ஜனாதிபதித் தேர்தல் வேகமாக நெருங்கி வரும் இத்தருணத்தில், நாட்டின் அதிஉயர் பதவிக்கான போட்டி சூடுபிடிக்கிறது. இலங்கையில் பல கட்சி அமைப்புக்கள் இருந்தாலும், சுதந்திரத்திற்கு முன்னர் 1946 இல் நிறுவப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியும் (யு.என்.பி), 1951 இல் நிறுவப்பட்ட இலங்கை சுதந்திரக் கட்சியுமே (எஸ்.எல்.எஃப்।பி) இலங்கை அரசியலிழும் ஆட்சியிலும் அதிக ஆதிக்கம் செலுத்தின.
சிறு கட்சிகள் பொதுவாக தங்கள் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்காக ஏனைய கட்சிகளுடன் கூட்டணிகளை உருவாக்குகின்றன அல்லது மற்ற கட்சிகளுடன் கூட்டணிகளில் நுழைகின்றன. ஆனால் கடந்த ஆண்டு 2018ல் எதிர்பாராதவிதமாக புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டணிக்கட்சியான இலங்கை பொதுசன முன்னணியும் (எஸ்.எல்.பி.பி), மற்றும் 1999ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட களமிறங்கியுள்ள மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி) இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் களத்தில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்குகின்றன.
எஸ்.எல்.பி.பி, ஜே.வி.பி மற்றும் ஏனைய பல சிறிய கட்சிகளும், ஏற்கனவே தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், நாட்டின் தலைமை ஆட்சிப்பொறுப்பில் மிக நீண்ட காலமாக கோலோட்சிய வரலாற்றைக் கொண்ட இரு பெரும் கட்சிகளும் தங்கள் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களை இன்னும் தீர்மானிக்காமலும் அறிவிக்காமலும் உள்ளன. மிகவும் பொருத்தமான வேட்பாளருக்கான அவர்களின் தேடல் தொடர்கையில், இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதியுடையவர்கள் யார், தகுதியற்றவர்கள் யார் என்பது தொடர்பாகவும் மற்றும் இலங்கையில் யார் ஜனாதிபதியாக இருக்க முடியும் என்பதற்கான அண்மைக்கால அனைத்து கேள்விகளுக்கும் சுருக்கமாகவும் தெளிவாகவும் இங்கே விளக்கங்களை காணமுடியும்.
நினைவில் கொள்ளுங்கள் , இந் நாட்டின் மிக அதியுயர்ந்த பதவியை வகிப்பதற்கு எந்தவிதமான குறிப்பிட்ட கல்வித் தகைமைகளோ அல்லது திறன்களோ தேவையில்லை, இருப்பினும் ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிடுவதற்கான தகைமைகளையும் தகுதியையும் மதிப்பிடுவதற்கு இன்னும் பரவலான வரைமுறைகள் உள்ளன. இது தவிர, இந்தத் தொடரில் நாம் எதிர்வரும் நாட்களில் விவாதிக்க இருக்கும் தேர்தல் பிரச்சார நிதி, தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் பிரபலமான நபர்கள் மற்றும் அடையாள அரசியல் என்பன பெரும்பாலும் தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் மற்றும் யார் வெற்றி பெறமாட்டார்கள் என்பதனை தீர்மானிப்பதில் பாரிய வேறுபாடுகளை உருவாக்குகின்றன. இது இவ்வாறுதான் நடந்தேற வேண்டுமா? வேட்பாளர் ஒருவர் தேர்தலில் போட்டியிடும் தகுதியைப்பெற எவ்வகையான சட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யவேண்டும் என நீங்கள் எண்ணுகிறீர்கள்? நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் இது ஜனநாயகம், உங்கள் குரல், உங்களின் வாக்குகள் பெறுமதிமிக்கவை!