பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்தின் வரலாற்றை மறக்கடிக்கும் செயல்கள் பெரும்பாலும், இன முரண் உள்ள பல நாடுகளிலும் காலத்துக்குக் காலம் இடம்பெற்றே வந்திருக்கின்றன. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் நீண்ட நெடிய பாதையில் தமிழர்களுடைய வகிபாகத்தை நோக்கி, ஊடகங்கள் ஒளிபாய்ச்சியிருக்கின்றனவா என்ற கேள்வி இன்னமும் மீதி இருக்கின்றது.
பூலித்தேவரின் சிறப்பு
“நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன?
நெருப்பாற்றைக் கடந்த பூலித்தேவனாலே”
என்ற நாட்டுப்புறப் பாடலை நீங்கள் கேட்டிருக்கின்றீர்களா? இன்னமும் தென்பாண்டிநாட்டுப் பகுதிகளில் பூலித்தேவரின் வீரமும் ஆற்றலும் ஆளுமையும் பேசப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
தமிழ்நாட்டின் திருநெல்வேலிச்சீமைப் பகுதியில் நெற்கட்டான் செவ்வல் என்ற பகுதி உள்ளது. இதை ஆண்டுவந்த பாளையக்காரர் தான் பூலித்தேவர்! இந்திய வரலாற்றில் பிரித்தானியருக்கு எதிரான முதற் கிளர்ச்சியாகப் பேசப்படுவது “சிப்பாய்க் கலகம்”. அதற்கு பல தசாப்தங்கள் முன்னரே, பிரித்தானிய மேலாதிக்கத்திற்கு எதிராக தம் வீர வாளை உயர்த்திய தமிழரே பூலித்தேவர்.
ஆட்சி அதிகாரம்
பூலித்தேவரின் மூதாதையர்கள் 12 ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம் பகுதியிலிருந்து வந்து, சங்கரன்கோயிலின் “ஆவுடையாபுரம்” என்ற பகுதியில் கோட்டையொன்றைக் கட்டி ஆண்டு வந்தனர். குறுநில மன்னர்களுக்கு உரிய அந்தஸ்து அவர்களுக்கு இருந்தது. அந்தப் பரம்பரையின் பத்தாவது வாரிசான பூலித்தேவர், தனது ஆட்சித் தலைமையகத்தை ஆவுடையாபுரத்திலிருந்து நெற்கட்டான் செவ்வலுக்கு மாற்றினார். அங்கு ஒரு பாரிய கோட்டை ஒன்றையும் அவர் கட்டுவித்திருந்தார்.
பிறந்தான் மாவீரன்
சித்தாபுத்திரத் தேவருக்கும், சிவஞான நாச்சியாருக்கும் மகனாக 1715-ஆம் ஆண்டு பிறந்த பூலித்தேவருக்கு 1726 ஆம் ஆண்டு பட்டம் சூட்டப்பட்டது. கயற்கண்ணி நாச்சியாரைத் திருமணம் செய்த அவருக்கு கோமதி முத்துத்தலச்சி, சித்திரபுத்திரத்தேவன், சிவஞான பாண்டியன் என்ற பெயர்களையுடைய குழந்தைகள் பிறந்தனர். அந்தக் காலத்திலேயே, சிவகிரி பாளையக்காரரான வரகுணபாண்டியருடன் சண்டையிட்டு, தமது ஆநிரைகளை மீட்டு வந்தார் பூலித்தேவர். அவருடைய புகழ் தென் தமிழ்நாடு முழுவதும் பரவுவதற்கு இதுவே முதலாவது காரணமாக அமைந்தது.
“கப்பம் என்ற பேரில் சல்லிக்காசு கூடத் தர முடியாது” – பூலித்தேவர்
அந்தக் காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தே இருக்கவில்லை. பாஞ்சாலங்குறிச்சியை வீரபாண்டிய கட்டபொம்மனின் பாட்டனார் ஆண்டுவந்தார். அவரும் எட்டைய புர பாளையக்காரரும் பிரித்தானியருக்கு பணிந்து கப்பம் செலுத்தினர். ஆனால், கப்பம் கேட்டு வந்தவர்களிடம், “கப்பம் என்ற பேரில் சல்லிக்காசு கூடத் தர முடியாது” என்று பூலித்தேவர் மறுத்திருந்தார்.
இதன் காரணமாக நெற்கட்டான் செவ்வல் கோட்டை பிரித்தானியப் படைகளின் தாக்குதலுக்கு உள்ளானது. பூலித்தேவரின் விவேகம் மிக்க வீரத்தின் முன் பிரித்தானியத் தளபதியின் வீரம் எடுபடவில்லை. அந்தப் போரில் பூலித்தேவரின் தரப்பு வெற்றி பெற்றது. இதன் காரணாமாக, கப்பம் வசூலிக்க வந்த பிரித்தானியப் படையுடன் போர் செய்து வெற்றி பெற்ற முதலாவது தமிழர் என்ற பெருமை பூலித்தேவர் வசமானது.
பிரித்தானியர்களுக்கு எதிராக அரச கூட்டணி
பிரித்தானியர்களின் படைபலத்தின் வீரியத்தை பூலித்தேவர் மிக நன்றாக உணர்ந்திருந்தார். அதனால், பிரித்தானியர்களுக்கு எதிராக உள்நாட்டு அரசர்களின் கூட்டணியினையும் அவர் அமைத்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே, பிரித்தானியர்களுக்கு எதிராக, சுதேச அரசுகளின் கூட்டணி ஒன்றை அமைத்தவர் என்ற பெருமையும் பூலித்தேவருக்குச் சொந்தமானது. அந்தக் கூட்டணியில் கொல்லங்கொண்டான், சேத்தூர், வடகரை, ஊத்துமலை, தலைவன் கோட்டை ஆகிய பாளையங்களும் திருவனந்தபுரம் அரசும் இணைந்து கொண்டன.
சூழ்ச்சி வலை விரிக்கப்பட்டது
தொடர்ச்சியாக 17 ஆண்டுகள் பிரித்தானியர்களுக்கு எதிராக பூலித்தேவரின் தரப்பு பல போர்களை நடத்தியது. அவை அனைத்திலும் தோல்வியையே கண்ட பிரித்தானியர் தரப்பு, சூழ்ச்சி வலையை விரித்தது. பூலித்தேவரின் சொந்தத் தமிழ்மக்களைக் கொண்டே அவரைக் கருவறுக்க வேண்டுமெனத் திட்டமிட்ட பிரித்தானியர்கள், அதற்காக ஒருவனைத் தெரிவு செய்தனர். அவன் பெயர் முகமது யூசுப்கான். அவனுக்கு மற்றுமொரு பெயரும் இருந்தது. அது ‘மருதநாயகம்’.
மருதநாயகத்தின் மாற்று வழி என்ன?
பூலித்தேவருடன் போராடுவதற்கு சுதேச மக்களைக் கொண்ட படை அமைத்து போரிட்டான் மருதநாயகம். என்றாலும் அவனால் பூலித்தேவரை வெல்ல முடியவில்லை. இதனால் மாற்று வழியை யோசித்த அவன், பூலித்தேவர் பிரித்தானியருக்கு எதிராக ஏற்படுத்தியிருந்த கூட்டணியை சீர்குலைக்க முற்பட்டான். திருவிதாங்கூர் அரசு அவனது சூழ்ச்சியில் அகப்பட்டு, பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வலுக்கு எதிராகத் திரும்பியது.
பூலித்தேவனை நேரடியாக எதிர்த்த மருதநாயகம்
நடுவக்குறிச்சிப் பாளையக்காரருக்கு இலஞ்சம் கொடுத்து தன் வசம் இழுத்துக் கொண்டான் மருதநாயகம். பூலித்தேவரின் படையில் இருந்த பல வீரர்களுக்கும் மருத நாயகம் இலஞ்சம் கொடுத்தான் என்றும் கூறப்படுகின்றது. மேலும், சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை போன்ற இடங்களில் இருந்தெல்லாம் ஆட்களைத் திரட்டி, பூலித்தேவருடன் கூட்டணியிலிருந்த அரசுகளைத் தோற்கடித்த மருதநாயகம், இறுதியில் பூலித்தேவரையும் நேரடியாக எதிர்த்தான்.
அவன் கையில் சிக்கவில்லை மாவீரன்
பிரித்தானியர்களின் நவீன ஆயுதங்களைத் திரட்டிப் போரிட்ட மருதநாயகத்திடம் 1761 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி பூலித்தேவர் தோல்வி அடைந்தார். எனினும் அவன் கையில் சிக்காமல் கடலாடிப் பகுதிக்கு தப்பிச் சென்றார் பூலித்தேவர். இதனால் ஆத்திரமடைந்த மருதநாயகம் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வல், பனையூர், வாசுதேவநல்லூர் உட்பட 29 கோட்டைகளை இடித்து தரைமட்டமாக்கி அழித்தான் என வரலாறு கூறுகின்றது.
மீண்டும் பூலித்தேவரின் ஆட்சி நிலைநாட்டப்பட்டதா?
மருதநாயகம் 1764 ஆம் ஆண்டு உயிரிழந்தான். அதன் பின்னர் பூலித்தேவர் மீண்டும் நெற்கட்டான் செவ்வலுக்கு வந்து ஆட்சி செய்தார். ஆனால், விதி வலியதாயிருந்தது. 1767 ஆம் ஆண்டு பிரித்தானியர்கள் வாசுதேவநல்லூர்க் கோட்டையை தாக்கினர். இந்தப் போரில் இருதரப்பும் வெற்றி தோல்வி காணா முடியாத நிலை இருந்த வேளையில், கடும் மழையுடனான இயற்கை அனர்த்தம் ஏற்பட்டது. அதனால், பூலித்தேவரின் படைகளுக்கே கடுமையான பாதிப்பு நிகழ்ந்தது.
இந்த நிலையில் கோட்டையை விட்டு வெளியேறி மேற்குத்தொடர்ச்சி மலையில் மறைந்து வாழ்ந்த பூலித்தேவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டைக்கு அனுப்பப்பட்ட போதும், இறைவழிபாட்டுக்கு கோயில் ஒன்றுக்குச் சென்ற போது தலைமறைவாகி மறைந்து விட்டதாகவே வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது. அவருடைய இறுதிக்காலம் இன்றும் வரலாற்றின் பொது வெளியிலிருந்து அந்நியமாகவே இருக்கின்றது.