Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

பிரபலங்கள் பார்த்த உலக சினிமா – நவயுகா | தனுஷிக்

roar தமிழ் வாசகர்களுக்காக நாம் கொண்டுவரும் புதிய தொடர் இது. நீங்கள் அறிந்த இலங்கையின் பிரபலங்கள் தாங்கள் ரசித்த உலக சினிமாக்கள் பற்றி roar தமிழ் வழியே பகிர்ந்துகொள்கின்றனர். இனி, வாரம் ஒருமுறை உங்கள் திரைப்பட ரசனைக்கு இலங்கைப் பிரபலங்களின் ரசனை வழியே விருந்து படைக்கப்படும். 

நவயுகா | சினிமா துறை

என்னைக் கவர்ந்த சினிமாக்கள் என்று சொல்வதை விட என் உதரத்தில் ஓங்கி உதைத்ததைப் போன்ற வலியையும் நம்மைச் சுற்றி விரிக்கப்பட்டிக்கும் ஏனையோரின் சிந்தனை வலையிலிருந்து தப்பித்துப் பறக்க வேண்டிய கட்டாயத்தைக் காட்சிப்படுத்திய காவியங்கள் என்று சொல்வதை,  நான் மிகையென எண்ணவில்லை.

The Shawshank Redemption (1994) | அமேரிக்கன்

இந்தப் படத்தின் கதை Stephan King இனுடையது. IMDb Rating- 9.3 என்பதால் என்னைப் பார்க்கத் தூண்டிய ஆங்கிலத் திரைப்படம் இது. ஆரம்பத்திலும் இறுதியிலும் ஒரு சில காட்சிகளைத் தவிர மீதமானவை சிறைச்சாலையையும் அதன் அன்றாடங்களோடும் நகர்ந்து செல்கின்றன.

சிறையின் கொடூரமும் அதன் அந்தகாரம் நிறைந்த காட்சிகளும் நம்மைக் கதைக்குள் உடுருவச்செய்யும் கருவிகளாகின்றன. Andy, Red எனும் கதாபாத்திரங்கள் கதையை நகரவைக்கும் முறை அபாரமானது. உல‌கின் மிகப்பழைய முறை தான் ஆனால் அது வெகுவேகமாக நம்மைப் பாதிக்கத் தொடங்குகிறது. சிறைசாலையில் தொடங்கி முடிவுவரை Red கதை சொல்லியாகி Shawshank ற்குள் நம்மைப் பயணிக்க வைக்கிறார்.

என்னை மிகவும் பாதித்த மனிதனாக அங்கே ஒருவர் அவ்வப்போது வலம் வந்து போனார்..! வயதானவர்..! நூலகர்..!
50 வருட கால சிறை வாழ்க்கை, தண்டனைக்குரிய கைதி, ஆனால் உணவில் இருக்கும் புழுவை வாங்கி, சட்டைப் பையிற்குள் தான் பத்திரப்படுத்தும் பறவைக்கு ஊட்டி அதை ஆசுவாசப்படுத்தும் ஓர் ஆன்மா…

விடுதலை… அன்றும் இன்றும் என்றும் எல்லோராலும் கொண்டாடப்படுகிறது! ஆனால் சிறையிலிருந்து விடுதலை கொடுக்கப்பட்டதனால் உலகிலிருந்து நிரந்த விடுதலை பெற அவர் முடிவெடுத்த நொடிகளில்
உங்களால் அழாமலிருக்க முடியாது போகும். விடுதலை என்பதற்கான புது அர்த்தம் புரியத் தொடங்கும்.

அடிமை எண்ணம் விதைக்கப்பட்டால் பிளாஸ்டிக் கதிரையில் கூட குதிரையைக் கட்டிப் போடலாம் என்ற ஆழமான தளத்திலிருந்து சொல்லப்பட்ட கதை. சந்திக்கும் எல்லா அடிமட்ட சரிவுகளும் ஒருவனுக்குச் சந்தர்ப்பமாகத் தெரியுமாயின் அவன் வெல்லப் பிறந்தவன் என்பதை சொல்லாமல் சொல்கிறது திரை.

இயக்கம் : Frank Darabont
திரைக்கதை: Stephen King, Frank Darabont

Blue is the warmest color (2013) | பிரஞ்சு

Blue is the warmest color எனும் நாவலைத் தழுவி அதே பெய‌ரில் எடுக்கப்பட்ட French திரைப்படத்தை என்னைக் கவர்ந்த இரண்டாவது திரைப்படமாகப் பதிவு செய்கிறேன்.

ஒத்த பாலினக் காதல் கதை. தைரியமாக காட்சிகள் கையாளப்பட்டமையும் அவற்றின் நகர்வுகளும் நிஜங்களின் நிஜங்களாக உணர வைக்கும் சக்தியைக் கொண்டிருக்கின்றன. அன்பு, காதல், பிரிவு என்பவை பொதுமைப்படுத்தப்பட்ட உணர்வுகள்; இயற்கையில் ஒத்த பாலினக் கவர்ச்சி மிகச் சாதாரணமானது என்பது உணர்வு பூர்வமான தளத்தில் காட்சிகள் முற்றிலும் வியாபித்திருக்கிறது.

உலகத்தின் அனைத்து மூலையிலும் தனிநபர் சுதந்திரத்தை மதிக்காத மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதும் அழகான முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது.

அடேல், எம்மா (நடிகைகள்) திரையில் யதார்த்தத்தில் வாழ்ந்து கொண்டிருந்ததால் சாதாரண கதையை அசாதாரணமான இடத்தைத் தொட வைக்க அவர்களால் முடிந்திருக்கிறது. யெளவனமும் அதன் தேடல்களும்… வெறும் பருவக் கவர்ச்சி மட்டுமல்ல அவை ஆத்ம திருப்தி என்பது பக்குவமாகப் பகிரப்பட்டிருந்தது.

பெண்ணுக்கு பெண்ணின் மேல் காதல் வந்தால் என்ன? ஆணின் மேல் வந்தால் என்ன? காதலில் பெண்- ஆண், பெண்-பெண் என்ற பேதங்கள் இல்லை என்று அப்பட்டமாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது. நீங்கள் இயற்கையையும் அதன் உன்னத நியதிகளையும் நேசிப்பவராக இருந்தால் கட்டாயமாய் பார்க்கலாம். 

இயக்கம்- Abdellatif Kechiche

தனுஷிக் | ஊடகத்துறை

Parched (2015) | ஹிந்தி

பொழுதுபோக்காக நான் பல படங்களைத் தேடிப்பார்ப்பதுண்டு. ஆனால் இந்தப்படமோ நான் தேடிப்போனது அல்ல. ஏதேட்சையாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்த அருமையானதொரு படம். 

இத்திரைப்படமானது குஜராத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வாழும் மூன்று பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும். இக்கிராமத்தின் கலாசாரம், சிறுவர் திருமணம், வரதட்சணை, பெண் அடிமைத்தனம், கல்வி அறிவற்ற சமூகம், பாலியல் ரீதியிலான பிரச்சினைகள் என பல்வேறு கோணங்களை அடங்கியதாக இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

கதையின்படி ராணி (Tannishtha Chatterjee), ஒரு விதவைப்பெண். அடுத்து, லஜ்ஜோ (Radhika Apte) ஒரு குடிகாரனுக்கு மனைவியாகவும் அவனுக்கு ஒரு குழந்தையை பெற்றுத்தர முடியாத பெண்ணாகவும் இருக்கிறாள். மற்றவள், பிஜிலி (Surveen Chawla); விலைமாது மற்றும் நடனமங்கை. மூவருமே நல்ல நண்பர்கள்.

இவர்களின் தனிப்பட்ட வாழ்வின் கதைகளைக் கொண்டு, பெண்கள் கணவனை இழந்து விதவையானாலும், கணவன் தன்னை மகிழ்விக்கமுடியாதவனாக இருந்தாலும் அவனையே எண்ணித்தான் வாழவேண்டும் என்கிற நிர்பந்தங்கள் பற்றியும், தனக்கு தாம்பத்திய உறவில் மகிழ்ச்சி இல்லாவிட்டால் அதை வெளிப்படுத்தும் சுதந்திரம் பற்றியும் கேள்வி எழுப்பப்படுகிறது.  காசுக்காக தன் உடலை விற்பவளுக்கும் ஆசை. விருப்பு, வெறுப்புகள் உண்டு என்பதுவும் சொல்லப்படுகிறது.

காலம்காலமா சொல்லப்பட்டுவரும், அவர்கள் ஏற்கமறுக்கும் கோட்பாடுகளை உடைத்து எறிந்து, தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழும் உரிமையை தேடி அவர்கள் பயணிப்பதாய் கதை முடிகிறது.

பெண்களுக்கே உரிய தேவைகள் ஆசைகளை சித்தரித்த விதம்; எந்த ஒரு ஆணுக்காகவும் சரி, சமுதாயத்திற்காகவும் சரி தன்னுடைய உரிமையை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என்பதை தைரியமாக சொன்ன விதம்; இவையே இத்திரைப்படத்தில் என்னை வெகுவாக கவர்ந்த விடயங்கள்.

பெண்கள் விரும்பியதை செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு. பெண்களை சுதந்திரமாக பயணிக்க விடவேண்டும். இதே கருத்தை தான் நானும் வலியுறுத்துவேன். பெண் இயக்குனர் ஒருவர் முன்வந்து இந்தப்படத்தை எடுத்ததையும் அவரது இந்த முயற்சியையும் என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இயக்கம்:  Leena yadav
தயாரிப்பு: Ajay Devgan 

The Pursuit of Happyness (2006) | அமேரிக்கன்

பொதுவாகவே நமது தந்தை மீது நமக்கு பலவாறான அபிப்ராயங்கள் இருக்கும். அன்பானவர், கண்டிப்பானவர், கோபக்காரர். சிலசமயங்களில் வடிவேலு சொல்வதைப்போல காமடி பீஸாகவும் நாம் நினைத்ததுண்டு. ஆனால், இப்படத்தில்  நான் ரசித்தும்பார்த்த அப்பா கதாபாத்திரம் உண்மையிலேயே “வேற லெவல்”.

இப்படத்தின் கதாநாயகன் Will Smith. அவர் நடித்த பல படங்களை நாம் பார்த்திருப்போம். வெவ்வேறு கதாபாத்திரங்களில் கண்டிருப்போம். ஆனால் இந்தப்படத்தில் அவர், பாசமிகு தந்தை. தனது மகனுக்காக நாளாந்தம் வருமானம் தேடி அலையும் ஒரு தந்தை. மனைவி தன்னை விட்டுப் பிரிந்த பின்னாலும் கூட தன் மகனுக்காகவே வாழ்க்கையை கொண்டு செல்லும் ஒரு தந்தை. 

தனக்கிருக்கும் கஷ்டத்தை கூட வெளியில் சொல்லமுடியாமல், பொதுக்கழிவறையில் தன் இரவை செலவிடவேண்டிய நெருக்கடியில் தவிக்கும் தந்தையாக இவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் பார்ப்பவர்களின் மனதில் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும்.

உண்மையாகவே எனக்கும் என் தந்தைக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதுண்டு. இந்தப்படம் பார்த்த மறுநாளே என் தந்தையிடம் சென்று மன்னிப்பு கேட்டு “இனிமேல் சண்டை பிடிக்கமாட்டேன்” என சொல்லுமளவுக்கு இப்படம் என்னை பாதித்தது.

அளவுக்கதிகமான அன்பாக இருந்தாலும் சரி, கண்டிப்புடன் நடந்துகொண்டாலும் சரி அப்பாக்கள் அனைவருமே எமக்கு ஆண் தேவதைகளே! இக்கதையில் வரும் அப்பாவைப் போன்று என்றுமே தன் குழந்தைகளுக்காக வாழும் அப்பாக்களுக்கும், இப்படியான ஒரு உண்மைச் சம்பவத்தை சிறந்த முறையில் இயக்கி படமாக்கி, கதைக்கு, கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களை நல்ல முறையில் தெரிவு செய்த இயக்குனருக்கும் என்னுடைய சல்யூட்!

இயக்கம் : Gabriele Muccino
நடிகர்கள்: Will Smith, Thandie Newton, Jaden Christopher Syre Smith

Related Articles