சமீப காலமாக தொலைகாட்சி அலைவரிசைகளில் ஒளிபரப்பாகும் ஒரு சில நிகழ்ச்சிகள் தொடர்பாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் அதிகம் அதிகம் விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்தவண்ணம் இருக்கின்றன. குறித்த நிகழ்ச்சி வடிவம் தொலைகாட்சி வரலாற்றுக்கு ஒன்றும் புதிதல்ல. இருப்பினும், கடந்த ஓரிரு வாரங்களாக இந்நிகழ்ச்சி தொடர்பான பின்னூட்டங்கள் மற்றும் மாற்றுக் கருத்துக்கள் ஊடங்களில் பெரிதும் அலசி ஆராயப்பட்டுக்கொண்டு இருக்கிறது.
ஆம், முதன்முதலாக விஜய் தொலைக்காட்சியில் பழம்பெரும் நடிகை, திருமதி லக்ஷ்மி ஏற்று நடாத்திய “கதையல்ல நிஜம்” என்கிற நிகழ்ச்சிதான் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிய இவ்வகையான முதல் நிகழ்ச்சி. அதன்பிறகு அந்தளவு வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி என்றால் அது ஸீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இயக்குனர், நடிகை, தொகுப்பாழினி திருமதி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நடாத்தும் “சொல்வதெல்லாம் உண்மை” என்றால் அது மிகையல்ல. இதுபோலவே தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக வலம்வந்த நடிகைகள் பலர் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தமிழ் மொழிமூல ஊடகங்களில் மட்டுமல்லாது வேற்று மொழி ஊடகங்களிலும் நடாத்தி வருகின்றனர். நடிகை ஊர்வசி, கீதா, குஷ்பு போன்றவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
இந்நிகழ்ச்சிகளின் தளம் என்ன?
ஊடகங்களின் தாக்கம் எதனையும் சாதிக்குமளவு ஊடகங்களோடு ஒன்றிப்போன ஓர் சமூகத்தில், உடகங்களின் பங்களிப்பு பொழுதுபோக்கு என்ற அம்சத்தையும் தாண்டி வியாபார ரீதியாக தங்களது தரப்படுத்தல் மற்றும் கேள்விகளை நோக்கி மிகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. அதன் ஒரு அங்கமாகவே இவ்வாறான நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் புகுத்தப்படுகின்றன என்பதற்கு மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. சொல்லப்போனால் தற்காலத்தில் உள்ள அனைத்து ஊடகங்களதும் முதன்மை நோக்கம் இதுவாகத்தான் இருக்கின்றது.
பொதுமக்களின் பிரச்சினைகள், குடும்பத் தகராறுகள், வன்முறைகள் மற்றும் பல்வேறுவிதமான பிணக்குகளை ஆராயும் களமாகவும், அப்பிரச்சினைகளுக்கு இயன்றவரை தீர்வுகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கும் ஓர் இடமாகவும் இவை பார்க்கப்படுகின்றன. வெவ்வேறுவகையான, புதுமையான, இவ்வாறெல்லாம் எமது சமூகத்தில் நடக்கிறதா என்று வியக்குமளவு பாரதூரமான விடையங்கள் அங்கு வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன. குறித்த நிகழ்ச்சிக் குழுக்கள் ஒளிபரப்பு பகுதியைத் தாண்டி தங்களது ஊடகம் என்கின்ற ஆயுதத்தின் உதவியுடன் பல்வேறுபட்ட கள நடவடிக்கைகளில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் நிலையும் இங்கு கண்கூடு. மட்டுமல்லாது, பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் பின்தங்கிய மக்களுக்கும் அவர்களுக்கு உதவக்கூடிய உள்ளங்களுக்கும் இடையிலான ஓர் பாலமாக இந்நிகழ்ச்சிகள் பார்க்கப்படுகின்றன என்பது மறுக்கமுடியாத உண்மையும்கூட.
இவை விமர்சனத்துக்கு உள்ளாகும் காரணம் என்ன?
பல்வேறு சமூக கலாச்சார காரணங்களை முன்னிறுத்தி இந்நிகழ்ச்சிகள் தொடர்பான இப்பிரச்சினைகள் ஆராயப்படுகின்றன. இதற்குப் பலதரப்பட்ட காரணங்களை விமர்சகர்கள் முன்வைக்கின்றனர்.
- பொதுமக்களின் அந்தரங்க விடயங்களை அலசி ஆராயும் இவ்வாறான நிகழ்ச்சிகள் பொதுவெளிக்கு பகிரங்கமாக ஒளிபரப்பப்படுதல் அவர்களது சகஜ வாழ்வுக்கும் எதிர்காலத்துக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பது அவர்களது முதன்மைக் கருத்து. குறிப்பாக சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் வன்முறைகள், கணவன் மனைவிக்கு இடையிலான பிணக்குகள் போன்ற, அம்மக்களின் சுய கெளரவம் சார்ந்த விடயங்களை உலகுக்கு படம்போட்டுக் காட்டுதல் தவறு என்பதும் அவர்களது கருத்து.
- குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கொடுக்கவோ, அதுபற்றி ஆராயவோ, பிரச்சினையோடு வருபவர்களை வழிநடத்தவோ நடிகைகளுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பது மற்றுமொரு குற்றச்சாட்டு. திரைப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்கும் இவர்கள் எந்த அடிப்படையில் அடுத்தவர் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க தகுதி பெறுகின்றனர் என்பதே இங்குள்ள பிரச்சினை. இவர்கள் மனோதத்துவ நிபுணர்களா? ஆலோசனை வழிகாட்டிகளா? நீதிபதிகளா? வக்கீல்களா? காவல் துறையைச் சேர்ந்தவர்களா? எந்தவிதமான அடிப்படையுமின்றி இவர்கள் எப்படி இவ்வாறான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க அனுமதிக்கப்படுகின்றனர்? இப்படி கேள்விகள் நீண்டு செல்கின்றன.
- இந்நிகழ்ச்சிகள் சமூக நோக்கோடுதான் செய்யப்படுகின்றனவா? இதற்கான காரணங்கள் என்ன? என்று இன்னொரு பகுதியினர் கேள்வி எழுப்புகின்றனர். தங்களது தொலைகாட்சி அலைவரிசை, தரப்படுத்தல்களில் முன்னணிவகிக்க வேண்டும், வியாபார ரீதியில் வெற்றிகரமாக இயங்கவேண்டும், மக்கள் மத்தியில் பிரபலம் பெறவேண்டும் என்ற காரணங்களுக்காக ஊடகங்கள் அப்பாவி மக்களின் ஏழ்மையையும், அறியாமையையும் பயன்படுத்துகின்றனர் என்பது மற்றொரு தரப்பின் கருத்து.
இந்நிகழ்ச்சிகளின் தரம் மற்றும் வெளிப்பாடுகள் ஆரோக்கியமானதா?
கொஞ்சம் புறநடையாகச் சிந்தித்துப் பார்த்தால் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒரே தராசில் வைத்து ஒட்டுமொத்தமாக ஓர் முடிவுக்கு வந்துவிட இயலாது. தரம் என்கின்ற அடிப்படையில் நோக்கும்போது இந்நிகழ்ச்சிகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டு நிற்பது கண்கூடு. உண்மையிலேயே சிறந்த முறையில் கையாளப்படுகின்ற நிகழ்ச்சிகளும் இப்பொதுப்படையான குற்றச்சாட்டு பட்டியலில் மாட்டிக்கொண்டதற்கு அதேவகையான வேறுசில நிழ்ச்சிகளும் காரணம் எனலாம். அது நிகழ்ச்சித் தொகுப்பாழினிகளின் ஆளுமையோடுகூடிய சமூக அறிவு, கலாச்சாரப் புரிந்துணர்வு, சமூகம் மீது தனிப்பட்ட முறையில் அவர்கள் கொண்டுள்ள தார்மீகப் பொறுப்பு, நிகழ்ச்சிக்கு அப்பால் அவர்களது சொந்த வாழ்வில் அவர்கள் கடைப்பிடிக்கும் ஒழுக்கம் சார்ந்த பண்புகள் போன்றவை அந்நிகழ்ச்சிகளின் தரத்தில் பெரிதும் செல்வாக்குச் செலுத்துவதை நாம் கண்கூடு பார்க்கிறோம்.
வெறுமனே சினிமாவில் தாங்கள் கொண்டிருக்கும் பிரபல்யத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, தாங்கள் புற அழகு மற்றும் தேர்ந்த நடிப்பை மாத்திரம் மூலதனமாக வைத்துக்கொண்டு அடுத்தவர் பிரச்சினைகளை விளங்கி தீர்வுக்கு வர அவர்கள் அனுமதிக்கப்படுவது சமூகத்தின் ஆரோக்கியத்துக்கு எவ்வாறான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பது சிந்திக்கவேண்டிய விடயம்.
எது எவ்வாறாயினும், பல்வேறுபட்ட சிக்கலான பிரச்சினைகளுக்கும் பாரதூரமான விடயங்களுக்கும், வன்முறைகளுக்கும், துஷ்பிரயோகங்களுக்கும் இவ்வாறான நிகழ்ச்சிகள் தீர்வுகளை பெற்றுக்கொடுத்தமையையும் மறுக்க இயலாது. குறிப்பாக சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்கும் சொல்லொண்ணாத் துயரங்கள் சபையேறக் கூடாது, ஆகாது என்ற ஒரே காரணத்தால் பெண்கள் அனுபவித்துவந்த எவ்வளவோ இடர்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் வடிகாலாக அமைந்துள்ளன. குறிப்பிட்டுச் சொல்லப்போனால் திருமதி லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியை உதாரணம் கூறலாம். ஆயிரம் அங்கங்களைத் தாண்டி பயணித்துக்கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சி எவ்வளவோ புதுமையான சம்பவங்களையும், தீர்வுகளையும், படிப்பினைகளையும் சுமந்துவந்திருக்கின்றன. அதனாலேயோ என்னவோ அவரது நிகழ்ச்சி சமூக ஊகங்களில் பல்வேறுவிதமான விமர்சனங்களுக்கும் கேளிக்கைகளுக்கும் உள்ளாகின.
சமீப காலமாக இந்நிகழ்ச்சிகள் தொடர்பான விமர்சனங்கள் அதிகரித்த காரணம் என்ன?
சமீபத்தில் இவ்வாறான ஓர் நிகழ்ச்சியில் நடிகை கீதா ஒருவரைத் தகாத வார்த்தையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஒரு தனிமனிதனை தகாத வார்த்தையில், அதுவும் ஓர் ஊடகத்தில் எவ்வாறு பேச முடியும் என்பது பெரும் கொந்தளிப்பைக் கிளப்பியிருந்தது. அதேபோல நடிகை குஷ்பு ஒரு ஆணின் சட்டையைப் பிடித்துக் கேள்விகேட்ட சம்பவம் அதன் பின்னாலேயே வந்துசேர்ந்தது. ஊடகத்தில், அதுவும் இவ்வாறான நிகழ்ச்சியொன்றின் தொகுப்பாழினியாக இருக்கின்றவர்கள் இப்படி தங்கள் கட்டுப்பாட்டை இழந்து உணர்ச்சிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் இச்சம்பவங்கள் இவ்வாறான நிகழ்ச்சிகளைக் கையாள அவர்களுக்குண்டான ஆளுமைப் பண்பைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.
இது தொடர்பாக பழம்பெரும் நடிகை மற்றும் இயக்குனர் திருமதி ஸ்ரீப்ரியா தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியதும் இந்நிகழ்ச்சித் தொகுப்பாழினிகளைச் சாடியதும் இதனை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றது. இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் இன்னும் ஊடகங்களை விட்டொழிந்தபாடில்லை.
இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இந்நிகழ்ச்சிகள் தேவைதானா?
அனைவரும் கேட்பதுபோல், நீதிமன்றங்களும், காவல் துறையும், சட்ட வல்லுனர்களும், அரச நிறுவனங்களும் இருக்கும்போது, ஊடகங்கள் ஏன் இதனை செய்ய வேண்டும்? மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இவர்கள் யார்? நான்கு சுவர்களுக்குள் வைத்து தீர்க்கப்படவேண்டிய இவ்வாறான பிரச்சினைகள் அனுபவமே இல்லாத நான்கு நடிகைகளின் கைகளில் உலகுக்கே தெரியுமளவு வழங்கப்படுவது சரியா? என்று ஆராயும் அதேவேளை;
இதனை இன்னொரு கோணத்திலும் அணுகலாம், நீதிமன்றங்களும், காவல் துறையும் அவர்கள் சொல்லும் அனைத்து தரப்புக்களும் இருந்தும், இன்னும் மக்கள் பிரச்சினைகள், அவர்கள் படும் அவலங்கள் ஒழிந்த பாடில்லையே. நீதி மன்றங்கள் ஓர் குடும்பப் பிரச்சினையை தீர்க்க எடுத்துக்கொள்ளும் காலம் எந்தளவு ஆரோக்கியமானது? குடும்பநல நீதிமன்றங்கள் லட்சக்கணக்கான மனுக்களுடன் தள்ளாடிக்கொண்டு இருக்கையில், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை எவ்வாறெல்லாம் பயன்படுத்த வேண்டுமென்பது சாமானியனுக்கும் தெரிந்துள்ள நிலையில், குற்றங்கள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டுதான் இருக்கின்றன. அப்பாவி மக்கள் எத்தனை நாட்கள் நீதிமன்ற வாசலில் தவம் கிடப்பது? அடுத்தவேளை உணவுக்கே வழியற்ற மக்கள் வக்கீல்களுக்கு எங்கே படியளப்பது? குறித்த வக்கீல்கள், ஆலோசனை வழிகாட்டிகள், மனோதத்துவ நிபுணர்கள் போன்றவர்கள் எவ்வளவுதூரம் விலை உயர்ந்தவர்கள்? சாமானிய மக்களுக்கு இச்சேவைகள் எட்டும் தூரத்திலேயேதான் இருக்கிறதா? லஞ்சம் ஊழல் இருக்கும் நிலையில் அப்பாவி மக்கள் நீதியை எதிர்நோக்கி காத்திருப்பது எத்துணை சாத்தியம்? பொருளாதார தேவைகளை எதிர்நோக்கி இருக்கும் அடிமட்ட மக்களுக்கு நீதிமன்றங்களால் நிதியுதவி செய்ய இயலுமா? வருபவர்களின் தேவைக்கேற்ப உலகின் மூலைமுடுக்கெங்கும் வாழும் தொழில்சார் நிபுணர்கள் உதவக் காத்திருக்கின்றனரே, அது சாமானிய நீதிமன்றங்களில் சாத்தியமா? இப்படிப் பல கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக எழுகின்றன.
உண்மைதான். இவ்வாறான நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் அவர்களது சொந்த வாழ்வில் இடர்பாடுகளை ஏற்படுத்துமாயின் மக்கள் எதற்காக இந்நிகழ்ச்சிகளை நோக்கி இன்னும் வந்துகொண்டு இருக்கிறார்கள்? சமூகச் சீர்கேடுகள் எனக் கருதப்படும் இந்நிகழ்ச்சிகள்மீது மக்கள் ஏன் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கின்றனர்? இந்நிகழ்ச்சிகள் மூலம் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கின்ற காரணத்தினாலேயே மக்கள் இதனை ஆதரிக்கின்றனர். குறித்த நிகழ்ச்சிகளில் பங்குகொள்ள வரிசைகட்டி நிற்கின்றனர். ஏதோ ஒரு வகையில் அவர்களுக்குண்டான உதவிகள் மற்றும் தீர்வுகள் கிடைக்கின்றன. அதனை ஏன் நிறுத்த வேண்டும்? இப்படியும் வாதங்கள் எழுகின்றன.
இதற்கு என்னதான் முடிவு?
மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் உரிய தருணத்தில் உரிய முறையில் பெறப்படுவதில் குறைபாடுகள் இருப்பது மறுக்க இயலாத உண்மை. கலாச்சாரம், சமூகம் என்ற காரணங்களால் குடும்பப் பிரச்சினைகளாக இருந்தவை நாளடைவில் சமூகச் சீர்கேடுகளாகத் தலைதூக்கும் நிலைமைகள் உருவாகியிருப்பது காலக் கொடுமை. வெளியிலிருந்து பார்ப்பவர்களைவிட உண்மையிலேயே பிரச்சினைக்கு ஆளாகும் மக்களின் வலி சொல்லொண்ணாத அளவு பாரதூரமானது. இருந்தும், இவ்வாறான நிகழ்ச்சிகளின் தரத்தை நிர்ணயம் செய்யும் அளவுகோல் என்ன? எந்த அளவீட்டை வைத்து இந்நிகழ்ச்சிகளை அனுமதிப்பது? இந்நிகழ்ச்சிகள் காரணமாக ஏதாவது பாரதூரமான விளைவுகள் நடந்தால் அதற்குப் பொறுப்புதாரர்கள் யார்? மக்கேளே! இது உங்களின் பின்னூட்டங்களுக்காக……