1949 ஆம் ஆண்டிலிருந்து 1954 ஆம் ஆண்டுவரை, இலங்கைக்கான கவர்னர் ஜெனரலாக, சோல்பரி பிரபு என்று அழைக்கப்படும் ஹெர்வால்ட் ராம்ஸ்போத்தம் நியமிக்கப்பட்டிருந்தார். 1948 ஆம் ஆண்டும் ஃபெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் அடைந்த போதும், அது முழுமையான சுதந்திரமாக இருக்கவில்லை. நாட்டு மக்களே தம்மைத் தாம் ஆள விடப்பட்ட போதும், அறுதிப் பெருந்தலைமை பிரித்தானிய மகுடத்தின்வசமே இருந்தது. பிரித்தானிய அரசியல்வாதியான சோல்பரி பிரபு, அப்போதைய பிரித்தானியப் பேரரசராக இருந்த 6ஆம் ஜோர்ஜ்ஜிடமிருந்து, அந்த நியமனத்தைப் பெற்றுக் கொண்டு இலங்கைக்கு வந்தார்.
இனி நீங்கள் படிக்கப்போகும் கதை அவரைப் பற்றியது அல்ல. அவரது மகன் ஜேம்ஸ் ராம்ஸ்போத்தம் பற்றியது. இங்கிலாந்தின் கண்ணியமான பிரபுக் குடும்பத்தில் பிறந்தவர் ஜேம்ஸ். செல்வந்தக் குடும்பத்தில் பிறந்து, நாகரிகத்தில் உச்சந்தொட்ட நகரங்களில் வளர்ந்த போதும், அவருடைய இதயத்தின் ஆழத்தில் மெய்ப்பொருள் குறித்து அறியும் தாகம் இருந்து கொண்டேயிருந்தது. உலகப்புகழ் பெற்ற ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவஞானத்துறையில் படித்த போதும், அந்தப் படிப்பு அவரது தாகத்தைத் தணிக்கவில்லை. இந்த நிலையில் ஜேம்ஸுக்கு திருமணம் ஆகியது. தலைப் பிரசவத்தில் ஜேம்ஸின் மனைவி, வயிற்றிலிருந்த சிசுவுடன் உயிரிழந்தார். இது ஜேம்ஸின் வாழ்க்கையின் ஒரு பேரிடியாக வந்து இறங்கியது.
ஏற்கனவே அவருடைய இதயத்தின் ஆழத்தின் பொங்க முனைந்து கொண்டிருந்த ஞானத்தாகமென்னும் எரிமலை, வெடித்துச் சிதறி பிளம்புகளைக் கக்கியது. எப்போதும் மாறாத பேருண்மையைத் தேடிய தனது பயணத்தை ஜேம்ஸ் ஆரம்பித்தார். கிழக்குத் திசை அவரை வாவென்றழைத்து அணைத்துக் கொண்டது. அக்காலத்தில் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்று சில ஆண்டுகளாகியிருந்த இந்தியாவுக்குச் சென்ற ஜேம்ஸ், தனது ஞானத் தாகத்தைத் தணிய வைக்கக்கூடியவர்களைத் தேடி அலைந்தார். திபேத்தின் பனிபடர்ந்த சிகரங்களில் தனித்திருந்து தவம் செய்யும் பௌத்த ஞானிகளின் மடாலயங்களுக்கும் அவர் சென்றார்.
அவர் தேடியது எங்குமே கிடைக்கவில்லை. எதைத் தேடுகின்றோம் என்று தெரியாமல் ஒரு பொருளைத் தேடுகின்ற பயணம் அது! அவ்வளவு சுலபத்தில் முடிந்து விடாது. ஆனாலும் அது முடிந்தது. ஜேம்ஸ், தனது தந்தையன சோல்பரி பிரபுவின் ஆளுகையின் கீழ் இருந்த இலங்கையை வந்தடைந்தார்.
இலங்கையிலும் பல பௌத்த மடாலயங்களுக்கு ஜேம்ஸ் பயணித்தார். கதிர்காமத்திற்குப் போனார். யாழ்ப்பாணம் – தொண்டைமானாற்றில் அமைந்துள்ள செல்வச்சந்நிதி முருகன் கோயிலுக்கும் சென்றார். ஆன்மத் தாகம் தணிந்தபாடாயில்லை. மேற்கிலிருந்து கிழக்கிற்கு வந்து, அலைந்து திரிந்த அந்தப் பறவையின் இதயமோ, சோர்வு என்ற ஒன்றை அறியாததாயிருந்தது. அந்த இடைவிடாத தேடலின் பலனாக, யாழ்ப்பாணத்தின் கொழும்புத்துறைப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பொந்தினை, அந்தப் பறவை வந்தடைந்தது.
இலங்கையின் மாபெரும் ஞானப்பெருச்சிங்கம் அந்தக் கொழும்புத்துறைக் குகையில் வசித்து வந்தது. உலக வாழ்வில் உயர்ந்தோரெல்லாம் அந்த ஞானச் சிங்கத்தின் முன்னர் மண்டியிட்டுக் கிடந்தனர். இனம், மதம், மொழி பாராது அந்த ஞானச் சிங்கத்தின் கடைக்கண் பார்வை தம் மீது பட்டுவிடாதா என்று எத்தனையோ பேர் ஏங்கிக் கொண்டிருக்க, அந்த வாய்ப்பு ஜேம்ஸுக்கு கிட்டியது.
மாபெரும் ஞானியாகவும் தனிப்பெரும் யோகியாகவும் மௌனப்பேராட்சி செய்து கொண்டிருந்த யோகர் சுவாமியிடம் ஜேம்ஸ் போய்ச் சேர்ந்து கொண்ட கதை பலராலும் சிலாகித்துக் கூறப்படுவதொன்றாகும். நரிக்குட்டி கௌரிபாலா என்பவரே ஜேம்ஸை யோகர் சுவாமியிடம் அழைத்துவந்தார். சுவாமியிடம் ஜேம்ஸைக்காட்டி “கவர்னர் ஜெனரலின்” மகன் என்று, நரிக்குட்டி கௌரிபாலா அறிமுகம் செய்து வைத்தார்.
“உனது கவர்னரும் நான்! ஜெனரலும் நான்!” என்று கூறிய யோகர் சுவாமி ஜேம்ஸை தனது சீடராக ஏற்றுக் கொண்டார். யோகர் சுவாமி, ஜேம்ஸுக்கு கூறிய முதல் அருள் மொழி “ஆதியில் அச்சொல் இருந்தது….” எனத்தொடங்கும் புனித பைபிள் வாசகம். தான் எத்தனையோ முறை படித்ததும், இங்கிலாந்தில் எத்தனையோ பேர் படிக்கக் காது கொடுத்துக் கேட்டதுமான புனித பைபிளின் அந்த வாசகத்தை யோகர் சுவாமியின் வாக்காக கேட்டவுடன், அதன் மெய்ப்பொருளை ஜேம்ஸ் உணர்ந்து அனுபவித்தார்.
ஜேம்ஸின் அகந்தை முள்ளை அகற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட யோகர்சுவாமியின் அறுவைச் சிகிச்சை பல வேளைகளில் ஜேம்ஸுக்கு துன்பத்தை அளித்தது. அது குரு – சிஷ்யரிடையே சில முரண்பாடுகளையும் ஏற்படுத்தியது. எனினும், ஜேம்ஸ் மீண்டும் மீண்டும் தனது குருவிடமே திரும்பி வந்தார்.
ஜேம்ஸின் மனம், மெல்ல மெல்ல தனக்குள் தன்னைத் தேடும் மௌனப் பாதைக்குள் செல்லத் தொடங்கியது. தனது குருவின் ஆசியோடு மத வேறுபாடு இல்லாத மெய்ப்பொருளை நோக்கிய பாதையில் தனது யாத்திரையில் அவர் ஊக்கத்துடன் ஈடுபட்ட ஜேம்ஸை, யோகர்சுவாமியின் அடியார்கள் அனைவரும் “சந்த சுவாமி” என்று அழைத்தனர்.
குருவார்த்தையை ஏற்று செங்கலடி சிவதொண்டன் நிலையத்தின் பரிபாலகராக, ஜேம்ஸ் பன்னிரண்டு ஆண்டு காலம் கடமையாற்றினார். யோகர் சுவாமியின் பிரசித்தி பெற்ற நூலான நற்சிந்தனையின் ஆங்கில வடிவம் இந்தக் காலத்திலேயே உருவானது. தமிழர்கள் மட்டுமன்றி உலகின் அனைத்து மக்களுக்கும் யோகர் சுவாமியின் சிந்தனைகள் சென்றடைய வேண்டுமென விரும்பிய ஜேம்ஸ், அந்த நூலுக்கான நீண்ட முன்னுரையொன்றையும் எழுதியிருந்தார்.
யோகர் சுவாமி தமக்கு ஆங்கிலத்தில் சொன்ன அருள்மொழிகளுடன், மற்றைய தொண்டர்களுக்கும் அருளிய அமுத மொழிகளையும் தொகுத்த ஜேம்ஸ், Words of our master என்ற நூலை உருவாக்கினார்.
யோகர் மீது ஜேம்ஸ் கொண்டிருந்த குருபக்தி அளப்பரியது என்று அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களால் கூறப்பட்டிருக்கின்றது. தனது பணிகள் அனைத்தையும் ஒரு கட்டத்தில் முடித்துக் கொண்ட அவர், மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்து, மௌனத்தில் அமர்ந்தார். தம்மை விட்டு பௌதீகமாய் மறைந்து விட்ட தமது குருவை யோகரை கணப்பொழுது கூட மறவாமல், தியானத்தில் ஆழ்ந்த ஜேம்ஸ், ஆன்மப் பேரொளியை இறுதியில் கண்டு கொண்டார்.
புனித பைபிள் வாசகங்களின் மெய்ப்பொருளை விளக்கும் A Recapitulation of the Lord’s Prayer என்னும் நூல் ஜேம்ஸின் சொந்தப்படைப்பு எனக் கூறக்கூடியது. அது மேற்குலகத்தின் நாகரிக மாயையிலிருந்து விழிப்பவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழக்கூடியது என்றும் கூறப்படுகின்றது.
மேற்குத் திசையில் வாழ்ந்த பறவையொன்று கிழக்கிற்கு வந்து தனக்குரிய இரையைத் தேடி அலைந்து திரிந்தது. கீழ்த்திசையின் பல்வேறு நாடுகளுக்கும் அவற்றின் பகுதிகளுக்கும் தனது இரையைத் தேடி, சிறகுகளை விரித்தது. சுட்டுப் பிளக்கும் வெயிலிலும் கொட்டி முழக்கும் மழையிலும் தனது பயணத்தை அது நிறுத்தியிருக்கவில்லை. கனவுகளையும் கற்பனைகளையும் உதிர்த்திருந்த அந்தப் பறவை, தனது இரையை அடைவதிலேயெ குறியாயிருந்து, இறுதியில் அதனை அடைந்தும் கொண்டது.