பொன்னி நதி பாடலின் பின்னணி தெரியுமா உங்களுக்கு ?

பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவின் ஆறு தசாப்தகால கனவு என்றே சொல்லலாம்.  இயக்குனர் மணிரத்னம் இயக்கியிருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக வெளிவரவுள்ளது. இருபாகங்களுக்குமான படப்பிடிப்பு முற்றிலுமாக நிறைவுபெற்று பின்னணி மெருகூட்டல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான DOLBY ATMOS ஒலிக்கலப்பு பணிகள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் பிரபல ஒலிக்கலவை வல்லுனரான Greg Townley தலைமையில் இடம்பெற்று வருகிறது. இவர் 1917, Avengers : Endgame, Blade Runner 2049 மற்றும் Dune ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியவர். இந்நிலையிலே தான் படக்குழுவானது திரைப்படத்தின் முதற்பாடலை அண்மையில் வெளியிட்டது. 

பாடலுக்கான பின்னணி

பொன்னியின் செல்வன் வாசகர்கள் அனைவருக்குமே இந்தப்பாடல் அமையும் களம், இடம், எல்லாம் அத்துப்படி. காஞ்சியில் பொன்மாளிகை கட்டிவிட்டு தன் பெற்றோரை அங்கு அழைத்துவரும் ஆவலுடன் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன் தன்னுடைய சிநேகிதனான வந்தியத்தேவனிடம் இரு இரகசிய ஓலைகளை கொடுத்தனுப்புவான். அதனை இராச்சியத்தின் மிக முக்கியமான இருவரிடம் கொண்டு சேர்க்க குதிரையில் பயணப்படுவான் கதையின் நாயகன் வந்தியத்தேவன். அவ்வாறு வருபவன் ஆடி பதினெட்டாம் நாளான ஆடிப்பெருக்காகிய இந்நாளில் வீரநாராயண ஏரிக்கரையை வந்தடைவான். அப்போது அங்கு இடம்பெறும் ஆடிப்பெருக்கு கொண்டாட்டங்களில் மனம் திழைத்து பாடுவது போல் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் இப்பாடலை எழுதியுள்ளார்.

Caption

புகைப்பட விபரம்: “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின்  சில முக்கிய கதாபாத்திரங்கள் /Newbugs.com

பாடல் விளக்கம் 

பாடல் வரிகள் மிக எளிமையாக அனைவருக்கும் புரியும் வகையில் தெம்மாங்கு வடிவில் எழுதப்பட்டுள்ளது. இருந்தாலும் ஆங்காங்கே சில பண்டைய தமிழ் சொற்களும் எட்டிப்பார்க்காமல் இல்லை. 

“காவிரியாள் நீர்மடிக்கு 

அம்பரமாய் அணையெடுத்தான்” 

இதில் அம்பரம் என்ற சொல்லுக்கு கடல், ஆகாயம், திசை, சீலை என பல பொருள்படும். பாடலின் உட்கருத்தை நோக்கி நாம் இதன் பொருளை ஆராய்ந்தால் கடல் என்ற பொருளை நாம் தெரிவுசெய்யலாம். காரணம், ‘காவிரியாள் நீர்மடிக்கு’ – காவிரி அன்னையின் நீர்ப்படுகைக்கு / நதிக்கரைக்கு  ‘அம்பரமாய் அணையெடுத்தான்’ – கடல் போன்று பரந்து விரிந்திருக்கும் வீரநாராயண ஏரியை கட்டமைத்தான் (இராஜாதித்த சோழன்) என்ற பொருள்பட ஒரு சோழக்குடிமகன் பாடுவதாக உள்ளது. ஆகையால் தான் இந்த வரியை மாத்திரம் பம்பா பாக்யா பாடியிருப்பார். 

தொடர்ந்து ஏ.ஆர். ரைஹானாவின் குரலில், சோழத்தின் பெருமையை ஒரு பெண் பாடுவது போல, 

“நீர்சத்தம் கேட்டதுமே

நெல் பூத்து நிற்கும்

உளி சத்தம் கேட்டதுமே

கல் பூத்து நிற்கும்” 

என வரிகளை அழகாக எழுதியிருப்பார் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன். 

பாடலின் மெட்டு இந்த இடத்தில் அப்படியே வேறு கோணத்திற்கு செல்கிறது. மென்மையாக ஆரம்பித்த பாடல் மேள தாளத்துடன் ஆட்டம்போடும் வகையில் மாற்றம் பெறுகிறது. அப்படியே நம் வந்தியத்தேவனும் 

“பொன்னி நதி பாக்கணுமே

பொழுதுக்குள்ள” 

என பாட ஆரம்பிப்பார். பாடல் முழுவதும் வந்தியத்தேவனின் மனநிலை எப்படி இருக்கும் என்பதற்கு இந்த இருவரிகளே நல்ல எடுத்துக்காட்டு. மிகவும் துடிப்பான விளையாட்டுத்தனம் நிரம்பிய ஒரு இளைஞனே வந்தியத்தேவன். இயற்கை, பொன், பொருள், பெண்கள் என அத்தனைக்கும் ஆசைப்படுவான். ஆனால் காரியத்தில் கண்ணாயிருப்பான். அந்த வகையில் தான் குறித்த நேரத்திற்குள் பொன்னி நதியை பார்த்துவிட வேண்டும். இல்லையேல் போகும் காரியம் தாமதப்பட்டுவிடும் என்ற எண்ணம் அவனுக்குள் ஓட்டிக்கொண்டே இருந்தது. அதானால் தான், 

“கன்னிப்பெண்கள் காணணுமே

காத்தப்போல” 

என வரிகள் வரும். சோழ தேசத்து கன்னிப்பெண்களை காண ஆவல் இருந்தாலும் காற்றைப்போல கணநேரத்தில் அவர்களை கடந்துவிட வேண்டும் என தனக்கு தானே கட்டளை இட்டுக்கொள்வான். 

சோழ தேச மண் மீதான வந்தியத்தேவனின் பற்று, பக்தி என அனைத்தையுமே இளங்கோ கிருஷ்ணன் அழகாக எழுதியிருப்பார். அத்துடன் தன் குதிரையான செம்பனையும் அவ்வப்போது உற்சாகமூட்டிக்கொண்டு செல்வதுபோல் பாடல் எழுதப்பட்டு இருக்கும். உண்மையில் இது வந்தியத்தேவன் தன் குதிரையுடன் உரையாடும் விதத்திலேயே எழுதப்பட்டிருப்பதை உணரலாம். ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட பாடல் மாறுபாட்ட வடிவமைப்பில் இருந்தாலும் அனைவரும் ரசிக்கும்படியாகவே உள்ளது. 

புகைப்பட விபரம்:  வந்திய தேவனாக நடிக்கும் நடிகர் கார்த்தி     (பாடல் காட்சியிலிருந்து) /Youtube.com

பாடலின் இசை

இப்பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அமைத்திருக்கும் இசை அலாதியானது. மிக மிக மெதுவாக ஆரம்பிக்கும் பாடல் நதியோட்டம் போலவே அமைந்துள்ளது. ஊற்றெடுக்கும் (பாடல் ஆரம்பிக்கும்) இடத்தில் மெதுவாகவும் பின்னர் சற்றே வேகமெடுத்து வெள்ளப்பிரவாகம் போல பல இசைக்கருவிகள் ஒருசேர முழங்கி அதன்பின் ஆங்காங்கே வேகம் குறைந்தேறி இறுதியில் அழகாக கடலில் கலப்பது போல நிறைவுக்கு வருகிறது. 

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக பழங்கால இசைக்கருவிகளை இசைப்புயல் பயன்படுத்தியிருக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்த போதிலும் இப்பாடலிலே அதனை நன்றாகவே உணரமுடிந்தது. மேலைத்தேய வாத்தியங்கள் ஆங்காங்கே ஒலித்தாலும் இதுவரை கேட்டிராத தாளக்கருவி இசையும் காற்று வாத்தியங்களின் ஓசையும் துல்லியத்தெளிவாகவே உணர முடிகிறது. பண்டைய கால இசை என்றாலே இப்படித்தான் என்று எழுதப்படாத விதி திரையுலகத்தில் இருந்தாலும் அதிலிருந்து வேறுபட்டு சோழர்காலத்தில் ஒரு கிராமியப்பாடல் போல் இந்தப்பாடலின் இசை கையாளப்பட்டு இருக்கிறது. இதுவே சிலரது விமர்சனங்களுக்கும் காரணமாக அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் மிகப்பெரும்பாலான மக்களால் பாடல் ரசிக்கப்பட்டு வருகிறது. 

யார் இந்த இளங்கோ கிருஷ்ணன்?

இளங்கோ கிருஷ்ணன் தமிழகத்தை சேர்ந்த பெயர்பெற்ற கவிஞர் ஆவார். ஆனால் வெகுசன மக்களுக்கு இவரைப்பற்றிய பெரிய அறிமுகம் இல்லை. பொன்னியின் செல்வனே அவரது முதலாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் இலக்கிய உலகில் காயசண்டிகை (கவிதைகள்), பட்சியன் சரிதம் (கவிதைகள்).பஷீருக்கு ஆயிரம் வேலைகள் தெரியும் (கவிதைகள்), வியனுலகு வதியும் பெருமலர் (கவிதைகள்) மற்றும் மருதம் மீட்போம் (கட்டுரைகள்) ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார். 

மூன்று தசாப்தகாலம் நீடித்த மணிரத்னம் – வைரமுத்து – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி முறிந்த பின்பு அந்த மாபெரும் இடைவெளியை நிரப்ப இவர் உள்வாங்கப்பட்டுள்ளார். முதற்பாடலிலேயே பலரது பாராட்டையும் பெற்றுவிட்டார். ஆனால் இது இவர் இந்த திரைப்படத்திற்காக எழுதிய முதற்பாடல் இல்லை என்று தன் முகநூலில் தெரிவித்துள்ளார்.

புகைப்பட விபரம்: பொன்னியின் செல்வன் திரைப்படத்தின்  இயக்குணர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் இளங்கோ கிருஷ்ணன் 

 

அவர் தன் முகநூலில்… 

“இது இப்படத்தில் நான் எழுதிய நான்காவது பாடல். (நான் எழுதிய முதல் பாடல், ஷூட்டிங் எல்லாம் முடிந்த பிறகு, படத்தில் இடம் பெற வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அது ஒரு காவிய சோகம். அது பற்றி தனியே சொல்கிறேன்.)” 

என தெரிவித்திருந்தார். 

இதில் வரும் “ஈகரி எசமாயி” என்ற பதத்துக்கு அர்த்தமேதும் இல்லை என்றும் இசையின் சந்தத்துக்காக எழுதியது என்றும் ஒரு செவ்வியில் தெரிவித்திருந்தார். 

மேலும் இவர் பொன்னியின் செல்வனுக்காக 12 பாடல்களை எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இரு திரைப்படங்களுக்கும் சேர்த்து மொத்தமாக இருபது பாடல்கள் அளவில் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

பாடலாசிரியர் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவிக்கும்போது இனிமேல் வரும் பாடல்களில் நிறைய பண்டைய தமிழ்ச்சொற்கள் இருக்கும். இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயன்றளவு சோழர்கால தமிழை பாடல்களில் பயன்படுத்துமாறு தன்னிடம் அடிக்கடி கூறியதாக தெரிவித்திருந்தார். சொல் அகப்பட்டாலும் அது சந்தத்திற்கு அமைவாக உள்ளதாக அதன் தொனி பாடலின் சந்தர்ப்பத்திற்கு சரியாக உள்ளதா என மூவரும் கலந்துபேசியே ஒவ்வொரு பாடலையும் எழுதியதாக அவர் தெரிவித்தார். 

குறிப்பாக பொன்னி நதி பாடலை வந்தியத்தேவனின் எண்ண ஓட்டங்களை விவரிக்கும் வகையிலேயே தான் எழுதியிருப்பதாக அவர் கூறியிருந்தார். நாவலில் மக்கள் பாடுவது போல “வடவாறு பொங்கிவர” போன்ற நாட்டுப்புற பாடல்களை கல்கி அவர்கள் எழுதியிருப்பார். ஆனால் திரைப்படத்தில் எல்லாவற்றையும் ஒன்றாக்கி ஒரே பாடலில் தந்திருக்கிறார்கள். ஐந்து பாகங்கள் கொண்ட நாவலை இரு திரைப்படங்களாக சுருக்கியுள்ளார்கள். யார் யார் காணமல் போவார்கள் யார் யார் கதையை தூக்கி சுமப்பார்கள் என்பதே பல நாவல் பிரியர்களுக்கு புரியாத புதிர். ஆரம்பத்தில் வாசகர் வட்டத்தில் வலுத்திருந்த எதிர்ப்புகள் வரவர குறைவதையும் காணக்கூடியதாக உள்ளது. தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்டதொரு திரைப்படம். இதுவரை பெயர்பெற்ற பல கலைஞர்கள் ஒருசேர முயற்சித்து இந்த படைப்பை உருவாக்கி வருகிறார்கள். கல்கியின் எழுத்துகளுக்கு நியாயம் செய்வாரா மணிரத்னம் என்பது வாசகர் பலரது ஐயம். விடை செப்டெம்பர் 30 தெரிந்துவிடும்.

Related Articles

Exit mobile version