Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

அக்டோபர் நவம்பரில் ஒருநாள் சுற்றுலா – பலப்பிட்டிய

அக்டோபர் நவம்பர் மாதங்களில் சுற்றலா செல்ல விடுமுறைதினங்களை நாட்காட்டியில் தேடி சோர்ந்துபோய்விட்டீர்களா? அப்படியானால், ஓய்வாக உள்ள வாரஇறுதியின் ஒருநாளை முழுமையாகப் பயன்படுத்தி நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தாரோடோ சுற்றுலா செல்லக்கூடிய “பலப்பிட்டிய (Balapitiya)” என்கிற இடத்தை என்னால் உங்களுக்கு அடையாளப்படுத்த முடியும்.

பலபிட்டிய கடற்கரைக்கு மேலான தோற்றம். படம் - shutterstock.com

பலபிட்டிய கடற்கரைக்கு மேலான தோற்றம். படம் – shutterstock.com

பலப்பிட்டிய (Balapitiya)

கொழும்பிலிருந்து காலிநோக்கிய தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக ஏறத்தாழ 112 Km தொலைவிலும் (ஏறத்தாழ 2 மணிநேர பயணம்), பழைய கொழும்பு-காலி வீதியினூடாக பயணிக்கும்போது, 81 Km தொலைவிலும் (ஏறத்தாழ 2.30 மணிநேர பயணம்) அமைந்துள்ள இலங்கையின் மற்றுமொரு கடல் மற்றும் ஆற்றுப்படுக்கையைக் கொண்ட எழில்மிகு பகுதியே இதுவாகும்.

இப்பிரதேசத்தின் ஒருபகுதியில் அழகிய கடற்கரைகள் சுற்றுலாப்பயணிகளைக்  கவரும்வகையில் இயற்கையாக அமைந்திருக்க, மறுபகுதியினை பல்வேறு அரிய இயற்கை வனப்புக்களைத் தன்னகத்தே கொண்ட மதுகங்கை ஆறு சூழ்ந்திருக்கிறது. முழுமையாக ஒருநாளில் கடற்கரை அழகையும், படகுச்சவாரி மூலம் மிகப்பெரிய ஆற்றின் இயற்கைவனப்பையும் அனுபவிக்ககூடியதாக உள்ளமை வாரறுதியினை வினைத்திறனாக பயன்படுத்திக்கொள்ள விரும்பும் எந்தவொரு சுற்றுலாபயணிக்குமே வரப்பிரசாதமாகும்.

மாதுகங்கை படகுச் சவாரி படம் - panoramio.com

மாதுகங்கை படகுச் சவாரி படம் – panoramio.com

பயணமுறை

தனியான வாகனங்களில் மிகவிரைவாகப் பயணிக்கவிரும்புவர்கள், தமக்கான தெரிவாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலைப் பயணத்தைத் தெரிவு செய்யலாம். எந்தவொரு வழியாகவும் காலிநோக்கிய தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்நுழைபவர்கள் குருந்துகத்தேகம நுழைவாயில் வழியாக வெளியேறி, அம்பலாங்கொட-எல்பிட்டிய பாதை வழியாக பலப்பிட்டியவை வந்தடையலாம்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை படம் - upload.wikimedia.org

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை படம் – upload.wikimedia.org

மாறாக, பொது போக்குவரத்தான பேருந்து சேவையை பயன்படுத்துபவர்கள் பழைய கொழும்பு-காலி பயணப்பாதையைப் பயன்படுத்தி பலப்பிட்டியவை நேரடியாக வந்தடைய முடியும். புகையிரத சேவையைப் பயன்படுத்துபவர்கள் நேரடியாகப் பலப்பிட்டிய புகையிரத நிலையத்தை அல்லது ஹிக்கடுவ புகையிரத நிலையத்தை வந்தடைந்து, அங்கிருந்து 15 நிமிட பயணத்தில் பலாப்பிட்டிய நகரை வந்தடைய முடியும்.

ஹிக்கடுவை புகையிரத நிலையம். படம் - http://il5.picdn.net/

ஹிக்கடுவை புகையிரத நிலையம். படம் – http://il5.picdn.net/

இலங்கையின் கடலோர அழகை ரசித்துகொண்டே பயணப்பட விரும்புவர்களில் ஒருவராக நீங்கள் இருப்பின், கொழும்பு – காலி பழைய வீதியினை பயன்படுத்துவதே சாலச்சிறந்ததாகும்.

வினைத்திறனான சுற்றுலா முறைமை (Efficient way of Trip method)

காலையில் பலாப்பிட்டியவை வந்தடைந்ததும், அன்றைய நாளை கடற்கரையிலா அல்லது மதுகங்கையின் படகுச்சவாரியிலா முதலில் ஆரம்பிப்பது என்கிற சந்தேகமும், குழப்பமும் நிச்சயமாக இருக்கும். இதன்போதான முடிவுகள், காலநிலை, பயணிகளின் விருப்பு-வெறுப்பு, படகுசவாரியின் கிடைக்கும்தன்மை என்பவற்றின் அடிப்படையில் வேறுபடலாம். என்னைப் பொறுத்தவரை, படகுச்சவாரியில் ஆரம்பித்து போதுமானவரை கடற்கரையில் நேரத்தை கழிப்பதே சிறந்தது என்பேன்.

மாதுகமை படகுச்ப சவாரி. டம் - pt.slideshare.net

மாதுகமை படகுச்ப சவாரி. டம் – pt.slideshare.net

பலாப்பிட்டியவை வந்தடைகின்ற போது, மதுகங்கையை சார்ந்ததாக பல்வேறு விடுதிகளையும், படகுச்சவாரி நிறுவனங்களையும் காணலாம். பெரும்பாலான விடுதிகள் தாங்களே படகுச்சவாரியையும் பொறுப்பேற்று நடாத்துகிறன. இதன்மூலமாக, தமக்குவருகின்ற சுற்றுலாபயணிகளுக்குக் கூடுதல் சேவையை வழங்கி அவர்களைக்கவர அவை முயற்சிக்கிறன. சிலசமயம் சுற்றுலாப்  பயணிகள் இவற்றிற்கான மேலதிக கட்டணங்களை வழங்கவும் நேரிடலாம். எனவே, பலப்பிட்டியவில் படகுச்சவாரி செய்ய விரும்புவர்கள் நேரடியாக படகு வைத்திருப்பவர்களுடன் கலந்துரையாடி, விலையை நிர்ணயித்துக்கொள்வதே உத்தமமாகும். குறைந்தது நான்கு பேரைக்கொண்ட குழு, உச்சபட்சமாக, 2,000/-க்கு அளவான படகினையும், பத்து பேர் கொண்ட குழு 6,000/- – 8,000/- வரையிலான உச்சபட்ச தொகையில் நீளமான சொகுசுப்படகுச்சவாரியினையும் மேற்கொள்ளமுடியும். படகுகளை பெற்றுக்கொள்ளும்போது, அனுபவம்வாய்ந்த வழிகாட்டியையும் பெறுவது பயண அனுபவத்தை முழுமையடையச் செய்யக்கூடும். (பருவகாலங்களில் இந்த விலையில் வேறுபாடுகள் ஏற்படலாம்)

மாதுகங்கை படம் - gangabadaasiriya.com

மாதுகங்கை படம் – gangabadaasiriya.com

படகுச்சவாரியின் ஆரம்பத்தில், தற்பாதுகாப்பு அங்கியை கேட்டுப்பெற்றுக்கொள்வது அவசியமாகும். அவ்வாறு வழங்கப்படாதவிடத்து, சவாரியின் பெறுமதி குறைவாகவிருந்தாலும் தவிர்த்துவிடுவதே சிறந்தது. சவாரியின் ஆரம்பத்தில், ஆற்றின் நடுவே இயற்கையாக அமைந்த சதுப்புநிலக் காடுகளையும், அதனைச் சார்ந்து வாழ்கின்ற 200க்கும் மேற்பட்ட விலங்கு மற்றும் தாவர இனங்களையும் (எல்லாவற்றையும் ஒரே பயணத்தில் காண இயலாது) பார்வையிட முடியும்.

இறால் பண்ணை படம் - gangabadaasiriya.com

இறால் பண்ணை படம் – gangabadaasiriya.com

தொடர்ந்து பயணப்படுகின்ற சமயத்தில், மதுகங்கை ஆற்றங்கரையில் இறால் தொழில் செய்பவர்களின் வலைகளைக் காணலாம். மிகச்சிறந்த வழிகாட்டி படகில் இருக்கும்பட்சத்தில் அவ்வலைகளுக்கு அருகாமையில் சென்று, அவை எவ்வாறு தொழிற்படுகிறது என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.

பாலங்கள் மூலம் இணைக்கப்பட்ட தீவுகள். படம் - pgangabadaasiriya.com

பாலங்கள் மூலம் இணைக்கப்பட்ட தீவுகள். படம் – pgangabadaasiriya.com

மதுகங்கை ஆறு பல சிறுதீவுகளைத் தன்னகத்தே உள்ளடக்கியதாக பலப்பிட்டிய கடற்கரையை வந்தடைகின்றது. சில தீவுகள் பாலங்கள் மூலமாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளபோதும், சில தீவுகளுக்குப் படகுகள் மூலமாகவே பயணப்படவேண்டியதாக உள்ளது.

அவ்வாறன பல தீவுகளுக்கு படகுச் சவாரி மூலம் செல்ல முடியும். இத்தீவுகளில் முக்கியமான ஒன்றில், ஏற்றுமதித் தரம்வாய்ந்த இலவங்கப்பட்டை (Cinnamon) பயிர்ச்செய்கையும், இலவங்க எண்ணெய் உற்பத்தியும் இடம்பெறுகிறது. எவ்வாறு இலவங்கபட்டையை பெறுவது, எண்ணெய் உற்பத்தியை எவ்வாறு செய்வது என்பவற்றை, அங்கு வாழ்கின்ற மக்களே விளக்குவார்கள். மிகக்குறைந்த விலையில் அவற்றை அங்கு வாங்கவும் முடியும்.

இலவங்க எண்ணெய் தயாரிப்பு, மாது கங்கை படம் - media-cdn.tripadvisor.com

இலவங்க எண்ணெய் தயாரிப்பு, மாது கங்கை படம் – media-cdn.tripadvisor.com

படகுச் சவாரியில் அடுத்ததாக, மதுகங்கை ஆற்றின் நடுவே அமைந்துள்ள “கொத்துடுவ விகாரை”யினைப்பார்வையிட முடியும். இது தனியான ஒரு தீவில் அமைந்துள்ளது. வரலாற்று ஆதாரங்களின் பிரகாரம், புத்தரின் உடலிலிருந்து எடுக்கப்பட பல்லை உள்ளடக்கி இவ்விகாரை அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுற்றுலாப் பயணத்தின்போது, அமைதியையும், அழகையும் ஒருமித்தே ரசிக்க சிறப்பான இடங்களில் இதுவுமொன்று.

கோத்தடுவ விகாரையும் அது அமைந்துள்ள தீவும். படம் - கட்டுரையாசிரியர்

கோத்தடுவ விகாரையும் அது அமைந்துள்ள தீவும். படம் – கட்டுரையாசிரியர்

இறுதியாக, மதுகங்கை படகுசவாரியில் பல்வேறு அரியவகை உயிரினங்களை பார்வையிடக்கூடியதாக உள்ளதுடன், செயற்கையாக அமைக்கப்பட்ட வெவ்வேறு விதமான மீன் பண்ணைகளையும் பார்வையிட முடியும்.

மாதுகமை கங்கையின் பறவையினங்கள். படம் - கட்டுரையாசிரியர்

மாதுகமை கங்கையின் பறவையினங்கள். படம் – கட்டுரையாசிரியர்

அவை, ஆற்றின் நடுவே அமைக்கபட்டுள்ளதுடன், படகிலிருந்து இறங்கி ஆற்றில் மிதந்தவாறு அமைக்கப்பட்ட பலகையின் ஊடாக நடந்து சென்று பார்வையிடும் திகிலான அனுபவத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். கூடவே,

மாதுகங்கை மீன்பண்ணை. படம் - .hotelthailanka.com

மாதுகங்கை மீன்பண்ணை. படம் – .hotelthailanka.com

“ கால்களுக்கு மீன் மசாஜ்” (Foot Fish Massage) என்னும்  வித்தியாசமான அனுபவத்தையும் பெறமுடியும். பொருத்தமான மீன்பண்ணையில் வழிகாட்டலுடன் கால்களுக்கு இந்த மசாஜை  பெறலாம். (கால்களில் உள்ள இறந்த சிறு தோல்களை மீன்கள் உண்பது, நமது கால்களுக்கு ஒருவித மசாஜ் தன்மையை வழங்குவதாக இருக்கும்).

கால்களுக்கான மீன் மசாஜ். படம் - கட்டுரையாசிரியர்

கால்களுக்கான மீன் மசாஜ். படம் – கட்டுரையாசிரியர்

இதற்கான, சிறிய கட்டணத்தை அறவிடுவதை அந்தப் பண்ணையை நடாத்துபவர்கள் வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

(குறித்த பண்ணையாளர்கள், சிறு முதலைகளையும் புகைப்படம் எடுக்கும் நோக்கத்திற்காகத் தங்களிடத்தே கொண்டுள்ளார்கள். அவர்களது வழிகாட்டலுடன் அவற்றையும் பயன்படுத்திக்  கொள்ள முடியும்.)

பண்ணைகளில் புகைப்பட நோக்கிற்காக வளர்க்கப்படும் சிறு முதலைகள். படம் - கட்டுரையாசிரியர்

பண்ணைகளில் புகைப்பட நோக்கிற்காக வளர்க்கப்படும் சிறு முதலைகள். படம் – கட்டுரையாசிரியர்

இவ்வாறாக, சுமார் மூன்று மணிநேரத்தை மதுகங்கை படகுச்சவாரியில் கழித்துவிட்டு வருபவர்களுக்கு, மதிய உணவை வழங்க கூடிய விடுதிகள் நகர் எங்குமே போதியளவில் கொட்டிகிடக்கிறது. அவற்றுள் பொருத்தமான, செலவுக்கேற்ப ஒரு விடுதியில் ஓய்வாக மதிய உணவையுண்டு, பலப்பிட்டிய கடற்கரையில் மாலைவரை உல்லாசமாகப் பொழுதைக் கழித்துவிட்டு மனம் மறக்காத ஓர் சுற்றுலாபயண நினைவுகளுடன் வீடு திரும்பலாம்.

பலப்பிட்டிய கடற்கரை. படம் - கட்டுரையாசிரியர்

பலப்பிட்டிய கடற்கரை. படம் – கட்டுரையாசிரியர்

குறிப்பு – பலாப்பிட்டிய அரியவகை உயிரினங்களை தன்னகத்தே கொண்ட ஓர் சுற்றுலாப்பகுதியாக உள்ளது. எனவே, பொலித்தீன் போன்ற குப்பைகளை ஆற்றிலோ அல்லது கடலிலோ வீசாதிருப்பது உத்தமாகும்.

பலப்பிட்டிய கடற்கரையின் காட்சி – காணொளி

Related Articles