கடந்த வருடம் 2019 இல் இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்று கடமையாற்றிவரும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் பண்டைய கால மன்னர்களையும் அரசர்களை பின்பற்றியும், அதிரடி சுற்றுப்பயணம் ஊடாக மேலாண்மை (Management By Walking Around) என்ற முறையில் பல அரச திணைக்களங்களுக்கும் அலுவலகங்களுக்கும் கடந்த டிசம்பர் மாதம் முதல் திடீர் விஜயம் மேற்கொண்டவண்ணமுள்ளார். அவ்வாறு அவர் இதுவரை விஜயம் செய்த சில சந்தர்ப்பங்களும் அவை பற்றிய தகவல்களும் இதோ உங்களுக்காக!
நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கான விஜயம்
ஜனாதிபதியாக பதவியேற்று சரியாக முதலாவது மாதம் பூர்த்தியடைந்த நிலையில் டிசம்பர் மாதம் 18ம் திகதி மாலை 7.30 மணியளவில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருகையளித்தார்.
இவ் விஜயத்தின் போது ஜனாதிபதி அவர்கள், நடைமுறை அரசினால் தற்போது வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள், அவற்றினால் அத்தியாவசிய நுகர்வுப்பொருட்களின் விலைகளில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்தும், இதனடிப்படையில் இப் பண்டிகை நாட்களில் பொது மக்களால் அத்தியாவசியப் பொருட்களை சகாய விலையில் பெற்றுக்கொள்ள முடிகின்றதா என்பது குறித்தும் விசேட கவனம் செலுத்தினார். மேலும் இவற்றை உறுதி செய்ய நிதியமைச்சு மற்றும் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளை அங்கிருந்தவாறே தொலைபேசியில் தொடர்புகொண்டு, வரிச் சலுகைகளின் நன்மைகள் உரிய முறையில் வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் கிடைக்கின்றனவா என்பது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் அறிவுத்தினார்.
மோட்டார் வாகன பதிவுத் திணைக்களத்திற்கு அதிரடி விஜயம் மேற்கொண்ட சனாதிபதி..!!
நத்தார் பண்டிகையை குதூகலமாக கொண்டாடிய மறுநாள் டிசம்பர் மாதம் 26ம் திகதி அன்று வேரஹெரவில் அமைந்துள்ள மோட்டார் வாகன பதிவுத் திணைக்களத்திற்கு (ஆர்.எம்.வி) தங்களின் தேவைகளை பூர்த்தி செய்திட சமூகமளித்த மக்கள் கூட்டம் அலை மோதிய போதும், திணைக்களத்தின் செற்பாடுகள் மற்றும் அதன் நடவடிக்கைகள் சற்று மந்தமாகவே இடம்பெற்றன. ஆனாலும் முற்பகல் வேளை அங்கொரு பரபரப்பான நிலையேற்பட்டது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் மோட்டார் வாகன பதிவு அலுவலகத்திற்கு மேற்கொண்ட திடீர் வருகைதான் அதற்கு காரணம். அவரது இத் திடீர் வரவானது அங்கு பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அங்கு வருகைதந்திருந்த பொதுமக்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது.
புதிய ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக்கொள்ள, காலாவதியான உரிமத்தை புதுப்பிக்க மற்றும் பிற சேவைகளைப் பெற்றுக்கொள்ளவென ஏராளமான பொதுமக்கள் வந்துள்ளதையும், அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தபின் அவர்களது தேவைகளை பூர்த்திசெய்ய அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளதையும் அவர் கவனித்தார்.
அதன்பின் அங்கு வருகை தந்திருந்த பொதுமக்களிடம் சரளமாக உரையாடிய ஜனாதிபதி அவர்கள், அங்கு மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை நேரடியாக அறிந்துகொண்டார். அங்கிருந்த பொதுமக்கள் தாங்கள் இவ்வாறான அரச திணைக்களங்களில் பல அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக ஜனாதிபதியிடம் முறையிட்டனர். மக்களின் தேவைகளை அறிந்துகொண்டு அவற்றை துரிதமாகவும் நேர்த்தியாகவும் பூர்த்தி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அவற்றை புரிந்துகொண்ட ஜனாதிபதி, அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் மக்கள் சேவையை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாகவும் இதன் போது அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
அரச சேவைகள் பொதுமக்களின் வாழ்வை இலகுவாக்கவே சேவைகள் வழங்குகின்றன என்றும், தனது ஆட்சியின் போது அரச சேவைகள் மற்றும் திணைக்களங்கள் மந்தகதியில் செயற்படாது பொதுமக்களுக்கு விரைவான சேவைகளை வழங்கவேண்டும் என்பதனையும் குறிப்பிட்டார். மோட்டார் வாகன பதிவுத் திணைக்களத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஆய்வு செய்த ஜனாதிபதி அத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து அலுவலகத்தின் செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடினார்.
அரச துறைகள், திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்கள் பொதுமக்களுக்கு துரிதமான மற்றும் நட்புமிக்க வாடிக்கையாளர் சேவைகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும், சேவைகளைப் பெறவரும் பொதுமக்களின் அபிமானத்தை பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும், பொதுமக்களின் நேரத்தை வீணாக்காது, அவர்களது பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை விரைவாக வழங்க வேண்டும் என்பதனையும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றும்போது எவ்விதமான முறைகேடுகளுக்கும் இடமளிக்கக் கூடாது என்பதையும், இலஞ்ச மோசடி மற்றும் ஊழல் என்பனவற்றை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்றாக செயற்பட வேண்டும் என்பதனையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ் விஜயத்தைப் பற்றி ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ ‘ட்விட்டர்’ பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது ‘இன்று வேரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தில் மேற்கொண்டிருந்த ஆய்வு சுற்றுப்பயணத்தின் போது, “நேரம்” என்பது எவருக்கும் ஒரு முக்கிய காரணியாக இருப்பதால், பொதுமக்களுக்கு விரைவான சேவையை வழங்குவதன் அவசியத்தை நான் வலியுறுத்தினேன். திறமையான மற்றும் துரித சேவைகளை வழங்குவதற்கான செயல்முறைகளை மறுசீலனை செய்யுமாறும் நான் மேலும் கேட்டுக்கொண்டேன்’’
இலங்கை தேசிய வைத்தியசாலைக்கு திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி!
காலை வேளையில் வழமைபோல் வருகை தரும் நோயாளர்களினாலும், மருத்துவமனையின் ஊழியர்களினாலும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த கொழும்பு தேசிய மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவினை, மேலும் பரபரப்பாக்கிட, தேசிய மருத்துவமனை வழங்கும் சேவைகளின் தரத்தை ஆய்வு செய்யும் நோக்குடன் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் ஜனவரி மாதம் 9ம் திகதி அன்று மருத்துவமனைக்கு திடீர் விஜயம் செய்துள்ளார்.
வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கு வருகை தந்து அதனை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், அங்குவந்திருந்த நோயாளர்களுடன் சுமூகமாக கலந்துரையாடி அவர்களது நலன்கள், தேவைகள், பிரச்சினைகள் மற்றும் குறைகள் பற்றி கேட்டறிந்தார். மேலும் நோயாளர்களிடம் அவர்களது ஊர், பிரதேசங்கள் ஆகியவற்றின் விபரங்களை கேட்டறிந்தவர், மேலும் அந்நோயாளர்கள் அவர்களுடைய பிரதேசத்தில் அல்லது அதற்கு அருகிலிருக்கும் மருத்துவமனையை நாடாது இவ்வளவு தூரம் பயணம் மேற்கொண்டதற்கான காரணங்களையும் கேட்டறிந்தார். இதன் போது கொழும்பிற்கு வெளியே உள்ள மருத்துவமனைகளில் நிலவும் அசவுகரியங்களைப் பற்றியும் அங்கு நிலவும் ஏனைய பற்றாக்குறைகளைக் குறித்தும் பொதுமக்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.
மேலும், தேசிய மருத்துவமனையின் நடவடிக்கைகள், மற்றும் அங்கு நிலவும் பிரச்சினைகள் குறித்து தேசிய மருத்துவமனையின் வைத்தியர்கள், அதிகாரிகள் மற்றும் ஏனைய ஊழியர்களிடமும், ஜனாதிபதி கலந்துரையாடினார். மருத்துவமனையில் தொடர்ந்து நடைபெற்றுவரும் புனர்நிர்மாணப் பணிகள் மற்றும் புதிய நிர்மாணப் பணிகள் குறித்தும் சனாதிபதி கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான கண்காணிப்பு விஜயம்
சனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் முன்னறிவிப்பு அற்ற கண்காணிப்பு மற்றும் திடீர் ஆய்வு விஜயமொன்றை சனவரி மாதம் 16ம் திகதியன்று மேற்கொண்டார். ஜனாதிபதியின் இவ் வருகையானது விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. மேலும் ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பயணிகளுடன் கலந்துடரையாடல்களில் ஈடுபட்டார்.
இலங்கைக்கு வருகைதரும் மற்றும் இலங்கையிலிருந்து வெளியேறும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் ஏற்படும் சிரமங்களையும் தாமதங்களையும் குறைக்கும் வகையிலும் அவர்களுக்கு எவ்விதமான அசௌகரியங்களும் ஏற்படாதவாறும் செயற்படுமாறு ஜனாதிபதி அவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் பண்டாரநாயக்க சர்வதேச விமானய வளாகத்திற்குள் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது பயணிகளுடன் நட்புறவு முறையிலும் அவர்களுக்கு சங்கடங்கள் ஏற்படாதவாறும் செயற்படுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் கூற்றுப்படி, ஜனாதிபதி தனது இத் திடீர் வருகையின் போது வரவு மற்றும் புறப்பாடு பிரிவுகளின் அனைத்து செயற்பாடுகளையும் கவனத்திற்கொண்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு சோதனை நடவடிக்கைகளின் போது பயணிகளுக்கு ஏற்படும் நேரதாமதங்களை குறைத்திட, போதியளவிலான அதிகாரிகளை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தினார். விமான நிலையத்தை அண்டிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது பொதுமக்களுக்கு எந்தவிதமான இடர்களும் ஏற்படாதவண்ணம் அவற்றை மேற்கொள்ளுமாறும் இதன்போது வலியுறுத்தினார்.
விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்த நாட்டிலிருந்து வெளியேறும் மற்றும் நாட்டுக்குள் உட்பிரவேசிக்கும் பயணிகளுடனும் ஜனாதிபதி அவர்கள் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
மேலும் தற்போது நடைபெற்றுவரும் புதிய பயணிகள் நுழைவாயிலின் நிர்மாணப்பணிகளை துரிதமாக நிறைவு செய்து மக்களின் பாவனைக்கு வழங்கவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறித்தினார். மேலும் நாட்டிற்குள் உட்பிரவேசிப்பதற்கும் மற்றும் நாட்டிலிருந்து வெளிச்செல்வதற்கும் தனித்தனியே இருவேறு தொகுதிகளை நிர்மாணிப்பதன் மூலம் வினைத்திறன் மிக்க சேவைகளையும் தனித்துவமான பயண அனுபவங்களையும் மக்களுக்கு வழங்கிட முடியும் என்பதையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
மேலும் விமான நிலையத்திற்கு வருகைதருவதற்கு மற்றும் அங்கிருந்து வெளியேறுவதற்குரிய வாடகை வாகன வசதிகளை பெற்றுக்கொள்வதற்கான பிரத்தியேக வாகன பிரிவொன்றினையும் நிர்மாணிக்குமாறு விமான நிலையத் தலைவரான மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்ரசிறிக்கு அறிவுறுத்தல்களை வழங்கிய ஜனாதிபதி அவர்கள், விமான நிலையத்தின் வினைத்திறன் மிக்க சிறந்த சேவை வழங்கல் தொடர்பில், விமான நிலைய தலைவரையும் அதன் ஏனைய ஊழியர்களையும் பாராட்டினார்.
இலங்கை ஜனாதிபதியும் சுற்றுப்பயணம் மூலம் மேலாண்மையும் (Managment By Walking Around)
திடீர் விஜயம் ஊடாக மேலாண்மை அல்லது சுற்றுப்பயணம் மூலம் மேலாண்மை என்ற கருப்பொருளானது ஹெவெல்ட்-பேக்கர்ட் (HP நிறுவனம்) என்ற நிறுவனத்தின் தோற்றுனர்களான பில் ஹெவ்லெட் மற்றும் டேவிட் பேக்கார்ட் ஆகியோரால் 1940 ஆம் ஆண்டுகளிலேயே அதிகமாக பின்பற்றப்பட்டது. மேலும் இவர்களைத் தொடர்ந்து வியாபார குரு என அழைக்கப்படும் டாம் பீட்டர்ஸ் இனால் இக்கருப்பொருளானது ‘’சுற்றுப்பயணம் மூலம் மேலாண்மை (Managment By Walking Around)’’ என 1980 களில் பெயர்பெற்றது. இச் செயற்பாடானது அதிகளவில் நிறுவனங்களில் பின்பற்றப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் உம் இந்த கருப்பொருளை பின்பற்றி அவரது நிறுவனத்தின் பல பகுதிகளுக்கு முன்னறிவிப்பின்றி விஜயம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
Managment By Walking Around என்பது வினைத்திறன் மிக்க நிர்வாகத்திற்கான ஒரு சிறந்த அணுகுமுறையாகும், ஏனெனில் இவ்வாறான சுற்றுப்பயணங்களின் போது தலைவர்களினால் அவர்களது நிர்வாகத்தின் கீழ் என்ன நடைபெறுகின்றது என்பதனை எவ்வித முன்னேற்பாடுமாற்ற நிலையில் அவதானிக்க முடியும். இதனால் முன்னேற்றங்கள் மற்றும் புதிய யோசனைகள் குறித்து அவர்களால் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களை பெறமுடியும் மேலும் தலைவர்களினால் மக்களுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணுவதற்கான சந்தர்ப்பமாக அமையும். ஆகவே இது நாட்டின் பரிபாலனத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமைமிக்கதொரு செயற்பாடாகும்.
உலக புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவரான ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன் அவர்களும், அவரது ஆட்சிக்காலத்தில் வெள்ளை மாளிகையில் வாசகம் செய்ததை விட யுத்தகாலங்களில் அவர் போர் வீரர்களுடன் போர்க்களங்களிலும் ஏனைய நாட்களில் பொதுமக்களை நேரிடையாக சந்திப்பதிலுமே அதிகளவிலான நேரத்தை செலவிட்டார். இதனாலேயே அவரினால் ஓர் தலை சிறந்த தலைவராக மக்களின் மனதில் இன்றும் நீங்கா இடம் பிடிக்க முடிந்தது.
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதியான கோத்தபாய ராஜபக்ஷ அவர்களும் இதே கருப்பொருளை பின்பற்றிவருவதால், இது ஜனாதிபதியினால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்திற் கொண்டு முன்னெடுக்கப்படுமொரு ராஜதந்திரம் என விமர்சிக்கப்பட்டாலும், நாட்டின் முன்னேற்றப்படிகளில் ஒன்றாக இது இருக்கக்கூடும் எனவும் அரசியல் ஆர்வலர்கள், விமர்சகர்கள் மற்றும் பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எது எவ்வாறாயிருப்பினும் இந் நடவடிக்கைகளால் பொது மக்களுக்கு நீண்டகால மற்றும் நிரந்தர நன்மைகள் ஏற்படுமாயின் அதுவே சிறந்ததொரு தலைமைக்கான அங்கீகாரமாகும்.