அரசியல் நெருக்கடியின் நீட்சியும் பொருளாதார இழப்புகளும்

2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர், நிறைவேற்று அதிகாரத்துக்கும், சட்டவாக்கல் துறைக்கும் இடையிலான விரிசல், பல்வேறு பாதிப்புகளை கொடுத்திருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகள் இந்த விரிசல் நிலைமையால் இலங்கை ‘வாழாது வாழ்ந்த’ நாட்களாக பார்க்க வேண்டியுள்ளது. இந்த விரிசலின் அதியுச்ச பாதிப்பு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ம் திகதி பதிவானது. தற்போது எதிகட்சித் தலைவராக உள்ள மகிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென பிரதமராக நியமித்ததன் பின்னர் நாட்டின் பொருளாதாரம் ஸ்தம்பித்திருந்தது.

படஉதவி : aljazeera.com

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பன இலங்கையுடனான கொடுக்கல்வாங்கல்களை இடைநிறுத்தும் அளவுக்கு அந்த நிலைமை சென்றிருந்தது. சுமார் 51 நாட்கள் நீடித்த இந்த அரசியல் நெருக்கடி காலப்பகுதியில் மாத்திரம் பல பில்லியன் ரூபாய்கள் பொருளாதாரத்துக்கு நட்டம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே வீழ்ச்சிப் போக்கில் இருந்த இலங்கை நாணயத்தின் பெறுமதி, அந்த காலப்பகுதியில் இன்னும் வேகமாக சரிவடைய தொடங்கியது.குறித்த நாட்களில், ஒரு பில்லியன் டொலர்கள் பெறுமதியான வெளிநாட்டு ஒதுக்கங்களில் இழப்பு ஏற்பட்டிருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இலங்கையின் கடன் தீர்ப்பனவு இயலுமை குறைக்கப்பட்டதுடன், சுற்றுலாத்துறை வருமானமும் வீழ்ச்சி அடைந்திருந்தது. ஒக்டோபர் 26ம் திகதிக்கு முன்னர் 7991 மில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாட்டு ஒதுக்கம், 51 நாட்களின் பின்னர் இந்த அரசியல் நெருக்கடி தீர்க்கப்படும் போது 6985 மில்லியன் டொலர்களாக குறைவடைந்திருந்தது. அத்துடன் 312 மில்லியன் டொலர்கள் பெறுமதியான முதலீடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.அரசியல் நெருக்கடி ஓரளவுக்கு தணிக்கப்பட்டு, நாடு வழமைக்கு திரும்பிய போது, அந்த காலப்பகுதியில் இழந்த பல விடயங்கள் சரி செய்யப்பட்டு வந்தன.

குறிப்பாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்தது. அந்த தருணத்தில் யாரும் எதிர்பராராத ஏப்ரல்21 தாக்குதல் இடம்பெற்றது.இதனை அடுத்து இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மிகக்கடுமையாக பாதித்தது. குண்டு வெடிப்புகளால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளுக்கு அப்பால், இலங்கை ஒரு பாதுகாப்பற்ற நாடு என்ற அடிப்படையில் உலக நாடுகள் பிரகடனம் செய்தன.

படஉதவி : edition.cnn.com

இந்த தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாகவே தகவல் அறிந்தும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, இந்த குற்றச்சாட்டை பொறுப்பேற்று நிவர்த்தி செய்ய யாரும் முன்வராமல், பொறுப்புகளை இன்னொரு தரப்பிடம் ஒப்படைத்து தப்பிக் கொள்ளும் நிலைமையுமாக இருந்தமை, அதற்கான ஒரு காரணமாக அமைந்தது, எந்த ஒருநாட்டிலும் அரசியல் தலைமை பீடங்களில் இருக்கின்ற முக்கியத் தீர்மானங்களை எடுக்கின்ற தரப்பினருக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு இல்லாது, அந்த நாட்டின் பொருளாதார, பாதுகாப்பு, அபிவிருத்தி உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளையும் திறம்பட முன்கொண்டு செல்ல முடியாது. எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கி மேற்கொண்ட சில முன்னெடுப்புகளால், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தற்போது 176.50ஃ55  என்ற அளவில் நிலையான தன்மையை நெருங்கி இருப்பதாக பொருளியல் ஆய்வு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரிக்குப் பின்னர் ஓரளவுக்கு சீர்பட்டு வந்த தலைமைபீட முரண்பாடு, தற்போது மீண்டும் வெளியில் தென்பட ஆரம்பித்துள்ளது. இது நடப்பு அரசாங்கத்தின் மீது மக்களதும், வெளிநாடுகளினதும் அவநம்பிக்கையை மேலோங்கச் செய்யும். இவ்வாறான சூழ்நிலையானது அரசாங்க மாற்றம் ஒன்றின் மீதான எண்ணத்தின் உச்சத்திலேயே மக்களை வைத்திருக்க செய்யும். இதனால் முதலீட்டாளர்கள் தங்களது நிதியை வர்த்தகங்களில் ஈடுபடுத்த விரும்ப மாட்டார்கள். அரசியல் ரீதியாக நிலையில்லாத ஒரு நிலைமை நீடிக்கும் போது, தமது நிதிக்கு எவ்வாறான பாதுகாப்பு உத்தரவாதம் இருக்கும் என்ற மனநிலையே முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும். இது உள்நாட்டு வெளிநாட்டு இரண்டு முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும். எனவே நாட்டின் அரசியல் சூழ்நிலை சரியில்லாத போது, இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகை மிக சொற்பமாகவே இருக்கிறது. இந்த மாதத்தின் முதல்வாரத்தில் மட்டும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது 3.47 பில்லியன் ரூபாய் பெறுமதியான பிணைமுறிகளை விற்பனை செய்துள்ளனர்.  

படஉதவி : economics.com

கடந்த மாத இறுதியில் மத்திய வங்கி, நாணயக்கொள்கையில் ஏற்படுத்திய 50 புள்ளி அளவான வட்டிவீத குறைப்பினால் இந்த நிலைமை பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட போது வெளிநாடுகள் வழங்கிய உறுதிமொழிகளின் அளவுக்கு, இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் முதலீடுகள் இடம்பெறவில்லை. அந்த காலப்பகுதியில் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள், அதிகார முறுகல்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியிலேயே சில வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கைக்கு அதிக அந்நியசெலாவணியைத் தரும் துறைகளில், சுற்றுலாத்துறையும் ஒன்றாகும்.

யுத்தம் நிறைவடைந்தப் பின்னர் இலங்கையின் சுற்றுலாத்துறை பெரும் வளர்ச்சியை பதிவு செய்து வந்தது. ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் நேரடியாக சுற்றுலாத்துறையை கடுமையாக பாதித்திருந்தது. ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர், மே மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை 70 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளது.இந்த காலப்பகுதியில் மொத்தமாகவே 37000 சுற்றுலாப் பயணிகளே இலங்கை வந்துள்ளனர்.

படஉதவி : sundaytimes.lk

சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கான விளம்பர வேலைத்திட்டங்கள் இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக இந்த ஆண்டு 900 மில்லியன் ரூபாய்களை அரசாங்கம் செலவிடவுள்ளது. எனினும் நாட்டின் ஸ்திரத்தன்மை மீதான வெளிநாடுகளின் நம்பிக்கையும், சுற்றுலாத்துறை முன்னேற்றத்தில் பெரும் தாக்கத்தை செலுத்தும்.

சுற்றுலா பயணிகளின் வருகைக் குறைவால், அத்துறை சார்ந்த பெரும் இழப்புகளை ஹொட்டல் நிறுவனங்கள், சுற்றுலா பயண முகவர் நிறுவனங்கள், சவாரி வாகன துறையினர் உள்ளிட்டவர்களும், சுற்றுலாத்தளங்களில் சுயத்தொழில் சார்ந்த வர்த்தகங்களில் ஈடுபடுகின்ற தனிநபர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.சுற்றுலாத்துறை சார்ந்த பல வேலை இழப்புகள் பதிவாகியுள்ளன.

இவ்வாறான நிலைமையை மீளக்கட்டியெழுப்புவதற்கு நாட்டின் அரசியல் ரீதியான ஸ்திரத்தன்மை அவசியமாகிறது.எனினும் நெருக்கடியான ஒரு அரசியல் சூழ்நிலைக்குள் இந்த விடயத்தின் மீதான அவதானம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இலங்கை அரசங்கமானது பெரும் கடன்சுமையில் உள்ளது. சீனா, இந்தியா போன்ற நாடுகளிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களுக்கு அப்பால், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் இருந்தும் பெருமளவான கடன்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியம் தாம் ஒப்புக்கொண்ட 1.5 பில்லியன் டொலர் கடனை அடுத்த ஆண்டு வரையில் நீடித்துள்ளது.சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பதீட்டில் நேரடியாக தாக்கம் செலுத்தக்கூடியதாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி வேகம், வரிவிதிப்பனவுகள் உள்ளிட்ட பல நிபந்தனைகளை நாணய நிதியம் பின்பற்றுவதாக அறியமுடிகிறது. இது இலங்கைக்கு இசைவான, சுயாதீனமான பாதீட்டை தயாரிப்பதற்கு எந்த அளவுக்கு சுதந்திரத்தை வழங்கும் என்பது சந்தேகம்.

படஉதவி : 123rf.com

முக்கிய பொருளாதாரம் சார்ந்த தீர்மானங்களை மேற்கொள்ளும்போது, அரசியல் தலைமை பீடங்களுக்கு இடையிலான போட்டித்தன்மை அந்த தீர்மானங்களை மேலும் தாமதிக்க செய்யும். அந்த நிலைமை கடந்த காலங்களிலும் இலங்கையில் பலமுறை பதிவாகி இருக்கின்றன. அரசியல் நெருக்கடி ஒன்று நிலவும் தருணத்தில் எதிர்கட்சிகள் ஆட்சிபீடம் ஏறுவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்கின்றன. அதற்காக பின்பற்றப்படும் முக்கியவழிமுறை போராட்டங்கள். கடந்த மாதங்களில் எத்தனையோ போராட்டங்களை இலங்கை கண்டுவிட்டது.

படஉதவி : abc.net.au

இவ்வாறான போராட்டங்கள் நாளாந்த பொருளாதார இணைப்புகளில் பெரும் தாக்கத்தை செலுத்துகின்றன. மொத்த தேசிய உற்பத்தியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கத்தின் நிறைவேற்று மற்றும் சட்டவாக்க அதிகாரங்களுக்கு இடையிலான போட்டித் தன்மை கலையப்பட வேண்டியது கட்டாயமாகும். குறிப்பாக இலங்கை மிகப்பெரிய பொருளாதார சரிவுடன் பயணித்துக் கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில், மற்றுமொரு அரசியல் நெருக்கடியும், அரசங்க ஸ்தம்பிப்பும் நாட்டை மீள நிமிர்த்த முடியாத அபாயத்துக்கு கொண்டு சேர்த்துவிடலாம்.

 

முகப்புபட உதவி : economywatch.com

Related Articles

Exit mobile version