நீண்ட நாட்களுக்கு பின் எங்க ஊர் நூலகத்திற்கு சென்றேன். தமிழில் மிகப் பிரபலமான வாரப் பத்திரிகை ஒன்றை தேடினேன், அது படிப்பதற்காகத்தான் சென்றதே! (25ரூபாய்! நம்ம பட்ஜெட் அவ்ளோ தாங்காது) எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. நூலகரிடம் சென்று கேட்டேன், அந்த வார இதழில் ஆழும் கட்சியை பற்றி தெடரச்சியாக எழுதுவதால் கடந்த சில வாரங்களாக நூலகங்களில் அதை வாங்குவதில்லை என்றார்!.
கிராமப்புறம் மற்றும் சிறு நகரங்களில் நூலகத்தின் பங்கு என்பது மிகப் பெரியது!. காரணம் தின மற்றும் வாரப் பத்திரிகை வாங்க இயலாத மாணவர்கள் மற்றும் படிக்கும் ஆர்வம் உள்ள முதியவர்களின் ஒரே படிக்கும் இடம் நூலகம் மட்டுமே. அப்படி இருக்கும்போது நூலகத்தை மட்டுமே நம்பி இருக்கும் மக்களை இதைத்தான் படிக்க வேண்டும்! இதை படிக்க கூடாது என்பதற்கு அரசுக்கு என்ன அதிகாரம் உள்ளது ? .
அந்த வார பத்திரிகை சொல்லும் தகவல் உண்மை இல்லை என்னும் பட்சத்தில், அவர்களின்மீது வழக்கு தொடந்து அந்த பத்திரிகையையே மூடலாமே?, அப்படி என்றால் அவர்கள் சொல்வது உண்மை என்று மறைமுகமாக ஒத்துக் கொள்கின்றனர் அப்படித் தானே!. இதே போன்று ,போன பொதுத்தேர்தலின் போதும் ஆழும் கட்சி, எதிர் கட்சி மற்றும் போட்டியிட்ட எல்லா கட்சியையும் அவர்களின் அரசியல் கொள்கையையும் விமர்சித்த இன்னொரு பத்திரிகை நூலகத்திற்கு வருவது தடை செய்யப்பட்டது. இது ஜனநாயக படுகொலை தானே ?.
அதிகாரம் இருகிறதா இல்லையா, ஆட்சி நீடிக்குமா கலைக்கப்படுமா? என்று தெரியாத தமிழக அரசே இவ்வாறு செய்கிறது என்றால்!, மத்திய அரசு இன்னும் ஒருபடி மேலே போய் தங்கள் அரசுக்கு எதிராக யார் கருத்து சொன்னாலும் அவர்களின் குரவளையை நெரிக்கிறது. அதற்கு உதாரணம் சென்ற வாரம் கேரளாவில் சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று திரைப்படங்களை திரையிட தடை விதித்தது!.
முதல் படம் “தி அன்பியரஃபில் பீயிங் லயிட்நெஸ்” ஜெ.எ.யூ பல்கலைக்கழகத்தில் இறந்து போன தலித் மாணவரான “ரோகித் வெமுலா ” பற்றியது. அவர் ஒன்றும் தற்கொலை செய்து கொள்ளும் அளவு கோழையும் அல்ல! அடித்தட்டு சமூகத்தில் இருந்து போராடி கல்வி கற்ற அவரை தற்கொலை செய்ய தூண்டியது எது என்பதை விவரிக்கும் படம்தான் அது.
அடுத்த படம் “மார்ச் மார்ச்” ஜெ. என்.யூ பல்கலைக்கழகத்தில் இதுவரை நடந்த போராட்டங்களையும், மாணவர்களின் மன நிலையும் அதை அரசு கையாண்ட விதமும்தான் இந்த திரைப்படம். இது வரை ஜெ.என். யு வில் நடைபெற்ற அனைத்து போராட்டங்களும் கல்லூரியின் அனுமதியோடு நடந்தது மட்டுமே!, பின் ஏன் அரசு இந்த படங்களை திரையிட மறுக்கின்றது?.
காரணம் அந்த பல்கலைக்கழகம் தலித் மாணவர்களை கண்டு கொள்ளாமல் மேல் சாதி மாணவர்களுக்காக வரிந்துகட்டி நிற்கிறது!, இதை வெளிச்சம் போட்டு காட்டும் நிகழ்வுதான் சென்னையில் மாட்டுக்கறி தடைக்கு எதிரே குரல் கொடுத்த மாணவர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் தாக்கப்பட்டும், தாக்கிய மாணவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது!, ஒரு மத்திய அரசு நடத்தும் கல்லூரி இப்படி என்றால் அரசும் தன்னை தலித்துக்களுக்கு எதிரானதாக காட்டுகின்ற பாங்கே இந்த படங்களின் தடை.
அப்ப அந்த மூனாவது படம் என்ன? என்று தோன்றுகிறதா?, “இன் த ஷேட் ஆஃப் ஃபாலன் சினர்” என்ற டாக்குமென்றி படம்தான் அது. காஷ்மீரில் இருக்கும் ஓவிய மற்றும் பிற கலைஞர்கள் எத்தனை கடின சூழலுக்கு மத்தியில் தங்களின் படைப்புகளை தருகிறார்கள் என்றும் காஷ்மீர் என்பது வெறும் தீவிரவாதம் நிறைந்த ஊர் அல்ல என்று விளக்கும் படம். நம் இந்திய மாணவர்கள் அங்கு தங்கி எடுத்த படம், இதை ஏன் தடை செய்கிறார்கள்? நாளை காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்கும் போது நாம் அங்கு இருக்கும் அப்பாவி மக்களை பற்றி கேள்வி கேட்க கூடாது அல்லவா அதற்காக!
இப்படி அரசு பற்றி நாம் எவற்றை தெரிந்து கொள்ளலாம் எவற்றை தெரிந்து கொள்ள கூடாது என்று அரசே முடிவு எடுக்குமாயின் பின் எதற்கு மக்களாட்சி என்ற ஒன்று ?.
ஏற்கனவே மத்திய அரசு திரைப்படங்களுக்கு விருது கொடுப்பதை பற்றி பாரதிராஜா ஒரு பேட்டியில் சென்னது, “விருது தேர்வுக் குழுவில் ஜூரியாகவும், சேர்மனாகவும் இருந்திருக்கேன். தமிழ்நாட்டுல படம் பார்த்து டெல்லிக்கு அனுப்புறோம். அங்கே படம் பார்க்கிற குழுவுல கட்சி சார்புள்ளவர்கள் நாலு பேர் இருப்பார்கள், அவங்க நியமிக்கும் எழுத்தாளர்கள் மூன்று பேர், சினிமாக்கார்கள் ரெண்டு பேர்னு மொத்தம் ஒன்பது பேர் இருபாங்க கேட்டா அரசின் பிரதிநிதினு சொல்வாங்க. நியாயமா ,சினிமா தெரிஞ்ச அந்த ரெண்டு பேர் தானே எது நல்ல சினிமானு ஜட்ஜ் பண்ண முடியும்!. ஆனால், மொத்தமுள்ள ஒன்பது பேரில் அந்த ரெண்டு பேர் மைனாரிட்டி. அப்ப நல்லது கெட்டதை நிர்மானிப்பது அந்த மெஜாரிட்டி ஆள்கள்தான். அதனால் அந்தந்த நேரத்தில் தீர்மானிக்கும் விருதுகளைப் பற்றி நான் பெருசா எடுக்குறது இல்லை என்றார்.
பத்திரிகை, சினிமா போன்ற மக்களை எளிதில் சென்றடையும் ஊடகங்களை செயலற்றதாக மாற்றுவதன் பின் விளைவு மிகவும் மோசமாக இருக்கும். சுதந்திரத்திற்கு முன் போடப்பட்ட வாய்ப்பூட்டு சட்டம் மட்டும்தான் இவர்கள் இன்னும் போடவில்லை, அதற்கு பதில் குண்டர் சட்டம் போடுகிறார்கள். மெரினாவில் ஈழ படுகொலை நினைவேந்தல் நிகழ்வினை நடத்திய “திருமுருகன் காந்தி ” கைது செய்யப்பட்டார் . 7 ஆண்டுகளாக நடக்கும் நிகழ்வை இன்று நிறுத்துவதற்கு காரணம் என்ன? அவர் தொடந்து அரசு மக்களுக்கு இழைக்கும் அநீதியை எதிர்த்து போராடுவதுதான் காரணம்!.
இளைய சமுதாய எழுச்சியும், அரசியல் புரிதலும் மட்டுமே இந்த தேசத்தை மதவாத மற்றும் ஊழல் அரசியல்வாதிகளிடம் இருந்து காக்க முடியும். நாளைய தலைமுறைக்காவது நல்ல சூழல் அமையட்டும்!.