Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

பிரபலங்கள் பார்த்த உலக சினிமா – கலைச்செல்வன் | இளங்கோ ராம்

roar தமிழ் வாசகர்களுக்காக நாம் கொண்டுவரும் புதிய தொடர் இது. நீங்கள் அறிந்த இலங்கையின் பிரபலங்கள் தாங்கள் ரசித்த உலக சினிமாக்கள் பற்றி roar தமிழ் வழியே பகிர்ந்துகொள்ள உள்ளனர். இனி, வாரம் ஒருமுறை உங்கள் திரைப்பட ரசனைக்கு இலங்கைப் பிரபலங்களின் ரசனை வழியே விருந்து படைக்கப்படும். 

கலைச்செல்வன் – ஊடகத்துறை பன்முகக்கலைஞர்

கடந்த சில வருடங்களாக கமர்ஷல் சினிமாவிலிருந்து விடுபட்டு மனம் உலக சினிமா பக்கம் திரும்பக் காரணம், ஒருவகையான பக்குவ நிலையின் தேடல் என்றே உணர முடிகிறது. சினிமா எனும் ஒரு மொழி கொண்டு சமூக, கலாசார, அரசியல், இனவாத, ஆன்மீகவாத யதார்த்தங்களை சம்பாஷனை செய்ய மனம் இயலுமை பெற்றிருப்பதுவும் ஒரு பாக்கியம்தான்.

அந்த வகையில் ‘லொக்டவுன்’ காலத்தில் என்னை தாக்கிய இரு படைப்புகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

RAFAEL (2018) – டச்சு

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, முதலில் ஒரு நாவல் எழுதப்பட, அதை தழுவி செதுக்கப்பட்டது.

ஒரு இளம் டச்சுப் பெண் (ஹொலண்ட் நாட்டவர்) தனது டுனிசியா நாட்டை சேர்ந்த கணவருடன் க்ருவேஷியாவில் வாழும் தருணத்தில், உருவாகும் சிவில் யுத்த பின்னணியில் இருவரும் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பா செல்ல முற்படுகின்றார். சந்தர்ப்பம் அவளை மட்டும் வெளியேற்றி விடுகிறது. இந்நிலையில் கணவனின் நேர்மையான ஐரோப்பிய பயணத்திற்கான பல முயற்சிகளுக்கு சர்வதேச சட்ட விதிகள் பல முட்டுக்கட்டைகளை போட, சட்டவிரோத வழியிலாவது ஐரோப்பாவில் உள்ள தனது மனைவியை சென்றடைய தீர்மானித்து, கடல் வழியாக உயிரை பணயம் வைத்து முதலில் இத்தாலியை வந்தடையும் வேளையில் கடலோர படையினர் வசம் சிக்கி லம்பகுசா சட்டவிரோத அகதிகள் முகாமிலும் பின்னர் வகைப்படுத்தப்பட்ட முகாம் ஒன்றிலும் அடைத்து வைக்கப்படுகிறான். மறுபக்கம் கணவனை நேர் வழியில் எப்படியேனும் தனது நாட்டுக்கு எடுக்க முனையும் கர்ப்பிணி நிலையிலுள்ள மனைவியின் முயற்சிகளுக்கு, சர்வதேச சட்டங்கள், ஒப்பந்தங்களில் உள்ள நடைமுறைசார் உண்மை நிலைகளும், அவற்றை உதாசீனம் செய்யும் அதிகாரிகளின் மெத்தன போக்குகளும் வரையறைகளை விதிக்கும் தருணங்களில் எனது ரத்தம் அழுத்தம் பலமுறை சோதிக்கப்பட்டதை உணர்ந்தேன். ஒரு கட்டத்தில் ஊடகங்களின் கவனத்தினையும் ஈர்க்கும் மனைவியின் முயற்சிகள்.. கணவனை தன்னிடம் கொண்டு சேர்க்கிறதா… இல்லையா என்பதே கதை.

இயகுனர்: Ben Sambogratt
ஒளிப்பதிவு : Jan Meeskops
நடிகர்கள் : Melody Klever, Mehdi Meskar

RADIOGRAM (2017)- பல்கேரியா

தனது மகனுக்கு வானொலிப்பெட்டி (ரேடியோ) ஒன்றை வாங்க  100 கிலோமீற்றருக்கும் அப்பாலுள்ள ஒரு நகருக்கு நடைபயணம் மேற்கொள்ளும் ஒரு அப்பா… உண்மை சம்பவத்தை தழுவிய ஒரு செதுக்கல்.

பல்கேரிய தேசம், கமியுனிஸ்ட் ஆட்சிக்குள் இருந்த ஒரு கால கட்டத்தில், மேற்கத்தைய இசை மற்றும் வானொலிகளை கேட்பது ஒரு தேசத்துரோக செயல் என்றும் அச்சுருத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், ரோடோஃப் மலையடிவாரத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு கிராமத்தில் நிகழ்ந்தவற்றை இயக்குனர் – இரண்டு பரிமாணங்களில் ஊன்றி விடுகிறார். 1. கேட்பதற்கு தடை விதிக்கப்பட்ட ‘ரொக் அண்ட் ரோல்’ இசை வடிவத்தை ஒரு சிறுவன், அதன் மீது கொண்ட அதீத காதலால் ஒரு பழைய ரேடியோவில் கேட்கும் தருணங்கள் மற்றும் விதங்கள். 2. தாம் முஸ்லிம்களாக இருந்தாலும், தனது கட்சி ஆணையிடுமாயின் தனது பெயரையேனும் கிறிஸ்தவ பெயராக மாற்ற ஒரு கனமேனும் தயங்காத ஒரு கிராம பிரதிநிதியின் அட்டூழியங்கள். ஒரு கட்டத்தில் இச்சிறுவனின் ரேடியோ உடைக்கப்பட தனது மகனின் ஆசைக்கும் ஆர்வத்துக்கும் கலங்கம் வந்துவிடக் கூடாது என நினைத்து ஒரு ரேடியோ வாங்குவதற்கு 100கி.மீ.க்கும் அப்பாலுள்ள ஒரு நகருக்கு நடைபயணம் மேற்கொள்ளும் ஒரு துணிகர தீர்மானம் எடுக்கும் அப்பாவின் பாத்திரத்தினை அவ்விரு பரிமாணங்களுக்கும் இடையே நகர்த்தியிருக்கிறார்.

ஒடுக்கு முறையை எதிர்க்கும் எந்தொருவனுக்கும், ஏன் உங்களுக்கும் இந்த அப்பா பாத்திரம் ஒரு துணிச்சலுக்கு ஊக்கம் கொடுக்கும்.

இயக்குனர்: Rouzie Hassanova
ஒளிப்பதிவு: Kiril Prodanov
நடிகர்கள்: Aleksander Ivanov, Alexander Hadjiangelov, Aleksandar Aleksiev.

இளங்கோ ராம் – விளம்பரப் பட இயக்குனர் / ஒளிப்பதிவாளர்

Vikruthi (2020) – மலையாளம்

ஒரு சிலபடங்களைப் பார்க்கும்போதுதான் காலத்தை கடந்தும் அது நம் நினைவில் நிற்கும். இதுவும் அப்படியானதொரு படமே. படத்தின் மிகப்பெரிய பலமே கதாபாத்திரங்களின் வடிவமைப்பும், நம்பகத்தன்மையும் தான்.

WhatsApp, facebook போன்ற சமூகவலைதளங்களில் பகிரப்படும் செய்திகள், படங்கள் என்பவற்றில் உள்ள உண்மைத்தன்மையை ஆராய்ந்துபார்க்க வேண்டும் என்கிற மெசேஜினை சொல்கிறது இந்தப்படம். இயக்கியவர் Emcy Joseph. நல்ல மெசேஜ் சொல்வதினால் அது நல்ல படம் என்றாகிவிடமுடியாது. நல்ல திரைப்படம்  என்பது ஒரு உணர்வு. அதுவொரு அனுபவம். இந்தப் படமும் என் மனதில் இடம்பிடிக்க அந்த உணர்வும் அனுபவமும்தான் காரணம். இன்னொரு காரணமும் இருக்கிறது. அது இந்தப்படத்தில் கருப்பொருளாக பேசப்படும் “மனிதம்”.

முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கும் சௌபீன் மற்றும் சுராஜ் இருவரும் நாம் தினந்தோறும் காணும் மாந்தர்கள். படத்தில் நாம் தான் அந்தக் கதாபாத்திரமாக திரையில் தெரிகிறோம். நாம் என்றால் நீங்களும் நானும்தான். 

சௌபீன் முதற்பாதியில் எம்மை சிரிக்கவைக்கிறார். இரண்டாம் பாதியில் குற்ற உணர்வால் துன்பப்படுகிறார். நாமும் அவருடன் சேர்ந்து துன்பப்படுகிறோம். சுராஜ் வாய்ப்பேச முடியாத தந்தையாக தன்மகனுக்கு வேண்டியதைச் செய்கிறார். பின்னர் அதே மகன் தன்னை புரிந்துகொள்ளாது போகையில் செய்வதறியாது தனித்து நிற்கிறார். நாமும் அவருடன் நிற்கிறோம். இதில் சௌபீன் மற்றும் சுராஜ் இருவருமே தங்களுடைய வலி, அன்பு, பாசம், காதல், குற்ற உணர்வு, மன்னிப்பு, தனிமை ஆகிய அனைத்தையும் அவர்களோடு எங்களையும் உணரச்செய்கிறார்கள்.

முன்பின் அறிமுகமே இல்லாத இருவரின் இடையில் நடப்பதை சொல்லும் ஒரு கதைதான் இந்தப் படம். இறுதியில் இருவரும் சந்தித்துக்கொண்டார்களா, அவர்களது வாழ்கையை எது வழிநடத்துகிறது என்பதை அறிந்துகொள்ளும்போது படம் பார்க்கும் அனைவருக்கும் அது ஒரு அனுபவத்தை தரும்.

<spoiler> இறுதியில் சௌபீன் குடும்பத்துடன் சுராஜ் உரையாடும் போது பார்ப்பவர்களின் மனதை கரைத்து கண்ணீரை வரவைத்து விடுகிறது. “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்” என்கிற வள்ளுவன் வாக்கின்படி சுராஜ், சௌபீனை மன்னிக்க மட்டும் செய்யாது, தான் சௌபீனுக்கு செய்த நன்மையையும் பெரிதுபடுத்தி  பார்க்காமல் மறந்துவிடுகிறார். அங்கே, மனிதம் போற்றப்படுகிறது.<spoiler>

The Meyerowitz Stories (2017) – அமேரிக்கன்

நல்ல மெசேஜ் சொல்வதினால் அது நல்ல படம் என்றாகிவிடமுடியாது என்று மேலே சொல்லியிருந்தேன். கதையும் தேவையில்லை என்று நிரூபிக்கின்றது இந்தப்படம். நல்ல நேர்த்தியான பாத்திரப்படைப்பு உண்மையாகவிருந்தால், நாங்கள் அவர்களுடன் இணைந்து பயணிக்க முடியும்.

வயதான ஒரு அப்பா – ஓய்வுபெற்ற பேராசிரியர் / சிற்பி (Dustin Hoffman) , அவரின் இரு மகன்கள்; ஒருவன் unemployed (Adam Sandler), மற்றவன் financial advisor (Ben Stiller), ஒரு மகள் (Elizabeth Marvel). இவர்களின் வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தை அவர்களுடன் சேர்ந்து நாமும் கடக்கின்றோம்.

இந்த குறுகிய காலகட்டத்தில் அவர்களுக்கிடையே; வலி, ஏமாற்றம்,நம்பிக்கை எதிர்பார்ப்பு, மறைக்கப்பட்ட உண்மைகள், ஏற்றுகொள்ளுதல், நிராகரிப்பு, அவமதிப்பு ஆகியவற்றை கடந்து வருகிறார்கள். மகன்ளாக வரும் Adam Sandler மற்றும் Ben Stiller இருவரும் அவர்களது பாத்திரப்படைப்பை நன்றாக உணர்ந்து நடித்துள்ளனர். அதிலும் Adam மிகச்சிறப்பாக செய்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் என்றே சொல்வேன். 

அப்பா, நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். மூன்று பிள்ளைகளும் அங்கே ஒன்று சேர்கிறார்கள். ஒன்று சேர்வது என்று நான் சொல்வது இடத்தை அல்ல, மனம். இது பொதுவாக நமது வாழ்விலும் நிகழும் ஒரு சம்பவமாக இருக்கும். உறவுகள் இங்கேதான் வலுப்படும்.

எந்த மகனை அப்பா உண்மையாக நேசித்தார்? மற்றவர் உண்மையில் புறக்கணிக்கப்பட்டாரா? எந்த மகன் அப்பாவின் உண்மையான அன்பைப் பெற்றார்? எந்த மகன் உண்மையான அன்பைச் செலுத்தினார்? யார் அப்பாவின் கலை வாரிசு? மகள் மீது எந்தளவு பாசமாக இருந்தார்? போன்ற கேள்விகளுக்கு விடை அவிழ்க்கப்படுகிறது. அப்பாவின் மூன்றாவது மனைவி எப்போதும் குடிபோதையில் இருந்தாலும் கணவனை நன்றாக கவனித்துக்கொள்கிறார். இந்த மூன்று பிள்ளைகளிடம் அவருக்கு இருக்கும் தொடர்பு அழகாக காட்டப்பட்டுள்ளது. அதேபோல Adam Sandlerஇன் மகளுக்கும் சித்தப்பாவான Ben Stiller க்கும் இடையில் இருக்கும் உறவு அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

“Matthew” என அழைக்கப்படும் அப்பாவின் சிற்பத்தைப் பற்றி கண்காட்சியில் பேச அழைக்கிறார்கள். அப்பாவின் சார்பாக Ben Stiller பேசுகிறார். அவரைத் தொடர்ந்து Adam Sandlerஉம், அவரது தங்கையும் தங்கள் மனதில் உள்ளதை அங்கே பேசுகிறார்கள். மிகவும் உணர்வுபூர்வமாகவும் அழுத்தமாகவும் இந்தக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். தங்கைக்கு சிறுவயதில் நடந்த ஒரு “சம்பவத்தை” அவர் சொல்கிறார். அதைக் கேட்டு அண்ணன்மார் எதிர்வினை ஆற்றும் இடம்; பின்னர் அண்ணன்மார்களுக்குள் எழும் பிணக்கு. அதற்கான காரணம், என மிகவும் உணர்வுபூர்வமான விதத்தில் பல காட்சிகள் படத்தில் உண்டு. Matthew சிற்பமும் படத்தில் ஒரு முக்கிய பாத்திரம் தான். அதன் பின்னால் இருக்கும் உணர்வுபூர்வமான நிகழ்வும் அதில் அப்பாவும் பிள்ளைகளும் தனக்கிடையே பகிரும் சம்பவங்களும் படத்தின் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியவை.

மீண்டும் மனித உணர்வுகளை பற்றிப்பேசும் ஒரு படம், நாங்கள் எங்களையே பார்க்கும் அனுபவத்தை தருகிறது. கதை என்ற ஒரு தேக்க நிலையில் நிற்காமல், கதாபாத்திரங்களின் வீரியத்தால் ஒரு அழகான நதி போல செல்கிறது இந்தப்படம். இயக்கம்: Noah Baumbach. 

Related Articles