறைக்கு இரு வாரங்களுக்கு முன்பே அனைத்து பாடசாலைகளையும் மூடியது மேலும் அனைத்து பொது நிகழ்வுகளையும் ரத்து செய்தது. ஆயினும் கடைகளும் உணவகங்களும் இயங்க அனுமதியளித்தது, மேலும் சில ஜப்பானிய ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய முடிவு செய்தனர்.

ஜப்பானியர்களைப் பொறுத்தமட்டில் அடிக்கடி கைகளைக் கழுவுதல், கிருமிநாசினி கரைசலைக் உபயோகித்தல் மற்றும் முகக்கவசங்களை அணிவது என்பன அன்றாட வாழ்க்கையின் ஓர் பகுதியாகும். மேலும் ஜப்பானிய வாழ்த்து ஆசாரமான கைகுலுக்கலுக்கு பதிலான  தலை தாழ்த்தல் அல்லது கன்னத்தில் சிறு முத்தம் என்பன இத் தொற்றை கட்டுப்படுத்துவதில் பாரியதொரு பங்கை வகிக்கின்றது. ஜப்னியர்களுக்கு சிறு வயதிலிருந்தே அடிப்படை சுகாதாரக் கல்வி கற்பிக்கப்படுகின்றமையும் ஒரு காரணமாகும்.

இதன் விளைவாக, பிப்ரவரியில் COVID-19 தொற்று பரவத் தொடங்கியபோது சமூகம் தொற்று எதிர்ப்பு முறைக்கு மாறுவது அவர்களுக்கு மிகவும் எளிதாக இருந்தது. கடைகளும் வணிகங்களும் நுழைவாயிலில் கை கழுவும் தொட்டிகளை அமைத்தன, மேலும் முகக்கவசம் அணிவது அங்கு குடிமக்களின் கடமையாக மாறியது.

மேலும் அறிகுறிகள்  எதுவும் தென்படாமலும் ஒருவர் COVID-19 தொற்றுக்கு ஆளாகலாம் என்பதை ஜாப்பானியர்கள் புரிந்துகொண்டனர். ஆகவே சமூக பொறுப்பு நிறைந்த அவர்கள் தங்களை பாதுகாப்பதை விட மற்றவர்களைப் பாதுகாப்பதற்காக முகக்கவசங்களை அணிகின்றனர். 

முகமூடிகளின் பரவலான பயன்பாட்டினால் COVID-19 தொற்று ஏற்பட்ட ஏழு வாரங்களில் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு வீழ்ச்சி கண்டது. போனில் அமைந்துள்ள சீசர் ஆய்வுக் குழுவின் ஃபேபியன் ஸ்வாரா மற்றும் வியன்னாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மத்தியாஸ் சாம்வால்ட் உள்ளிட்ட ஐந்து மேற்கத்திய மருத்துவர்கள்  அண்மையில் நாடாத்திய ஆய்வின் படி, “முகமூடி அணிந்தவர்களால் வைரஸ் துகள்கள் கொண்ட நீர்த்துளிகள் அல்லது வளித்துணிக்கைகள் பரவலடைவது குறைவாகும்” என கண்டறியப்பட்டது.

கடந்த வார இறுதியில் ஜப்பானின் புகழ்பெற்ற செர்ரி மலர்களை அனுபவிக்கும் பலரின் மனதில் COVID-19 தொற்று குறித்து கவலைகள் இருக்கவில்லை ஆயினும் அவர்கள் எச்சரிக்கையுடன் செயற்பட்டதை அவதானிக்க முடிந்தது. முகக்கவசங்கள் அணிந்தவண்ணம் செர்ரி மரங்கள் வளர்ந்திருந்த  பூங்காக்களிலும், வீதியோரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இளஞ்சிவப்பு நிற மலர்களால் நிறைந்து காணப்பட்ட  மரங்களின்  கீழ் அமர்ந்து தங்களின் மதிய உணவுகளை உட்கொள்வதையும், அம் மலர் நிறைந்த மரங்களின் பின்னணியில்  ஒளிப்படங்களை எடுப்பதையும் அவதானிக்க முடிந்தது.

டோக்கியோவில் செர்ரி மரங்காளால் நிறைந்த வீதியொன்றில் முகக்கவசங்களுடன் உலாவும் மக்கள்.
படஉதவி: Zuma/Sopa/V.Cam – www.dw.com

ஆகவே யப்பானின் குறைந்த தொற்று விகிதங்களை ஆதரமாகக் கொண்டு, வைரஸ் பரவுவதை குறைப்பதில் சமூக விலகல் மற்றும் கை கழுவுதல் தவிர, முகக்கவசங்களும்  முக்கிய பங்கு வகிக்கின்றன என நிபுணர்கள் முடிவு செய்தனர்.

சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளைத் தவிர, COVID-19 தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக மக்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் சட்டங்கள் எவையும் ஜப்பானில் இயற்றப்படவில்லை. 

எனவே தற்போதைய கட்டுப்பாடான நிலைமையை கருத்திற்கொண்டு, ஜப்பான் முதலமைச்சர் ஷின்ஜோ அபே கடந்த வாரம் அறிவிக்கவிருந்த தேசிய அவசரகால நிலையை கைவிட்டார். மேலும் அப்போதிருந்து, யப்பானியர்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு  மெதுவாக திரும்புகிறார்கள். நன்கு காற்றோட்டமான அறைகளில் குழந்தைகள் ஒருவருக்கொருவர் விலகி அமர்ந்த நிலையில், பயிற்சி பள்ளிகள் மீண்டும் செயற்படுகின்றன. மற்றும் கேளிக்கை பூங்காக்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, ஆனால் காய்ச்சல் உள்ள மக்கள், ஏனையோரிடமிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

மறுபடியும் COVID-19 தொற்று பரவலாம் என்ற அச்சுறுத்தல் நிலவுவதால் COVID-19 நோயாளிகள் இல்லாத பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மட்டுமே ஏப்ரல் மாதத்தில் திறக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரிய பொது நிகழ்வுகளைத் தடை செய்துள்ளது. இதனால் ஜப்பானில் இடம்பெறவிருந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளும் 2021 ஆம் ஆண்டிற்கு பிற்போடப்பட்டுள்ளது என ஜப்பானின் ஒலிம்பிக் சம்மேளனம் அறிவித்துள்ளது.

முகக்கவசங்களுடன் ஒலிம்பிக் தீபத்தின் முன்னின்று ஒளிப்படம் எடுக்கும் மக்கள்.
படஉதவி: AFP/P. Fong

மேலும், வெளிநாட்டுப் பயணிகளின் வருகையானது சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி இன்னும் அச்சுறுத்தலாகவே உள்ளது. தென் கொரியர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் யப்பானுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. யப்பானில் வசிக்கும் வெளிநாட்டினர் திரும்பி வர அனுமதிக்கப்படுகிறார்கள், ஆயினும் அவர்கள் வந்தபின் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். 

தற்போது ஜப்பானிற்கு வருகைதரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதாலும் உள்ளூர் மக்கள் சுயதனிமைப்படுத்தல்களில் ஈடுபடுவதாலும், நாரா பூங்காவில் வாழும் சிகா மான்கள் உணவு தேடி நகருக்குள் வருவதை அவதானிக்க முடிந்தது. இப் பூங்காவில் வசிக்கும் புகழ்பெற்ற சிகா மான்களை பார்வையிட அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளால் இங்கு  வருகை தருவது வழக்கமாகும். அவ்வாறு இங்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் பூங்காவில் விற்கப்படும் பிஸ்கட்களை இம் மான்களுக்கு உணவளிப்பதற்காக வாங்குவர், இருப்பினும் அண்மை வாரங்களில் இப் பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்ததால், மான்கள் தானாகவே உணவு தேடி நகருக்குள் நுழைந்துள்ளன.

உள்ளூர் வீதிகளில் உலவும் நாரா பூங்காவில் வாழும் சிகா மான்கள்.
படஉதவி: Okadennis / www.boredpanda.com

சிங்கப்பூர்

சிறியதொரு நிதிவளமிக்க நாடான  சிங்கப்பூரினால், அமெரிக்கா மற்றும் சீனா போன்ற பரந்த, அதிகளவில் மக்கள் தொகை கொண்ட நாடுகளுக்கு முன்மாதிரியாக செயற்பட முடியாது. ஆயினும் COVID-19 தொற்றுக்கு எதிராகவும் அதனை கட்டுப்படுத்தவும் அந்  நாடு மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் அனைவராலும் பாராட்டப்படும் விடயமாகும்.

பிப்ரவரி இடைப்பகுதியில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸை “சிங்கப்பூர் எந்தவிதமான வழிமுறையினையும் விட்டுவைக்கவில்லை, காய்ச்சல் முதல் தடிமன் போன்ற ஒவ்வொரு நோய் அறிகுறி உள்ளவர்களையும் அது சோதிக்கிறது” என்று கூறினார்.

ஏனைய நாடுகளுக்கு மிகவும் முன்னதாகவே, பிப்ரவரி முதல் வாரத்தில்  சீனாவிலிருந்து பயணிப்பவர்களுக்கு சிங்கப்பூர் முற்றிலுமாக தடை விதித்தது. சீனாவிலிருந்து வீடு திரும்பும் சிங்கப்பூரில் வசிக்கும் குடிமக்களும் குடியிருப்பாளர்களும் இரு வாரங்களுக்கு சுய தனிமைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியது. அவ்வாறு சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட மறுபவர்களின் வதிவிட அனுமதியை ரத்து செய்தது. இதுபோன்ற கடுமையான மற்றும் துரிதமான நடவடிக்கைகளை மக்களின் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு மாத்திரம் செயற்பட்டது.

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் வான்வழிப் பிரயாணத்தின்  முக்கிய மையமாகவும், உலகின் முன்னணி விமான சேவைகளின் ஒன்றாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் திகழ்கின்ற. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்றினால் சாங்கி விமான நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதுடன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின்  சேவையும்  இடைநிறுத்தப்பட்டுள்ளது.
படஉதவி: Hwee Young / EPA

கொரோனா வைரஸ் தொற்றானது உலகத்தை தலைகீழாக மாற்றிப்போட்டுவிட்ட நிலையில், ஆஸ்திரியா போன்ற ஜனநாயக மற்றும் சுதந்திரமிக்க ஐரோப்பிய நாடுகள் தங்கள் குடிமக்களின் நடமாட்டத்தை முடக்கி அவர்களது தொலைபேசி அழைப்புகளை  கண்காணிக்க எண்ணிக்கொண்டிருக்கும் அதேவேளை, இவற்றிக்கு நேர்மாறான சிங்கப்பூர் போன்ற  வரையறுக்கப்பட்ட சுதந்திரமிக்க ஆசிய நாடுகளில் உள்ள குடிமக்கள் கடந்த சில வாரங்களாக தற்போது எந்தவொரு மேற்கத்திய அள்ளாது  ஐரோப்பிய நாடுகளை விட அதிக சுதந்திரத்தை அனுபவிக்கின்றது.

சீனாவுடன் பாரியளவில்  பொருளாதார மற்றும் புவியியல் தொடர்புகளைக் கொண்டிருந்த போதும், இங்கு COVID-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையை குறைவாகவும், மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அதிகளவில் பாதிக்கப்படாமலும் பேணமுடிந்தது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் சிங்கபூரிடமிருந்து சில விடயங்களை கற்றுக்கொண்டிருக்கலாம்.

சிங்கப்பூரில் உள்ள மெரினா வளைகுடா நீர்சதுக்கத்துக்கு பாதுகாப்பு முகக்கவசம் அணிந்து வருகை தந்திருக்கும் பார்வையாளர்கள்.
புகைப்படஉதவி: Ee Ming Toh/AP Photo

சிங்கப்பூர் மக்கள் அடர்த்தியான உலகளாவிள் முக்கிய மையமாக இலகுவில் COVID-19 தொற்றுக்கு உள்ளாகக்கூடிய வகையிலிருந்தாலும், இதுவரை இங்கு COVID-19 தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 650க்கும் குறைவாகும் மேலும் மற்றும் இன்றுவரை COVID-19 தொற்றினால் இரு மரணங்கள் மாத்திரமே நிகழ்ந்துள்ளன. சீன புத்தாண்டு சமயத்தில் பரவலடைய ஆரம்பித்த COVID-19 தொற்று இச்சிறிய நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் பயணத் தடைகள் எதுவும்  தேவையில்லை என்ற உலக சுகாதார அமைப்பின் ஆலோசனையை புறக்கணித்து, சிங்கப்பூர் பெப்ரவரி 1 ஆம் திகதியே சீனாவிலிருந்து வருகைதரும் பயணிகள் மீது பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது.

சுருக்கமாக் கூறுவதானால் COVID-19 தொற்றினை கட்டுப்படுத்த சிங்கப்பூர் மிகவும் அடிப்படையான மூன்று உத்திகளையும் மற்றும் முக்கியமனதொரு உத்தியையும் பின்பற்றியது: அதாவது இத்தொற்றானது கைமீறுவதற்கு முன்பே நாட்டின் அனைத்து எல்லைகளையும் மூடுவது, தொற்றுக்குள்ளானவர்களை தீவிரமாக கண்காணிப்பது, அதிகளவிலான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது – மற்றும் SARS மூலம் கற்ற கொடூரமான அனுபவத்தை பின்பற்றுவது என்பவையாகும். இவ்வாறு முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்களின் வாழ்க்கை இயல்பாகச் சென்றது. அனைத்து உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், பாடசாலைகள் மற்றும் அலுவலகங்கள் இன்றுவரை திறந்திருக்கின்றன. ஹாங்காங்கும் தைவானும் சீனாவுக்கு அருகாமையில் இருந்தபோதிலும் இதே போன்ற நேர்மறையான அனுபவங்களையே கொண்டுள்ளன.

அளவு வரைமுறையுடன் சமூக இடைவெளி பேணி பொருட்களை கொள்வனவு செய்யும் சிங்கப்பூர்வாசிகள்.
படஉதவி: Mark Thomas / twitter.com

Related Articles

Exit mobile version