இலங்கையை அச்சுறுத்தும் இரும்புச்சத்து குறைப்பாடு

ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்தல் அல்லது பராமரித்தல் என்பது குழந்தை பிறந்தவுடன் ஆரம்பிக்கப்படும் ஒரு செயற்பாடு அல்ல.  ஒரு பெண் திருமண வயதை எட்டிய காலம் முதல் பின்பற்றிவரும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு பழக்கவழக்கங்கள், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை போன்றன ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுப்பதற்கு ஏதுவான காரணிகளான அமைகின்றன. குழந்தைகளுக்கு இரும்புசத்து குறைபாடு ஏன் ஏற்படுகின்றது, அவற்றை எவ்வாறு தடுக்கலாம் போன்ற காரணிகளை இக்கட்டுரை மூலம் நாம் ஆராயவுள்ளோம். 

பெற்றோரின் பங்கு

ஆரோக்கியமான ஒரு குழந்தையினை உருவாக்குவதற்கான ஆயத்தங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு 3-6 மாதங்களுக்கு முன்பிருந்தே தாயினால் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனேனில் ஒரு குழந்தை உருவாகும் நாள் முதற் கொண்டு அது பிறந்து 6 மாத காலம் வரையில் அக்குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் தாயிலிருந்தே கிடைக்கின்றது. உதாரணமாக பார்த்தோமேயானால் குழந்கை பிறக்கும் போது முதல் 6 மாத காலத்திற்கு தேவையான இரும்புச்சத்தானது அந்த குழந்தையின்  உடலில் சேமிக்கப்படுகின்றது.  மேலும் தாய்க்கு போதியளவு இரும்ச்சத்து காணப்படாதவிடத்து அது குழந்தையின் ஆரோக்கியத்தினையும் வளர்ச்சியையும் பாதிக்கின்றது. குறைமாதங்களில் பிறக்கும் குழந்கைகள் இரும்புச்சத்து குறைப்பாட்டுடனேயே பிறக்கின்றனர், இவ்வாறான குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்து 2 வாரங்களின் பின்னர் பிரத்தியேகமாக இரும்புச்சத்து வழங்கப்படுகின்றது. ஆகவேதான் ஒரு பெண் கர்ப்பம் தரிப்பதற்கு முன்பிருந்தே மிக ஆரோக்கியமான உணவு பழக்கங்களை கொண்டிருக்க வேண்டும் என்பதனை வைத்தியர்கள் வலியுருத்துகின்றனர். அது மட்டுமின்றி, கருதரிப்பின் ஆரம்ப காலம் முதல் தகுந்த வைத்தியரை அணுகி தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் தகுந்த பரிசோதனைகளையும் மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுப்பது மட்டுமின்றி, குறைப்பாடுள்ள குழந்தைகளை உருவாகுவதையும் தவிர்க்கலாம். 

wvi.org

இரும்புச்சத்து குறைப்பாடு

இலங்கையில் 5 குழந்தைகளில் ஒரு குழந்தை இரும்புச்சத்து குறைப்பாடுடன் வளர்கிறது என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. குழந்தைகள் எனும் போது இங்கு நாம் 5 வயதிற்குட்பட்ட சிறுவர்களையே கருத்தில் கொள்கின்றோம். (6 மாதங்களுக்கும் – 5 வயதிற்கும் இடைப்பட்ட) இந்த அறிக்கையின் அடிப்படையில் பார்த்தோமேயானால்,  இலங்கையில் மொத்த சனத்தொகையில் 20% மக்கள் இரத்தசோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில மாவட்டங்களில் இந்நோயினால் பாதிப்புக்குள்ளானோரின் தொகை அதிகமாகவும் காணப்படுகின்றது. கடந்த நாட்களில் ஏற்பட்ட பொது முடக்க காலங்களில், பொருளாதார சிக்கல்கள், குறைந்த வருமானம் காரணமாக சிறுவர்கள் அதிகமாக இந்நோய்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனலாம்.

இரும்புச்சத்து குறைப்பாடு இருக்கும் ஒரு குழந்தை இரத்தச்சோகை நோயும் காணப்படுமா?

இதை நாங்கள் மருத்துவ ரீதியாக பார்த்தோமேயானால் இரும்புச்சத்தானது இரத்தத்தில் ஹிமோக்குளோபின் உற்பத்திக்கு வழிவகுக்கின்றது. இரத்தத்ததில் ஓட்சிசனை கடத்தும் செயற்பாட்டினை ஹிமோக்குளோபின் மேற்கொண்டு வருகின்றது. ஒரு மனிதனின் உடலில் அவனுக்கு கிடைக்கபெரும் இரும்புச்சத்தின் அடிப்படையில் அவனது இரத்தத்திலிருக்கும் ஹிமோக்குளோபினின் அளவு தீர்மானிக்கப்படுகின்றது. ஆகையால் சில நோயாளிகள் இந்த இரும்புச்சத்து குறைப்பாட்டினால் குருதிச்சோகை எனும் நோயினாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனாலும் இரும்புச்சத்து குறைப்பாடு உள்ள அனைவருக்கும் குருதிச்சோகை இருப்பதில்லை. மருத்துவரை அணுகி இரத்த மாதிரிப்பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் இதனை இணங்கண்டுகொள்ள முடியும்.  

இரும்புசத்து குறைப்பாடுடைய குழந்தைகளை இணங்காணுதல் 

இப்பாதிப்புடைய சிறுவர்கள் அதிக சுறுசுறுப்பின்றி, மந்தமாகவும் சோர்வாகவும் காணப்படுவார்கள். தூக்க முகமாகவும் எதிலும் ஆர்வமற்றவர்களாகவும் விளையாடுவதற்கு கூட விருப்பமற்றவர்களாக காணப்படுவார்கள் அத்துடன், சாப்பாட்டில் பிரியமில்லாதிருப்பதும் இந்த நிலையின் ஒரு அறிகுறியாகும்.

இரும்புச்சத்தானது சிறுவர்களின் மூளைவளர்ச்சிக்கு அதிகம் தேவைப்படுகின்ற ஒரு கூறாகும். அதாவது சிறுவர்களின் அறிவாற்றல் விருத்திக்கு இது மிகவும் அவசியமானது. சாதாரணமாக 5 வயதிற்குள் ஒரு குழந்தையின் மூளை 90% வளச்சிபெறுகின்றது. ஆகையால்; சிறுவர்களின் ஆரம்ப கல்வியினை கற்பதற்கு அவர்களிற்கு ஆரோக்கியமான மூளை வளர்ச்சி வீதம் மற்றும் போதுமான நுண்ணறிவாற்றல் வீதம் (Intelligent Quotient)  காணப்பட வேண்டும். ஆகவே தான் வைத்தியரகள் குழந்தை உருவாகும் முதலிருந்து இந்த இரும்புச்சத்தின் முக்கியத்துவத்தினை பெற்றோருக்கு வலியுருத்தி வருகின்றனர்.

நாம் அன்றாடம் உண்டும் உணவிலிருந்து இரும்புச்சத்தினை பெற்றுகொள்வோம்

சிறுவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் அதிகமாக இரும்புச்சத்தினை மாமிச ஆகாரங்களிலிருந்து பெற்று கொள்ள முடியும், இறைச்சி வகைகள், மீன், முட்டை, ஈரல் போன்ற உணவுகளிலிருந்து 30% மான இரும்புச்சத்தினை பெற்றுகொள்வதுடன், அது ஹீம் அயன் (Heme Iron)  என அழைக்கப்படும்.

மரக்கறிகள், உழுந்து, பருப்பு வகைகள்,கீரை மற்றும் பாலிலிருந்து 10% இரும்புசத்தினை உடல் உறிஞ்சுக்கொள்கின்றது. அதற்கு Non Heme Iron என கூறுவார்கள். இவ்வாறான உணவுகளின் மூலம் அதிகளவான இரும்பு சத்தினை பெற்றுகொள்ள முடியும்.

facebook.com/fhb.srilanka

இரும்புச்சத்து குறைப்பாடு தொடர்பான விழிப்புணர்வினை நாம் கொண்டிருக்கின்றோமா?

எமது நாட்டினை பொறுத்தவரையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் நன்மை பயக்கும் வகையில், சுகாதார அமைச்சினால் குழந்தைகள் நல மருத்துவ நிலையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழந்தை உருவாகும் நாள் முதல், 5 வயது வரை அவர்களது வளர்ச்சி இந்நிலையங்களின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. 6, 12 மற்றும் 18 மாத காலங்களில் குழந்தைகளை பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான இரும்புச்சத்து மற்றும் ஏனைய கனிப்பொருட்கள் மற்றும் விற்றமின்கள் சேர்த்த சிறு பொதிகள்  இந்நிலையங்களின் மூலம் சிறுவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அத்துடன் ஒரு குழந்தையின் வளர்ச்சி தொடர்பான சகல தகவல்களும் அடங்கிய ‘சிறுவர் ஆரோக்கிய மற்றும் அபிவிருத்தி கையேடு’ எனும் புத்தகம் இலங்கையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் சுகாதார அமைச்சினால் வழங்கப்படுகின்றது. இக்கையேட்டின் உதவியுடன் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் வளர்ச்சியினை கண்கானிப்பதுடன், ஏதாவது  குறைகள் இருப்பின் குழந்கைகள் நல மருத்துவ நிலையங்களில் அதற்கான சிகிச்சைகளை இலவசமாக பெற்றுகொள்ள முடியும். அது மட்டுமின்றி பாடசாலைகளில் நடக்கும் மருத்துவ பரிசோதனை முகாம்களின் மூலம் இவ்வாறான நிலைகளை இணங்கண்டு நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

இரும்பு சத்துமிக்க உணவினை பிள்ளைகளுக்கு வழங்குவதில் பெற்றோர் முகங்கொடுக்கும் பிரச்சினைகள்

விசேடமாக பெற்றோரின் குறைந்த வருமானம் காரணமாக அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்குவதில் அதிக சிக்கல்கள் ஏற்படலாம், அத்துடன் கலாச்சார மத நம்பிக்கைகள் காரணமாக மாமிச உணவுகளை தவிர்த்தல் போன்ற சூழ்சிலைகளும் காணப்படுகின்றன. இவ்வாறான  சந்தர்ப்பங்களில் பால், முட்டை போன்ற அதிக விலையற்ற உணவுகளின் மூலம் சிறுவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தினை பெற்றோர் வழங்க முடியும். ஏனெனில் இரும்புச்சத்து குறைப்பாடுகள் ஏற்படும்போது மருந்துகள் மூலம் அது வழங்கப்பட்டாலும் கூடுமான அளவு உணவில் காணப்படும் இரும்புச்சத்தே  அதிகமாக உடலினால் உரிஞ்சப்படுகின்றது. 

Related Articles

Exit mobile version