“ஒரு வன்முறையோ, பலாத்காரமோ நடக்கும் போது செல்போனோ, இன்டர்நெட்டோ உங்க பசங்கள காப்பாத்தாது; தற்காப்புக் கலைதான் அவங்கள காப்பாத்தும்”
இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் பரவிக்கிடக்கும் உடனடி உணவுகள், தொலைபேசியில் மூழ்கிய ஸ்மார்ட் தலைமுறை என பாரம்பரியத்தை மறந்து நவீனயுகத்தில் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். என்னதான் நவீன தொழிநுட்பத்துடன் நாம் பயணித்தாலும் நோய்களால் உடலும், உள்ளமும் பாடாதபாடுபடுவது நாம் அறிந்ததே. அவசர உலகில் அவசியமான உடற்பயிற்சிகளுக்குக் கூட நேரமற்று வாழ்ந்து கொண்டிருப்பதே இத்தகைய நோய்களுக்கு வழிவகுக்கும் முதல் காரணியாகும். இன்று நம்மில் எத்தனை பேர் தினசரி உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றோம்? உடற்பயிற்சி அத்தியாவசியம் என அறிந்திருந்தும் அதனைச்செய்ய மறுக்க பல காரணங்களும் நம் கைவசம் இருந்தவண்ணமே உள்ளது.
இதனால் உடல் பாதிப்பு மட்டுமின்றி மனமும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதில் மன அமைதியின்மையானது இங்கு பலரை தற்கொலை வரை கூட்டிச்சென்றுள்ளது. அஸ்த்திவாரம் ஒழுங்காக அமையாத போது கட்டடத்தைக் குறை கூறி என்ன பயன்! எனவே, மனமும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்போது தான் நம்மால் பூரணத்துவமிக்க வாழ்வொன்றை வாழமுடியும். அந்தவகையில் உடலையும், உள்ளத்தையும் வளப்படுத்த உதவும் கருவியான தற்காப்புக் கலைகளைப் பயில்வதென்பது நம்மையும் நம் சமுதாயத்தையும் மேம்படுத்துவதாக அமைகிறது.
தற்காப்புக்கலை பாரம்பரிய கலைகளில் ஒன்றாக இருந்தாலும் 19ம் நூற்றாண்டின் பின்னர் பலரால் விரும்பி விளையாடப்படும் நவீன விளையாட்டாக வடிவம் பெற்றுள்ளது. ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், கொரியா, இந்தியா போன்ற நாடுகளில் பல்வேறு வடிவங்களில் தற்காப்புக்கலைகள் உருவாக்கப்பட்டு இன்று வரை அவைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. ஜூடோ, கராத்தே போன்றன ஜப்பானிலும், குங்ஃபூ சீனாவிலும், டேக்வாண்டோ (Taekwondo) கொரியாவிலும், களரிப்பயற்று மற்றும் சிலம்பம் போன்றன இந்தியாவிலும் தோற்றம் பெற்ற தற்காப்புக்கலை வடிவங்களாக விளங்குகிறது. உலக நாடுகள் பலவற்றில் தற்காப்புக்கலைகள் இன்று பயிற்சியளிக்கபட்டாலும் அவற்றின் வரலாறானது இந்தியாவிலிருந்தே ஆரம்பமானதாகக் கூறப்படுகின்றது.
இன்று இலங்கையிலும் கராத்தே, டேக்வாண்டோ, அங்கம்பொற போன்ற தற்காப்புக்கலைகள் பரவலாகக் காணப்படுகினறன. இதில் அங்கம்பொற என்பது இலங்கையில் கலாசார தற்காப்புக்கலைகளில் ஒன்றாகும். ஆரம்பகாலங்களில் இது சிங்கள மக்களிடையில் பயிலப்பட்ட கலையாக இருந்த போதிலும், இலங்கை சுதந்திரத்தின் பின்னர் இக்கலையானது பரவலாக்கம் செய்யப்பட்டது. இத்தகைய பாரம்பரிய கலைகளை பாதிகாப்பதற்காக நாட்டில் தற்காப்புக்கலை பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டப் போட்டிகள் இன்று ஒழுங்கமைக்கப்படுவது குறிப்பிட மற்றும் பாராட்ட வேண்டியடியதொன்றாகும்.
இந்த தற்காப்புக் கலைகளானது பல்வேறு வடிவங்களிலும் விதிமுறைகளிளும் மாறுபட்டாலும் இவைகளின் பிரதான நோக்கம் என்னவோ பாதுகாப்பு தான். ஆரம்பக் காலங்களில், ஒருவர் தன்னை ஆபத்தான சந்தர்ப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கென இத்தற்காப்புக் கலைகள் உருவெடுத்தன. இன்று இவைகளில் சில, விளையாட்டுத்துறையில் பிரதான விளையாட்டுக்களாக அறியப்படுவதுடன், உடற்பயிற்சி, தற்காப்பு, சுய ஒழுக்கம், சுயநம்பிக்கை என பல்வேறு காரணங்களுக்காக பலராலும் பயிலப்படுகின்றன. இன்றைய சூழலில் பாதுகாப்பு குறைவாக காணப்படும் இந்த சமூகத்தில் பயணித்திக்கொண்டிருக்கும் நாம் அதிலும் குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் போன்றவர்கள் இத்தற்காப்புக் கலைகளை கற்பதென்பது தேவைக்குரிய ஒன்றாக அமைகிறது.
இன்றைய சூழ்நிலையில் தங்கள் குழந்தைகளை ஆளுமைமிக்கவர்களாக, சுய ஒழுக்கம் மற்றும் நம்பிக்கையுடையவர்களாக உருவாக்க வேண்டுமென ஒவ்வொரு பெற்றோர்களும் கருதுகின்றனர். இதற்கு தற்காப்புக்கலைகளும் ஒரு காரணியாக உதவுகின்றது. இன்று சில பாடசாலைகள் மாணவர்களுக்கு தற்காப்புக் கலைகளை சிறுவயது முதலே கற்பிக்கப்படுவதும், மாணவர்களை அதற்கு ஊக்குவிப்பதும் ஆரோக்கியமான மாணவச் சமுதாயத்தை உருவாக்குவதற்கும் துணை செய்கிறது. இலங்கையில் பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரையில் இத்தகைய தற்காப்புக் கலைகள் பயிற்றுவிக்கப்படுவதோடு, மாணவர்கள் பல போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்புக்களையும் வழங்குகிறது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாத்திரமின்றி திறந்த போட்டிகள், பாடசாலை மட்டப் போட்டிகள் என பல்வேறு தற்காப்புக்களைப் போட்டிகள் நடாத்தப்பட்டு வருவதென்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். தற்காப்புக் கலைகளை வளர்க்க ஒலிம்பிக் போட்டிகள், WFMAF இனால் நடாத்தப்படும் World Open Martial Arts Championship போன்றவை, இக்கலைகளை பயிலும் மாணவர்கள் தம்மை தரப்படுத்தலில் அடுத்த நிலைக்கு முன்னேறிச்செல்ல துணை அம்சங்களாக அமைகிறது. இதில் உதாரணமாக கராத்தே, டேக்வாண்டோ போன்ற விளையாட்டுகளைச் சொல்லலாம்.
தடுத்தல், சண்டையிடுதல், யோகா, போரிடல் எனப் பல நுட்பங்களை உள்ளடக்கிய இத் தற்காப்புக்கலைகளால் வலிமை, சகிப்புத்தன்மை, வேகம், நெகிழ்வுத்தன்மை, இயக்க ஒருங்கிணைப்பு போன்ற உடல் நலப்பேணலுடன், சுய கட்டுப்பாடு, சுய மரியாதை வளர்க்கப்படுவதுடன் மனநலம், ஆன்மீகம் மற்றும் உணர்வுசார் நலம் போன்றவையும், பேணப்படுகின்றன என சில ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. இத்தகைய நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், உலகமயமாக்கலின் விளைவுகளால் தற்காப்புக் கலைகளை அனைத்து மக்களும் கற்றுக்கொள்வதென்பது பொருளாதார அடிப்படையில் சிக்கலாகவே உள்ள நிலையில், சமூகத்தின் எல்லாத்தரப்பு மக்களையும் இவை சென்றடைவதில்லை என விமர்சனங்களும் உண்டு.
சமீப காலங்களில் தற்காப்புக் கலைகள் தொடர்பாக வெளியான கராத்தே கிற் (karate kid), என்டர் த டிராகன் ( Enter the dragon) போன்ற திரைப்படங்கள் மக்களின் வரவேற்பை பெற்றதுடன் தற்காப்புக் கலைகள் மீதான ஆர்வத்தை மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளது. விழிப்புணர்வூட்டல், ஆர்வத்தைத் தூண்டல் என்பன மூலம் இத்தகைய அருமையான கலைகள் சமூகத்தில் விருத்தியடைதல் இன்றைய காலகட்டத்தில் அவசியமானதொன்றாகும்.