புத்துயிர் பெறும் லடாக்: பசுமையும் அதன் மீதான அபாயமும்

லடாக் என்ற இந்திய நிலப்பகுதிக்கு தனியான ஒன்றியப் பிரதேச அந்தஸ்து வழங்கப்பட்ட போது இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது டுவிட்டர் பக்கத்தில், பௌத்தப் பெரும்பான்மையுடனான இந்திய மாநிலமொன்று உருவாகியுள்ளதென பதிவிட்டிருந்தார். லடாக் பாரம்பரிய பௌத்த பண்பாட்டைத் தன்னகத்தே கொண்ட களஞ்சியமாக திகழ்கின்றது. திபேத்திய பௌத்தத்தின் மற்றுமொரு பிரதிபலிப்பாகத் திகழ்கின்ற லடாக்கின் இயற்கை அழகு வார்த்தைகளால் அவ்வளவு எளிதாக வர்ணித்துவிட முடியாததொன்று.

ரணில் விக்ரமசிங்க அவர்களின் ட்வீட்டர் பக்கத்தில் லடாக் பற்றிய டுவீட்

லடாக் ஒரு மலர் போன்றது. காலை வேளையில் மெதுவாக மொட்டவிழ்ந்து பிறக்கும் மலரில் படிந்த பனி, சூரிய ஒளிக்கீற்றுகளால் துளிகளாகிக் கிடக்கின்ற பேரழகை ஒத்தது. பனியும் மலையும் பச்சைச் செடிகளும் திபேத்திய மண்ணுக்கே உரித்தான விலங்குகளும் தூய்மையான காற்றும் லடாக்குக்கே உரித்தான தனித்துவங்களாகத் திகழ்கின்றன.

லடாக்கில் அமைந்துள்ள பௌத்த மடாலயங்களில் ஒன்றை படத்தில் காணலாம்

லடாக், இந்தியாவில் பலகாலமாகவே ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு உள்ளேயே இருந்து வந்தது. 2019 ஓகஸ்ட் 5 ஆம் திகதியன்று இந்திய மத்திய அரசினால், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டதோடு, அந்த மாநிலம் லடாக் எனவும் ஜம்மு-காஷ்மீர் எனவும் இரு வேறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டன. பிரிக்கப்பட்ட இந்த இரு நிலப்பரப்புகளுக்கும் ஒன்றியப் பிரதேச அந்தஸ்து அளிக்கப்பட்டது. பலகாலமாக லடாக் மக்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு 2019 ஆகஸ்ட் 5 ஆம் திகதியன்று, இந்திய மத்திய அரசினால் செவி சாய்க்கப்பட்டது.

2019 ஆகஸ்ட் 5 ஆம் திகதியை லடாக் மக்கள் சுதந்திர தினமாக கொண்டாடும் காட்சிகள் 

லடாக் சர்வதேச அளவில் பிரபல்யமாக பேசப்படத் தொடங்கியது அந்தக் கணத்தில் தான். லடாக்கிற்கு இது கிட்டத்தட்ட ஒரு மீள் – சுதந்திரம். என்னதான் சட்டசபை அற்ற ஒன்றியப் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட போதும், இந்த அளவிலான பிரிப்பே, அவர்களுக்கு நிம்மதி அளித்திருக்கின்றது. காஷ்மீரின் அழுத்தம் மிக்க சூழ்நிலையானது இதுவரை அதனுடன் இணைந்திருந்த லடாக்கின் அமைதியையும் குலைத்துக் கொண்டிருந்தது. இப்போது பெரும் பாரம் அகன்ற நிலையில் லடாக்கினால் நன்கு மூச்சு விடக் கூடியதாக இருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் இருந்து விடுபட்ட லடாக்கின் வரைபடம்

117,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட லடாக்கின் கீழ், இரண்டு மாவட்டங்கள் வருகின்றன. ஒன்று லே; மற்றையது கார்கில். லே தான் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய மாவட்டமாக அறியப்படுகின்றது. ஆனால் லடாக்கின் ஒட்டுமொத்த மக்கள் தொகையே 2.74 லட்சம் தான். இந்த மக்களின் பெரும் பகுதியினரால்தான் லடாக்கின் அழகான தொன்மை மிக்க பண்பாடு பாதுகாக்கப்படுகின்றது; அடுத்த தலைமுறையினருக்கு கடத்தப்படுகின்றது.

லடாக்கின் இரு மாவட்டங்களான லே மற்றும் கார்கில்

இயற்கையான அழகையும் பண்பாட்டையும் மன நிம்மதியையும் அழிக்கின்ற நகரமயமாக்கப் பூதம் கால் பதிக்காத இடமாக இன்றைய லடாக் இருக்கின்றது. ஆனால் தொடர்ந்தும் அந்த நிலை நீடிக்குமா என்பதைச் சொல்ல முடியாமல் உள்ளது. ஒன்றியப் பிரதேச அந்தஸ்து கிடைக்க முதலே, லடாக்கில் நீர்மின் திட்டம் ஒன்றும் லடாக் பல்கலைக்கழகமும் திறந்து வைக்கப்பட்டிருந்தன. இவை அந்த மக்களுக்கு பொருளாதாரம் மற்றும் அறிவுசார் நிலைகளில் நன்மை அளித்தாலும் கூட, நகரமயமாக்கத்தின் படிக்கட்டுகளாகக்கூட இருக்கலாம்.

கலாச்சார ஆடைகளுடன் லடாக் மக்கள்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370 ஆம் பிரிவு நீக்கப்பட்டமை, மற்றும் லடாக்கின் தனியான புதிய உருவாக்கம் ஆகியவற்றின் பின்னால், யார் வேண்டுமென்றாலும் அங்கு நிலம் வாங்கிக் கொள்ளலாம் என்ற அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. எவர் வேண்டுமென்றாலும் லடாக்கில் இனி புதிய தொழிற்றுறையை ஆரம்பிக்கலாம். அதற்கான முன்னுரிமை ஒன்றும், அந்த மண்ணின் மைந்தர்களுக்கு கிடைத்துவிடப் போவதில்லை. தவிரவும் லடாக்கை விடுத்து வேறு இடங்களிலிருந்து அங்கு வந்து குவியப்போகும் மக்களால் ஏற்படுத்தப்படவுள்ள கட்டுமானங்கள் லடாக் என்னும் மலரைச் சிதைத்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு இயற்கை ஆர்வலரினதும் பிரார்த்தனையுமாக இருக்கின்றது.

லடாக் மக்களின் ஜீவனோபாயமான விவசாயம்

ஆனால், லடாக்குக்கு வரப்போகும் பெருந்தொகையான சுற்றுலாப் பயணிகள் மூலம் லடாக் மக்களின் வாழ்க்கைத் தரம் அதிகரிக்கும் என்று கூறப்படும் கருத்துகளில் உண்மை இல்லாமல் இல்லை. இவ்வளவு காலமும் காஷ்மீர் தலைவர்களின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த லடாக்கியர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட சீராக இருந்ததில்லை. எனினும், லடாக்கியர்களுக்கு வந்து குவியவுள்ள சுற்றுலா வருமானங்கள் அளவுக்கு மிஞ்சும் போது, அது லடாக்கின் அழகு கொஞ்சும் காட்சியை மறைத்து, அந்த மக்களின் இதயத்தைக் குருடாக்கி விடுமானால், அதுவே லடாக்கின் பசுமைக்கான முடிவாக இருக்கும்.

லடாக் நகரின் அழகும் லே மாவட்டத்தின் விமான நிலையமும்

லடாக்கில் ஓடி வரும் சிந்து நதியின் அழகைப் பார்ப்பதற்கு இரு கண்கள் போத மாட்டா. சல சலத்துப் பாயும் அந்த நதி புல்லாங்குழலின் தனித்த இசை போலவும், யாருமற்ற இரவினிலே துயரில் புதைகிற நெஞ்சுக்கு ஆதரவளிக்கும் ஒரு வயலின் ஒலி போலவும், உணர்வு மிக்கது. எழில் கொஞ்சும் பசுமையும் அழகும் லடாக்குடன் என்றும் அப்படியே இருந்துவிட வேண்டுமென்ற எண்ணங்கள், வாழுமா அல்லது வெற்றுக் கனவாய் எஞ்சுமா என்பது காலத்தின் தூரிகையின் நுனியில் இருக்கின்றது.

முகப்பு பட உதவி : prasannaholidays.com

Related Articles

Exit mobile version