உலகையே ஆக்கிரமிக்கும் சீனாவின் புதிய கொரோனா வைரஸ்

‘இதுவரை 4500 இற்கும் மேற்பட்டவர்கள் சீனா உட்பட உலகம் முழுவதும் இவ் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நூறுக்கும் அதிகமானோர் மரணத்தை தழுவியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.’

கொரோனா வைரஸ் – 2019-nCoV

சீனாவில் புதியதொரு தொற்றாக கொரோனா வைரஸ்  “2019-nCoV” என பெயரிடப்பட்ட வைரஸ் பரவிவருன்றது. கொரோனா வைரஸ் என்பது விலங்குகளுக்கும் மக்களுக்கும் இடையில் பரவும் வைரஸ்களின் பெரியதொரு குடும்பமாகும். இதுவரை 4500 இற்கும் மேற்பட்டவர்கள் சீனா உட்பட உலகம் முழுவதும் இவ் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நூறுக்கும் அதிகமானோர் மரணத்தை தழுவியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன (இவ் எண்ணிக்கைகள் நாளடைவில் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது). மேலும் சீனாவின் அதிபரான ஜி ஜின்பிங் அவர்கள், பல உடனடி எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும்  தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகும் (சீனாவில் வுஹான் நகரம் உட்பட 18 நகரங்களுக்கு போக்குவரத்து தடை விதிக்கப்பட்டு, அவை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது) தங்களால் இவ் வைரஸின் தொற்று மற்றும் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

  • இத் தீவிர நோய்த்தொற்றானது கடந்த வருடம் 2019 இல் டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கியது.
  • இப் புதிய வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் முக்கிய தீவிர அறிகுறியாக நுரையீரல் தொற்று மற்றும் சுவாசச் சிக்கல் என்பனவும், மேலும் தலைவலி, காய்ச்சல், இருமல், மூக்கிலிருந்து நீர் வடிதல் மற்றும் தொண்டை வலி ஆகியவை ஆரம்ப அறிகுறிகளாகவும் காணப்படும்.
  • நிமோனியா மற்றும் சுவாச தொகுதி நோயுடையவர்கள் இவ் வைரஸினால் மிக விரைவாக தாக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது.
உலகெங்கிலும் 4,500 க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் இனால் பாதிக்கப்பட்டுள்ளது  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் 106 பேர்வரை மரணத்தை தழுவியுள்ளனர், அவர்கள் அனைவரும் சீனாவைச் சேர்ந்தவர்களாவர்.  இலங்கை, கம்போடியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள்  நேற்றே இவ் வைரஸினால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியை பதிவுசெய்தன.
படஉதவி: www.dailymail.co.uk 

இவ் வைரஸானது சீனாவில் வனவிலங்குகள் மற்றும் கடல் உயிரினங்கள் மூலம் பரவியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. மேலும் இது வுஹான் நகரத்தில் மற்றும் அதன் அண்டிய பிரதேசங்களில் வாழும் இருவகையான பாம்புகளிடமிருந்தும் பரவியிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. ஆனால் இவை தான் காரணம் என இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.

இந்நோயானது சாதாரண தடிமன் மற்றும் சளிக்காய்ச்சல்களைப் போன்றதாக இருப்பினும் இவ் வைரஸுக்கான குறிப்பிட்டதொரு நோய்யெதிர்ப்பு மருந்து எதுவும் இதுவரை அறியப்படவில்லை. ஆகையால் இதற்கான தடுப்பூசிகளும் இதுவரை  வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவ் வைரஸுக்கனா நோய்யரும்பல் காலம் ஒன்று முதல் பதினான்கு நாட்களாகும். 

இலங்கையில் இவ் வைரஸினால் பாதிக்கப்ப்பட்டுள்ளார் என ஒரு சீனப் பெண்மணி ஜனவரி மாதம் 27ம் திகதி திங்கற்கிழமை அன்று முதன் முதலாக இனங்காணப்பட்டுள்ளார். இவர் சுற்றுலாப் பயணியாக வருகை தந்து பல சுற்றுலாத்தலங்களை பார்வையிடச் சென்றிருக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கும் சுவாச நோய்த்தொற்றுகளைத் தடுத்து கட்டுப்படுத்துவதற்கும் அவசியமான அனைத்து  சுகாதார நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறு சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.

எப்படி தடுக்கலாம்?

  • சன நெருக்கடியான இடங்களைத் தவிர்க்கவும்.
  • அடிக்கடி சவர்க்காரம் மற்றும் தண்ணீர் அல்லது மதுசாரம் சார்ந்த கிருமிநாசினிகளைக் கொண்டு கைகளை கழுவ வேண்டும்; அல்லது கை சுத்திகரிப்பான் (Hand Sanitizers) மூலம் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். 
  • இருமல் மற்றும் தும்மல் வரும்போது, வாய் மற்றும் மூக்குப்  பகுதியை கைக்குட்டைகள், திசு கடதாசிகள் கொண்டு மறைக்கவும், உபயோகித்த திசுக் கடதாசிகளை உரியமுறையில் பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும் மேலும் உடனடியாக கைகளை கழுவ வேண்டும். மற்றும் பயன்படுத்திய கைக்குட்டைகளை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு கிருமிநாசினி சவர்க்காரங்கள் அல்லது திரவங்களை உபயோகித்து கவனமாக கழுவ வேண்டும்.
  • கைக்குட்டைகள் அல்லது திசுக்கள் கிடைக்காவிடில் உங்கள் முழங்கைகளை மடித்து அதன் மடிப்பை உங்கள் வாய் மற்றும் மூக்கு பகுதியை மூட உபயோகிக்கவும். 
  • காய்ச்சல் மற்றும் இருமல் உள்ள எவருடனும் நெருங்கிய தொடர்புகளைத் தவிர்க்கவும்.
  • மேலும் மேலதிக பாதுகாப்பு கருதி, பாதுகாப்பு முகவுரை அணியுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
கொரோனா வைரஸுக்கு எதிராக பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதால் முகவுரை அணிந்தவர்களை காண்பது அன்றாடதொரு காட்சியாகிவிட்டது
படஉதவி: www.ft.lk/Shehan Gunasekara

கொரோனா வைரஸ் எவ்வாறு தொற்றுகிறது அல்லது பரவுகிறது?

கொரோனா வைரஸ் பொதுவாக பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து பிறருக்கு பின்வரும் வழிமுறைகள் மூலம் பரவுகின்றது

  • இருமல் மற்றும் தும்மலின் பொது வெளிப்படும் ஈரத்துளிகள் மூலம் காற்றில் கலக்கின்றன.
  • இவ் வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களை நேரடியாக வெற்றுக் கைகள் மூலம் தொடுதலினால் அல்லது அவர்களுடன் கை குலுக்குவதனாலும் பரவலாம்.
  • வைரஸ் தொற்றுள்ள பொருளொன்றை அல்லது மேற்பரப்பை வெற்றுக்கைகளால் தொட்டு பின்னர் (அக் கைகளை கழுவும் முன்) அதே கைகளால் உங்கள் வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடுவதன் மூலம் பரவலாம்.
  • அரிதானது என்றாலும் மலக் கழிவுகள் மூலமாகவும் பரவலாம்.
படஉதவி: www.health.harvard.edu

முன்னெச்சரிக்கைகள்

உள்நாட்டு விமானநிலையங்களில் மற்றும் துறைமுகங்களில் அவசியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஏற்கனவே மேற்கொள்ளப்படுகின்றன என சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. அவை:

  • இலங்கைக்கு வருகைதரும் பயணிகளுக்கு, இந்நோய் குறித்தான அறிகுறிகள் காணப்பட்டால் (அதிக காய்ச்சல், இருமல், சளி மற்றும் சுவாசிப்பதில் சிரமம்), பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள சுகாதார கண்காணிப்பு அலுவலகத்தில் புகாரளிக்க விமானத்தில் பயணம் செய்பவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • விமான நிலையத்தில் அமைந்துள்ள சுகாதார அலுவலகம் 24 மணிநேரமும் செயற்பட்டு வருகிறது.
  • உடல்வெப்பநிலை அதிகமுள்ள பயணிகளை அடையாளம் காண விமான நிலையத்தில் உடல்வெப்பநிலையை கண்காணிக்கும் காட்சி இயந்திரங்கள் (Body Tempreature scanners) நிறுவப்பட்டுள்ளன.
  • விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் சுவாச நோயைக் குறிக்கும் அறிகுறிகளுடன் வருகைதரும் எந்தவொரு நபரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான சாத்தியக்கூறுகளை தீர்மானிக்க பரிசோதிக்கப்படுவார்கள்.
  • அத்தகைய சாத்தியம் ஏதேனும் இருந்தால், அவர்களை தனிமைப்படுத்தி, மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வைத்தியசாலை அனுமதி மற்றும் பொருத்தமான சிகிச்சை ஆகியவற்றுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • இலங்கை சுகாதார அமைச்சு இவ் வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கவென 12 பிரத்யேக வைத்தியசாலைகளை ஒதுக்கியுள்ளனர்.

இந்நோய்த் தொற்றினால் அதிகளவிலான பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்கள் 

  • 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயோதிபர்கள்
  • இரண்டு வயதிற்கும் குறைந்த குழந்தைகள்
  • கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்

  • மட்டுப்படுத்தப்பட்ட நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் மற்றும் நாள்பட்ட நீரிழிவு நோயாளிகள் 
  • நாள்பட்ட சுவாசத்தொகுதி, இதய நோய், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் வளர்ச்சிக் குறைபாடு நோயுடையவர்கள்
  • சமீபத்தில் அபாயம் நிறைந்த அறுவை சிகிச்சைகளுக்கு உட்பட்ட நபர்கள்

மேற்பட்ட அனைவரும் பருவகால காய்ச்சல் மற்றும் ஏனைய எந்தவொரு சுவாச நோய்த் தொற்றுக்கும், சரியான மருத்துவரிடம் உடனடி மருத்துவ சிகிச்சைகளைப் பெற வேண்டும்.
மேலதிக அவதான நடவடிக்கைகள்

  1. புகைபிடித்தல் சளிக்காய்ச்சலுக்கான (Influenza) அபாயத்தை அதிகரிக்கின்றது, அத்துடன் நோயின் கடுமையான அறிகுறிகளுக்கும் வழிவகுக்கிறது.
  2. பயணம் செய்யும் போது மற்றும் பொது இடங்களில் கைகளை சுத்தமாகக் கழுவாமல் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடக்கூடாது.
  3. மக்கள் பொது இடத்தில் எச்சில் துப்புவதைத் தவிர்க்க வேண்டும்.
  4. வீடு, பள்ளி மற்றும் அலுவலகத்தில் மேற்பரப்பு சுத்திகரிப்பு செய்வதன் சில தொற்றுநோய்களைத் தடுக்க முடியும். மதுசாரம் (Alchol) Influenza Virus எதிரான சிறந்ததொரு  சுத்திகரிப்பு ஆகும்

இவ் வைரஸ் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டியவை:

www.khaleejtimes.com
  • இவ் வைரஸ் ஆனது சாதாரண அறை வெப்பநிலையில் சுமார் 48 மணிநேரங்கள் உயிர்வாழும் தன்மை கொண்டது.
  • அதிகளவில் வீட்டுப்பாவனைக்கு உபயோகப்படுத்தும் கிருமிநாசினி சுத்திகரிப்பான்கள் இவ் வைரஸினை உடனடியாக அழிக்கும் ஆற்றல் மிக்கவை.
  • நில விரிப்புகள் (Floor Carpets) இவ் வைரஸினை பாதுகாத்திடும் மேலும் இவ் விரிப்புக்களில் இவை குறைந்த பட்சம் 7 வாரங்கள் உயிர் வாழக்கூடியவை.இவ் வைரஸ் ஆனது துளியொன்றில் இரண்டு தொடக்கம் மூன்று வாரங்கள் உயிர் வாழக்கூடியவையாகும்.
  • இருமும் போது வெளியாகும் துளிகள் 6 மீட்டர் வரையும்  மேலும் தும்மலின் போது 8 மீட்டர் வரையும் பரவக்கூடும். மேலும் இத் துளிகள் 10 நிமிடங்கள் வரை காற்றில் கலந்திருக்கும்.
  • சளிக்காய்ச்சல் உள்ளவர்களால் தங்களைச் சுற்றி ஆறு அடி வரை உள்ளவர்களுக்கு இவ் வைரஸ் இணை பரப்பலாம்.

Related Articles

Exit mobile version