டேய் நண்பா, எதாவது நியூஸ் சானல் வைடா!, டெல்லியில் நம்ம தமிழக விவசாயிங்களாம் 35 ஆவது நாளா போராடுறாங்க, என்ன நிலமைனு பார்க்கலாம், இது நான். டேய் IPL மாட்ச் போய்ட்டு இருக்கு இன்னிங்க்ஸ் ப்ரேக் அப்போ பார்த்துக்கோ. இது IPL பார்த்துக்கொண்டு இருக்கும் என் ஆறு நண்பர்களோட கூட்டுக் குரல்!, இப்ப IPL பாக்குறதால உங்களுக்கு என்னதான்டா கிடைக்க போது?. சரி நீ நியூஸ் பார்க்குறதால என்ன நடக்க போது? அங்க போராடிட்டு இருக்கவங்களயே கேட்க நாதி இல்லயாம் இதுல இவன் வேற.. என்று கூறி விட்டு “விராட் கோலி” அடித்த சிக்ஸருக்கு ஆர்ப்பரித்தனர்..
அவர்கள் சொல்வதும் உண்மைதான், நான் செய்தி பார்ப்பதால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. ஆனால் ஊருக்கே சாப்பாடு போட்ட விவசாயிகள் பட்டினியால் சாவதை கேள்வி கேட்காமல்! அரைகுறையாக ஆடை அணிந்து சியர் கேர்ல்ஸ் ஆடும் IPL பார்க்க ஏனோ என் மனம் ஒப்பவில்லை.
டெல்லியில் போராடும் விவசாயிகளின் முக்கியமான 3 கோரிக்கைகள்.
- 150 ஆண்டுகளில் இல்லாத வரட்சி இந்த ஆண்டு வந்ததன் காரணமாக விவசாய கடன் 6,000 கோடியை இரத்து செய்ய வேண்டும்.
- நதிகளை இணைக்க வேண்டும்.
- தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயிக்க வேண்டும்.
சரி இந்த கோரிக்கைகளை அவர்கள் தமிழ்நாட்டு அரசிடம் கேட்காமல் ஏன் மத்திய அரசிடம் கேட்கிறார்கள்?. இங்கேயும் போராடினார்கள், ஆனால் இங்குதான் யார் முதல்வர்? என்ற கேள்வியே பெரும் போராட்டமாக இருக்கிறதே!, வேறு வழி இல்லாமல் மத்திய அரசை நேரடியாக கேட்க முனைந்தனர்.
“உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.”
இந்த குறளின் பொருள் தெரியாத மத்திய அரசும் விவசாயிகளுக்கு செவி சாய்க்க மறுக்கிறது. விவசாய கடன்கள் நேரடியாக பெறப்பட்ட கடன் (தனி நபர் கடன்) அதனை இரத்து செய்வதில் பெரும் சிக்கல் இருப்பதாக RBI சொல்கிறது. அப்படி என்றால் பல கார்பரேட் நிறுவனங்களுக்கு பல இலட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்தது ஏன்?, என்ற கேள்விக்கு GDP, அந்நிய செலாவணி என்று மழுப்புகிறார்கள்.
ஒரு அன்னிய நாட்டின் நிறுவனம் இங்கே தனது வியாபாரத்தை தொடங்க “Tax Free Zone” கூட அமைத்துத் தருகிறது அரசு. அதாவது வரி கட்டத் தேவை இல்லை, அதுபோக முதலீட்டிற்கு கடனும் தரப்படுகிறது அதுவும் தள்ளுபடி செய்யப்படும். இவ்வளவும் அந்த நிறுவனத்தில் வேலை கிடைக்கப்போகும் 1000 பேர்களுக்காக என்று கூறப்படும்!. அப்படி என்றால் 75% மக்கள் நம்பி இருக்கும் விவசாயத்தை பற்றி கண்டு கொள்ளாததற்கு காரணம் இதில் அரசியல்வாதிகளுக்கு பங்கு கிடைக்காததுதானோ?. இந்தியாவின் GDP இல் 20% விவசாயத்தின் பங்கு இருக்கிறது! அப்படி இருந்தும் நாம் ஏன் விவசாயத்தை பாதுகாக்க தவறுகிறோம்?.
அடுத்து நதி நீரை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருக்கிறது. அதை பூர்த்தி செய்துவிட்டால் பின் அரசியல்வாதிகள் எப்படி ஏழை விவசாயிகளை வைத்து அரசியல் செய்ய முடியும்!. மன்னர்களின் ஆட்சியின் போது அமைக்கப்பட்ட ஏரிகளையும், குளங்களையும் தூர்வாரக்கூட நம் அரசுக்கு நேரம் இல்லை. பின் இவர்கள் எப்படி நதிகளை இணைப்பார்கள்?. கடந்த ஆண்டு பெரு வெள்ளம் சென்னையை தாக்கிய போதுதான் எவ்வளவு ஏரியை நாம் குடியிருப்புகளுக்காக அபகரித்துள்ளோம்! என்று தெரிய வந்தது. பின் எப்படி வரட்சியில் நீர்த்தேக்கங்கள் நம்மை பாதுகாக்கும்?.
இறுதியாக விவசாயி தான் விளைவிக்கும் பொருட்களுக்கு தானே விலை நிர்ணயம் செய்துகொள்வது பற்றி அரசு எந்த பதிலும் கூறாது. ஆனால் அப்படி இந்த கோரிக்கை நிறைவேறினாலும் இதில் பாதிப்படையப்போவது அடித்தட்டு மக்களே! காரணம் அரசு விவசாயிகளிடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்து அதை குறைந்த விலைக்கு நியாய விலைக் கடைகளில் விற்கிறது. (Ration Shop) விவசாயி பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கும் போது அதை அரசு கொள்முதல் செய்ய இயலாது!. அதை கார்பரேட் நிறுவனங்கள் வாங்கி அதிக விலைக்கு விற்க நேரிட்டால் அடித்தட்டு மக்களின் நிலை? விவசாயி கடன்களை தள்ளுபடி செய்தவது தான் அரசு இப்பொழுது செய்ய வேண்டியது. ஆனால் அவர்களுக்கு கார்பரேட் கால் பிடிக்கத்தான் நேரம் இருக்கிறது.
வரட்சிக்கான காரணம் என்ன? நாம் நம் ஏரி, குளங்களை அழித்ததுடன் நிற்கவில்லை நம் இயற்கை விவசாய முறையையும் குழி தோண்டி புதைத்ததின் விளைவுதான் இந்த வரட்சிக்கு காரணம்!. எப்படி? என்ற கேள்வி எழலாம். பசுமைப் புரட்சிக்குப்பின் தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் நெல் உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டது. (அழிவின் விதை விதைக்கப்பட்டது) அதுவரை வரட்சி மாவட்டங்களான மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் பல மாவட்டங்களில், சிறு தானியங்களும் வரட்சியை தாக்குப்பிடிக்கும் குறைந்த நீரில் விளையும் நெற் பயிர்களையும் மட்டுமே விளைவித்தனர். (23 வகை நெல் நம்மிடம் இருந்தது இப்பொழுது 7 கூட இல்லை) குறைந்த காலத்தில் அறுவடை செய்யும் நெல் வகைகளையும் அதற்கான இரசாயன உரங்களையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தனர்!. இவற்றுக்கு அதிகமான நீர் தேவைப்படும. நீர் குறைவாக உள்ள நிலப்பகுதிகளில் இவற்றை விளைவித்ததன் விளைவு நம் நிலங்கள் மலடாகிப் போயின!. அப்படி என்றால் அறிவியல் வளர்ச்சி விவசாயத்தில் தவறா?!. உண்மை என்னவென்றால் “வெறும் இயற்கை கழிவுகளை வைத்து முப்போகம் விளைவித்த நம்மால் ஏன் இவ்வளவு அறிவியல் வளர்ச்சியில் வரட்சியால் நிலம் காய்ந்து போவதை தடுக்க முடிவதில்லை?.”
முன்பெல்லாம் விதைநெல்லை எடுத்து வைத்துத்தான் மறு முறை விதைப்பார்கள். ஆனால் இப்பொழுது எல்லா விவசாயியும் விதைகளை கடைகளில் வாங்கித்தான் விதைக்கிறார்கள். காரணம் அத்தனையும் மலட்டு விதைகள். அவற்றால் மற்றொரு தலைமுறையை உருவாக்க முடியாது. (ஒவ்வொரு முறையும் நீங்கள் விதை வாங்கினால்தானே அந்த விதை நிறுவனத்திற்கு இலாபம்!) இந்த மலட்டு உணவை உண்ணும் இன்றைய தலைமுறைக்கும் உயிரணுக்கள் குறையும் என்று ஆய்வுகள் சொல்கிறது.
மீண்டும் டெல்லிக்கு வருவோம் ,டெல்லியில் மொத்தம் 100 தமிழக விவசாயிகள்தான் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ் நாட்டில் மொத்தம் அவ்வளவு விவசாயிகள்தான் உள்ளார்களா? இந்தப் பிரச்சனை வெறும் தமிழ்நாட்டிற்கான ஒன்றா? மொத்த இந்திய விவசாயிகளின் நிலை இதுதானே, பின் ஏன் மொத்த விவசாயிகளும் ஒன்றிணையவில்லை? காரணம், அவ்வளவு விவசாய சங்கங்கள் உள்ளன. இதை விட முக்கியமான ஒன்று இந்தியாவில் விவசாயத்தை நம்பி இருக்கும் பெரும்பான்மையானவர்கள் விவசாயக் கூலிகளாகவே உள்ளனர் அதாவது சொந்த நிலம் இல்லாதவர்கள்! இவர்கள் தங்களின் தினக்கூலியை தவிர்த்து போராட்டம் செய்தால் அவர்களின் குடும்பம் தெருவில்தான் நிற்க வேண்டும். பினாமியின் பெயரில் இங்கு பல ஆயிரம் ஏக்கர் வைத்திருக்கும் நிலச் சுவாந்தர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களின் சாதிய அடக்குமுறையின்கீழ் இருக்கும் விவசாய கூலி நொந்து கொண்டுதான் வாழ்கிறான். இப்பொழுது இதில் பாதிப்படையப் போவது சிறிதளவு நிலம் மட்டுமே வைத்திருக்கும் குறுநில விவசாயிகள்தான்!. அவர்கள்தான் அங்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
டிராக்டர் வாக்கிய கடனுக்கு வட்டி கட்டாத காரணத்தால் ஒரு விவசாயியை காவல்துறை கொண்டு தாக்கியது ஒரு வங்கி. அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டார் அந்த விவசாயி!. தமிழகத்தில் மட்டும் இதுபோன்று 400 விவசாயிகள் வரட்சி காரணமாக தற்கொலை செய்துள்ளார்கள். என்ன செய்யப்போகிறது இந்த அரசு!. பாமரன் மேல் இரும்புக் கரம் நீட்டும் வங்கிகள்,”மல்லையா போன்ற தொழிலதிபர்கள் 9 ஆயிரம் கோடி கடனை வாங்கிக் கொண்டு வெளிநாட்டில் தலைமறைவாகிவிடுபவர்களுக்குத்தான் . (அழகிகளுடன் சல்லாபமாக சூரியக் குளியல் போடுவதை இணையத்தில் பதிவிடுகிறார் இதெப்படி தலைமறைவாகும்?) போட்டி போட்டு கடன் தருவார்கள்.
கார்பரேட் நிறுவனங்களுக்கும் ,பெரும் முதலாளிகளுக்கும் எங்கள் இரத்தத்தை உறிஞ்சிக்கூட கடன் கொடுங்கள் பரவாயில்லை!, ஆனால் விவசாயிகளின் கோவணத்தை உருவி அந்த ஊழல்வாதிகளுக்கு வெண்சாமரம் வீசாதீர்கள். “இந்தியா ஒரு விவசாய நாடு, இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்!”, இதலாம் நான் இந்தியாவைப் பற்றி பள்ளியில் கற்றது ஆனால் இன்றைய விவசாயிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நிலம் இல்லா விவசாயிகளுக்கு நிலமும், அவர்களின் அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படவேண்டும். இல்லையேல் இந்தியா முன்னாள் விவசாய நாடாக மாறி சோற்றுக்கு கையேந்தவேண்டியதுதான்!.
டேய், பர்ஸ்ட் பாட்டிங் முடுஞ்சு நீ செய்தி பார்க்குறதுனா பாரு! என்று நகர்ந்து போனார்கள் அந்த நல்லுள்ளங்கள். எல்லா செய்தி ஊடகங்களிலும் ஆ.தி.மு.க வின் உட்கட்சிப் பிரச்சனைகளைப் பற்றிய விவாதங்கள் தான் போய்க் கொண்டிருந்தது. டைரக்ட் சார், 15 நிமிசத்துல செக்கேன்ட் பாட்டிங் ஆரம்பிச்சுருவாங்க அதுகுள்ள செய்தி பார்த்துக்கோ என்று சமயல் அறையில் இரவு உணவுக்கு “அரிசியை” களைந்துகொண்டே நண்பன் சொன்னான்!.
இங்கு “போராட்டத்தை அரசு கவனிக்காத காரணத்தால் நிர்வாணமாக நின்று விவசாயிகள் போராட்டம் ” என்று துண்டுச் செய்தியாக வந்தது. நிர்வாணமாக நிற்பது விவசாயிகள் மட்டும் இல்லை, இந்த இந்திய தேசமும் தான்!…..