ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொண்டாடப்படும் சித்திரைப் புத்தாண்டானது இலங்கையில் கொண்டாடப்படும் பண்டிகைகளிலேயே விசேடமானது. மற்றைய அனைத்து பண்டிகைகளுக்கும் வெறும் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்படும் அதே நேரம், சித்திரை புத்தாண்டுக்கு குறைந்தது ஒரு வார விடுமுறையாவது அநேக நிறுவனங்களிலும் வழங்கப்படுகிறது. பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் அனைவரும் ஒன்றாக இருந்து மிகக் குதூகலமாக கொண்டாடும் பண்டிகை இதுவாகும்.
புத்தாடைகள் அணிவது,சுவையான பலகாரங்களை தயாரிப்பது, உற்றார் மற்றும் உறவினர் வீடுகளுக்கு விஜயம் செய்வது, பரிசுப்பொருட்களை வழங்குவது, குடும்பத்துடன் கோவிலுக்குச் செல்வது போன்ற பல சுவாரஸ்யமான அங்கங்களைக் கொண்டது சித்திரைப்புத்தாண்டு. புத்தாண்டுக் கொண்டாட்டங்களைப் போலவே புத்தாண்டு ஷொப்பிங்கும் குடும்பங்களை குஷிப்படுத்துகின்றது. கொண்டாட்டங்கள் என்றாலே பரிசுப் பொருள்கள் இல்லாமலா! கொண்டாட்டத்தின் வெளிப்பாடே தன்னைக் கொண்டாடுவதுதானே. எனவே அன்பான வாசகர்களே புத்தாண்டு ஷொப்பிங் செல்லும் நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான 10 விடயங்களைக் முதலில் கவனிப்போம்.
01. திட்டமிடலும் பட்டியலும்.
புத்தாண்டுக்காக ஷொப்பிங் செல்வதற்கு முன்னதாகவே, நீங்கள் கொள்வனவு செய்ய வேண்டிய பொருட்களை பட்டியலிடுதல் மிகவும் அவசியமான ஒன்று. இதுதான் உங்கள் கொண்டாட்டத்தை தீர்மானிக்கும் முதல் அளவுகோலாக இருக்கும். இந்த திட்டமிடல்தான் உங்கள் பணத்தையும் நேரத்தையும் அதிக அளவில் சேமிக்க உதவும். எந்த திட்டமிடலும் இன்றி ஒரு கொண்டாட்டத்தை தொடங்குவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதில் போய் முடியும்.
எந்த முன்னாயத்தமுமின்றி பொருள்களை வாங்கச் செல்லும்போது காணும் பொருட்களையெல்லாம் ஒரு குழந்தை போல் வாங்கிக்கொள்ளத் தூண்டுவது இயல்பேயாகும். விளைவு, பணம் வீண் விரயமாகும். சிலநேரங்களில் தள்ளுபடியில் கிடைக்கிறதே என குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்தாலும் அவற்றை நாம் அதிகமாக பயன்படுத்துவதில்லை. வீணாக வீட்டில் இடத்தை முடக்கிக்கொண்டிருக்கும். வேண்டுமென்றால் உங்கள் வீட்டை ஒரு முறை நன்கு நோட்டமிடுங்கள் சென்ற கொண்டாட்டத்தில் வாங்கிய பொருள் அப்படியே ஒரு குப்பையைப் போல் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும்.
எனவே எந்தப் பொருளையும் தேர்ந்தெடுக்கும் முன் அது நமக்கு தேவையான ஒன்றா என்பதை சிந்திப்பதோடு, அது இல்லாமல் நாம் அவஸ்தைப்படுகிறோமா, அப்பொருள் இல்லாமல் நமது வேலை ஏதேனும் தடைபட்டுள்ளதா? இல்லை நேரம் விரயமாகியுள்ளதா? வாங்கும் பொருள் நமக்கு உண்மையிலேயே தேவையான ஒன்றா? இல்லை விளம்பரங்களின் ஈர்ப்பில் அது நமது தேவை போல் தோன்றுகிறதா? அதுவுமில்லையென்றால் அது நமது வீண் கௌரவப் பெருமையை வளர்த்து நமது பணத்தைத் திருடக் காத்திருக்கிறதா! என்று மனம் விட்டு யோசித்து ஒரு பொருளை வாங்க வேண்டும். எனவே தேவையான பொருட்களை பட்டியலிட்டு ஷொப்பிங் செய்யுங்கள். தேவையற்ற சிரமங்களை தவிருங்கள்.
02. நேரத்தை முன்னதாகவே திட்டமிடல்.
எப்பொழுதும் கடைசி நாள் வரை காத்திருக்காமல் சற்று முன்னதாகவே ஷொப்பிங் செல்ல திட்டமிடுங்கள். அநேகமான கடைகளில் மார்ச் மாதத்திலிருந்தே புத்தாண்டு சலுகைகளை வழங்க ஆரம்பித்துவிடுகிறார்கள். உங்களுக்கு வேண்டியவாறு பொறுமையாகவும் நிம்மதியாகவும் ஷொப்பிங் செய்யலாம். கடைகளில் வாடிக்கையாளர்கள் அதிகமாக இருக்கும்போது ஊழியர்களால் சரியாக உங்களை கவனிக்க முடியாமல் போகலாம். கொஞ்சம் முன்னதாக ஷொப்பிங் செய்யும்போது வேலைபார்க்கும் ஊழியர்களும் மிகப் பொறுமையாகவும் உற்சாகத்துடனும் உங்களுக்கு தேவையான சேவையை வழங்குவார்கள். புத்தாண்டுக்கான நாட்கள் நெருங்க நெருங்க நெருக்கமும் புழுக்கமுமாய் புத்தாண்டு ஷொப்பிங், மகிழ்வானதொரு அனுபவத்தை வழங்காது. மேலும் இறுதி நாளெனக் கழித்துக் கட்டும் பொருட்களை விற்பனையாளர்கள் நம் தலையில் கட்ட நேரிடும்.
ஷொப்பிங் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் குறைவான நேரங்களை தெரிவு செய்யுங்கள். நேரம் அதிகளவில் சேமிக்கப்படும். நேரத்தை திட்டமிட்டு ஆனந்தமான ஷொப்பிங்கிற்கு ஆயத்தமாகுங்கள்.
3. விலைக்கழிவுகள் பற்றிய தகவல்களை அறிந்திருத்தல்
புத்தாண்டு நெருங்கும் போதிருந்தே வியாபாரிகள் விலைக்கழிவுகளையும் சலுகைகளையும் பத்திரிக்கைகள், தொலைகாட்சி,வானொலி மற்றும் சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தியிருப்பார்கள். எனவே உங்களுக்கு தேவையான பொருட்களுக்கு எங்கெங்கு என்னென்ன விதமான விலைக்கழிவுகளை வழங்குகின்றனர் என்பதை அவதானியுங்கள். பின்னர் அவற்றை ஒப்பீடு செய்து நீங்கள் எங்கே குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்யலாம் என்பதை முடிவு செய்யுங்கள்.
04. ஷொப்பிங் செய்யும்போது விலைக்கழிவுள்ள பொருட்கள் பகுதியை முதலில் பார்வையிடுங்கள்.
ஷொப்பிங் மால்களில் பண்டிகை காலங்களில் விசேட விலைக்கழிவுகள், பண்டிகை ஆஃபர் ஆகியவை உள்ள பகுதிக்கு முதலில் செல்லுங்கள். சில நேரங்களில் ஆஃபரில் உள்ள பொருட்களையே அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்யநேரும். இதை தவிர்க்கவே இந்த வழி. உங்கள் பட்டியலிலுள்ள பொருட்கள் ஆஃபர் பகுதியில் இருக்குமாயின் நீங்கள் சலுகை விலையில் அப்பொருட்களை வாங்கி பணத்தை சேமிக்க முடியும்.
05.சலுகை விலைகளில் தரமான பொருட்களை கொள்வனவு செய்தல்.
நம்மில் அநேகமானோர் சலுகை விலையில் பொருட்கள் கிடைக்கும்போது அவற்றின் தரத்தினை பரிசீலிக்க மறந்து விடுகிறோம்.பண்டிகை காலங்களில்தான் அநேக அதிரடி வியாபாரிகள் போலியான தரக்குறைவான பொருட்களை உயர்ந்த விலைக்கழிவுடன் விற்பனை செய்கின்றனர். எப்போதும் தரமான பொருட்களை கொள்வனவு செய்தல் நமது கடின உழைப்பினால் சம்பாதித்த பணத்தினை வீண் விரயம் செய்வதிலிருந்து காக்கும். ஆகவே எப்போதும் தரத்தில் கவனமாயிருங்கள் .நீங்கள் வாங்கும் பொருள்கள் சந்தையிலிருந்தோ, அல்லது அப்பொருளை உபயோகித்தவர்களின் மோசமான விமர்சனங்களாலோ காலாவதியான ஒன்றாகக் கூட இருக்கலாம். கவனம்.
06. ஷொப்பிங் செய்யும்போது உங்கள் பொருட்கள் ,உடமைகள் மற்றும் பணத்தினை பாதுகாத்தல்.
புத்தாண்டு ஷொப்பிங் செய்யும் போது நீங்கள் அதிக சனநெரிசல் உள்ள கடைகள் மற்றும் மால்களுக்கு செல்ல நேரிடும். அதன் போது உங்கள் பணப்பைகள், கையடக்கத் தொலைபேசி மற்றும் பொருட்களை தவறவிடும் அல்லது திருடர்களிடம் பறிகொடுக்கும் வாய்ப்புகள் மிக அதிகம். முடிந்தவரை குறைவான பைகளை கையில் வைத்திருங்கள். அவற்றின் மீதான கவனம் அதிகமாக இருத்தல் நலம். ஷொப்பிங் செய்யும்போது கையில் வைத்திருக்கும் பைகளை ஒருமுறை எண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள். புதிய கடை ஒன்றுக்கு செல்லும்போது பைகளை கவுண்டரில் வைக்கும் போதும், எடுக்கும் போதும் சரியாக சோதித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். வாங்கிய பொருள்களில் ஒன்று காணாமல் போனாலும் அது உங்கள் கொண்டாட்டத்தை ஆரம்பத்திலேயே துக்ககரமான ஒன்றாக மாற்றிவிடும். எனவே இத்தகைய மோசமான அனுபவங்கள் ஏற்படுவதை நாம் தவிர்க்கலாம்.
07. கூட்ட நெரிசலில் குழந்தைகளை சமாளித்தல்.
குழந்தைகள் எப்போதும் சந்தோஷத்தை தருபவர்கள். எப்போதும் ஓடியாடி மகிழ்வுடன் இருக்கவே விரும்புவார்கள். நீங்கள் புத்தாண்டு ஷொப்பிங் செய்யும் பொது பல கடைகளுக்கு ஏறி இறங்குகையில் அவர்கள் மிகுந்த களைப்படைவார்கள். பசி, தூக்கம் , களைப்பு என அவர்கள் சோர்வடையலாம். எனவே குழந்தைகளை எந்தக் கடைகளுக்கு அழைத்து செல்வது என்பதை முதலில் தீர்மானியுங்கள். குழந்தைகளுக்கான பொருட்கள் வாங்க வேண்டுமெனில் அதை அவர்களுக்கான நேரமாக மட்டும் ஒதுக்குங்கள். அப்பொழுதுதான் அவர்கள் மீதான கவனம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். கண்ணாடி சம்பந்தப்பட்ட அழகுப் பொருட்கள், மற்றும் பீங்கான் பொருட்கள் வாங்கச் செல்ல வேண்டியிருந்தால், குழந்தைகளைத் தவிருங்கள். உங்களுக்கான பொருட்களை வாங்கச் செல்லும் போது குழந்தைகளை கவனிக்க முடியாமல் போக வாய்ப்பு இருக்கிறது.
08. ஐந்தாறு கடைகள் ஏறி இறங்குங்கள்.
நீங்கள் புத்தாண்டு ஷொப்பிங் செய்வதற்காக ஒரு கடையை மட்டும் தெரிவு செய்யாமல் ஐந்தாறு கடைகள் ஏறி இறங்குங்கள். அவ்வாறு செய்யும்போது வித்தியாசமான, பலதரப்பட்ட தெரிவுகளில் உங்களுக்கு பிடித்தவற்றை தெரிவு செய்யலாம். பொருட்களின் விலையும் கடைக்குக் கடை வேறுபடும். நீங்கள் விலைகளை ஒப்பீடு செய்து கொள்வனவு செய்யும் வாய்ப்பும் கிடைக்கும்.
09. உங்கள் சொந்த வாகனங்களில் ஷொப்பிங் செல்வதை தவிருங்கள்.
நீங்கள் பண்டிகை காலங்களில் ஷொப்பிங் செல்லும்போது உங்கள் சொந்த வண்டிகளில் பயணிப்பதை தவிர்ப்பது நல்லது, ஏனெனில் உங்கள் வாகனங்களை பார்க்செய்வதற்கான வசதி எல்லா இடங்களிலும் இருக்காது. பார்க்கிங் கிடைக்கும் வரை காத்திருப்பது, மீண்டும் வாகனத்தை வெளியில் எடுப்பதற்காக மற்ற வாகன ஓட்டுனர் அவரது வாகனத்தை நகர்த்தும் வரை காத்திருக்க வேண்டும். மேலும் பல சிக்கல்களை நீங்கள் சொந்த வாகனத்தில் செல்லும்போது முகம் கொடுக்க நேரும். ஆகவே இப்போது இலகுவாக கிடைக்கக் கூடிய டாக்சி சேவைகளை பயன்படுத்தி ஷொப்பிங்கை கொண்டாடுங்கள்.
10.கையில் பணம் வைத்திருங்கள்.
இப்போதெல்லாம் அதிகமாக க்ரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்வதையே அனைவரும் விரும்புகின்றார்கள். ஆனால் சில நேரங்களில் சில இடங்களில் கார்டுகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. கையில் பணம் ஆயத்தமாக இல்லாதவிடத்து நீங்கள் பொருட்களை வைத்து விட்டு பக்கத்திலுள்ள வங்கிக்கு அல்லது ATM இற்கு ஓட வேண்டும். இது ஒரு தேவையற்ற அலைச்சல். பணத்தைக் கொண்டு கொள்வனவு செய்வது கடனட்டைகளில் கொள்வனவு செய்வதை விட சிறந்தது. ஏனெனில் நீங்கள் செலவு செய்யும் பணத்தின் அளவு உங்களுக்குத் தெரியும். கடனட்டையில் வரையறையின்றி கொள்வனவு செய்துவிட்டு மீளச் செலுத்துகையில் சிரமப்பட நேரிடும். ஆகவே எப்போதும் வசதியாக பணத்தை கையில் பத்திரமாக வைத்திருங்கள்.
இறுதியாக இதையும் கவனத்திற் கொள்ளுங்கள்!
வாங்கும் பொருள் பொழுதைப் போக்கவா அல்லது உங்களது பொழுதை ஆக்கவா என யோசியுங்கள். அதில் எந்த சமரசமும் வேண்டாம். எதிர்காலக் குப்பையை இன்றே யாரேனும் காசு கொடுத்து வாங்குவார்களா?