மெரீனா இதுவரை…… அறவழிப் போராட்டங்களின் ஆரம்பம்

இம்முறை ஏறுதழுவுதல் தடையானது இப்படியொரு விஸ்வரூபத்தை எட்டுமென, கடந்த பத்து வருடங்களாக ஏறுதழுவுதலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராடி வருகின்ற எவருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

கடந்த 17ம் திகதி அலங்காநல்லூரில் இடம்பெறும் ஏறுதழுவுதல் அறவழி போராட்டத்திற்கு ஆதரவாகவும், அன்றைய தினமே காலையில் அலங்காநல்லூரில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும் குறைந்தது 10 பேரை கொண்டதாகவே இந்த போராட்ட வடிவம் மெரீனாவில் ஆரம்பித்தது. நேரம் செல்லச் செல்ல, இணைய உதவியுடன் போராட்ட வடிவம் தொடர்பில் பகிரப்பட்ட தகவல்களும், தமிழகம் முழுவதும் உள்ள ஏனைய இடங்களிலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிடைத்த ஆதரவும், மெரீனா கடற்கரைக்கு ஆயிரக்கணக்கானோரை கொண்டு சேர்த்ததுடன், போராட்ட வலுவை குறைவடையச் செய்யாமலிருப்பதில் மிகப்பெரும் பங்காற்றியது என சொல்லலாம்.

அலையாய் திரண்ட மக்கள் (newindianexpress.com)

அலையாய் திரண்ட மக்கள் (newindianexpress.com)

சாதாரணமாக, சென்னையில் இடம்பெறுகின்ற போராட்டங்கள் எல்லாம் சில மணிநேரங்களிலேயே முடிந்துவிடும். காரணம், நகரச் சூழலுக்குள் சிக்கி நேரத்தின் பின்னால் ஓடிக்கொண்டு இருப்பவர்களுக்கு இதற்கான தனியான நேரம் எதுவுமே இருப்பதில்லை. அதுதான், தமிழக அரசு மற்றும் சாதாரணமானவர்களினதும் கணிப்பாக இருந்தது. ஆனால், நாட்கணக்கில் இந்த போராட்ட வடிவம் நீளும் என்பதனை எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை. இதுதான், தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்தாலும், உலகமக்கள் அனைவரையும் மெரீனாவை திரும்பி பார்க்க வைத்ததுடன் இன்று உலகமக்களின் முக்கிய பேசுபொருளாகவும் மாற்றியிருக்கிறது.

மெரீனா போராட்டத்தின் சிறப்பு என்ன ?

நள்ளிரவில் திரண்ட மாணவர் ஒளி (newindianexpress.com)

நள்ளிரவில் திரண்ட மாணவர் ஒளி (newindianexpress.com)

மெரீனா போராட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமே இந்த போராட்ட வடிவம் எந்த தலைமையும் முன்னின்று ஒழுங்கமைத்தது அல்ல என்பதுதான். இதற்கு என உத்தியோகபூர்வ ஒழுங்கமைப்பாளரோ அல்லது தொடர்பாளர்களோ இல்லை. இருந்தும், அனைவரையும் ஒரே புள்ளியில் இணைத்து வைத்திருக்கிறது இப்போராட்டம். அனைவரையும் கட்டுக்கோப்புடன் இயங்கச் செய்கிறது. எந் நிகழ்சிநிரலும் இல்லாதபோதிலும், அடுத்தடுத்து என்ன செய்யவேண்டும் என்பதனை ஒழுங்குபடுத்திக்கொண்டிருக்கிறது. எந்த தீர்மானத்தை ஏற்பது, எதனையெல்லாம் நிராகரிப்பது என்கிற ஏற்பாடுகள் எதுவுமே இல்லாதபோதும், அவை கலந்தாலோசிக்கப்பட்டு ஒருமித்த குரலாக மாற்றம் செய்யப்படுகின்றது. இந்த போராட்டத்தின் ஒட்டுமொத்த சிறப்பம்சமே இதுதான்.

இந்த போராட்டத்தின் தொடர் வெற்றிக்கான காரணம் என்ன ?

இந்த போராட்டத்தின் தொடர் வெற்றிக்கு காரணம், இந்த போராட்டத்தின் போக்கினை நன்குணர்ந்து அதனை இடையிடையே வழிநடாத்துபவர்கள் அல்லது அதன் போக்கில் மாற்றம் ஏற்பட்டுவிடக்கூடாது என கண்காணிப்பவர்கள் எனலாம்.

போராட்டக் களத்தில் ஹிப் ஹாப் தமிழா (stage3.in)

போராட்டக் களத்தில் ஹிப் ஹாப் தமிழா (stage3.in)

மெரீனா போராட்டத்தை நன்கு அவதானிப்பவர்களுக்கு புரிந்திருக்கும், போராட்டம் ஆரம்பித்த முதல் நாள், அதன் நோக்கமாக ஏறுதழுவுதல் நிகழ்வை மீண்டும் நடாத்துவது மற்றும் அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதாகவே இருந்தது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் மக்கள் எண்ணிக்கை அதிகமாக, அவர்களுடன் சேர்ந்து நோக்கங்களும் அதிகரித்தது. குறிப்பாக, பீட்டா அமைப்பை தடை செய்யவேண்டும் , தமிழக அரசை எதிர்க்க வேண்டும் , பாஜக அரசையும், மோடியையும் விமர்சிப்பது என பல்வேறு வகையில் நோக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. இது ஒட்டுமொத்த அறவழி போராட்டத்துக்கும் ஒருவித பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதனை ஏறுதழுவுதல் பிரச்சனையை அதுவரை காலமும் சட்ட அடிப்படையில் எதிர்கொண்ட கார்த்திகேய சிவசேனாதிபதி, ஹிமாகரன், பி.ஆர். ஜயா ஆகியோர் சார் குழுவும், சமூக பணிகளில் அதிகளவில் பங்காற்றும் ஆர். ஜே பாலாஜி , ஹிப்கோப் தமிழா போன்றவர்களும் இனம்கண்டுகொண்டனர்.

போராட்டக்களத்தில் உரையாற்றும் ஆர் ஜே பாலாஜி (i.ytimg.com)

போராட்டக்களத்தில் உரையாற்றும் ஆர் ஜே பாலாஜி (i.ytimg.com)

இவர்கள் தமிழகம் முழுவதும் நடக்கும் இத்தகைய போராட்டங்களை ஒரு நோக்கத்தை நோக்கி கொண்டுவருவது அவசியம் என்பதனை உணர்ந்துகொண்ட சமயத்தில், ஒவ்வருவரும் போராட்டங்கள் வீரியம் மிகுந்தவையாக இடம்பெற்ற இடங்களுக்கும், சமூகவலைத்தளத்தில்தொடர்ச்சியாக கவனத்தில் உள்ள இடங்களுக்கும் சுழற்சி அடிப்படையில் பயணங்களை மேற்கொண்டு நோக்கங்களை ஒருபுள்ளியில் இணையவைப்பதற்கான உரைகளை நிகழ்த்த தொடங்கினார்கள். ஆனால், அவற்றையும் ஒரு நிகழ்ச்சி நிரலாக இல்லாதவகையில், யாரை எல்லாம் பேச அனுமதிக்கலாம் என்கிற அடிப்படை வெளித்தெரியாதவகையிலும் நிகழ்த்த தொடங்கினார்கள். இதனால், இரண்டாவது நாளின் நள்ளிரவு முதல், ஏறுதழுவுதல் தொடர்பிலான முக்கிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் ஒரு புள்ளியில் இணைக்கப்பட்டது. (தொடர்ச்சியாக உப நோக்கங்கள் ஊடககங்களில் வெளிபடுத்தபட்டு வந்தாலும், அவை அறவழி போராட்டத்தில் உள்ளவர்களால் முக்கியமானதாக பார்க்கப்படவில்லை) இதனால்தான், எத்தனை லட்சம்பேர் பின்னாட்களில் இணைந்துகொண்ட போதிலும், இன்னும் வெற்றிகரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது இந்த போராட்டம்.

ஏறுதழுவுதல் மட்டுமா மெரீனாவில் மக்களை சேர்த்து வைத்திருக்கிறது ?

இன்றும் ஏறுதழுவுதல் பற்றி பேசுபவர்களுக்கும், மெரீனாவில் கூடியிருக்கும் இளைஞர்-யுவதிகளை பார்க்கும்போதும் வருகின்ற தவிர்க்க முடியாத சந்தேகம், தனியே இவர்கள் ஏறுதழுவுதலுக்காக மட்டுமே சேர்ந்து இருக்கிறார்களா ? இந்த கோரிக்கைகள் நிறைவேற்றபட்டதும் இந்த சக்திக்கு என்ன ஆகும் என்பதே!

போராட்டத்தை ஒழுங்குபடுத்தும் மனிதச் சங்கிலி இந்தியர்களாக (thewire.in)

போராட்டத்தை ஒழுங்குபடுத்தும் மனிதச் சங்கிலி இந்தியர்களாக (thewire.in)

முதலில் ஏறுதழுவுதல் என்கிற விடயத்திற்காக மட்டுமே இங்குள்ளவர்கள் இணைந்து நிற்கிறார்கள் என நினைக்கிறீர்களா? அது தவறு. இந்த போராட்டத்தின் முதன்மைப்படுத்தலான ஏறுதழுவுதல் ஒரு குறியீடு மாத்திரமே! தொடர்ச்சியாக, பல்வேறு சந்தர்ப்பங்களில் தவிர்க்கப்பட்டும், ஒடுக்கபட்டும் வந்தவர்கள், சொந்த அரசினாலேயே தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டவர்கள், யார் மேலும் எதற்காகவும் நம்பிக்கை வைக்க முடியாத நிலையில் இருப்பவர்கள் என அனைவருமே ஏறுதழுவுதல் என்கிற பெயரால் இணைந்து இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வருவருக்கும் ஏதோ ஒரு ஒடுக்கபட்ட தோல்வி அல்லது ஏமாற்றபட்ட வேதனை மனதுக்குள் இருக்கும். அவை எல்லாவற்றுக்கும் தீர்வாக, ஏறுதழுவுதலின் வெற்றியை பார்க்க நினைக்கிறார்கள்.

 

போராட்டத்தில் ஈடுபடும் இலங்கை இளைஞர்கள் (roartamil.com)

போராட்டத்தில் ஈடுபடும் இலங்கை இளைஞர்கள் (roartamil.com)

அதாவது, எல்லா பக்கங்களிலும் தொடர்ச்சியாக ஒதுக்கப்படுகிறோம் என நினைப்பவர்களுக்கு, ஏதேனும் உந்துசக்தியாக, நம்பிக்கை தரும் ஒரு நிகழ்வு சாதாரணமாக இடம்பெறும்போது அது எதிர்பாராத வெற்றியை பெற்றுதரும். இதுதான், இம்முறை ஏறுதழுவுதல் அறவழி போராட்டத்திலும் நடந்திருக்கிறது.

ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் கொழும்பில் (roartamil.com)

ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் கொழும்பில் (roartamil.com)

இந்த போராட்ட எண்ணம் தொடருமா ?

தற்போதைய நிலையில், ஏறுதழுவுதல் அறவழி போராட்டத்தை அடிப்படையாக கொண்டு எதனையும் சொல்லிவிட முடியாது. ஆனால், நான்காம் நாளின் நள்ளிரவு பகுதியில் மெரீனாவில் ஆர்.ஜெ.பாலாஜி ஆற்றிய உணர்ச்சிமிக்க உரை அடுத்தடுத்து இளம்தலைமுறை எதனை நோக்கி பயணப்படவேண்டும் என்பதனை சிந்திப்பதற்கான கதவுகளை திறந்து விட்டிருக்கிறது என்பதே உண்மை. வெளிப்படையாக சொன்னால், இந்த ஏறுதழுவுதல் வெற்றியை அரசியலாக்கி மக்களின் ஏனைய ஏமாற்ற நிலைக்கு தீர்வுகாண இச்சந்தர்பத்தை பயன்படுத்தவேண்டும் என்கிற நிலையை நோக்கி இதனை நகர்த்துவதில் வழிநடத்துபவர்கள் அல்லது கண்காணிப்பாளர்கள் உறுதியாக உள்ளார்கள் என்பதே உண்மை. அது நடைபெற வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமாகவும் உள்ளது.

போராட்டக்களத்தை சுத்திகரிக்கும் மாணவர்கள் (i.ytimg.com)

போராட்டக்களத்தை சுத்திகரிக்கும் மாணவர்கள் (i.ytimg.com)

காரணம், ஏறுதழுவுதல் அறவழி போராட்டம் இடம்பெறும் மெரீனா கடற்கரை தனியே போராட்ட கோஷங்களை மட்டுமே கொண்டிருக்கவில்லை. மாறாக, போராட்டத்தில் இணைந்து கொள்ளுபவர்கள் திறந்த கலந்துரையாடல் ஊடாக பல்வேறு விடயங்களை விவாதிக்கும் இடமாக மாறியிருக்கிறது. குறிப்பாக, இயற்கை விவசாயம், காவேரி நீர் பிரச்சினை, கறுப்பு பண நிகழ்ச்சி நிரல், வெளிநாட்டு குளிர்பானங்கள், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் லஞ்ச ஊழல் என்கிற தலைப்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றது. மேடை நாடகங்களுக்கு உயிர்கொடுக்கபடுகிறது. பாரம்பரிய கலைகளை ஒருமுறை மீட்டியும் பார்த்துகொள்ளுகிறார்கள். இவை அனைத்துமே, அடுத்தடுத்த கட்டநகர்வுகளுக்கு எல்லோரையும் தூண்டுவதாக அமையக்கூடும். குறைந்தது, பிரச்சனைகளை பற்றி பேசவேண்டும் என்பவர்களுக்கும், அதற்கான விடயங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பவர்களுக்கும் ஒரு உத்வேகமாக இது நிச்சயம் அமையும்.

மெரீனா இந்தியாவுக்கு கற்றுகொடுத்தது என்ன ?

இந்தியாவுக்கு அதிலும் சென்னைக்கு பலமுறை பயணப்பட்டவன் என்கிற முறையில், அங்குள்ள மக்கள் மீது ஒருவகையான கோபம் எப்போதுமே எனக்குண்டு. அவர்கள் தங்களை சுற்றி நடப்பதைப்பற்றி பெரிதும் அக்கறை கொள்வதில்லை. தமக்கான தேவை எப்படியானாலும் பூர்த்தியானால் போதும் என்கிற மனநிலையில் ஓடிக்கொண்டிருப்பவர்கள். சாதரணமாக, கர்ப்பிணி தாய் பேரூந்தில் ஏறினால்கூட, யாரும் இடம்கொடாமல் நின்றுபயணிக்கின்ற நிலைதான் இருந்து வந்திருக்கிறது.

இப்படியான மனநிலையில் இருப்பவர்கள் எல்லாம் மெரீனாவில் ஒன்றுகூடும்போது, போராடிவிட்டு அவர்கள்பாட்டுக்கு செல்வார்கள் என நினைத்த என்னைப்போன்றவர்களுக்கும், ஏனையவர்களுக்கு அங்கு இடம்பெறுபவை நிச்சயம் விசித்திரமாகத்தான் இருக்கும்.

குப்பையான நகரங்களில் சென்னையும் ஒன்று என்றுதான் அங்குள்ளோரும், சென்று வருபவர்களும் சொல்வோம். ஆனால், இன்று மெரீனாவில் அறவழி போராட்டத்தின்போது, இளையதலைமுறையே ஒட்டுமொத்த கடற்கரையையும் சுத்தம் செய்துகொண்டிருக்கிறது. அதே இளையதலைமுறையே, போராட்டம் எந்தவகையிலும் மக்களின் இயல்பு நிலை பாதித்துவிடக் கூடாது என்கிற நோக்கில், வீதி போக்குவரத்தை சரிசெய்வதிலும், ஏனையவர்களுக்கு தடங்கல் இடம்பெறாதவகையில் போராட்டங்கள் இடம்பெறுவதையும் உறுதிசெய்து கொள்ளுகிறார்கள்.

ஒவ்வொருநாளும் போதிய உணவு மெரீனாவுக்கு வந்து கொண்டு இருக்கிறது. யார் கொண்டு வருகிறார்கள். எங்கிருந்து கொண்டு வருகிறார்கள், கொண்டு வருபவர்கள் என்ன மதம்,ஜாதி என்பது தொடர்பிலும் யாருமே கேள்வி கேட்பதில்லை. அதுபோல, வருகின்ற உணவுகளும் முறையாக பகிர்ந்தளிக்கபடுகிறது.

மதங்கள் இங்கொரு பிரச்சனையாகவே இல்லை. இஸ்லாமிய நண்பர்கள் அங்கேயே தொழுகைகளை நடாத்துகிறார்கள். அதற்க்கு ஏற்றால்போல, போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கும் அமைதிகாக்கிறார்கள்.

ஆண் என்பவன் பெண்ணுக்கு தனியாக எதனையும் செய்யவேண்டியது இல்லை. சகமனிதனுக்கு கொடுக்கிற அதே மரியாதையை பெண்ணுக்கு கொடுத்தாலே போதுமானது. அனால், இந்தியாவில் அந்நிலை மிக மோசமாக உள்ளது. இதனால், மெரீனாவில் ஒவ்வரு ஆணும், பெண்ணுக்கான உரிய மரியாதையை வழங்குவது ஆச்சரியமாக பார்க்கபடுகிறது. நள்ளிரவிலும், பெண்கள் துணிவாக அங்கிருப்பது சிலாகித்து பேசப்படுகிறது. கூடவே, அறவழியை தாண்டி எவ்வித பிரச்னைகளையும் ஏற்படுத்ததாத வகையில் போராட்டத்தை முன்னெடுப்பது ஏனைய இந்தியர்களுக்கும், இதுவரை போராட்டம் செய்துவந்தர்களுக்கும் ஒரு பாடமாகவே மாறியிருக்கிறது என சொல்லலாம்.

பால் வயது வேறுபாடின்றி ஒரே  கோஷத்துக்காய் திரண்ட மக்கள் (newindianexpress.com)

பால் வயது வேறுபாடின்றி ஒரே கோஷத்துக்காய் திரண்ட மக்கள் (newindianexpress.com)

ஒட்டுமொத்தத்தில், இதுவரை தேர்தலில் மட்டுமே மக்களின் பேச்சினை கேட்டு நடக்கின்ற அரசியல்வாதிகளை எல்லாம் மக்களின் குரலை கேட்கவைத்திருக்கிறது. அரசியல் தலைமைகளே இல்லாமல், ஒரு போராட்டத்தை வழிநடாத்தி, அதில் வெற்றியும் பெறமுடியும் என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கேட்டால் கிடைக்கும்! கேட்க வேண்டியதை, கேட்கவேண்டியவர்களிடம் கேட்பவர் கேட்டால் நிச்சய்ம் கிடைக்கும் என்பதனையும் இந்த அறவழிபோராட்டம் உணர்த்தி இருக்கிறது. எல்லாமே, மக்களிலிருந்துதான் கட்டியமைக்கபடுகிறது என்பதனை மீளவும் தமிழக மக்களுக்கு இந்த மெரீனா உணர்த்தி இருக்கிறது.

ஏறுதழுவுதல் அறவழி போராட்டத்தின் வெற்றி, இனி தமிழகத்தின் ஏனைய பிரச்சனைகளுக்கும் நம்பிக்கையான புதிய கதவுகளை நிச்சயமாக திறக்கும். ஆனால், அதுவும் இதே போன்ற வீரியதன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும் என்பதே எல்லோருடைய அவாவாகும்.

இனி ஒவ்வரு முறையும், மெரீனாவை கடந்துசெல்லும்போது, அது தனியே அழகிய கடற்கரையாக மட்டுமே தெரியபோவதில்லை. மாறாக, எதனையும் ஒன்றுசேர்ந்தால் சாதிக்கலாம் என்பதற்கு அடையாளமாகவும் இருக்க போகிறது.

Related Articles

Exit mobile version