தமிழகத்தை நோக்கி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம். அதுவரை, தமிழகம் காணாத இளைஞர் எழுச்சி அப்போது நிகழ்ந்தது. பன்னாட்டு சதி என்றும், மாடுகளை கொடுமை செய்தல் என்றும், நாட்டு மாடுகளைக் காப்பாற்றுதல் என்றும் வெவ்வேறு கருத்துக்களை எதிர்த்து உலகின் அனைத்து மூலையிலிருந்தும் தமிழர்கல் இந்த உரிமை மீட்புப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவை அநேகம் பேருக்கு தெரிந்ததுதான். ஜல்லிக்கட்டு எப்போது தொடங்கியது? அதன் வரலாறு எப்படிப்பட்டது என்பதைக் கொஞ்சம் பார்க்கலாம். தமிழரின் வாழ்வில் சில அயிரம் ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்கலாம்.
ஜல்லிக்கட்டு எனும் பண்டையகால விளையாட்டு:
இன்று ஜல்லிக்கட்டு என்று பரவலாக அறியப்படும் விளையாட்டிற்கு ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல், ஏறுகோடல் என்று பல பெயர்களால் வழங்கப்பட்டு வந்திருப்பதை வரலாற்றின் ஏடுகளில் இருந்து காணலாம். சில இடங்களில் நடக்கும் விளையாட்டில் மாடுகளின் கொம்பில் பணமுடிப்பைக் கட்டி வைத்திருப்பார்கள். மாட்டை எதிர்த்து வெற்றி பெறும் வீரர்கள் காசை, அதன் கொம்பில் இருந்து, பரிசாக எடுத்துக்கொள்வார்கள். இந்த காசை சல்லிக்காசு என்று சொல்வார்கள். இதில் இருந்து ‘சல்லிக்கட்டு’ என்றும் ‘ஜல்லிக்கட்டு’ என்றும் மருவி வந்திருக்கலாம் என்று முனைவர்கள் தமது கருத்தை முன்வைக்கிறார்கள். ஊர்ப்பகுதிகளில் வேறு விதமாக சொல்லப்படுகிறது. மாட்டின் கழுத்தில் ஒரு வளையத்தை போடுவார்களாம். அதன் பெயர் சல்லி. சல்லியை மாட்டின் கழுத்தில் கட்டுபவன்/போடுபவன் ‘சல்லிக்கட்டு’ வீரன்!
பழந்தமிழர் வாழ்வும் ஏறுதழுவலும்:
ஏறுதழுவல் எனும் விளையாட்டு இன்று நேற்று நிகழ்வது அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சிந்துசமவெளி நாகரிகத்தின் போதே, காளையை அடக்கும் விளையாட்டு நடைபெற்றதற்கான கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்திருப்பதாக, எழுத்தாளர் சு. வெங்கடேசன் அவர்கள் தெரிவிக்கிறார். இதுதவிர பல தொல்லியல் இடங்களில் கிடைத்த கல்வெட்டுகள், கோவில் சிற்பங்கள் ஆகியவற்றில் இம்மாதிரியான சித்திரங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.
கல்வெட்டுக்கள் ஒருபுறமிருக்க, நம் வளமான இலக்கியங்களில் ஆநிரைகளுக்கு நாம் கொடுத்த உயர்ந்த இடம் மூலமாகவும், ஏறுதழுவல் குறித்த பல்வேறு சான்றுகள் கிடைக்கின்றன.
இலக்கியத்தில் ஏறுதழுவல்:
நம் இலக்கியங்களில் பெரும்பான்மையான இடங்களில் ஏறு என்ற சொல்லில் காளைகள் குறிப்பிடப்படுகின்றன. எருது என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். பல வண்ணங்களில், கொம்புகள் பல வடிவங்களிலான காளைகள் குறித்த வர்ணனைகள் வெவ்வேறு இடங்களில் காணக்கிடைக்கின்றன. இதுமட்டுமில்லாமல், வீட்டில் குடும்பத்தில் ஒரு உறவாகவே மாடுகள் வளர்க்கப்பட்டுள்ளன. பழங்காலத்தில் நம் இலக்கியங்கள் தோன்றிய காளைகளானவை காடுகளில் இருந்து அடக்கிக் கொண்டுவரப்பட்டவை. அவற்றைப் பிடித்து இழுத்து வந்து வீடுகளில் பழக்கி விடுவார்கள். அதற்குப் பிறகு தோழனாகவே வலம் வரும் காளைகள்.
காளைகள் தொடர்பான விளையாட்டு ஸ்பெயின், மெக்ஸிகோ, பிரான்ஸ் போன்ற பல நாடுகளிலும் நடைபெறுவதைக் காண முடிகிறது. அங்கு நடைபெறுவது ‘காளைச் சண்டை’ (bull fight) என்று சொல்லலாம். அச்சண்டையின் இறுதியில் கூரிய வாள் அல்லது ஈட்டி அந்த மாடின் முதுகில் செருகப்பட்டு இதயத்தை தாக்கி அந்த மாடு கொல்லப்படுகிறது. தமிழகத்தில் நிகழும் விளையாட்டை அதன் பெயரில் இருந்தே அதற்கான அர்த்தத்தை கண்டுபிடித்துவிடலாம். ‘ஏறுதழுவல்’ என்ற சொல் தன்னைத் தானே விளக்கிக் கொள்கிறது. ‘ஏறு+தழுவுதல்’. கோபம் கொண்ட காளைமாட்டைத் தழுவி அடக்குவதுதான் நோக்கம். விளையாட்டிலும் சரி, வாழ்க்கையிலும் சரி தமிழர்கள் உயரிய அறத்தைத் தவறாமல் பின்பற்றினார்கள், என்பதற்க்கு இதுவே சான்றாகவும் அமைகிறது.
வரலாற்றில், ஏறுதழுவல் என்பது முல்லை நில மக்களுக்கான விளையாட்டாகவே பார்க்க முடிகிறது. முல்லை நிலத்திலுள்ள மக்கள் மணமகனை ஏறுதழுவலின் மூலமாகவே தேர்ந்தெடுத்தனர். அம்மக்கள், தம் வீட்டு பெண்கள் வயதிற்கு வந்ததும் தங்கள் வீட்டிலுள்ள காளைக் கன்றுக்குட்டியை அதிகமான உணவும் ஊட்டச்சத்தும் கொடுத்து வளர்த்தனர். அந்தக் கன்றுக்குட்டி பருவம் எய்தியதும் அதை அடக்கும் வீரனுக்கே தங்கள் பெண்ணை மணம் முடித்துக் கொடுத்தனர். அந்த ஏறுதழுவலானது மிகப் பெரிய திருவிழாவாக நடந்திருக்கிறது. பறையோசை எழுப்பி பலருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஏறுதழுவலும் திருமணமும்:
இந்த விளையாட்டிற்கும் திருமணத்திற்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி எழுவது இயல்புதான். இன்றைய காலச் சூழலில், மனிதர்களுக்கு ஏறுதழுவலால் எப்பயனும் இல்லை. சில அறிவியல் நன்மைகள் மாடுகளுக்கும், அம்மாடுகளின் பால் குடிக்கும் மனிதர்களுக்கும் இருக்கிறது. ஆனால், ஜல்லிக்கட்டை முன்னிறுத்திய திருமணங்கள் வெகுசிலதே நடக்கின்றன.
நாம் பார்க்க வேண்டியது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. அப்போது மனிதனும் ஒரு விலங்காகவே வாழ்ந்து வந்தான். காடுகளில் சில இடங்களில் கூட்டமாக வாழ்ந்து வந்தான். அவன் தேவைக்கான மிருகங்களைக் காட்டில் இருந்து பிடித்துக் கொண்டு வர வேண்டும். குறிப்பாக ஆநிரைகளை. ஆநிரைகளே மிகப் பெரிய செல்வமாக இருந்த காலம் அது. வீடும், நிலமும் அசையாச் சொத்துக்களாக இருக்க, ஆநிரைகளே ஒரு நாட்டின் ஆகச் சிறந்த வளம். ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க, அந்நாட்டிலுள்ள ஆநிரைகளை கவர்ந்துகொண்டு வந்துவிடுவது முதல் படி.
இச்சூழலில், ஒரு வீட்டின் செல்வமான மாடுகளைக் கவர்ந்து வருவதற்கு ஒரு ஆணுக்கு உடல்பலமும் மனபலமும் அதிகமாகத் தேவைப்பட்டது. அப்படியான வீரமான ஒரு ஆண்தான் மாடுகளை அடக்கிக் கொணர்ந்து, வீடுகளை செல்வ செழிப்புடன் வைத்துக்கொள்ள முடியும். மேலும், காளைகளை அடக்கும் ஒருவன் பிற காட்டு விலங்குகளையும் எளிதில் சமாளித்து விடுவான். காதலும் வீரமும் முன்னிறுத்தப்பட்ட சங்க காலத்துப் பெண்கள், வீரமுடைய ஆணையே துணையாகத் தேர்ந்தெடுத்தனர். இதுகுறித்த குறிப்பு கலித்தொகையில் உள்ள முல்லக்கலி, சிலப்பதிகாரம், மலைபடுகடாம் ஆகிய நூல்களில் கிடைக்கின்றன.
காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும், அவ்
வேரி மலர்க் கோதையாள்; என்றும்
மல்லல் மழவிடை யூர்ந்தாற் குரியளிம்
முல்லையம் பூங்குழல்தான்; என்றும்
சிலப்பதிகாரம் (ஆய்ச்சியர் குரவை) சொல்கிறது. இதுதவிரவும் பல அடிகள் ஏறுதழுவல்-வீரம்-காதல் ஆகியவை குறித்து பேசுகிறது. கலித்தொகையில் கிடைக்கும் சான்றுகளுள் இவை மிகவும் பிரபலமானவை:
ஓஒ! இவள், பொருபுகல் நல்ஏறு கொள்பவர் அல்லால்
திருமாமெய் தீண்டலர்;
கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்”
இன்றைய சூழலில் ஏறுதழுவல்:
ஏறுதழுவல் என்பது பழந்தமிழர் காலத்தில் அறப்பிறழ்வு இல்லாமல் நடைபெற்றது. இன்றைய சூழலில் அதுபோலத்தான் நடக்கிறது என்று நிறுவமுடியாதுதான். போட்டி பற்றிய நியதிகளை நிபந்தனைகளை ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தும் குறித்த பகுதியின் ஏற்பாட்டளர்கள் கவனத்திற் கொள்ளவேண்டியது அவசியம். அதேசமயம், ஏறுதழுவல் எனும் விளையாட்டின் பின்னால் இருக்கும் அறிவியல் நோக்கம் குறித்து சரியாக தெளிவு பெறவேண்டிய கட்டாயம் நம் எல்லோருக்கும் இருக்கின்றது.
பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு ‘தகுந்தனத் தப்பிப் பிழைக்கும்’ என்று சொல்கிறது. அதன் படி, எந்த ஒரு உயிரினத்தின் மரபணு வீரியத்துடன் இருக்கிறதோ அதுடைய அடுத்த தலைமுறை ஆரோக்கியமானதாக இருக்கிறது. சில தலைமுறைகளுக்கு அந்த மரபணு தொடர்ந்து பயணிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இதே கோட்பாடுதான் ஏறுதழுவலிலும். எந்த ஒரு காளை பல தடைகளையும் மீறி 100 மீட்டர்களுக்கும் அதிகமாக ஓடுகிறதோ, எந்த காளையின் திமில் மிக உயரமாக இருக்கிறதோ, எது ஆக்ரோஷமாகச் சண்டை போடுகிறதோ, அந்த காளையே பலம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதுவே பிற பசுக்களுடன் கூடுவதற்குக் கொண்டு செல்லப்படுகிறது. அந்தக் காளையின் கன்று ஆரோக்கியமானதாகவும், அக்கன்றை ஈன்ற பசுவின் பால் சுவையாகவும் நம் உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது. இதேதான் அக்காலத்திய மணமகனுக்கும் பொருந்தியது. எந்த ஒரு ஆண்மகனால் காளையை அடக்க முடிகிறதோ அவனுடைய குடும்பம், அடுத்தடுத்த சந்ததி ஆரோக்கியமானதாக இருக்கும் என நம்பப்பட்டது.
நம் பண்பாட்டினை பேணுவதற்கு மாத்திரமின்றி, நம் மண்ணுக்குரிய மாடுகள் இங்கு வாழ்வதற்கும், நம் எதிர்கால சந்ததியின் ஆரோக்கியத்திற்கும் நம் காளைகள் எவ்வளவு முக்கியம் என்பதை அன்றே உணர்ந்தவன் தமிழன்.
இன்றைய சூழலில், அயல்நாட்டு மாடுகள், கலப்பின மாடுகள் என்று மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு நாட்டு மாடுகளும் செயற்கை முறையில் கருத்தரிக்கப்பட்டு வருகின்றன. நாட்டு மாடுகளில் இருத்து வந்த பல்வேறு வகையின் பரம்பரைகள் அழிவதற்கு முக்கியமான காரணமும் இதுதான். இனிவரும் காலங்களில் எம் நாட்டு மாடுகள் தொடர்பில் அதிக விழிப்புணர்வுடன் செயற்படவேண்டிய தேவை இருக்கிறது. எம்மோடு வளர்ந்த வந்த பாரம்பர்யத்தின் இன்னுமோர் அடையாளம் இதன் மூலம் காக்கப்படும் கடமையை உணர்ந்து தமிழர்கள் செயற்படவேண்டும்.