அதிமுக எம்எல்ஏக்களின் ரிசார்ட் அரசியல் மீண்டும் துவங்கியுள்ளது. கடந்த முறை ஓபிஎஸ்ஸால் மாஸாக ரிசார்ட் சென்ற அவர்கள், இம்முறை மாஸாக இணைந்த ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை கலங்கடிக்க சென்றுள்ளனர். கடந்த முறை அளவுகடந்த அதிகார பலத்தால் கூவத்தூர் வரை சென்றவர்கள், இம்முறை இழந்துகொண்டிருக்கும் அதிகாரத்தை இழுத்துப்பிடிக்க பாண்டிச்சேரிக்கு படையெடுத்துள்ளனர். சொச்சம் பேர் கொண்ட சிறு புள்ளிகள் தான் என்றாலும், ஆட்சிக்கான மையப்புள்ளிகள் என்பதால் முக்கியப்புள்ளிகளாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை ஊசலாட்டத்தில் விட்டுவிட்டு பாண்டிச்சேரியில் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கின்றனர். பாண்டிச்சேரிக்கு இவர்கள் படையெடுத்து சீசாய் விளையாடிக்கொண்டிருப்பதை விட பெரிய ஆச்சர்யம் அல்ல இந்த ரிசார்ட் அரசியல். பாரிலே பெருஞ்சனநாயக நாடான இந்த பாரதம் இதைப் பலமுறை கண்டுள்ளது. மிக சமீபத்தில், குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாரதிய ஜனதா கட்சியினர் தங்கள் கட்சிக்கு இழுப்பதைத் தடுக்க பெங்களூரு அழைத்துவரப்பட்டிருந்தனர். அந்த சம்பவம் கர்நாடக மக்களுக்கு எவ்வித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கப்போவதில்லை. காரணம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக மட்டுமல்லாமல், `ரிசார்ட் அரசியலின்` தலைநகராகவும் பெங்களூரு திகழ்கிறது.
ரிசார்ட் அரசியலின் சக்ரவர்த்தி ”சந்திரபாபுநாயுடு” :
1984-ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்தே இந்த ரிசார்ட் அரசியல் வெளிப்படையாக நடந்து வருகிறது. அதற்கு முன்பும், பின்பும் மாடு விற்பனையைப் போல கூட நடந்திருக்கலாம். அவையெல்லாம் வெளிப்படும் போது எவரும் பெரிதாக ஆச்சர்யப்படப்போவதில்லை என்பது மட்டும் உறுதி. 1984 ல் என்.டி.ராமாராவ் தலைமையிலான ஆந்திராவின் முதல் மாநிலக்கட்சி அரசை வீழ்த்த நாடெண்டல பாஸ்கர் ராவ் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்தார். பாஸ்கர் ராவிடம் இருந்து தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏக்களை காப்பாற்ற, அவர்கள் பெங்களூரு அழைத்துவரப்பட்டனர். பாஸ்கர் ராவிற்கு அப்போதைய ஆந்திர ஆளுநர் ஆதரவாக இருந்தார். தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏக்களை ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவிற்கு சந்திரபாபு நாயுடு பேருந்தில் அழைத்துவந்து கவனித்துக்கொண்டார். 1984ல் தனது மாமனார் என்.டி.ஆரின் ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக தான் மேற்கொண்ட ரிசார்ட் அரசியலில் கிடைத்த அனுபவத்தைகொண்டு, 11 வருடங்கள் கழித்து, 1995-ம் ஆண்டு, தனது மாமனார் என்.டி.ஆரிடமிருந்தே முதல்வர் பதவியை கைப்பற்றினார் ஆந்திராவின் தற்போதைய முதல்வர் சந்திரபாபுநாயுடு. முன்புபோல பெங்களூருவுக்கெல்லாம் எம் எல் ஏக்களை கொண்டு செல்லவில்லை. தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏக்களை ஐதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலிலேயே தங்க வைத்து வெற்றி கண்டார் சந்திரபாபு நாயுடு.
ரிசார்ட் அரசியல் காங் VS பாஜக :
1995ம் ஆண்டு முதல் முறையாக பாரதிய ஜனதா அரசு அமைந்தது. அந்த ஆட்சிகாலத்தில் அவர்கள் விரலையே எடுத்து அவர்கள் கண்ணையே குத்தியது காங்கிரஸ். பாஜகவின் முக்கியத்தலைவராக இருந்த கேஷுபாய் படேலின் முதல்வர் பதவியைப் பறிக்க, பாஜகவின் மற்றொரு முக்கியத் தலைவரான சங்கர்சிங் வகேலாவை பயன்படுத்தியது காங்கிரஸ். கிட்டத்தட்ட 48 பாஜக எம் எல் ஏக்களை கஜுராஹோவிற்கு அழைத்து சென்று, அவர்கள் கேஷுபாய் படேல் மீது அதிருப்தியாக இருப்பது போன்ற சூழலை உருவாக்கி கேஷுபாய் படேலின் முதல்வர் பதவியை பறித்து சுரேஷ் மேத்தாவிற்குக் கொடுத்தனர். அதற்கடுத்த ஆண்டு ஆட்சியையே கலைத்தனர். இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம், அப்போது காங்கிரஸிற்கு போன வகேலாவை இழுத்துத்தான் இப்போது காங்கிரஸ்ஸை பழிவாங்க நினைத்தது பாஜக. ஆனால் இம்முறையும் ரிசார்ட் அரசியலைக் கையிலெடுத்து பெங்களூருக்கு பறந்து பாஜகவின் திட்டத்தை முறியடித்து வகேலாவையும் அனுப்பி வைத்துள்ளனர் காங்கிரஸ் கட்சியினர். 2005 ஆம் ஆண்டில் பாஜக முதல்வர் மனோகர் பாரிக்கரை ஆட்சியிலிருந்து அகற்றிய பிறகும் கோவாவில் காங்கிரஸிற்கு பெரும்பான்மை இல்லாத நிலையே இருந்தது. அந்த சூழலில் காங்கிரஸிடமிருந்து தங்கள் எம்.எல்.ஏக்களைக் காப்பதற்காக ராஜஸ்தானுக்கு அனுப்பிவைத்தனர் பாஜகவினர். வழக்கமாக குளிர் அல்லது கடல் சார்ந்த பகுதிகளில் உள்ள ரிசார்ட்டில் முகாமிடும் எம்.எல்.ஏக்கள் இம்முறை பாலைவன ராஜஸ்தானில், அதுவும் ”கோவா”எம்.எல்.ஏக்கள். பாஜகவின் அந்த சூடான ரிசார்ட் அரசியலால் ஒரு மாதத்தில் அங்கு காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. அதேபோல 2016 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் முதல்வர் ஹாரிஷ் ராவத்திற்கு பாஜக எம் எல் ஏக்கள் யாரும் ஆதரவளித்துவிடக்கூடாது என்பதற்காக பாஜக ரிசார்ட் அரசியலை கையிலெடுத்தது. தனது 27 எம் எல் ஏக்களை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு அனுப்பியது. இதனால் ஹாரிஷ் ராவத்தின் ஆட்சி அப்போது கலைக்கப்பட்டது.
பெங்களூரில் மையம் கொண்ட ரிசார்ட் அரசியல் :
84ல் ரிசார்ட் அரசியலை பிரசவித்த பெங்களூரு, அதனை வளர்த்தெடுத்தது 2002ல். மகாராஷ்ட்ராவில் விலாஸ்ராவ் தேஷ்முக் தலைமையிலான காங்கிரஸ் அரசினை காப்பாற்ற, மீண்டும் ரிசார்ட் அரசியல் தேவைப்பட்டது. இப்போதும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பெங்களூருவிற்கு தான் கொண்டுவரப்பட்டு ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 40 எம்எல்ஏக்கள் பெங்களூரு கொண்டுவரப்பட்டிருந்தனர். அப்போது கர்நாடக முதல்வராக இருந்த எஸ் எம் கிருஷ்ணாவுக்கு நெருக்கமானவராக கருதப்பட்ட டி.கே. சிவகுமார்தான் அந்த எம் எல் ஏக்களை ரிசார்ட்டில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையானதை கவனித்து வந்தார். அதே சிவக்குமார்தான் அமைச்சாரன பின்பு, இப்போது குஜராத் எம் எல் ஏக்களை பெங்களூரில் பொத்தி பாதுகாத்தார். அவரை மிரட்டத்தான் வருமானவரிச் சோதனையை மத்திய பாஜக கையிலெடுத்தது. ஆனால் ரிசார்ட் அரசியலில் பழந்தின்று கொட்டை போட்ட சிவகுமார் 2002 ரிசார்ட் அரசியலை போலவே 2017 ரிசார்ட் அரசியலிலும் வெற்றி கண்டார். இந்த சமயத்தில்தான் ரிசார்ட் அரசியலின் தலைநகராகவே பெங்களூரு உருவெடுத்தது.
களங்கி நின்ற பெங்களூரு. கை கொடுத்த கொடைக்கானல் :
2006 ஆம் ஆண்டு ஜனவரியில் கர்நாடக அரசியலில் ஒரு குழப்பகரமான சூழல் ஏற்பட்டது. ”காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும். அந்த நதியே காஞ்சி போய்ட்டா? “ என்பது போல ரிசார்ட் அரசியலின் சொர்க்கபுரிக்கே ஒரு சோதனை காலம். களங்கி நின்றது பெங்களூரு. கை கொடுத்தது கொடைக்கானல்.கர்நாடகத்தின் முதல் காங்கிரஸ்- ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை 2006-ம் ஆண்டு எச்.டி.குமாரசாமி கவிழ்த்த போது ரிசார்ட் அரசியல் புதுவிதமாக இருந்தது. அப்போது முதல்வராக இருந்த ஜனதா தளம் கட்சியின் தரம் சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்ட இரண்டு நாட்களில், ஜனதா தள எம்.எல்.ஏக்களை ரிசாட்டில் தங்க வைத்து பிறகு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் முன்பு அவர்களை நிறுத்தினார் குமாரசாமி. அந்த சூழலில் 76 பாஜக எம்.எல்.ஏக்கள் மூன்று பேருந்துகளில் தமிழகம் வந்தனர். மகாபலிபுரம் போய் சுற்றிப்பார்த்தனர். பின்னர் கொடைக்கானலுக்கு வந்து ஆட்டுவாம்பட்டியில் உள்ள ரிசார்ட்டில் முகாமிட்டனர். கடை வீதிக்குப் போய் பொருட்களை வாங்குவது, குறிஞ்சியாண்டவர் முருகன்கோவிலுக்கு போய் தரிசனம் செய்வது, காலையிலும், மாலையிலும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக் கூட்டங்களில் கலந்து கொள்வது, யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்வதுமாக அந்த பொழுது அவர்களுக்கமைந்தது. அந்த ரிசார்ட் அரசியல் கர்நாடகத்தில் ஐக்கிய ஜனதாதள, பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியமைக்க வைத்து குமாரசாமியை அரியணையிலேற்றியது.
ரிசார்ட் அரசியல் வித்தகன் எடியூரப்பா :
2012 மார்ச்சில், முதல்வர் பதவிக்காக கர்நாடக பாஜகவிற்குள்ளேயே ரிசார்ட் அரசியல் நிகழ்ந்தது. எடியூரப்பாவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 55 பேர் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ரிசார்டில் தங்க வைக்கப்பட்டனர். முதல்வர் பதவிக்காக டெல்லி சென்று மேலிட தலைவர்களை சந்தித்த போது அவர்கள் கைவிட்டதால், ரிசார்ட் அரசியலை கையிலெடுத்தார் எடியூரப்பா.எடியூரப்பாவை போல ரிசார்ட் அரசியலை பயன்படுத்தி அரசியல் செய்த அரசியல்வாதி யாரும் இருக்க முடியாது. 2010-ம் ஆண்டு அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, எம்.எல்.ஏக்களை ரிசார்டில் தங்க வைத்தார். அதன் பிறகு லோக் ஆயுக்தாவால் பதவி பறிபோன சமயத்தில் சதானந்த கவுடாவை முதல்வராக்குவதற்கும் அதே ரிசார்ட் அரசியலையே பயன்படுத்திக்கொண்டார். பிறகு அதே சதானந்த கவுடாவை பதவியிலிருந்து இறக்கவும் ரிசார்ட் அரசியலையே எடியூரப்பா பயன்படுத்தினார். இந்த முறை ரிசார்ட் அரசியலால் ஜெகதீஷ் ஷட்டர் முதல்வரானார்.
வடகிழக்கிலும் வாலாட்டிய ரிசார்ட் அரசியல் :
கடந்த ஜூலை மாதம் நாகலாந்தில் மீண்டும் வழக்கம் போல அரசியல் குழப்பம் ஏற்பட்டது. ஆளும் நாகா மக்கள் முன்னணியின் 35 எம்.எல்.ஏக்களை, அக்கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெலியாங், அஸ்ஸாம் மாநில ரிசார்ட் ஒன்றில் தங்க வைத்தார். அங்கிருந்தபடியே அந்த எம்.எல்.ஏக்கள், தாங்கள் ஜெலியாங் முதலமைச்சராக ஆதரவு தெரிவிக்கிறோம் என ஆளுநருக்கு கடிதம் அனுப்பினர். இந்த ரிசார்ட் அரசியலால் நாகலாந்து முதல்வராக இருந்த லெய்சீட்சு தூக்கியெறியப்பட்டு, ஜெயிலாங் மீண்டும் முதல்வரானார். இந்த ரிசார்ட் அரசியல் வடகிழக்கு மாநிலங்கள் சந்திக்கும் முதல் ரிசார்ட் அரசியலெல்லாம் இல்லை. இதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே வடகிழக்கில் ரிசார்ட் அரசியல் அரங்கேறியிருந்தது. 2007 அருணாச்சல பிரதேசம் காங்கிரஸ் கட்சியின் கெகாங் அபாங்கின் முதல்வர் பதவியை பறிக்க திட்டமிட்ட டோர்ஜீ காண்டூ, அப்போது கெகாங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்த 20 காங்கிரஸ் எம் எல் ஏக்களை சொகுசு விடுதியில் தங்க வைத்தார். இந்த ரிசார்ட் அரசியலால் கெகாங் அபாங் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் . டோர்ஜீ காண்டு முதல்வரானார்.
கூவத்தூர் ஸ்பெசல் :
எல்லா மாநிலங்களிலும் ரிசார்ட் அரசியல் நடந்திருந்தாலும், அதற்கொரு மைல் கல் கூவத்தூர். ரிசார்ட் அரசியலின் பல ரிக்கார்டுகளையும் அடித்து துவம்சம் செய்திருந்தது கூவத்தூர் ரிசார்ட் அரசியல். ரிசார்ட்டிலிருந்த ஒரு எம்.எல்.ஏ. தான் தப்பி வந்ததாகவும், சில எம்.எல்.ஏ.க்களை காணவில்லை என்று அவர்களது உறவினர்களே புகார் சொன்னதும், கூவத்தூரின் தனிச்சிறப்பு. அத்தோடு நீண்ட நாட்கள் நடந்த ஒரு ரிசார்ட் அரசியலாகவும் கூவத்தூர் திகழ்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள். 10க்கும் மேலான நாட்கள். குதிரை பேரத்தின் புதிய உச்சமாகவே கூவத்தூர் பர்க்கப்பட்டது. எழுதவும், பேசவும் ஏராளமானவை கூவத்தூர் ரிசார்ட் அரசியலைச்சுற்றி உள்ளன. சமகாலத்தின் சரித்திர அரசியல் நிகழ்வு கூவத்தூர்.
ஜனநாயகத்தின் மீதான பலாத்காரம்:
ரிசார்ட் செல்பவர்கள், மட்டும் ஜனநாயக விரோதிகள் அல்ல, அவர்கள் செல்ல காரணமானவர்களும்தான். இருந்தால் விலை போய்விடுவார்களோ என்ற அச்சம் ரிசார்ட் அரசியலை செய்யத்தூண்டுகிறதென்றால், அவர்களை விலைபேசும் எதிர் அரசியலும் தவறே. ரிசார்ட் அரசியலில் இருதரப்பு மட்டுமல்ல, அதை பார்த்தும், தெரிந்தும், அறிந்தும், அமைதிகாக்கும் அத்தனை தரப்பும் இதில் குற்றவாளிகளே… ரிசார்ட் அரசியல் என்பது, மறைமுகமான பல அரசியல் பேரங்களின் திமிர் வெளிப்பாடு. மக்களை மாக்கள் என்று இந்த அரசியல்வாதிகள் நினைப்பதன் கொடூர வெளிப்பாடு. பணம், அதிகார வேட்கை இந்த இரண்டு கூறுகளில் மட்டும் நம் பிரதிநிதிகள் மூழ்கிவிட்டதன் பெருஞ்சாட்சி. நாம் பெரிதாக அவமானப்பட்டுக்கொள்ள வேண்டிய அசிங்கம்…. மாற்ற வேண்டியது இதை சகித்திருக்கும் நம் மனதையும், இதைச் செய்யும் நபர்களையும்.