காட்டின் காவலன்
வனவிவசாயி, வனப்பாதுகாவலன், வனத்தின் தந்தை என பலவக இருக்கும் யானைகள் புகைப்படமாக மட்டுமே மிஞ்சும் தினம் வந்தால், பூமி அதன் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
சமூக – இயற்கை உறவானது, இயற்கை மீதான மனிதனின் அதீத மேலாதிக்கம், அறமற்ற வணிக – அபிவிருத்தி பற்றிய கருத்தாக்கங்கள், மூடத்தனமான அறிவியற் செயற்பாடுகள்; என்பனவற்றால் குழப்பிவிடப்பட்டுள்ளது. இது மனிதன், விலங்குகள், தாவரங்கள், நிலம் – கடல் என்பன ஒன்றுக்கொன்று கொண்டும் கொடுத்தும் வாழும் பூமியின் இயற்கைச் சமநிலையை முற்றுமுழுதாககப் பாதித்துள்ளதுடன், உலகை அழிவின் எல்லைக்குத் தள்ளிவிட்டுள்ளது .புவி வெப்பமாதல், காலநிலை மாற்றங்கள் ,நீர் – வளி மாசடைதல் முதலானவை பாரிய பிரச்சினைகளாக மேற்கிளம்பியுள்ளன. இவற்றின் பின்னணியில் இயற்கைப் பேரழிவுகளும் நோய்களும் பெருகுகின்றன. இந்த இடத்தில் பச்சைக் கருத்துநிலை (green ideology) நிலம் – நீர் மேலாண்மைகள் தொடர்பான உரிமைகள், சூழலியல் ஒழுக்கங்கள், பல்லுயிர் நலனோம்பு முறைகள் என்பனவற்றை வற்புறுத்தும் புக்சின்னின் ‘சமூகச்சூழலியல்’ (Social ecology) சார்ந்த சூழலியல்வாதக் கோட்பாட்டை உள்ளடக்கிய சூழலியல் அரசியற் செயற்பாடுகள் – கொள்கைத் தீர்மானங்கள்–செயற்பாடுகளை முன்னிறுத்தும் சமூக – இயற்கை உறவைப் பலப்படுத்தும்- மறுசீரமைக்கும் பரவலான செயற்பாடுகளைச் சமகால உலகம் வேண்டிநிற்கிறது.
இப்பரந்துபட்ட சூழலியல் அச்சுறுத்தல் களத்தில் பேரச்சத்தை ஏற்படுத்துவனற்றில் தலையாயது யானைகளின் அழிவும், அவை வாழத்தகுந்த சூழலினது அழிப்புமாகும். ஒட்டுமொத்த உயிர் வாழ்க்கைச் சூழலினது அழிவின் மிகமுக்கியமான கண்ணிகளில் ஒன்றாகவே யானைகளின் அழிவைக் குறிப்பிடலாம். இந்த உலகளாவிய நிலவரத்திற்கு இலங்கையும் விதிவிலக்கானதல்ல. இலங்கையில் சுமார் 6500 யானைகளே உள்ளதாகக் கணக்கெடுக்கப்பட்ட நிலையில்கடந்த 2018ஆம் ஆண்டு சுமார் 311 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் யானைகள் தாக்கியதில் 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையும் யானைகளும்
யானை இலங்கையின் வரலாறு, புராணிகங்கள், மதம், பண்பாடு என எங்கணும் ஊடுகலந்து நிற்கின்ற ஒரு பொருண்மை ஆகும். 1986 இல் இருந்து இலங்கை யானை அருகிய இனமாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் பட்டியலிடப்பட்டது. 60-75 வருட கணக்கெடுப்பில் கடந்த மூன்று தலைமுறைகள் 50% ஆகக் குறைவடைந்து காணப்படுகின்றது. இவ்வினம் வாழ்விட இழப்பு, சீர்கேட்டு நிலை, பிளவு என்பவற்றால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
19 ஆம் நூற்றாண்டில் யானைகளின் எண்ணிக்கையானது பிடித்தல், கொல்லுதல் மூலம் ஆபத்தான குறைதலுக்கு உள்ளாகியது. 1829 இற்கும் 1855 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 6,000 இற்கு மேற்பட்ட யானைகள் பிடிக்கப்பட்டும் சுடப்பட்டும் அழிந்தன. 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 19,500 யானைகள் இலங்கையில் இருந்ததாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நூறு வருடங்களின் பின்னர் இத்தொகையானது, யானைகளைக் கண் மூடித்தனமாகப் பிடித்தல் ,யானைகள் பெருமளவில் விபத்துக்களில் சிக்குதல், பொழுதுபோக்குக்காகவேட்டையாடப்படுதல், பாரியளவிலான கமத்தொழில் ,நீர்ப்பாசனக் கருத்திட்டங்கள் மற்றும் பாதைகள் அமைத்தல் உள்ளிட்ட நகர அபிவிருத்தித் திட்டங்கள் என்பனவற்றின் தூரநோக்கற்ற–தட்டையான அபிவிருத்திப் பார்வைகள் காரணமாகக் குறைந்து கொண்டே வருவது பேரச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பேரளவில் நிகழும் காடழிப்புக்களும் யானைகளது பாரம்பரியமான பயணப் பாதைகளைக் கைப்பற்றலும் என யானை – மனிதமோதல்களின் போது தவிர்க்க முடியாது யானைகள் (ஆண்டுதோறும் ஏறத்தாழ 250 யானைகள்) கொலை செய்யப்படுவதும் யானைகள் பெருமளவில் குறைவடையக் காரணமாகும். யானைகளின் வாழிடத்தில் மனிதனின் அத்துமீறிய தலையீடு காரணமாக யானைகள் மனிதர்களைத் தாக்கியும் (வருடந்தோறும் ஏறத்தாழ 50 பேர் வரை) கிராமங்களுக்குள் புகுந்து பயிர்நிலங்களை அழித்தும் சமூகத்தில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வருவதும் அன்றாடச் சேதிகளாகும்.
இத்தகைய நிலவரங்கள் அனைத்துக்கும் மனித சமூகத்தின் இயற்கை மீதான எதேச்சாதிகாரப் போக்கே காரணமாகும். அதனால் இதற்கான ஒட்டுமொத்த பொறுப்பையும் மனிதகுலமே ஏற்க வேண்டும். யானைகளும் மனிதர்களைப் போல் பாசம், அறிவாற்றல், பெருந்தன்மை, நினைவாற்றல், தன்னை நிலை நிறுத்திக்கொள்ளத் தொடர்ந்து பாடுபடுதல் போன்ற அசாதரண குணங்கள் உடையவைதான். அதேநேரம் காட்டினது சுற்றுப்புற இயற்கையின் உயிர்ச் சங்கிலியின் மையமாக இருப்பனவும் அவைகளே. குறிப்பாக, சுற்றுச்சூழல் இயக்கத்தில் அவை நேரடியாகவும் மறைமுகமாகவும் குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கின்றன.
யானைகளுக்குத் தினமும் 150 – 200 கிலோகிராம் வரை உணவு தேவைப்படுகிறது. அவை இலைகள், மரப்பட்டைகள், புற்கள், மரக்குச்சிகள் முதலியவற்றை உண்பதுடன். சுமார் 12 – 18 மணித்தியாலங்களை உணவு தேடுவதற்கே செலவிடுகின்றன. அதேபோல குடிப்பதற்கும் உடல் வெப்பத்தைத் தணிப்பதற்கும் தினமும் 220லீற்றர் தண்ணீர் யானைகளுக்குத் தேவைப்படுகிறது. இத்தகைய உணவு மற்றும் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான யானைகளது மரபுரீதியான செயற்பாடுகள், காட்டையும் ஏனைய விலங்குகளையும் – அதனால் உலகத்தின் சுற்றுச்சூழல் வளங்கள் அனைத்தையும் தொடர்ந்து பேணிப் பாதுகாப்பனவாகவும் பெருக்குவனவாகவும் அமைந்துள்ளன.’என வனவிலங்கு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இயற்கையும் யானைகளும்
யானைகள் அதிகமானளவில் மரங்களிலிருந்து இலை, தழைகளைப்பறித்து உண்ணும் செயற்பாட்டினால் சூரிய வெளிச்சமானது, காடுகளின் தரைப்பகுதிக்கு ஊடுருவிச் சென்று, சிறியபுல், பூண்டுகள் வளர உதவிபுரிகின்றன. அதேநேரம் இவ்வாறு பூமியில் வளரும் புல், பூண்டுகளை அடியோடு பிடுங்கி யானைகள் உண்பதனால் காட்டின் தரைப்பகுதியில்; காற்றுச்சுற்றோட்டம்; அதிகரிக்கப்பட்டு; மீளவும் புதியபுல், பூண்டுகள் வளரவும் இவை வழி சமைக்கின்றன. இன்னொருபுறம் காடுகளின் மூத்தகுடிகளான யானைகளுக்குக் காட்டுப் பகுதிகளில் நீர்வளம் இருக்கும் இடங்கள் தெரியும் என்பதுடன், வெப்பமான காலங்களில் நீரைப் பெற்றுக் கொள்ள யானைகள் தோண்டும் தண்ணீர்ப்; பள்ளங்கள், அவற்றுக்கு மட்டுமன்றி ஏனைய வனவாழ் விலங்கினங்களுக்கும் உதவுகின்றன.
‘காடுகளின் தோட்டக்காரர்’ என அழைக்கப்படும் யானைகள். நாள் ஒன்றுக்கு சுமார் 30 கி.மீ. இடம் பெயர்வதன் மூலம், அங்கெல்லாம் தனது கழிவுகளால் ஊட்டச்சத்துடன்கூடிய விதைப் பரவலைச் செய்கிறது. யானைகளின் லத்தியில் (மலத்தில்) முளைதிறன் உள்ள விதைகளும் – ஊட்டமான உணவுக் கழிவுகளும் புதிய தாவரங்கள் முளைத்து காடுகளை மேலும் வளமாக்க உதவுவகின்றன் அவை வனங்களுக்கு உரமாகின்றன் லத்தியில உள்ள தாது உப்பு பூச்சிகளுக்கு உணவாகின்றன் சூடான லத்தி பட்டாம்பூச்சி போன்றபூச்சிகள் அமர்ந்து குளிரைபோக்க உதவுகின்றன. மேலும்; ‘காடுகளிலிருந்து ஒருபங்கு உணவைப் பெற்றால் பத்துமடங்கு உணவுற்பத்திக்குத் தேவையான மரம், செடிகளை மறைமுகமாக உற்பத்தி செய்கின்றன. என வனவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, அடர்ந்தகாடுகளில் யானைகள்; கூட்டம் கூட்டமாகப் பயணம் செய்வதனால் ஏற்படுத்தப்படும் வழித்தடங்கள் சிறிய விலங்கினங்களுக்கும் – மனிதர்களுக்கும் காட்டில் பயணப்பாதையை உருவாக்கித் தருகின்றன.
‘ஒரே ஒரு யானை சாப்பிடுறதுல இருந்து ஒரு காடே உருவாகும் . ஒரு யானை, ஒரு நாளைக்கு 200 – 250 கிலோ உணவு சாப்பிடும். சராசரியா அதனோட உடல் எடையில இருந்து 5 சதவிகித உணவை சாப்பிடும். ஒரு நாளைக்கு ஒரு யானை 100 – 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். இந்த 250 கிலோ உணவுங்கிறதுல, 10 சதவிகிதம் விதைகள் இருக்கும். அதாவது 25 கிலோ விதைகள், குச்சிகள் இருக்கும். அதுல கடைசிக்கும் கடைசியா 10 கிலோ விதைகளும் குச்சிகளும் திரும்ப மண்ணுல விதைக்கப்படும். நினச்சுப் பாருங்க, ஒவ்வொரு யானையும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 கிலோ விதைகளை விதைக்குது, என எண்ணிக்கையில சொல்லணும்னா, சராசரியா ஒரு யானை ஒரு நாளைக்கு 300 – 500 விதைகளை விதைக்குது…’
வனவிலங்கு மருத்துவர் கலைவாணன் புள்ளி விவரங்களை சொல்லிமுடிக்கும்போது, அந்தப் பேருயிரிகளின் பிரமிக்கவைக்கும் பரிமாணத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.
குப்பைகளை உண்ணும் யானைகள்
இவ்வளவு நன்மையையும் இயற்கைக்கும் மனிதனுக்கும் வழங்கும் யானைகளுக்கு உணவாக அண்மைக் காலங்களில் குப்பைகள், பொலித்தீன்கள், பிளாஸ்ரிக்பொருட்கள் உள்ளிட்ட இரசாயனக் கழிவுப் பொருட்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளமை யானைகளின் இருப்பின் மீது மாபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இவையானைகளின் இறப்புவீதத்தை அதிகரிக்கும் பிரதான காரணிகளுள் ஒன்றாக இன்று காணப்படுகின்றன.
உதாரணமாக இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் பெருமளவான காட்டுயானைகள் குப்பைமேடுகளைத் தேடி உணவுக்காக வருகின்றன. சம்மாந்துறை, கல்முனை, காரைத்தீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு ஆகியபகுதிகளில் சேகரிப்படும் குப்பைகள் அவற்றை அண்டியுள்ள அஷ்ரப்நகருக்கு அருகிலுள்ள பகுதிகளில் கொட்டப்படுகிறது. ‘குறித்த குப்பைமேடுள்ள பகுதிகளுக்கு அதனை அண்டிய காட்டுப்பகுதிகளிலிருந்து தினமும் சுமார் 25 – 30 யானைகள் அவற்றை உணவாக உட்கொள்ள வருகின்றன.’ எனக் கூறப்படுகிறது. .முன்னர் குறித்த குப்பைமேட்டினை அண்டியபகுதிகளில் யானைப் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றை யானைகள் சேதமாக்கியுள்ளன. அதனால் தற்போது யானைகள் எவ்விததடையுமின்றி குப்பைமேடுகளுக்கு வந்து அங்குள்ள கழிவுப்பொருட்களை உட்கொள்கின்றன. அவற்றில் ஆபத்தான பிளாஸ்ரிக்பொருட்கள், உடைந்த கண்ணாடிப்போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களும் காணப்படுகின்றன. அதேவேளை குப்பைமேட்டைத் தேடி உணவுக்காக வரும் யானைகள் பின்னர் அங்கிருந்து அருகிலுள்ள மக்களின் விவசாயநிலங்களை நோக்கி நகர்ந்து விவசாய நிலங்களை நாசம் செய்வதுடன், ஊர்மனைக்குள் புகுந்து மனிதர்களுக்கும் ஆபத்து விளைவிக்கின்றன.
இவ்வாறு கழிவுப்பொருட்களை உட்கொண்டதனால் இறந்த யானைகளைப் பரிசோதித்தபோது, அவற்றின் வயிற்றிலிருந்து ஜீரணமாகாத பொலித்தீன்கள் ,பிளாஸ்ரிக்பொருட்கள் முதலிய ஆபத்தான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் அந்த யானைகளின் இறப்பிற்கு குப்பை நுகர்வு காரணமாக தான் யானை நோய்த்தொற்றுக்கு ஆளானது மற்றும் அதற்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே யானைகளை இவற்றிலிருந்து பாதுகாக்கவேண்டிய நிலைமை வந்துள்ளது. அவ்வகையில் இவ்வாறு குப்பைமேடுகளை நாடிவரும் யானைகளைத் தடுக்குமுகமாக ‘கழிவுப்பொருட்களை அகற்றும் இடங்களில் யானைகள் நடமாடுவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்’ எனும் தலைப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் திகதி நடைபெற்ற அமப/17/1057/708/014 எனும் அமைச்சரவைக் கூட்டத்தில், கழிவுப் பொருட்களைக் கொட்டும் இடங்களுக்கு யானைகளை வராமல் தடுப்பதற்கு மின்சார வேலிகளை நிர்மாணித்தல், அதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு உள்ளூராட்சிச் சபைகளுடன் தொடர்பை ஏற்படுத்தல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது விசனம் தருவதாகும்.
அத்துடன் வனஜீவராசி வலயத்திற்கு அண்மையான பகுதிகளில், 54 இடங்களுக்கும் மேலாக தொடர்ந்தும் கழிவுப் பொருட்கள் கொட்டப்படுவதாகவும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளில் சுமார் 300 யானைகள் வரை நடமாடுவதாகவும் கணக்கெடுப்பொன்று சுட்டிக்காட்டுகின்றது. ஆகவே இவை தொடர்பான விழிப்புணர்வு அரச, சமூக மட்டத்தில் உடனடியாக ஏற்படுத்தப்படுவதுடன் விரைந்து செயற்படுத்தப்படவும் வேண்டும். இவற்றை மாற்றி அமைக்கத்தக்க சுற்றுச் சூழலியல் சார்ந்த வியூகங்கள் அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அவற்றை நிறைவேற்ற சுற்றுச்சுழல் ஆர்வலர்கள், துறைசார் நிபுணர்கள்,மற்றும் அதிகாரிகளுடன் பொதுமக்களும் இணைந்து பொறுப்புணர்வுடன் செயற்படுவது உடனடித் தேவையாகும்.