தமிழகத்தின் அரசியல் சூழல் எரிந்து கொண்டிருக்கும் நிலையில், சசிகலாவையும், டி.டி.வி.யையும் தள்ளி வைப்பதாக அறிவித்துள்ள நிலையில், ஸ்டாலின் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் எனத் தெரிவித்துள்ள நிலையில், நிலையற்ற அரசியல் நிலைமை நிலவிக்கொண்டிருக்கும் நிலையில், கமலின் டுவீட்டுகள் ஏற்படுத்தும் தாக்கம் அதிகமாகவே உள்ளது.
இந்திய பெருங்கண்டத்தில் தமிழகம் மட்டும் தனித்தீவை போன்று இயங்குகின்றது என்ற இந்திரா காந்தியின் சொற்கள் இன்று வரை நிதர்சன உண்மையாகவே உள்ளது. நேரடியாக எந்தத் தேசிய கட்சியும் தலையிட முடியாத நிலையை உருவாக்கி வைத்திருந்த இரு ஆளுமைகளும் இல்லாமல் போனது ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்ப எல்லாத் திசைகளிலிருந்தும் காற்று சூழும் என்பது போல் திரைப்படத் துறையிலிருந்து ரஜினி மற்றும் கமல் தங்கள் சமூகம் சார்ந்த கருத்துகளை மட்டுமல்லாது ஒரு படி மேலே போய் அரச கட்டமைப்பு பற்றிய தங்களது விமர்சனத்தையும் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
எம்ஜிஆர் காலம் முதல் விசிலடிச்சான் குஞ்சுகளாய் அறியப்படும் தமிழக ரசிகர்கள் இன்று அரசியல் களத்திற்கு நடிகர்களை வரவேற்பவர்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வெறும் நடிகனாகவே மட்டும் இருந்து கொண்டிருக்கும் பல நடிகர்களுக்கு அரசியல் ஆசை பல நேரங்கள் வந்தாலும், அதைப் படத்தின் ஒரு காட்சியில் கூடக் காட்டிக்கொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கையோடு நடந்து கொள்கின்றனர். இந்த நிலையில் இதுவரை தனக்கு அரசியல் தேவையில்லை அல்லது படத்தை ஓட வைக்க ஒரு ஸ்டன்ட் என்ற அடிப்படையில் மட்டுமே அரசியல் பற்றி பேசி வந்த கமல் மற்றும் ரஜினியின் இந்த திடீர் போர்குணம் பேஸ்புக் மற்றும் டுவீட்டர் போராளிகளைப் போன்ற பதிவு மட்டும்தானா? என்ற கேள்வியும் நமக்கு எழுகின்றது.
தன்னை முற்போக்காளராகக் காட்டிக்கொண்டு பல நேரங்களில் மைய நீரோட்டத்தில் கரைந்து போன கம்யூனிஸ்ட் கட்சிகளின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் கமலின் இந்தத் தொடர் டூவிட்டுகளுக்கு அவர்கள் வரவேற்புத் தெரிவித்து வந்தாலும், தங்கள் கட்சிக்குள் இணைத்துக் கொள்ள அந்தக் கட்சிகள் மட்டுமல்லாது, பிற எதிர்க்கட்சிகளும் பிரயத்தனப்படாமல் இருக்கின்றது. ஆனால் ரஜினி தன் ரசிகர்களை அழைத்து நடத்திய கூட்டத்தைத் தொடர்ந்து திருமாவளவன் முதல் தமிழருவிமணியன் வரை அனைவரும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றனர்.
இந்த அழைப்பு ரஜினியைப் பல மடங்கு சிந்திக்க வைத்தது மட்டுமல்லாமல் பத்துகோடி ரூபாய் தமிழருவி மணியனின் மாநாட்டுக்குத் தரும் அளவிற்கு அவரைத் தூண்டியுள்ளது. உழைக்கும் மக்களையே பெருமளவிலான தனது ரசிகர் பட்டாளமாகக் கொண்டுள்ள ரஜினி, தொடர்ந்து ரஞ்சித்துடன் இணைந்து அந்த ரசிகர்களின் சமூகப் பொருளாதாரம் குறித்து படம் எடுப்பதும் அவரின் அரசியல் ஆசை குறித்து நமக்கு தெளிவுபடுத்துகின்றது. அதே வேளையில் கமல் முரசொலி விழாவில் சொன்னது போல், பொது வாழ்விற்கு தற்காப்பைத் தாண்டி தன்மானம் மிகவும் அவசியமாகக் கருதப்படுகின்றது. அப்படிப் பார்த்தால் அவமானங்களை ஏற்றுக்கொள்ள முடியாத ரஜினியின் அரசியல் ஆசை மட்டும் அல்லாமல் அவரை ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவர நினைக்கும் முதலாளிகளின் ஆசையும் நிறைவேறாத ஒன்றாகவே இருக்கும். ரஜினியின் அரசியல் பேச்சு என்பது அவர் மூலம் தாங்கள் சம்பாதித்துவிடலாம் என என்னும் அவரது ரசிகர்களைத் தக்கவைக்க மட்டுமே உதவும்.
கமல்ஹாசனைப் பொறுத்தவரையில், ரஜினியின் எல்லா பலவீனங்களையும் தனது பலமாகக் கொண்டுள்ளார். அதுவே அவரைத் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்ற உந்தியது. தனக்கு பல கட்சிகளிடமிருந்து அழைப்புகள் வந்த போதிலும் அவற்றை மறுத்ததாகக் கூறும் கமல், அதில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றார். அதே நேரத்தில் அவர் மீது அமைச்சர்கள் விமர்சனங்களை வைத்தபோது, இதுவரை தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டக்களங்கள் குறித்து சரியான புரிதல் கூட இல்லாமல், நாட்டைத் திருத்திவிட வேண்டும் என்னும் ஏக்கத்தோடு கமலின் வீட்டின் முன் இளைஞர்கள் சூழ்ந்தனர். உண்மையில் நாட்டின் மீது தங்கள் அக்கறையைக் காட்ட எத்தனிக்கும் அந்த நடுத்தர வர்க்க இளைஞர்கள் ஒன்றிணைக்கப்பட்டு சரியான புரிதலுக்கு வந்துவிடக்கூடாது என்பதே இந்தியத் தரகு முதலாளிகளின் ஒரே எண்ணமாக உள்ளது.
உலகமயமாக்கலுக்குப் பிறகு பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க ஏதுவாகப் பல சட்டதிட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மாற்றங்களுக்கிடையிலும் மாநிலங்களின் தனித்தன்மைகளையும், மாநில கட்சிகளையும் மிகப்பெரிய தொல்லையாகவே பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளும் நினைக்கின்றனர். இவர்களைத் திருப்திப்படுத்தவே “மாநில கட்சிகள் நாட்டின் வளர்ச்சிக்குத் தடை” என்று காங்கிரஸ் கட்சியின் மன்மோகன் சிங் சொன்னதை உணர்ந்து செயல்பட்டு வரும் பா.ஜ.க தங்களுக்கான அடையாளத்தை அக்கட்சி பலவீனமாக இருக்கும் மாநிலங்களில் உருவாக்கிக் கொண்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாகவே தமிழகத்தில் ரஜினிக்கு விடுத்துள்ள அழைப்பும் பார்க்கப்படுகிறது. அதே வேளையில் பா.ஜ.கவையும் விமர்சிக்கும் கமலின் டுவீட்டுகள் இன்னும் நுட்பமாகப் பார்க்கப்பட வேண்டும்.
ஜெயலலிதா மறைவும், கலைஞரின் செயல்பட முடியாத நிலைமையும் தமிழ்நாடு மாநில அரசை பலகீனமாக மாற்றியுள்ளதால், இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு மத்திய அரசு தனது எல்லாத் திட்டங்களையும் தமிழகத்தில் எளிமையாகப் புகுத்தி வருகின்றது. அதே நேரத்தில் மக்கள் தங்கள் தேவைகளுக்குப் போராட்டங்கள் மூலம் வெற்றி காண முடியும் என்பதை உணர்ந்துவரும் தருணமாகவும் இதைப் பார்க்கலாம். பெரும்பாலும் போராட்டங்கள் தேவையற்ற ஒன்று என்று சொல்லிக்கொண்டிருந்த நடுத்தர வர்கம், போராட்டக் களங்களில் என்ன பேசுகின்றார்கள் என்று செவிமடுக்க வைத்துள்ளது. இது இந்த அரச கட்டமைப்பை காக்கும் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களாக உள்ள தரகு முதலாளிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளது. இந்த நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர இந்திய அரசு கையாளும் ஒருவராகவே கமலஹாசனைப் பார்க்க முடிகிறது.
“அயோக்கியன் ஊரில், நல்லவன் ஆள முடியாது” என்று கூறிய அதே கமல்தான், “இங்கு பிரச்சனை அரசியல்வாதிகள் மட்டுமே, அரச கட்டமைப்பு அல்ல” என்றும் கூறுகின்றார். கமலின் இந்த இரண்டு கருத்துகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் நம் சந்தேகங்களை உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளது. மக்கள் திரல் அரசியலை விட என்.ஜி.ஓ அரசியலை பேசும் கமலின் அரசியலைப் போராட்டங்களுக்கு வருவதற்குத் தயாராகி வரும் தமிழக நடுத்தர வர்கத்தை மட்டுப்படுத்தவும், ஆசுவாசப்படுத்தவும் இந்திய முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இப்போது அரசை எதிர்க்கும் அளவிற்கு வந்துள்ள கமல் ஹாசனின் இந்தத் துணிவு, விஸ்வரூபம் பட விவகாரத்தின் போது வராதது ஏன்? விருமாண்டி பட விவகாரத்தின் போது அவர் வெளியிட்ட விடியோ ஏற்படுத்தாத சலசலப்பு இப்போது ஏற்படுத்துவது ஏன்? என்ற கேள்விகளுக்கான பதில்களிலேயே கமல்ஹாசன் முதலாளிகளால் பயன்படுத்தப்படுகிறார் என்பது உறுதியாகிறது.
போராட்டங்களுக்கு சரியான தலைமை முக்கியமானதுதான், ஆனால் அதைவிட மக்கள் முக்கியமானவர்கள். எந்தப் போராட்டமும் தலைமைகளிலிருந்து வருவதில்லை, தலைமைகள் போராட்டங்களிலிருந்தே உருவாகின்றன. உதாரணமாக எம்.ஜி.ஆர் ஒரு நடிகராகவே இருந்தாலும் திராவிட இயக்கத்தின் போராட்டங்களுக்குள் தன்னை இணைத்துக் கொண்டு அதன் கொள்கைகளை இறுகப்பற்றியபடிதான் அரசியல் களத்துக்குள் வந்து மக்கள் திரளை ஒருங்கிணைத்தார். அப்படிப்பட்ட எந்த ஒரு கொள்கையையும் முன்வைக்காது தீவிர அரசியலில் ஈடுபடவும், மக்கள் அதிகாரத்தைக் காப்பாற்றவும் இவர்கள் இருவராலேயும் முடியாது. அப்படிச் செய்தால் விரைவில் மக்களின் எதிர்பார்ப்பு இவர்களின் அரசியல் பயணத்தை நீர்த்துப் போகச் செய்யும். ஆனால் முடிவில் பாதிக்கப்படப் போவதும் அதே மக்கள்தான்.
தொடர்ந்து வஞ்சிக்கப்படும் மக்களுக்குப் போராட்டக் களங்களை நோக்கி விரைய வேண்டிய தேவை ஏற்படுகின்றது. இந்நிலையில் தெளிவான அரசியல் புரிதல் கொண்டு, இத்தனை ஆண்டு காலமும் இந்தியாவின் தனித்துவமிக்க மாநிலமாக விளங்கிவரக் காரணமான திராவிட இயக்கக் கோட்பாடுகளின் மையமான சமூக நீதி முதல் மாநில சுயாட்சி அதிகாரம் மற்றும் இந்தி எதிர்ப்பு வரை அனைத்தையும் காப்பாற்ற வேண்டிய நேரத்தில் பிம்பங்களில் சிக்காமல் இருக்க வேண்டியது தமிழக மக்களின் அவசியமாகத் தெரிகிறது.
உசாத்துணைகள்:
Will Rajinikanth be BJP’s mascot in Tamil Nadu?
Rajinikanth vs Kamal Haasan: The Battle in TN’s Political Theatre