
‘பொறுமையும் சகிப்புத்தன்மையும் இப்பணியின் இரு கண்கள்’
அன்னைக்கு அடுத்தபடியாக அன்பாகவும் அரவணைப்பாகவும் அருவருப்பு இன்றியும் நம்மைப் பார்த்துக் கொள்ளும் இன்னோர் உயிர் – தாதி.
இன்றைய மனித சமூகத்துக்கான தாதிமாரின் சேவையை இலகுவாக மதிப்பிட்டுவிட முடியாது. சாதாரண வைத்திய சேவைகளிலிருந்து போர் கால வைத்திய சேவைகள் வரை ஒவ்வொரு கட்டத்திலும் இவர்களது சேவைகள் வியாபித்துக் காணப்படுகின்றது. செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பையும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூற இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
செவிலியர் தினம் உருவானது எப்படி?
´பிபிசி´யினால் விக்டோரியா அரசிக்கு அடுத்தபடியாக மிகவும் இனங்காட்டப்பட்ட பெண் “புளோரன்ஸ் நைட்டின்கேல்”. தாதித்தொழிலின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தவர். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் ஆரம்பித்தார். ஒரு கிறிஸ்தவரான இவர் தனக்கு ´இறைவனால் விதிக்கப்பட்ட பணியாகவே´ தாதியர் சேவையை உணர்ந்து மேற்கொண்டார்.1837 ஆம் ஆண்டில் அவருக்கு ஏற்பட்ட இந்த உணர்வின் விளைவாக தன் வாழ்நாளையே தாதியர் சேவைக்காக அர்ப்பணித்தார்.

ரஷ்யப் பேரரசிற்கும், பிரான்ஸ் – ஐக்கிய இராச்சிய மற்றும் ஒட்டோமான் பேரசுப்படைக் கூட்டணிக்குமிடையே 1854 – 1856ம் ஆண்டு நடந்த கிரிமியன் போரில் தனது மருத்துவப் பங்களிப்பின் மூலம் புளோரன்ஸ் நைட்டின்கேல் புகழ் பெற்றவரானார்.மருத்துவ வசதிகளுக்கும், சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புக்கள் (Notes on Hospitals), அக்காலத்தில் தாதியர்களுக்கான மிகச் சிறந்த பாடநூலாகக் கருதப்பட்ட “தாதியர்பணி பற்றிய குறிப்புக்கள்” (Notes on Nursing), “உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள்” (Notes on Matters Affecting the Health),”பிரித்தானிய இராணுவத்தின் மருத்துவமனை நிர்வாகமும், செயல் திறனும்” (Efficiency and Hospital Administration of the British Army) என்பவை நைட்டின்கேல் எழுதிய புகழ் பெற்ற நூல்களுள் சில. போரிலிருந்து நாடு திரும்பிய புளோரன்ஸ் நைட்டின்கேல் சாதனைப் பெண்மணியாக வரவேற்கப்பட்டார்.
1820ல் மே மாதம் 12 ஆம் திகதிபிறந்த நைட்டின்கேல் தாதிமார் சேவையை நிறுவி அதை முன்னேற்றும் பணியிலேயே தனது வாழ்நாளை கழித்தவராவார். நவீன தாதியியல் முறையை வித்திட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளை சிறப்பாக நினைவுகூருவதற்காகவும் செவிலியர்களை போற்றுவதற்காகவும் சர்வதேச செவிலியர் தினம் இந்நாளில் கொண்டாடப்படுகின்றது.
கல்வி முறை
ஒவ்வொரு நாட்டிலும் தாதியர் பாட நெறியின் பயிற்சி வருடங்கள் வேறுபட்டது. ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் கற்பிக்கப்படும் பாடநெறிகளுக்கான பரீட்சைகளில் சித்திபெற்றால் மட்டுமே அடுத்த வருட பாடநெறியை தொடர முடியும்.
எழுத்து மூல பரீட்சை செய்முறை பரீட்சை என இரண்டு வகையான பரீட்சைகள் உள்ளன. இதில் செய்முறை பரீட்சையில் சித்திபெற 60 % ற்கு அதிகமான புள்ளிகளை பெறவேண்டும்.

தாதியர் பணியில் 25 வகையான நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நிலைக்கும் வெவ்வேறு விதமான பட்டப்படிப்பு தகைமைகள் அவசியம். இதில் முனைவர் பட்டமே அதிஉயர் நிலை ஆகும். இதனை கற்பதற்கு முதலில் இள நிலை பட்டம் அதனை தொடர்ந்து முது நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு முனைவர் பட்டம் பெற்றவர்கள் ‘Doctor Nurse’ என்ற நிலையை அடைகின்றனர்.
செவிலியர்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டிய சில விடயங்கள்.
உலகின் சுகாதார பணியாளர்களில் 50% செவிலியரும் மருத்துவ பணிப்பெண்களும் ஆவர்.
தற்போது உலக அளவில் அதன் எண்ணிக்கை குறைந்துவருகின்றது. தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலேயே அதிக அளவில் செவிலியர் மற்றும் மருத்துவ பணிப்பெண் குறைபாடு உள்ளது.
சுகாதாரச் சேவையை முன்னெடுத்துச் செல்வதிலும், நோய்த் தடுப்பிலும் ஆரம்ப சுகாதர மற்றும் சமுதாய பராமரிப்பிலும், அவசர நிலை அமைப்பிலும் செவிலியர்கள் முக்கிய நிலை வகிக்கின்றனர்.
அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்பில் வெற்றி பெறுபவதற்கு அவர்களே முக்கியமானவர்கள்.
இலங்கையில் தாதியர் தினம்
ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளின் கீழ் இலங்கையில் அரசாங்க சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தினால் சர்வதேச தாதியர் தின விழா ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்று வருகின்றது. ‘சுகாதார சேவை மனித உரிமையாகும்’ என்ற கருப்பொருளின் கீழ் 2500க்கும் மேற்பட்ட தாதியர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த வருட தாதியர் தின நிகழ்வு இடம்பெற்றது.

இந்த ஆண்டுக்கான சர்வதேச செவிலியர் சங்கத்தின் கருப்பொருள்
‘உடல், மன, ஆன்மாவின் சமநிலையை பேணுதல்’ ஆகும்.
மனம் கோணாது சேவையில் சிறந்து விளங்கும் செவிலியரை இன்னொரு தாய் என்று சொல்வதும் கூட அர்த்தம் உள்ளதாகவே இருக்கும்! இத்தினத்தில் புளோரன்ஸ் நைட்டின்கேலை நினைவு கூரும் அதேநேரத்தில் உலகெங்கிலும் சேவை புரியும் தாதியர்களின் மகத்தான பணிகளையும் கண்ணியப்படுத்தி கௌரவிப்பதானது அவர்களுக்கு உலக மக்கள் வழங்கும் அதியுயர் அங்கீகாரமாகும்.