புதிய வருடத்தின் புதிய தொடக்கங்கள்!

“ரிஸ்க்கு எல்லாம் நமக்கு  ரஸ்க்கு சாப்பிடுற மாதிரி” இது நம்ம வடிவேலுவின் ஓர் மிகப்பிரபலமான டயலாக். பொதுவாக இதுவோர் நகைச்சுவை நோக்கில் எல்லோராலும் பகிரப்பட்டாலும், இந்த வார்த்தைக்குள் ஓர் மிகப்பெரிய தன்னம்பிக்கை தத்துவமே அடங்கியிருப்பதாகவே நான் கருதுவதுண்டு. இந்த 2022ஆம் ஆண்டு உலக மக்களுக்கெல்லாம் எப்படியோ, ஆனால் இலங்கைவாழ் நமக்கோ சோகமும் சோதனைகளும் சவால்களும் என நம்மையெல்லாம் கதி கலங்கவைத்த ஓர் ஆண்டு என்றே கூறவேண்டும். யுத்த காலத்தைவிட அதிகமாக “நாட்டை விட்டு தப்பி ஓடினால் போதும்” என மக்களை வாய்விட்டு சொல்லவைத்த ஆண்டு என்றால்கூட மிகையில்லை. கொரோனா எனும் கொடும் தொற்று முடிந்தும் முடியாத தருணத்தில் அதல பாதாளத்தில் வீழ்ந்திருந்த பொருளாதார நெருக்கடியுடன், நம் அரசியல்வாதிகளின் கடும் துரோகத்தினால் இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் நிலைகுலைந்து நொந்து நூடில்ஸ்ஸான நிலையில்,   எத்தனை கண்ணீர் எத்தனை போராட்டமான வாழ்க்கை? ஆனால், இத்தனை  மோசமான சூழலிலும் “நான் வீழ்வேன் என நினைத்தாயோ?” எனும் ரேஞ்சில் வீறிட்டு எழ எண்ணும் அநேகர்தான் சோர்ந்து போனவர்களுக்கான அச்சாரம்!

புகைப்படஉதவி /www.mediasupport.org

கொரோனா, அதனைதொடர்ந்த பொருளாதார நெருக்கடிகள் என இந்த இக்கட்டான சூழ்நிலைகளானதுஇன்று அநேகரை சுய தொழில் மற்றும் தொழில் முனைவோராக மாற்றியிருப்பதென்பது துன்பத்தில் நிகழ்த்த நல்லதோர் மாற்றம் என்றே கூறவேண்டும். அந்தவகையில்    தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்து விட்டால் வாழ்கையில் எதையும் சாதிக்க முடியும். என்னிடம் பணம் இல்லையே… என்னால் எப்படி வெற்றி பெற முடியும் என்று புலம்புபவர்கள் நம்மில் ஏராளம். ஆனால் பிசினஸில் சாதித்த பலரும் முதலீடு என்று கையில் கத்தைகத்தையாக வைத்துக்கொண்டு ஆரம்பித்தவர்கள் இல்லை என்பதும் அதீத தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும், நேர்மறை எண்ணங்களுமே அவர்களின்  சிகரம்தொடும்  வளர்ச்சிகளுக்கான  மிகப்பெரிய முதலீடு என்பதும்தான் உண்மை. பிரச்சனை என்பது பணத்தில் இல்லை. மனத்தில்தான் இருக்கிறது. நேர்மறை  சிந்தனைகளை மனதில் வளர்த்தெடுப்பவர்களுக்கு பணம் என்பது ஒரு பிரச்சனையே இல்லை. ஒவ்வொரு நாளும் வாழ்கை நமக்கு வாய்ப்புக்களை  வழங்கி கொண்டேதான்  இருக்கிறது. இந்த வாய்பை எப்படி கையாளுகிறோம் என்பதை பொறுத்தே வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. பிரச்சினைகளை எதிர்நோக்காத மனிதர்களேயில்லை, நாம் அவற்றிலிருந்து  விலகி ஓடிவிட எண்ணுவோமாயின்  வாழ்கை மிகவும் குறுகிவிடுவதோடு  நம்முடைய இருப்பும் எவருக்குமே தெரியாதவொன்றாகிவிடும் .

புகைப்படஉதவி/ news.sky.com

பிரச்சனைகளை எதிர்கொள்ள தயங்கியே பலரும் வாய்ப்பை தவற விடுகின்றனர். உண்மையில்,  பிரச்சனைகள் என்பவை ஒவ்வொரு மனிதனையும் பட்டை தீட்டும் வலிமை கொண்டவை என்றே நான் கருதுகின்றேன். அவற்றை எதிர்கொள்ளும் போது நம்  தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.தன்னம்பிக்கை உள்ளவனிடம் பிரச்சனைகள் குறித்த கவலை இருப்பதில்லை. அவன் வாழ்வின் கடைசி நிமிடம் வரை போராடுகிறான். மன நிறைவோடு வாழ்கிறான். லட்சியத்தை அடைந்தே தீருவேன் என்ற எண்ணத்தோடு செயல்படுகிறான். லட்சியம் ஒரு மகத்தான சக்தி. நம் ஆழ்மனதில் நான் இதையெல்லாம் சாதித்தே தீருவேன் என அடிக்கடி எண்ணிக்கொண்டேயிருக்கும்போது, இந்த பிரபஞ்சம் நம் எண்ணங்களை ஈடேற்றும்வகையில் சூழ்நிலைகளையும் வாய்ப்புக்களையும் உருவாக்கித் தரும் என்பேதே உண்மை. தன்னம்பிக்கை இல்லாதவர்களிடம் லட்சியம் குடிகொள்வ தில்லை. அவர்களிடம் எப்போதும் தயக்கம் இருக்கும். தன்னம்பிக்கை உள்ளவர்களோ நேர்மறை எண்ணங்களையே வெளிப்படுத்துவார்கள்.

அவர்களின் வாழ்கை பாதையில் ஏற்படும் தடங்கல்கள்   தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்வதற்காக ஏற்படுபவை என்று எண்ணுவார்கள். போராட்டங்களும், அச்சங்களும், ஏமாற்றங்களும் இருக்கத்தான் செய்யும். அவற்றை எதிர் கொள்வதில்தான் ஏகப்பட்ட படிப்பினைகளும்,” ஒரு கை பார்த்துவிடலாம்” என்கிற துணிச்சலும் ஏற்படும். எத்தகைய  சிக்கலாக   இருந்தாலும் நிச்சயமாக அதில் சாதகமான ஒரு அம்சமும் இருக்கும். அதனை ஆராய்ந்து அதன் பலனை பெறுவதற்கு முயற்சி செய்வதே புத்திசாலித்தனம். நாம் ஏறும் ஒவ்வொரு படியும் நம்மை அடுத்த படியில்தான் கொண்டு சேர்க்கும் என்பது இயற்கையின் நியதி. எனவே பிரச்சனை என்றால் அதன் அடுத்த படி அதற்கான தீர்வுதான் என்பதை உணர்ந்து பிரச்சனைகளை சந்திக்க வேண்டும் என்பதை இந்த 2022ஆம் ஆண்டு கற்றுத்தந்திருக்கின்றது.

பிரச்சனைகள் நமது கையில் உள்ளனவே தவிர நாம் பிரச்சனையின் கையில் இல்லை என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

நம்மில் நிறையபேர் நடந்து முடிந்தவற்றை பற்றியே சதா நினைத்துக்கொண்டு புலம்பிக்கொண்டோ, அழுது வடிந்துகொண்டோ இருப்பதுண்டு. ஆனால் அதனால் என்ன பயன்? காலம் எதற்காகவும் காத்திருக்கப்போவதில்லை அல்லவா? எனவே, அடுத்தது என்ன? என்கிற தீர்க்கம் நம்மை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்த்திக்கொண்டேயிருப்பதால் வாழ்க்கை உயிரோட்டமுள்ளதாய் மாறும் என்பதுதான் இயற்கையின் நியதி.  

Related Articles

Exit mobile version