யாழ் பழங்கால ஒளிப்படக் கண்காட்சி – ஒரு கண்ணோட்டம்

விடுமுறை நாளில் எப்போதாவது மனம் வந்து,  குழந்தை சாப்பிட்ட இடம்போல காட்சிதரும் நம் அறையைச் சுத்தப்படுத்தி,  சிந்திக் கிடக்கும் பொருட்களை அடுக்கி வைக்க முடிவெடுப்போம். உலகத்துக்கே அறிவித்துவிட்டு, அறையை அடுக்க  உட்கார்ந்து அலமாரியைக் குடைவோம். எங்கிருந்தோ ஒரு பால்யவயதுப் புகைப்படம் கையில் அகப்படும். அந்தப் புகைப்படம் அந்தக் காலத்துக்கே எம்மை எடுத்துச்செல்லும். அந்த நாள் முழுவதுமே அதே புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருப்போம். அந்த நாட்களின் கதைகளை அசை போடுவோம். மெல்லிதாய்ப் புன்னகைப்போம். நாம் விரித்துப்போட்ட அறை, அநாதையாய்க் காத்திருக்கும்.

கறுப்பு வெள்ளைக் கதைகள்

போனமாதம் பிறந்த குழந்தை செல்பி எடுப்பதற்குக்கூடக் குட்டிக் கையளவு கமெராக்கள் வந்துவிட்ட காலத்திலும்,  பழைய படங்கள் ஏற்படுத்தும் பேருவகை, உணர்ச்சிகளின் வலிமை இன்னும் குறையவில்லை. வீட்டில் கறையான் அரித்தது போக, மிஞ்சிக் கிடக்கும் ஒன்று இரண்டு புகைப்படங்களே எம்மை காலப்பயணம் செய்யவைக்கும் என்றால், ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் பழைய படங்கள் என்னவெல்லாம் மாயம் செய்யும்?

‘யாழ் ஒளிப்பட சமூகம்’ ஒழுங்கு செய்திருந்த ‘யாழ்ப்பாணத்து பழங்கால ஒளிப்படங்களின் திருவிழா 2020’ கண்காட்சி கடந்த ஜனவரி 24லிருந்து யாழ் மத்திய கல்லூரி வளாகத்தின் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது. மக்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, நீட்டிக்கப்பட்டு நடைபெற்று முடிந்த அந்தக் கண்காட்சிக்கு நான் போக முடிவெடுத்தபோது, பெரிதான எதிர்பார்ப்பு இருக்கவில்லை. ஆனால், நேரில் சென்று பார்த்தபோது நான் அடைந்தது பிரமிப்பு.

வெறுமனே வீடுகளின் பரண்களில் தூங்கும் பழைய கருப்பு வெள்ளை ஒளிப்படங்களை சேகரித்துக் கொண்டுவந்து காட்சிப்படுத்துவதை மட்டும் அவர்கள் செய்யவில்லை. ஒரு முழுமையான தேடலைச் செய்திருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் ஒளிப்படக்கலை முகிழ்த்த காலத்தின் அத்தனை தடயங்களையும் எடுத்துக் கொண்டுவந்து நம்முன் கொட்டியிருக்கிறார்கள்.  ஒருவித நிறுவன மயப்படுத்தப்பட்ட பின்புலமும் இல்லாமல், வெறுமனே ஒளிப்படக் கலையில் ஆர்வமுள்ளவர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஒன்றிணைந்து, பணம் சேர்த்து, ஊரெல்லாம் திரிந்து, பல்லோரிடம் கெஞ்சி மன்றாடி, எத்தனையோ இடர்களுக்கு மத்தியில் செய்து முடித்திருக்கும் இந்தக் கண்காட்சி, உண்மையில் இலங்கையின் முக்கியமானதொரு கூட்டுக் கலாமுயற்சி.

ஒளிப்படங்களும் கண்காட்சிக்கூடமும்

மக்நீசியத்தை எரித்தால் பிரகாசமான வெளிச்சம் வரும். ஆரம்பகாலத்தில் ஒளிப்படங்கள் எடுக்கும்போது வெளிச்சத்துக்காக, ஒளிப்படம் எடுப்பவர் ஒரு மக்னீசிய விளக்கை எரிப்பார். பிரகாசமான வெளிச்சத்தோடு, அதிலிருந்து வெளிவரும் அடர்த்தியான வெள்ளை நிறப் புகையைக் கண்ட தமிழன், போட்டோகிராபுக்குத் தமிழில் பெயர் வைத்தான் : புகைப்படம். நாம் ஒளிப்படம் என்றே பயன்படுத்தலாம். ஒளியின் படம்தான் ஒளிப்படம். ‘’பொருளில் இருந்து வரும் ஒளியால்தானே பொருள் தெரிகிறது, அந்த ஒளியை எங்கேனும் பதிவு செய்தால், அந்தப் பொருளை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாமே..’’ என்று யாரோ ஒருவர் சிந்தித்ததன் விளைவுதான் இன்றளவில் உலகத்தின் முக்கியமான சில கலை வடிவங்களின் ஆதாரமான ஒளிப்படக்கலை.

கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ஆர்மபகால கமேராக்கள்.
பட  உதவி : தர்மபாலன் திலக்சன்

கண்காட்சியில் ஏராளமான ஆரம்பகாலக் கமெராக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுதான் எனக்கு மிகப்பெரும் ஆச்சரியம். இவையெல்லாம் யாழ்ப்பாணத்தில் இருந்தனவா? என்று மறுபடி மறுபடி கேட்டுக் கொண்டே இருந்தேன்; எனக்குச் சுற்றிக்காட்டிய நண்பர் சலித்துப்போகும் அளவுக்கு. மிக அடிப்படையான, மிக இலகுவான கமெராக்கள் அவை. மரத்தால் செய்யப்பட்டவை. ஆனால் அவை ஒவ்வொன்றையும் இயக்கம் முறைகளை அவர்கள் புரியவைத்தபோது ஆச்சர்யம் இன்னும் இன்னும் அதிகரித்தது.

கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த ஆர்மபகால கமேராக்களின் இயக்குமுறை  பற்றி வருகை தந்த பார்வையாளர்களுக்கு விளக்கப்படுகிறது
பட  உதவி : தர்மபாலன் திலக்சன்

பொறிமுறை இலகுதான் என்றாலும் சரியான ஒளிப்படத்தை எடுத்து விடுவது என்பது அத்தனை இலகுவானது அன்று. இப்போது போல எடுத்த படத்தை மறுபடி பார்க்க முடியாது. ஒருமுறை எடுத்தால் எடுத்ததுதான். அது சரிவந்தால் அதிர்ஷ்டம், சற்றே பிசகினாலும் அது மீள முடியாத இழப்புத்தான். ஆனால் அந்தக் கருவிகளைக் கையாண்டு, அவற்றின் பக்குவத்தை தம் கை லாவகத்துக்குள் கொண்டுவந்து நம்மவர்கள் இயங்கியது மட்டுமல்லாது, அந்தக் கமேராக்களை தமது அறிவைப் பயன்படுத்தி இன்னும் இன்னும் நவீனப் படுத்தி இருக்கிறார்கள். வெவ்வேறு தேவைகளுக்காய் மாற்றி அமைத்து இருக்கிறார்கள். அவர்களே பிசகுகளைத் திருத்தியும் இருக்கிறார்கள்.

பழங்கால புகைப்படங்களை புதிய தலைமுறையின் சிறுவன் பார்வையிடும் காட்சி.
பட உதவி: தர்மபாலன் திலக்சன்

கஜினி படத்தில் சூரியா பயன்படுத்துவாரே, படத்தை எடுத்த கணமே அதை அச்சிட்டுப் புறந்தள்ளும் போலரோய்ட் கமெரா..  அது இருந்தது. வெவ்வேறு காலகட்டங்களின் கமெராக்கள் இருந்தன. அவற்றை கால வரிசையில் அடுக்கினால் அப்படியே கமெராக்கள் வளர்ந்த விதத்தை நம் கண்முன்னே பார்க்கலாம். இடையில் ஒன்றிரண்டு விடுபடாது அத்தனை காலத்தின் கமேராக்களையும் தேடி எடுத்துக் காட்சிப் படுத்தியிருந்தார்கள். அதுபோலவே கறுப்பு வெள்ளை படங்களை வர்ணமாக்கும் இரசாயனக் கலவைகள்,  வெவ்வேறு அளவிலான படங்களை அச்சிடும் தாள்கள், லென்ஸ்கள், காலம் தோறும் பிரகாச ஒலிக்குப் பயன்படுத்திய ஃபிளாஷ்கள், வெவ்வேறு வண்ண பில்டர்கள், ஒளி முறிவு, தெறிப்பு மூலம் படங்களில் மாயம் செய்யும் கண்ணாடிக் குற்றிகள், படங்களை டெவலப் செய்யப் பயன்படுத்திய கருவிகள், எல்லாம் இருந்தன.

யாழ்ப்பாண பழங்கால ஒளிப்படங்கள்

எல்லாவற்றுக்கும் முக்கியமாக – எத்தனையோ ஒளிப்படங்கள்.. வெவ்வேறு காலப்பகுதிகள்…. எத்தனை எத்தனையோ கதைகள்.. சில படங்கள் நினைவில் அப்படியே அச்சாகி விட்டன.

கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களில் சில.
  1. அவுட்டோர் போட்டோகிரபி பெரிதாக இல்லாத அந்தக் காலத்திலேயே, ஒளி அமைப்பை எல்லாம் சரியாகக் கருதி, ஒரு வளைந்த புகையிரதப் பாதையையும், அதில் ஓடும் புகையிரதத்தையும் ஒருவர் ஒளிப்படம் எடுத்திருக்கிறார். கண்காட்சியில் பலரையும் கவர்ந்த படம் அதுதான்.  ஒளிப்படவியலின் சில ஆரம்ப பாடங்களை அவர் முயன்று வென்றிருந்த விதம் ஆச்சர்யம்.
  2. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் ஆடை அணிமுறையைக் காட்டும் பல படங்கள் இருந்தன. ஒரு தாயும் மகளும் முழுமையாகச் சிங்காரித்து நிற்கும் ஒரு புகைப்படம் அத்தனை அழகு. வெவ்வேறு நாடுகளின் தோல் நிறங்கள், ஆடை வகைகள், முகத்தின் அம்சங்கள் நம்மவரிடையே முற்றாகக் கலக்க முன்னமாக வாழ்ந்த மனிதர்களின் உண்மை முகம். தமிழ் மைய மொழிக்குடும்பத்தின் மனிதர்களின் உடல் அமைப்பும் அதற்கேற்ற அலங்காரங்களும், உண்மையில் ஒரு தனிக் கலாவடிவம்.
  3. உடம்பு புரட்டுவது (உடும்பு பிடிக்கிறது – உடம்பு பிடிப்பது) குழந்தைகளின் வளர்நிலையின் ஒரு முக்கிய மைல்கல். அதை கட்டாயமாக ஆவணப்படுத்துவது நம் குடும்பங்களில் இன்றளவும் வழக்கம். ஆகவே, என்ன இருக்கிறதோ இல்லையோ, எல்லா வீடுகளிலும் நன்றாக பிரேம் செய்து மாட்டப்பட்ட உடம்பு புரட்டும் படம் இருக்கும். அப்படியான படங்கள் வெவ்வேறு காலப்பகுதிகளில் இருந்து சேர்த்து வைத்திருந்தார்கள். இன்றளவில் இறந்து மண்ணாகிவிட்ட – அல்லது எங்கோ ஊர்த் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு ஊர்ப் பலயரம் பேசிக் கொண்டு இருக்கின்ற தொண்டு கிழங்களின் புகைப்படங்கள்தான் அந்த ‘கொழுக் மொழுக் குழந்தைப் படங்கள்’ என்பது ஒரு சுவாரஷ்யம்.
  4. சோற்றுக் கல்யாணம் என்பது யாழ்மையத் தமிழர் கல்யாண வழக்குகளில் ஒன்று. மணமகனுக்கு, மணமகள் சோறு பரிமாறினாலே, அது கல்யாணம்தான். டானியல் கதைகளில் வாசித்து நினைவிருந்த அந்த யாழ்ப்பாண வழக்கம், இந்தக் கண்காட்சியின் புகைப்படங்களைப் பார்த்தபோது நினைவில் வந்தது. மாலையோடு ஒரு மணப்பெண் பரிமாற, முகமெல்லாம் பூரிப்போடு உணவுக்குத் தயாராகின்றார் மாப்பிள்ளை.
  5. போட்டோ எடுத்தால் ஆயுள் குறையும்” என்ற விஞ்ஞான உண்மை காரணமாக, முதியோர் புகைப்படம் எடுக்கப்படுவதை அனுமதிப்பதில்லை. தம்வீட்டு ஆடு – மாடுகளையும் போட்டோ எடுக்கமாட்டார்கள். இந்த வழக்கம் இன்றைவரை இருக்கிறது. கிடுகு வேலியின் பின்னணியில், ஒரு புல்லுப் பாயில், மேலே ப்ளவுஸ் இல்லாமல்  வெள்ளைச் சேலை உடுத்து உட்கார்ந்திருக்கும் ஒரு விதவை மூதாட்டியின் படத்தில் நாம் பார்ப்பதற்கும், படிப்பதற்கும், குறைந்தது பத்து வாழ்வியல் விஷயங்கள் இருக்கின்றன.
  6. இன்று என்று இல்லாது, அந்தக் காலத்திலேயே எத்தனையோ புதுமைகளை முயன்றிருக்கிறார்கள். கடற்கரையில் வலைவீசும் மீனவனை, அந்த இயற்கை வெளிச்சத்தில், வலைவீசும் வேகத்தை அழகாகப் பதிவு செய்து இருந்த படம் மிகவும் தெளிவாக இருந்தது. கண்டிட் (ஏற்பாடு அற்ற) ஒளிப்படங்களும் எடுக்கப் பட்டிருக்கின்றன. படங்களை ஓட்டுவது, ஒளியியல் அடிப்படை விதிகளை வைத்து சில விஷயங்களைக் கண்ணுக்கு ஏமாற்றுவது, வெளிச்ச அமைப்பை வைத்தே பாவங்களை – உணர்ச்சிகளைக் காட்டுவது என்று என்னவெல்லாமோ முயன்று வெற்றியும் பெற்று இருக்கிறார்கள்.
  7. பெரும்பாலான படங்களில் வெள்ளையர் முகங்கள். புரிந்துகொள்ளக் கூடியதுதான். நம்மவருக்குக் கமெராவை அவர்கள்தானே அறிமுகப்படுத்தி இருப்பார்கள். வெள்ளையர்கள் நடத்திய பாடசாலைகளில் நிகழ்வுகளை, ஆசிரிய – மாணவர்களை ஒளிப்படம் எடுப்பதற்காகத்தான் யாழ்ப்பாணத்துக்கு முதன் முதலில் கமெரா வந்திருக்கும் என்பதையும் ஊகிக்க முடிகிறது.
கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களில் சில.

நூற்றுக்கணக்காக படங்கள். முக்கியத்துவம் குறைந்ததால் விட்டுத் தாண்ட ஒரு படம் இல்லை. படம் என்பது, சொல்லால் முடியாக் காட்சிப்படுத்தல். படத்தை மீண்டும் சொல்லால் வர்ணிப்பது முட்டாள்தனம். பார்க்கத்தானே படங்கள். கேட்காக் கதைகளை எல்லாம் சொல்லத்தானே அவைகள்.

எதிர்பார்ப்புகளும் வாழ்த்துகளும்

கடைசியில், கண்காட்சியை நடத்தியவர்களுக்கு சில வேண்டுகோள்கள். குறுகிய காலத்தில், வரையறுக்கப்பட்ட வளங்களை வைத்துக்கொண்டுதான் இந்தளவு செய்து முடித்தார்கள் என்பதை அறிவேன். ஆனால், அடுத்தடுத்த கண்காட்சிகளில் பின்வருவனவற்றையும் செய்தார்களாயின், உண்மையாகவே அது சமூகத்துக்குச் செய்யும் ஒரு பங்களிப்பாக இருக்கும்.

  1. ஒளிப்படங்கள் எடுக்கப்பட்ட இடம் – காலம் போன்ற தகவல்களை முடிந்தளவு சேகரித்தால், படங்களை ரசிக்க இன்னும் உதவியாக இருக்கும். பெரும்பாலான படங்கள் எடுத்தவரைக் கடந்து சில தலைமுறைகள் தாண்டித்தான் நம் கைக்கு வந்திருப்பதால் முழுமையான தகவல்கள் இல்லைதான். ஆனால் இன்றளவில் இருக்கும் மூத்தோரிடம் காட்டினாலே அந்தப் படங்ககளில் இருக்கும் கட்டிடங்கள்/கார்கள்/ஆடைகளை வைத்து ஓரளவு காலத்தையும் இடத்தையும் சொன்னார்களாயின், அதுவே போதுமானது.
  2. கமெராக்களையும் காலம், முக்கிய பொறிமுறை வகை சார்ந்து சிறிய விளக்கங்களோடு காட்சிப்படுத்தியிருந்தால் நன்றாக இருக்கும்.
  3. இன்னும் எத்தனையோ ஒளிப்படங்கள் வெவ்வேறு இடங்களில் வீடுகளின் ட்ரங்குப் பெட்டிகளிலும் பரண்களிலும் கறையானுக்கும் மழைநீருக்கும் அழிகின்றன. ஒரு நடமாடும் சேவையாக முக்கிய ஊர்களில், படங்களை சேகரித்து மென்பிரதி எடுக்கும் பணியைச் செய்யலாம். குறுகிய அளவு நிதியும், பெருமளவு மனித உழைப்பும் தேவைப்படும் வேலை இது.

தமிழர்கள் வெவ்வேறு இடப்பெயர்வுகளை வெவ்வேறு காலத்தில் சந்தித்தவர்கள். எந்த நேரமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்ததால் இழந்த பொக்கிஷங்களில் முக்கியமானவை பழைய ஒளிப்படங்கள். பழைய ஒளிப்படங்கள் வெறும் ஞாபகங்கள் அல்ல. அவை குடும்பங்களின் வரலாறுகள், எம் பண்பாடு வளர்ந்த விதத்தின் ஆவணங்கள். அவற்றை முறையாக இலத்திரனியல் ஆவணப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகத்தான் இந்தக் கண்காட்சியை இவர்கள் ஒழுங்கு செய்திருந்தார்கள். நம் வீடுகளில் யுத்தம், சுனாமி, வெள்ளம் காவு கொண்டது போக, எஞ்சி இருக்கும் சொற்பப் புகைப்படங்களையாவது ஒழுங்காகப் பராமரிப்போம், மறக்காமல் மென் பிரதி எடுத்து வைத்துக்கொள்வோம். யார் கண்டது, நம்மிடம் அது மட்டுமே மிஞ்சிப் போகலாம்.  கடந்தகாலத்தை கேள்வி, எதிர்வாதம் இல்லாமப் நிரூபிக்கக் கூடிய ஒரே ஆவணம் ஒளிப்படம்தானே.

Related Articles

Exit mobile version