அன்னையரின் முக்கியத்துவம்
வழக்கமான மகாபாரதக் கதைகளில் பெண்களின் முக்கியத்துவம் என்பது ஓரளவு மட்டுப்படுத்தப்பட்ட அளவே இருக்கும். திரௌபதி போன்ற சில பாத்திரங்கள் தவிர்த்து ஏனைய பெண் பாத்திரங்கள், மற்ற ஆடவரின் அன்னை, மனைவி, சகோதரி என்றளவில் மாத்திரமே கருத்தில் கொள்ளப்படுவார்கள். ஆனால் ஜெயமோகனின் மாபெரும் நாவலான வெண்முரசு, இது வரை அறியப்படாத பாத்திரங்களை விரிவாகவும், நன்கு அறியப்பட்ட பாத்திரங்களை மிக நுணுகியும் அறியுமாறு அமைக்கப்பட்டது. எனவே இந்த பாரதக்கதையில் பெண் பாத்திரங்கள், குறிப்பாக அன்னையர்களின் முக்கியத்துவம் கனிசமானது. ஒவ்வொரு அன்னையரின் அகங்களும் அவர்களின் பிள்ளைகளில் பிரதிபலிக்கும் என நாம் கடந்த பகுதியிலேயே கண்டோம். அந்த வகையில் வெவ்வேறு பின்புலங்களில் இருந்து அஸ்தினபுரியின் மருமகள்களாக நகர்நுழையும் அம்பிகை, அம்பாலிகை, காந்தாரியினர், குந்தி, மாத்ரி போன்றோர் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தில் தவிர்க்க முடியாத நீடித்த தாக்கமொன்றை ஏற்படுத்தியிருப்பார்கள் என்பதும், அதன் விளைவு பின்னாட்களில் குருக்ஷேத்திர களத்தில் வெளிப்பட்டிருக்கும் என்பதும் மறுக்க முடியாத நிதர்சனம். இவ்வாறு வரப்போகும் ஆபத்தை உணராது பெண்கள் ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைக்க அரசியல் களமாடும் கதையாக இந்த நூல் அமைகிறது.
தாய்மை என்பது தன் குழந்தைகளுக்காக எதையும் செய்யத் தூண்டும் பேரன்பு என நாம் அறிவோம், ஆனால் அந்த பேரன்பின் பக்க விளைவொன்று இருப்பதை நாம் கவனிப்பதில்லை, அதுவே வஞ்சம். இயற்கையில் பறக்காத கோழி, தனது குஞ்சொன்றை பருந்து கொத்திச் செல்லும்போது பனையுயரம் பறக்கும் என்பதை நாம் கேட்டிருப்போம், கண்டிருப்போம். தாய்க் கோழிக்கு அந்த வலிமையை அளிப்பது தாய்மையெனும் உணர்வு தரும் வஞ்சமும் வலிமையும். மிருகங்களின் வாழ்வே இத்தனை கடூரமாக அமையும்போது அரசியல் களமாடுதல் என்பது கூரான மதிநுட்பங்களாலும் கொடிய சூழ்ச்சிகளாலும் பின்னப்பட்ட மாபெரும் வலை என்பதை புரிந்துகொள்வது சிரமமல்ல.
அஸ்தினபுரியின் அரச விவகாரங்களில் தங்களின் விருப்பத்தையும் மீறி காய்களாக அமர்த்தப்பட்ட இரு சகோதரிகளான அம்பிகையும், அம்பாலிகையும் விரைவிலேயே தங்களின் நிலைகளை உணரத்தொடங்கினர். கணவன் என்பவன் ஒரு பகல் கனவு போல வந்த தடம் தெரியாது மறைந்து போன பின்னர், பேரரசி சத்யவதியின் திட்டத்தால் வியாசர் மூலம் கருவுற்ற இரு காசி நாட்டு இளவரசிகளும் விரைவிலேயே அச்சமும், சந்தேகமும் சூழப்பெற்றனர். கணவன் இல்லை, புதிய நாடு, புரியாத அரசியல், மன்னனில்லாது எதிரிகளால் கைப்பற்ற காத்திருக்கும் ஒப்புயர்வற்ற அரியாசனம். இத்தகைய சூழலில் அவர்கள் இருவருக்கும் இருந்த ஒரே பிடிமானம் தங்கள் வயிற்றில் வளரும் சிசு. இருவரில் யாருக்கு முதலில் ஆண் வாரிசு உண்டாகுமோ அவர்கள் நிலை உயரும், ஸ்திரப்படும். தாய்மை என்பது மிகவும் விசித்திரமானது, அதுவரை காலமும் அஸ்தினபுரியில் ஒருவருக்கொருவர் துணையென நின்ற அம்பிகையும், அம்பாலிகையும் கருவுற்ற பிறகு மெல்ல மெல்ல ஒருவரின் இருந்து ஒருவர் விலகத்தொடங்கினர். அந்த விலகல் அம்பிகைக்கு முதலில் ஆண் வாரிசு பிறந்ததும் பிரிவானது, அந்த குழந்தை பார்வையற்றது என அறிந்ததும் அம்பாலிகை முகத்தில் தோன்றிய ஒரு புன்னகையும், அம்பாலிகையின் தன் குழந்தை வலுவற்றவனாக பிறக்கக் காரணம் தனது அக்காவின் சதியும், மாயமுமே என எண்ணியதும் அந்த பிரிவை நிரந்தரமாக்கியது. ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டு நகர் நுழைந்த இருவரும் பரம்பரை வைரிகளாக மாறிவிட்டனர்.
அம்பிகையால் அரண்மனை வலப்பக்க நீட்சியான புஷ்ப கோஷ்டத்தில் மல்லர்களுடன் திருதராஷ்டிரனும், அம்பாலிகையால் அரண்மனை இடப்பக்க நீட்சியான சித்திர கோஷ்டத்தில் ஓவியங்கள் மற்றும் பாவைகளுடன் பாண்டுவும் வளர்ந்து வந்தனர். அன்னையர் இருவரும் ஒரு பக்கம் இவ்வாறு முட்டிக்கொள்ளும் போது அவர்களின் பிள்ளைகளான திருதராஷ்டிரனும், பாண்டுவும் ஒருவரையொருவர் அன்புடன் சகோதரர்களாக எண்ணியே பழகினார்கள். இவர்கள் இருவருக்கும் இளையவனும், அரண்மனை சேடியான சிவைக்கு பிறந்தவனுமான விதுரன் இரு தமையன்களையும் மதித்து நடந்துகொண்டான்.
பீஷ்மரின் விழிவழியே சுடு மணல் பறக்கும் காந்தார தேசத்தின் வரலாறும், பண்பாடும், ஆட்சியும், ஆளுமையும், சிறப்பும் கூறப்படும். குந்தியின் கதைவழியே எப்போதும் மென்சாரல் துளிர்த்தவண்ணம் இருக்கும் யமுனையின் கரைகளில் அமைந்த யாதவப் புல்வெளியும், அங்கு திகழும் யாதவக் குடிமரபும், தொன்மையும், அரசியலும் அறியத்தரப்படும். இவ்வாறு பாரத நிலத்தின் இருவேறு முனைகள் என அமையும் பின்புலங்கள் அஸ்தினாபுரியில் களம் சேர்வதை வாசிப்பது விறுவிறுப்பான அனுபவமாக அமையும்.
எதிரிகள் சூழ்ந்திருக்கும் அஸ்தினாபுரிக்கு விழிகளற்ற திருதராஷ்டிரன் மன்னனாகப் போகிறான் என்பது சிக்கலான ஒரு நிலை, பேரரசி சத்யவதி மற்றும் பீஷ்மர் இணைந்து காந்தார இளவரசியை திருதராஷ்டிரனுக்கு மணமுடிக்க முடிவெடுத்தனர். அதற்கு காந்தாரம் சம்மதம் வழங்கியது. காந்தாரி, சத்யவிரதை, சத்யசேனை, தசார்ணை, சம்படை என காந்தரத்தின் 11 இளவரசிகளை திருதராஷ்டிரன் வென்று மணந்தான். இந்த திருமணத்தூடாக சகுனிக்கு வழங்கப்பட்ட வாக்கு அவன் சகோதரியின் மைந்தனுக்கு அஸ்தினாபுரியின் அரியாசனம் வழங்கப்படும் எனும் வாக்கு. இதனூடாக பல நூறு வருடங்களாக காந்தாரம் எதிர்பார்க்கும் மதிப்பும், மரியாதையும் அவர்களை வந்தடையும். இந்த பாகத்தில் வேறெந்த மகாபாரதத்திலும் காண முடியாத சகுனி-பீஷ்மர் இடையேயான அத்தியந்தமான உறவு கூறப்பட்டிருக்கும்.
காந்தார இளவரசியர் நகர்நுழையும் தருணத்தில் குருதிக்கு இணையான செந்நிறத்தில் பெரும் மழை பெய்வது வருங்காலத்தில் நிகழவிருக்கும் மாபெரும் போருக்கான சிறு அறிகுறி என எடுத்துக்கொள்ளலாம். இந்நாவலில் குறிப்பிடவேண்டிய உச்சகட்ட நாடாகத்தருணங்களில் ஒன்று சகுனியின் அஸ்தினாபுர வருகை. காந்தாரத்தில் இருந்து கற்பனைக்கும் அப்பாற்பட்ட செல்வங்களுடனும், பெரும் படைகளுடனும் சீர் கொண்டு வரும் சகுனியின் அந்தவொரு செயலே அவனது குணாதிசயங்களை செவ்வனே எடுத்தியம்பும்.
யமுனையின் கரைகளில் அமைந்த யாதவப்பெருநிலத்தின் அரசியல் சூழல் மிகவும் சுவாரசியமாக சொல்லப்பட்டிருக்கும். யாதவர்களிடையே நிலவும் குடி பேதங்கள், கம்சனின் எழுச்சி, மதுராவின் அரசியல் பதட்டம், குந்தி-வசுதேவர்-கம்சன் இடையிலான மதிநுட்ப மோதல்கள் என விறுவிறுப்பான பல சம்பங்களை இந்நூல் கொண்டுள்ளது. மகாபாரதத்தில் கண்ணன் முக்கிய பாத்திரம் என்றாலும் அவனது கதையும், குருவம்ச கதையும் பெரும்பாலும் தனித்தனியாகவே நோக்கப்படும். இந்நூலில் கிருஷ்ணனுடன் தொடர்புடைய அனைத்தும் அக்கால அரசியல் சூழலுடன் இணைத்து இக்கத்தையுடன் கூறப்படுகிறது. குந்தி சூரியனின் அம்சம் பொருந்த மர்மமான ஒரு இலவரசனால் கருவுறுதல், கர்ணனின் பிறப்பு, நதியில் குந்தியின் கைகளில் இருந்து கர்ணன் நழுவிச் செல்லுதல் என்பன அதீத கவித்துவத்துடன் எழுதப்பட்டிருக்கும்.
குந்தி பெரும் போராட்டங்களுக்கு பிறகு தன் மணத்தன்னேற்பில் பாண்டுவுக்கு மாலையிடுகிறாள். அதிலும் அரசியல் இருக்கத்தான் செய்கிறது. வளர்ந்து வரும் கம்சனின் அதிகாரத்தில் இருந்து தன்னுடைய யாதவக் குடிகளை காக்கும் பொருட்டு குந்தி பாண்டுவை மணக்கிறாள். அது போக குந்தியின் மனத்திலும் தனக்கேயான பல அரசியல் கனவுகள் இருந்தன. பாரதவர்ஷத்தின் பேரரசியாக அமரும் கனவு அவளுள் சிறுவயதிலேயே இருந்தது, இதற்கும் அந்த திருமணம் உதவியது. இருந்தாலும் திருமணத்தின் பின் பாண்டு மீதான காதல் அவளுக்கு உண்டாகத்தான் செய்கிறது.
காந்தாரத்தின் சிறிய அரசிகளால் குந்தி அவமதிக்கப்படுவதும், குந்தி தன்னுடைய இயல்பால் அவற்றை கடந்து வருவதுமாக அஸ்தினாபுரியில் மெல்ல மெல்ல ஆட்டம் சூடு கண்டது. நியமித்த திகதியில் திருதராஷ்டிரன் மன்னனாக வேண்டிய வேளையில் மக்களின் அதிருப்தி காரணமாக பாண்டு மன்னனாகிறான். குந்தி தேவயானியின் மணிமுடியை சூடி தன்னுடைய கனவை நிறைவு செய்கிறாள். பின்னர் அரசியல் நோக்கங்களுக்காக பாண்டுவுக்கும் மாத்ரிக்கும் நடக்கும் திருமணம், பாண்டு கானேகல், திருதராஷ்டிரனுக்கும், பாண்டுவுக்கும் குழந்தைகள் பிறத்தல், காந்தாரிக்கு தன்னுடைய மைந்தனின் எதிர்காலம் பற்றி தெரிதல், பாண்டு இமயத்தில் அமைந்த பல குருநிலைகளை சென்று சேருதல், குந்தியின் அரசியல் தீவிரம், பாண்டுவின் இறப்பு என நாவல் தன்னுடைய பிற்பாதியை நிரப்பிக்கொள்கிறது. பாண்டுவின் இறப்பைக் கேட்டு அத்தனை நாட்களும் இருந்த வஞ்சத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு தன்னுடைய தங்கை அம்பாலிகையை ஆரத்தழுவிக் கொள்கிறாள் அம்பை. அதற்கு அடுத்த நாளே பேரரசி சத்யவதி, அம்பிகை, அம்பாலிகை மூவரும் நகர் நீங்கி காடுகளுக்கு தவ வாழ்வு மேற்கொள்ள செல்கிறார்கள். இதனோடு இந்நூல் முடிவடைகிறது.
ஒரு தாளாத வறள் கோடையில் தொடங்கும் இந்நூலின், குளிர்ந்த மழைக்காலத்தில் முடிவடையும். இது ஆரம்பத்தில் வாரசிகளே இன்றி இன்னலான தருவாயில் இருந்த அஸ்தினாபுரி, புதிய அரசர்களின் வருகையைத் தொடர்ந்து 105 வீரர்களை பெற்றதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இந்நூலின் குறிப்பிடத்தக்க விடயம், பொதுவாக சகுனியின் எதிர்விசையாக விதுரரையே பெரும்பாலானோர் கருதுவர், ஆனால் இங்கு சகுனியின் அரசியல் விரோதி/போட்டி குந்தி. இங்ஙனம் இதுவரை நாம் கண்டிராத கேட்டிராத புதியதொரு பாரதக்கதையை நமக்கு வழங்கியிருக்கும் ஜெயமோகனின் வெண்முரசு வரிசையின் அடுத்த பாகமான வண்ணக்கடல் பற்றி வரும் வாரம் காண்போம்.