Welcome to Roar Media's archive of content published from 2014 to 2023. As of 2024, Roar Media has ceased editorial operations and will no longer publish new content on this website.
The company has transitioned to a content production studio, offering creative solutions for brands and agencies.
To learn more about this transition, read our latest announcement here. To visit the new Roar Media website, click here.

மறைகுறியீட்டு நாணயம் (Cryptocurrency): முதலீடா? சூதாட்டமா?

இது எனது சமூக வலைத்தள கணக்கிற்கு வந்த குறுஞ்செய்தி. “வீட்டிலிருந்தே நிகழ்நிலை(online)யில் பணம் சம்பாதிக்கலாம்!” என ஆரம்பிக்கிறது அந்த குறுஞ்செய்தி. இன்றைய நாளில் டொலர் இருக்கும் மதிப்பிற்கு அதில் கூறப்பட்டுள்ள தொகையை தாங்களே மதிப்பிட்டு கொள்ளுங்கள்.(இதனால் வரும் தலைச்சுற்றுக்கு நான் பொறுப்பல்ல!)

ஒட்டுமொத்த உலகமும் ஒரு நுண்ணிய  வைரஸால் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் இவ்வேளையில் நம்மில் பலர் வேலை இழந்திருப்போம்; ஆண்டாண்டு காலமாக செய்து வந்த வணிகம் மூடுவிழா கண்டிருக்கும்; அடைந்த நட்டங்களுக்கு அளவிலாது இருந்திருக்கும். வீட்டிலிருந்தே சம்பாதிப்பது எப்படியென்று பலரும் பலவிதமாக மண்டையை பிய்த்து எடுத்திருப்போம். அவ்வேளையில் இவ்வாறான அழைப்புகள் உங்களை சபலப்பட வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. உட்கார்ந்துகொண்டே சம்பாதிக்க யாருக்கு தான் விருப்பமில்லை.

பண்டைய காலத்தில் பண்டமாற்றாக இருந்த கொடுக்கல் வாங்கலில் பிற்பாடு பணம் என்ற கோட்பாடு உள்நுழைந்தது. முதலில் நாகரீகத்திற்கு நாகரீகம் பின்னர் நாட்டுக்கு நாடு என பணவழி கொடுக்கல் வாங்கல் பரவலடைந்தது. களிமண், வெள்ளி, தங்கம், அச்சிட்ட தாள், காந்த அட்டை என உருமாறி இன்று மின்னணு குறியாக வலம் வருகிறது. ஆண்டாண்டு காலமாக மக்கள் துரத்தி திரிந்த அந்த அச்சிட்ட செவ்வகத்தாள் தன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதா? அதுவும் இனிமேல் மின்னணு துவித குறியாக (Binary Code) அதாவது மறைகுறியீட்டு நாணயமாக (Cryptocurrency) மாறிவிடுமா? இது முதலீடா? சூதாட்டமா? 

இந்த ஆற்றில் காலை விடலாமா?

இந்த மறைகுறியீட்டு நாணயம் (Cryptocurrency) என்றால் என்ன?

சில பிரபல்யமான மறைகுறியீட்டு நாணயங்களின் இலச்சினைகள்
புகைப்பட உதவி: analytics.net

மறைகுறியீட்டு நாணயம் (Cryptocurrency) என்பது பொருட்கள் மற்றும் சேவைகளை நிகழ்நிலையில் (online) கொள்வனவு செய்யக்கூடிய ஒருவகை பண அலகு ஆகும். பல நிறுவனங்கள் தமது சொந்த நாணயங்களை வெளியிட்டுள்ளன. அவை பெரும்பாலும் டோக்கன்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மூலம் குறித்த நிறுவனம் வழங்கும் பொருள் அல்லது சேவையை கொள்வனவு செய்யலாம். Casino நாணயங்கள் மூலம் நீங்கள் பரிவர்த்தனை செய்வதைப்போல என்று வைத்துக்கொள்ளுங்கள். இவற்றுக்கு நம் நாணய அலகில் பெறுமதி உண்டு. அது நாளுக்குநாள் மாறும். குறித்த பொருள் அல்லது சேவையை அணுக மறைகுறியீட்டு நாணயத்தின் அன்றைய பெறுமதிக்கு ஈடான உண்மையான பணத்தை நீங்கள் வழங்கி பரிவர்த்தனையில் ஈடுபடலாம்.

இந்த மறைகுறியீட்டு நாணயங்கள், Blockchain என்ற தொழில்நுட்பம் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவற்றின் பரிவர்த்தனைகள் இதில் பதியப்படும். Blockchain என்பது ஒரு மையக்கட்டுப்பாடற்ற/ பரவலாக்கப்பட்ட உலகம் முழுதும் பல கணினிகளில் இயங்கும் ஒரு தொழில்நுட்பம் ஆகும். ஏலவே கூறியது போல் பணப்பரிவர்த்தனைகளை இது கண்காணித்து பதிவு செய்யும். பாதுகாப்பு என்பது இந்த தொழில்நுட்பத்தின் ஒரு அங்கமாக உள்ளது.

என்னதான் பொருள் மற்றும் சேவை கொள்வனவுக்கான ஒரு ஊடகமாக இது அறிமுகமானாலும் இப்போது தங்கம், வைரம், பங்குச்சந்தையில் பங்குகள் போன்று இன்றைய டிஜிட்டல் யுக சொத்தாக இந்த மறைகுறியீட்டு நாணயம் (Cryptocurrency) இப்போது உருவெடுத்துள்ளது என்பதே நிதர்சனம்.

சுருங்கக்கூறின்

“Cryptocurrency is decentralized digital money, based on blockchain technology” – Forbes.
“மறைகுறியீட்டு நாணயம் என்பது பரவலாக்கப்பட்ட (மையக்கட்டுப்பாடற்ற) மெய்நிகர் பணம், இது Blockchain தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது.” இது Forbes தளத்தால் வெளியிடப்பட்ட வரைவிலக்கணம் ஆகும்.

சரிவர ஆராயாமல் இதில் முதலிடுவது தங்களை அதலபாதாளத்தில் தள்ளவும் வாய்ப்புண்டு என்கின்றனர் நிபுணர்கள். இது ஒரு சவர்க்கார குமிழ் போன்றது எனவும் சிலர் வாதாடுகின்றனர்.

Cryptocurrency எவ்வாறு தொழிற்படுகிறது?

Cryptocurrency என்பது டிஜிட்டல் வழி பரிவர்த்தனை செய்யும் ஒரு ஊடகம். இதில் Crypto என்பது இது மறைகுறியாக்கப்பட்டதை (encrypted- பிறிதொரு நபரால் வாசிக்க அல்லது விளங்கிக்கொள்ள இயலாதவாறு கணினி சங்கேத மொழியில் மாற்றப்பட்டு இருக்கும்) குறிக்கிறது. இதன்மூலம் பாதுகாப்பு ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது. WhatsAppல் “Messages and calls are end-to-end encrypted” என்று கூறப்பட்டிருக்கும். இதன் அர்த்தம் தங்களையும் தங்களோடு தொடர்பு கொள்பவரையும் தவிர வேறு யாருக்கும் உங்களிருவரிடையே இடம்பெற்ற உரையாடல்களை பார்வையிடவோ செவிமடுக்கவோ முடியாது. காரணம் அவையனைத்தும் சங்கேத குறிகளாக இருமருங்கிலிருந்தும் மொழிமாற்றம் செய்யப்படும். மூன்றாம் நபர் ஒருவர் இதனை ஒட்டுக்கேட்பது பகீரத ப்ரயத்தனம் என்பதே உண்மை. அதுமட்டுமின்றி இந்த பணம் பரவலாக்கப்பட்டது. அதாவது அமெரிக்க டொலர், யூரோ போன்று குறியாக்கபணத்தின் பெறுமதியை நிர்ணயிக்க, நிர்வகிக்க மத்திய அதிகாரம் கொண்ட அமைப்பு அல்லது ஆணைக்குழு என்று ஒன்று கிடையாது. உதாரணத்திற்கு இலங்கை ரூபாயானது இலங்கை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதுபோல் இதனை கட்டுப்படுத்த ஒரு நிறுவனம் இல்லை. அதற்கு பதிலாக இந்தப்பணி உலகம் முழுவதும் வியாபித்துள்ள அதன் பயனர்கள் மத்தியில் இணைய வழியாக பரவலாக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி அதன் பயனர்கள் கையிலேயே உள்ளது. இது பரவலாக்கப்பட்டது என்ற பதத்திற்கான அர்த்தம் தற்போது தங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

நாணயத்தாள் போலோ நாணயக்குற்றி போலோ இதற்கு பௌதிக வடிவம் கிடையாது. கணினியில் ஒரு தரவாகவே இன்னும் தெளிவாக சொல்லப்போனால் கணினிக்குறியாகவே (Computer code) இது புழங்குகிறது.

சரி அது எங்கு எவ்வாறு சேமிக்கப்படும்?

பதில்:

தொகுதிச்சங்கிலி (Blockchain)

Blockchain – தொகுதிச்சங்கிலி சித்தரிப்புப்படம்
புகைப்பட உதவி : Devops.com

மறைகுறியீட்டு நாணயத்தை இணைய, கணினி வெளியில் நிலைக்க வைக்கும் தொழில்நுட்பம் இது. எமது கணினி தரவுகளை கோப்புகளில் (File) சேமிப்போமல்லவா? அதுபோன்றதென வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் ஒரு கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் கோப்பு அல்ல. உலகம் முழுதும் ஒரு வலையமைப்பில் பரவிக்கிடக்கிறது. இது Bitcoin (ஒரு வகை மறைகுறியீட்டு நாணயம்), மற்றும் ஏனைய மறைகுறியீட்டு நாணயங்களுக்கு மாத்திரமே பிரத்யேகமானது அல்ல. இதில் வேறு பல பயன்பாடுகளும் உள்ளன. அந்த பயன்பாடுகளில் இதுவும் ஒன்று.

அடிப்படையில் தொகுதிச்சங்கிலி என்பது பரிவர்த்தனைகளை குறியாக பதிவு செய்யும் ஒரு திறந்த, விநியோகிக்கப்பட்ட பேரேடு ஆகும். நடைமுறை வழக்கில் கூறினால் எண்ணற்ற கணினிகளுக்கு மத்தியில் விநியோகிக்கப்பட்ட காசோலை புத்தகம் என்று வைத்துக்கொள்ளலாம்.  பரிவர்த்தனைகள் ‘தொகுதி’களில் (Blocks) பதியப்பட்டு முன்னைய மறைகுறியீட்டுநாணய பரிவர்த்தனைகளின் ‘சங்கிலி’யில் (Chain) இணைக்கப்படும்.    “ஒவ்வொரு நாளும் நீங்கள் பணம் செலவழிக்கும் அனைத்தையும் எழுதும் ஒரு புத்தகத்தை கற்பனை செய்து பாருங்கள், ஒவ்வொரு பக்கமும் ஒரு தொகுதிக்கு ஒத்ததாக இருக்கும், மேலும் முழு புத்தகமும், பக்கங்களின் கோர்ப்பு, ஒரு தொகுதிச்சங்கிலி (Blockchain) ஆகும்” என ஆபிரிக்காவை சேர்ந்த மறைகுறியீட்டு நாணயமாற்று சேவையான Quidaxன் தலைமை நிறைவேற்று அதிகாரி மற்றும் இணை நிறுவனரான Buchi Okoro அவர்கள் கூறியுள்ளார். (மூலம்: Forbes)

தொகுதிச்சங்கிலி மூலமாக மறைகுறியீட்டு நாணயத்தை பாவிக்கும் அனைவரும் ஒரு ஒருங்கிணைந்த பரிவர்த்தனை பதியப்பட்ட மேற்குறித்த புத்தகத்தின் தமக்கான பிரதியை தம்வசத்தே வைத்திருப்பர். இதில் உலகம் முழுவதும் இடம்பெறும் பரிவர்த்தனைகள் பதியப்பட்டு இருக்கும். மென்பொருள் ஒவ்வொரு புதிய பரிவர்த்தனையையும் நடக்கும் போது பதிவுசெய்கிறது. மேலும் தொகுதிச்சங்கிலியின் ஒவ்வொரு நகலும் புதிய தகவலுடன் ஒரே நேரத்தில் புதுப்பிக்கப்பட்டு, எல்லா பதிவுகளையும் ஒரே மாதிரியாகவும் துல்லியமாகவும் வைத்திருக்கும். மோசடியைத் தடுக்க, ஒவ்வொரு பரிவர்த்தனையும் இரண்டு முக்கிய சரிபார்ப்பு நுட்பங்களில் ஒன்றைப் பயன்படுத்தி சரிபார்க்கப்படுகிறது ஒன்று வேலை சான்று (Proof of work) அல்லது பங்குச்சான்று (Proof of Stake) மூலம் இது நடைபெறும்.

வேலை சான்று மற்றும் பங்குச்சான்று

வேலைச்சான்று மற்றும் பங்குச்சான்று என்பன ஏற்கனவே கூறியது போல பரிவர்த்தனைகளை ஒரு தொகுதிச்சங்கிலியில் இணைப்பதற்கு முன்பாக அதனை சரிபார்க்க பயன்படும் இருவேறு நுட்பங்கள் ஆகும். இது சரிபார்ப்பவர்களுக்கு மேலதிக மறைகுறியீட்டு நாணயங்களை வெகுமதியாக வழங்குகிறது.

வேலைச்சான்று: “வேலைச்சான்று என்பது தொகுதிச்சங்கிலியில் பரிவர்த்தனைகளை சரிபார்க்கும் ஒரு நுட்பமாகும். இது ஒரு கணித பிரசினத்தை கணினிக்கு வழங்கி அதனை தீர்க்கச்செய்யும் ஒரு வழிமுறை (algorithm) ஆகும்” என்கிறார் Xcoins.comன் சமூக வலைத்தள மேலாளர் Simon Oxenham.

பங்கேற்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு ‘தோண்டுனர்’ அதாவது ‘Miner’ என அழைக்கப்படும். இது ஒரு கணித புதிரை தீர்க்கிறது. இதன்மூலம் ஒரு தொகுதி (Block) என குறிப்பிடப்படும் ஒரு தொகை பரிவர்த்தனைகளை சரிபார்க்க உதவுகிறது. பின்னர் அவற்றை தொகுதிச்சங்கிலி பேரேட்டில் பதிவு செய்கிறது. இதனை முதலில் வெற்றிகரமாக நிறைவு செய்யும் கணினிக்கு சிறிதளவு மறைகுறியீட்டு நாணயம் அதன் முயற்சிக்கு வெகுமதியாக அளிக்கப்படுகிறது.

வேலை சான்று தொழிற்படும் விதம் – சித்தரிப்பு வரைபடம்
புகைப்பட உதவி: forkast.news

தொகுதிச்சங்கிலி புதிர்களை தீர்ப்பதற்கான இந்த பந்தயத்திற்கு பாரியளவான கணினி வலுவும் மின்சாரமும் தேவைப்படும். இதற்காக செலவாகும் வலுச்செலவு மற்றும் கணினி வளங்களை கருத்தில்கொள்ளும் போது நடைமுறையில் இந்த Minerகள் பரிவர்த்தனைகளை சரிபார்ப்பதற்காக தமக்கு கிடைக்கும் மறைகுறிகளையும் முடிக்க வாய்ப்புள்ளது.

பங்குச்சான்று: பரிவர்த்தனைகளை சரிபார்க்க செலவாகும் சக்தியின் அளவை குறைக்க சில மறைகுறியீட்டு நாணயங்கள் பங்குச்சான்று முறை மூலம் பரிவர்த்தனைகளை சரிபார்க்கின்றன. பங்குச்சான்று மூலம் ஒவ்வொரு நபரும் தமது பங்காக எடுக்க விரும்பும் மறைகுறியீட்டு நாணயத்தின் அளவு கொண்டு அவர்கள் சரிபார்க்கக்கூடிய பரிவர்த்தனைகளின் அளவு மட்டுப்படுத்தப்படுகிறது. அல்லது இந்த செயற்பாட்டில் பங்கெடுக்கும் பொருட்டு தற்காலிகமாக ஒரு பொது பெட்டகத்தில் இது பூட்டிவைக்கப்படும் (இங்கு பெட்டகம் என குறிப்பிடப்படுவது உண்மையான பெட்டகம் அல்ல. இது மெய்நிகரானது, வெறுமனே கணினி குறிகள் அவ்வளவே). “இது கிட்டத்தட்ட வங்கி இணை போன்றது” என Okoro கூறுகிறார். மறைகுறியீட்டு நாணயத்தை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பரிவர்த்தனைகளை சரிபார்க்க தகுதியுடையவரே ஆயினும் அதற்கு நீங்கள் தேர்வு செய்யப்பட எதிர்கொள்ள வேண்டிய முரண்கள் நீங்கள் முன்வைக்கும் பணத்துடன் அதிகரிக்கும்.

“பங்குச்சான்றானது அதீத ஆற்றல் உறிஞ்சும் சமன்பாடு தீர்க்கும் பிரச்சினையை இல்லாது செய்வதால் இது வேலை சான்றை விட வினைத்திறன்மிக்கது. இது பரிவர்த்தனைகளுக்கு விரைவான சரிபார்ப்பு/உறுதிப்படுத்தல்களுக்கு தேவையான இடத்தை வழங்குகிறது” என Osom Financeன் தலைமை நிறைவேற்று அதிகாரி Anton Altement கூறுகிறார்.

ஒரு புதிய தொகை பரிவர்த்தனைகளை சரிபார்க்க ஒரு பங்கு உரிமையாளர் (சில வேளைகளில் மதிப்பீட்டாளர் என அழைக்கப்படுவதுண்டு) தேர்ந்தெடுக்கப்பட்டால் அவருக்கு மறைகுறியீட்டு நாணயம் வழங்கப்படும். இது பரிவர்த்தனைகளின் தொகுதியிலிருந்து (Block) மொத்த பரிவர்த்தனை கட்டணங்களின் அளவாக இருக்கலாம்.

மோசடியை தவிர்க்கும் பொருட்டு, ஒரு வேளை நீங்கள் தெரிவுசெய்யப்பட்டு தவறான பரிவர்த்தனைக்கு தாங்கள் அங்கீகாரம் அளிக்கும்போது உங்களுடைய பங்கில் ஒரு பகுதியை தாங்கள் இழக்க நேரிடும். ஆகவே சரியான பரிவர்த்தனைகளை மாத்திரமே உறுதிப்படுத்தல் உங்கள் பங்குகளை தக்கவைக்கும்.

மறைகுறியில் ஒருமித்த பங்கு

வேலை சான்று மற்றும் பங்குச்சான்று ஆகிய இரண்டும் பரிவர்த்தனைகளை சரிபார்க்க ஒருமித்த வழிமுறைகளை நம்பியுள்ளன. இதன் பொருள் ஒவ்வொருவரும் பரிவர்த்தனைகளை சரிபார்க்க தனிப்பட்ட பயனர்களைப் பயன்படுத்தும் போது, ஒவ்வொரு சரிபார்க்கப்பட்ட பரிவர்த்தனையும் பெரும்பான்மையான பேரேடு  வைத்திருப்பவர்களால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும்.

உதாரணத்துக்கு ஒரு கணினி ஊடுருவிக்கு (Hacker) தொகுதிச்சங்கிலி (Blockchain) பேரேட்டை மாற்றியமைக்க அவரது மோசடிப்பதிப்பு குறைந்தது 51% பேரேடுகளுடன் அது பொருந்த வேண்டும். இவ்வாறு செய்வதற்கு தேவையான பாரிய அளவு வளங்களுடன் அதனால் பெறப்படும் இறுதிவிளைவை ஒப்பிடுகையில் யானைப்பசிக்கு சோளப்பொறி என்பதே நிதர்சனம். 

இத்துடன் இந்த கட்டுரை முற்றுப்பெறவில்லை. இந்த நாணயங்கள் எவ்வாறு மாற்றப்படுகின்றன? மற்றும் இவை பற்றி எம் இலங்கை மத்திய வங்கியின் நிலைப்பாடு யாது? என்பவை பற்றி இதன் அடுத்த பாகத்தில் அறியத்தருவோம். 

Cover Image designed by Abilaash Vijeyakumaran

Related Articles