வினைத்திறனற்று கிடக்கும் இலங்கையின் தபால்சேவை

எத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சி வந்தாலும், அரச தகவல் உட்பட பல்வேறு ஆவணங்களும் பரிமாறப்பட தபால்சேவை இலங்கையில் தவிர்க்க முடியாத சேவையாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால், அந்த சேவையே அரசுக்கும், மக்களுக்கும் பாரமானதாக மாறியிருப்பது தற்போதைய நிலையில் தலைவலியாக அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் இலங்கையில் தவிர்க்க முடியாததும், பொதுச்சேவையில் இலாபம் உழைத்து தந்த சேவையாகவும் தபால் சேவையிருந்தது. கால மாற்றத்தின் விளைவாக, மக்கள் தொழில்நுட்பத்தின் பக்கமாக செல்லத்தொடங்க, அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளமுடியாத தபால் சேவையானது இலாபத்திலிருந்து மெல்ல மெல்ல நட்டத்தை நோக்கி நகர்ந்து இன்று அரச பொதுச்சேவையில் பில்லியன் அளவில் நட்டச் சுமையை தருகின்ற சேவையாக மாறி நிற்கிறது.

தபால் சேவைகள் திணைக்களமானது தற்சமயம் நாடளாவியரீதியில் சுமார் 4,600 தபால் அலுவலகங்களை கொண்டிருக்கிறது. படம் – srilankastamps.lk

தபால்சேவையை பொறுத்தவரையில், அவர்கள் உழைக்கும் வருமானமானது அவர்களது செயல்பாடுகளை கொண்டு நடாத்தவே போதுமானதாக இல்லாதநிலையில், ஊழியர்களின் வேதனம் மற்றும் தபால்சேவையின் முதலீட்டு செயல்பாடுகளுக்கும் திறைசேரி நிதியை எதிர்பார்த்திருக்கவேண்டிய நிலையுள்ளது. இந்தநிலையில்தான், தபால் ஊழியர்களின் வேதனத்தில் அதிகரிப்பு செய்யவேண்டும் என்கிற போராட்டம் அரசுக்கு மேலும் நிதிச்சுமையை ஏற்படுத்தும் ஒன்றாக மாறியிருக்கிறது.

தபால் சேவைகள் திணைக்களமானது தற்சமயம் நாடளாவியரீதியில் சுமார் 4,600 தபால் அலுவலகங்களை கொண்டிருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டில் அரசால் வழங்கப்பட்ட வேதன அதிகரிப்பின் விளைவாக மாத்திரம் திணைக்களத்தின் வேதன செலவானது 2.21 பில்லியனிலிருந்து 10.71 பில்லியனாக அதிகரித்திருந்தது. ஆனால், குறித்த ஆண்டில் தபால்சேவைகளின் வருமானமானமாக 6.71 பில்லியன்கள் மாத்திரம் பதிவாகியிருக்கிறது. இதனடிப்படையில், 2015ல் மேலதிக வேதனம் உள்ளடங்கலாக ஏனைய செலவுகளையும் உள்ளடக்கி தபால் சேவையின் நட்டமானது 5.04 பில்லியனாக உள்ளது.

இந்த நட்டநிலையானது 2014ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது. இரட்டிப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன், 2015ன் தபால்சேவையின் ஒட்டுமொத்த செலவில் 91%மான செலவீனம் ஊழியர் வேதனம் மட்டுமேயாகும். ஐக்கிய அரசின் கொள்கையும், அதன்விளைவாக முந்தைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் வழங்கப்பட்ட வேதன அதிகரிப்புமே இன்றைய நிலையில், தபால்சேவைகளானது பில்லியன் அளவில் நட்டத்தை எதிர்கொள்ள காரணமாக அமைந்துள்ளது.

தபால்சேவையில் விற்பனை வருமானத்தை பொறுத்தவரையில், முத்திரை விற்பனை வருமானமானது 2015ல் 2.27 பில்லியனாக இருந்தது. படம் – reutersmedia.net

கடந்த ஆண்டிலும், 2015ம் ஆண்டைப்போல தொடர்ச்சியாக நட்டத்தினையே வெளியீடாக தபால் சேவைகள் கொண்டிருக்கிறது. குறிப்பாக, 2016ல் மட்டும் நட்டமானது மேலும் 5.7 பில்லியனாக அதிகரித்திருந்தது. அத்துடன், 2014ம் வருடத்துடன் ஒப்பிடும்போது செலவீனமானது 20%வரை அதிகரித்திருந்தது. இந்த அதிகரிப்புக்கு காரணமே, ஊழியர்களின் வேதனத்தில் ஏற்பட்ட அதிரிப்பாகும். அத்துடன், அதே ஆண்டில் தபால் சேவைகளின் முதலீட்டு செலவானது வெறுமனே 196.3 மில்லியன்களாக மாத்திரமே அமைந்திருந்ததாக வருடாந்த ஆண்டறிக்கை குறிப்பிடுகிறது. இந்த முதலீட்டு செலவினங்கள் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் மற்றும் ஊழியர் பயிற்சி தொடர்பிலான விடயங்களுக்கு முதலீடு செய்ய ஒதுக்கப்பட்ட நிதி அல்லது செலவிடப்பட்ட நிதியாகும்.

தபால்சேவையில் விற்பனை வருமானத்தை பொறுத்தவரையில், முத்திரை விற்பனை வருமானமானது 2015ல் 2.27 பில்லியனாக இருந்தது. ஆனால், இதுவும் 2014ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 0.24 பில்லியன் அளவில் வீழ்ச்சியை சந்தித்திருந்தது. அத்துடன் 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து  தபால்சேவையின் வருமானமும் 155 மில்லியனால் குறைவடைந்திருந்தது. இதற்கு மிகமுக்கிய காரணமே, அதிவேக தபால்சேவையின் வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியும், வழமையாக அதிக வருமானத்தை தருகின்ற முத்திரை வருமானம் 117 மில்லியன்களால் குறைவடைந்தமையும் ஆகும்.

இவற்றுடன் ஒப்பிடுமிடத்து சர்வதேச தபால்சேவை வருமானம் மாத்திரமே ஏறுமுகத்தினை கொண்டதாக உள்ளது. இதன் வருமானம் 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து 161 மில்லியனிலிருந்து 366 மில்லியனாக அதிகரித்திருந்தது. அத்துடன், 2016ல் தபால்சேவையின் வருமானம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து 1.52% மாத்திரமே அதிகரிக்க, செலவீனமானது சுமார் 6,5%மாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

செலவீனங்களின் அதிகரிப்பில் ஊழியர்வேதனம் தவிர்த்து, தபால்சேவையினை வழங்குவதற்கான போக்குவரத்து செலவானது 2015ல் 181.68 மில்லியனாகவிருந்து 888.5 மில்லியனாக அதிகரித்திருந்தது. இது 389% மான அதிகரிப்பாகும். இது வியப்பாகவும், ஆச்சரியம் தரக்கூடிய வகையிலுமான அதிகரிப்பாகும். ஆனால், இவ்அதிகரிப்பு தொடர்பில் ஆண்டறிக்கையில் பொருத்தமான விளக்கங்களை காண முடியவில்லை, அதுபோல, கடந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 1,270 பணியாளர்கள் 2,382 தொழில் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தெரிவு செய்யப்பட்டதுடன், அவர்களுக்கான விடுமுறைகால ஊதியம் மற்றும் மேலதிக நேர செலவினங்கள் வாயிலாக சுமார் 135 மில்லியன் செலவின அதிகரிப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதுபோல, தபால்சேவையின் தொழில் முறை அடிப்படையில் தபால் விநியோகஸ்தர்களின் வேலை நேரமானது காலை 7 மணியிலிருந்து 9 மணிக்குள் தபாலை விநியோகிப்பதுடன் முடிந்துவிடுகிறது. படம் – xploresrilanka.lk

செலவினங்களையும், பில்லியன் கணக்கான நட்டத்தையும் அடிப்படையாகக்கொண்டு தபால்சேவையின் வினைத்திறனை ஆய்வுக்குட்படுத்துகையில், பல மோசமான முறைமைகள் தபால்சேவையில் பின்பற்றப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, தபால் அலுவலகர்கள் ஒரு தபாலை விநியோகம் செய்யும்போர்வையில் தபால் போக்குவரத்தை நீண்டதூரங்களுக்கு பயன்படுத்துகின்ற குற்றசாட்டு உள்ளது. இது, மேலதிக விநியோக செலவினை தபால் சேவைக்கு ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. இதற்கு மாற்றீடாக, வினைத்திறன்வாய்ந்த மாற்றுவழிமுறை இதுவரை பரீட்சாத்த அடிப்படையில்கூட பின்பற்றப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியதாகும்.

அதுபோல, தபால்சேவையின் தொழில் முறை அடிப்படையில் தபால் விநியோகஸ்தர்களின் வேலை நேரமானது காலை 7 மணியிலிருந்து 9 மணிக்குள் தபாலை விநியோகிப்பதுடன் முடிந்துவிடுகிறது. அப்படியாயின், மதியத்திற்கு முன்பே தமது கடமைகளை இவர்கள் முடித்து விடுகிறார்கள். ஆனால், கடந்த காலங்களில் நாளொன்றுக்கு இருமுறை தபாலை விநியோகிக்கும் முறை பின்பற்றபட்டு வந்தது. இதன்போது, தபால் விநியோகஸ்தர்களின் பயன்பாடு அதிகமாகவிருந்தது. எனவே, வினைத்திறன் அடிப்படையில் வெளியீட்டுக்கும் , உள்ளீடான ஊதியத்தொகைக்கும் பெருத்த வேறுபாடு உள்ளதனை மறுக்க முடியாது.

அத்துடன், பதிவுத்தபால்கள் குறைந்தது ஒரு நாளில் விநியோகிக்கபட வேண்டும் என்கிற நியதியிருந்தாலும், தபால் அலுவலகங்களின் அதிகரிப்பும், அவற்றின் வலைப்பின்னல் முறையும் சிக்கலானதாக உள்ளதால், கொழும்பிலுள்ள ஒருவருக்கு அல்லது நிறுவனத்துக்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்களின் பின்பே பதிவுத்தபால் கிடைக்கப் பெறுகிறது. இதுவும், தபால்சேவையின் மீதான நம்பிக்கையில்லாத் தன்மையை உறுதிப்படுத்துவதாக உள்ளது. அத்துடன், தபால்சேவையின் மேலதிகாரியின் கூற்றுப்படி, மத்திய அஞ்சல் பரிமாற்ற சேவையிலுள்ள ஊழியர்களுக்கு 2015 மற்றும் 2016ல் வழங்கிய மேலதிக நேர வேதனத்திலும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும், இதன் விளைவாக செலவீனம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்ப்பிடப்படுள்ளது. இது, தபால் சேவையில் உள்ள நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கிறது.

அத்துடன், தபால் சேவைகளின் வினைத்திறனின்மைக்கு தபால்சேவையானது அத்தியாவசியமாக்கப்பட்ட சேவைகளுக்குள் உள்வாங்கப்படாமையும் ஒரு காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், தபால் சேவை தொழிற்சங்கங்களின் இடையூறும் திணைக்களத்தின் இலாபநிலையில் தாக்கம் செலுத்தும் காரணியாக உள்ளது.

தபால்சேவையை பொறுத்தவரையில், இலங்கையில் வணிக தபால் சேவை மற்றும் சர்வதேச தபால் சேவையில் அதிகமான முன்னேற்றமும், வருமானமும் உள்ளது. ஆனால், அதேபோன்று ஏனைய துறைகளிலும் வருமானத்தை அதிகரிக்கக்கூடியவகையில் வினைத்திறன் வாய்ந்த செயல்பாடுகளும், முறைமைகளும் அவசியமாகிறது.

தபால்சேவையை பொறுத்தவரையில், இத்தனை பில்லியன் நட்டத்தையும், வினைத்திறன் வாய்ந்த ஊழியப்படையையும் வைத்துக்கொண்டு வேதன அதிகரிப்பையும், சலுகைகளையும் எதிர்பார்த்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது விசனத்தையும் ஒருவித எதிர்மறை தோற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதன் விளைவாக, தபால் சேவையில் பாராட்டக்கூடிய  விடயங்களான, ஆண்டொன்றுக்கு 19 பில்லியன் பெறுமதியான பணம் முதியோர் ஓய்வூதிய திட்டம்,  சமூகசேவைகள் திட்டம் என்பனவற்றின் ஊடாக சமுகத்திற்கு பங்களிக்கப்படுவது உட்பட பல்வேறு சேவைகளும் வெளிச்சத்திற்கு வராமல் தனியே தபால்சேவையின் பிரதிகூலமான பக்கமே முன்னிறுத்தப்படும் என்பது கவலைக்குரிய விடயமாகும்

Related Articles

Exit mobile version